இந்தத் தலைப்பு கொஞ்சம் அதீதமாகத் தெரியலாம். ஆனால், அது சரியானதுதான். தான் படித்த ஒரு புத்தகம் பற்றி “ஒரு நூலின் மந்திர சக்தி” என அண்ணல் காந்திஜி தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். நூல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. வாசிப்பவர்களையும், வரலாற்றையும் மாற்றக்கூடிய சக்தி நூல்களுக்கு உள்ளன. கடந்த மே 5 அன்று உலகளவில் நடைபெற்ற மார்க்ஸ்-200 விழா நிறைவுற்றது. எல்லா நாடுகளிலும் கொண்டாடக்கூடிய மாமனிதராக மார்க்ஸ் உருவானதில் அவரது வாசிப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.
“மார்க்சின் பெயரும், அவர் ஆற்றிய மகத்தான பணியும் காலம் காலமாக நிலைத்து நிற்கும்” என லண்டன் ஹைகேட் கல்லறையில் காரல் மார்க்சின் இறுதி நிகழ்ச்சியில் பிரடெரிக் ஏங்கல்ஸ் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டார். மார்க்ஸ் இறந்து 136 ஆண்டுகள் ஆன பிறகும், அவரது படைப்புகளும், அவரின் போராட்ட வாழ்க்கையும் உலகம் முழுவதும் இன்றும் விவாதப்பொருளாக உள்ளன. மார்க்சின் ‘மூலதனம்’ வெளியான 150வது ஆண்டும், மார்க்சின் 200வது பிறந்த நாளும் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டன. மார்க்ஸ் வாழ்ந்த காலத்தை விட இன்று கூடுதலாக அவர் பேசு பொருளாக ஆகி இருக்கிறாரே ஏன்?
தன்னுடைய காலத்தில் உலகம் முழுவதும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கான தீர்வை முன் வைத்ததோடு, அதை நோக்கிய போராட்டத்தில் பங்கேற்றதும், தலைமையேற்றதும்தான் இதற்கு முக்கிய காரணம். “முதலாளி வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்க முடியாதவை” என்று மார்க்சும், ஏங்கல்சும் இணைந்து பிரகடனம் செய்தனர். கம்யூனிசத்துக்கான இந்த வெற்றி, தானாக வராது; புரட்சியின் மூலமாக உருவாக்கிட வேண்டுமெனவும் கூறினார்கள். இந்த சமூக மாற்றம் எவ்வாறு ஏற்படும் என்பதை ஆரூடமாக அல்ல, அறிவியல் பூர்வமாக மார்க்ஸ் ஆய்வு செய்தார். பல நூல்களை எழுதினார்.
மார்க்சின் படைப்புகள் பல தொகுப்புகளாக பல மொழிகளில் வெளியாகியுள்ளன. இவைகளை பொதுவாக தத்துவம், பொருளாதாரம், சோசலிசம் என 3 தலைப்புகளில் வகைப்படுத்தலாம். தத்துவம் சம்பந்தமாக ஜெர்மனியில் நடந்து வந்த விவாதம், கருத்து மோதலின் சாராம்சத்தை அவர் ஆய்வு செய்தார். பிரிட்டனில் ஏற்பட்டு வந்த முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் அதன் பொருளாதார அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார், பிரெஞ்சு தேசத்தில் ஏற்பட்ட சோசலிச அரசியல் வளர்ச்சிப்போக்கை பரிசீலித்தார்.இவற்றை அடிப்படையாகக் கொண்டே மார்க்சியம் என்ற மகத்தான கருத்தியல் உருவானது. தனது உற்ற தோழர் ஏங்கல்சின் பங்களிப்புடன் மார்க்ஸ் இதை உருவாக்கினார். தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் ஆகிய மூன்று கூறுகளையும், மற்ற பல துறைகள் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களையும் கொண்டதே மார்க்சியம்.
“தத்துவஞானிகள் இதுவரை இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் விளக்க மட்டுமே செய்திருக்கிறார்கள்; விஷயம் என்னவென்றால் உலகத்தை மாற்றுவதே” என்று மார்க்ஸ் கூறினார். அதன்படியே இந்த உலகத்தை மாற்றும் வல்லமை படைத்த மார்க்சியத்தை அவர் படைத்தளித்தார்.
“மார்க்சிய போதனையானது சர்வ வல்லமை கொண்டது. காரணம், அது உண்மையானது” என மார்க்சியம் பற்றி லெனின் குறிப்பிட்டார். மார்க்சியக் கருத்தியல் நான்கு சுவர்களுக்குள் இருந்து உருவாக்கப்பட்டதல்ல. கோட்பாடுகளை உருவாக்கியதோடு, மார்க்சும், ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்கி களப்போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட படைப்புகளை உருவாக்கிட மார்க்ஸ் தனது வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூல்களையும், இதழ்களையும் வாசிப்பதற்கு செலவிட்டுள்ளார். ஒரு நூலைப்படித்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார். பல கோணங்களில் பரிசீலிப்பார். அவருடைய வாசிப்பு விமர்சன பூர்வமாக இருந்திருக்கிறது.
பெர்லின் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த அவர் அந்நாட்டு தத்துவ ஞானி ஹெகல், பல்கலைக் கழக பேராசிரியர ஃபாயர்பாக் ஆகியோரின் நூல்களைப் படித்தார். அவர்களின் கருத்துக்களை அவர் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றைய அவரது வாசிப்பு பற்றி அவரே தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
“பல துறைகளில் வாசிப்பில் ஈடுபட்டிருந்த நான் பல நாட்கள் உறங்க முடியவில்லை. என் மனதுக்குள் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் மனதும், உடலும் மிகவும் கிளர்ச்சி அடைந்தன. இதனால் என் உடல்நலம் குன்றியது. சிறிது காலம் ஏதேனும் ஒரு கிராமத்துக்குச் சென்று வசிக்குமாறு டாக்டர் கூறினார். அப்படியே சென்று உடல் நலம் தேறினேன். மீண்டும் ஒரு ஆய்வில் மூழ்குவேன், தூய்மையான முத்துக்களைக் கண்டடைவேன். அவற்றைக் கொண்டு வந்து சூரிய வெளிச்சத்தில் வைப்பேன்”.
இத்தகைய ஆய்வுக்குப் பிறகுதான் “இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” ஆகிய கோட்பாடுகளை தத்துவத்தை உருவாக்குகிறார்.உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் பற்றி மார்க்ஸ் அவ்வப்போது பல கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். “வறுமையின் தத்துவம்”என்ற பிரோவ்தன் எழுதிய நூலை 2 நாட்களில் படித்து அதற்கு பதில் அளிக்கும் அடிப்படையில் “தத்துவத்தின் வறுமை” என்ற நூலை எழுதத்துவங்கி விட்டார்.
தத்துவத்தின் வறுமை என்ற நூலை எழுதிய மார்க்ஸ், தன் மனைவி, குழந்தைகள், பெண் உதவியாளர் ஆகியோருடன் மிகக் கொடிய வறுமையில்தான் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். இது பற்றி மார்க்சின் மனைவி ஜென்னி எழுதிய கடிதத்தை யார் படித்தாலும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. ஏங்கல்ஸ் அளித்த பண உதவிகள்தான் மார்க்ஸைக் காப்பாற்றின. இத்தகைய சூழலில்தான் அந்த மாமேதை மிக விரிவாக, மிக ஆழமாகப் படித்தார்; எழுதினார்; போராடினார்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளைப் படித்தால் யாரும் வியக்காமல் இருக்க முடியாது. இந்திய வரலாறு, புராணங்கள், பொருளாதாரம், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவைச் சூறையாடியது, வரலாறு காணாத வறுமையிலும், துயரத்திலும் இந்திய மக்கள் பட்ட அவதிகள் என்று பல விஷயங்களை அவர் விவரித்துள்ளார். இதற்காக ஏராளமான புத்தகங்களையும், அரசு ஆவணங்களையும் அவர் ஆழமாக ஆய்வு செய்தார். இதேபோல சீனா உள்ளிட்ட காலனி நாடுகள் பற்றியும் அவர் ஆய்வு செய்து எழுதினார்.
அரசியல், சமூக, அறிவியல் தளங்களில் புதிய அம்சங்கள் எங்கு உருவானாலும் அவைகளை பற்றி உடனடியாக படிப்பார், பரிசீலிப்பார். உதாரணமாக, “இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம் பற்றி” என்ற சார்லஸ் டார்வின் நூல் வெளியானபோது அதை உடனடியாக படித்து பாராட்டியதோடு, அவருக்கு தன்னுடைய மூலதனம் நூலை அனுப்பி வைக்கிறார். அந்நூலைப் பெற்றுக் கொண்ட டார்வின், மனநெகிழ்வோடு மார்க்சுக்கு கடிதம் எழுதுகிறார்.
“அன்புள்ள மார்க்ஸ், உங்களுடைய மகத்தான நூலான மூலதனத்தை எனக்கு அனுப்பி வைத்து என்னை கவுரவித்ததற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் ஆழமான, மிகவும் முக்கியமான பொருளான அரசியல் பொருளாதாரத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்வதன் மூலம் அந்நூலைப் பெறுவதற்கு நான் தகுதியுள்ளவனாக இருக்க உளமார விரும்புகிறேன்.
நம்முடைய படிப்பாராய்ச்சிகள் வேறுபட்டிருந்த போதிலும் நாம் இருவரும் அறிவு விரிவடைய வேண்டும் என்பதை மனமார விரும்புகிறோம் என்றும், இது நாளாவட்டத்தில் மனித குலத்தின் மகிழ்ச்சிக்கு நிச்சயம் துணையாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள சார்லஸ் டார்வின்” மார்க்ஸ், அக்கால ஆளும் வர்க்க அரசுகளை கடுமையாக விமர்சித்தார். போராட்டங்களில் கலந்து கொண்டார். அதனால், பலமுறை நாடு கடத்தப்பட்டார். 1845ல் பாரிசிலிருந்தும், 1848ல் பிரெசல்சில்(பெல்ஜியம்) இருந்தும், 1849ல் கொலொனிலிருந்தும் (ஜெர்மனி), பிறகு பாரிசிலிருந்தும் 4 ஆண்டுகளுக்குள் 4 நாடுகளில் இருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். 1849ம் ஆண்டு லண்டனுக்கு அகதியாக சென்றார். இடையிடையே அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்றாலும், பல போராட்டங்களில் கலந்து கொண்டாலும் தனது இறுதி மூச்சு வரையில் லண்டனில் தான் வாழ்ந்தார்.
லண்டனுக்கு சென்ற பிறகு, தொடர்ந்து அங்குள்ள பிரிட்டிஷ் மியூசியம் என்ற உலகப் புகழ் வாய்ந்த நூலகத்திற்கு தினமும் சென்று தனது ஆய்வை தொடர்ந்தார். ஏராளான நூல்களையும், இதழ்களையும் படித்தார். (தற்போது இந்த நூலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது.)
பிரிட்டிஷ் மியூசியத்தில் மார்க்சும், அவரது மகள் எலினாரும் படித்த அறையை சமீபத்தில், (மார்க்ஸ் 200 விழா-வையொட்டி) மக்கள் பார்வைக்கு பிரிட்டிஷ் அரசு திறந்து விட்டது. மார்க்ஸ், பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அளித்த ‘மூலதனம்’ நூலை வாசகர்கள் பார்வைக்கு வைத்திருக்கிறது.
1849-லிருந்து சுமார் 18 ஆண்டுகள் ஆய்வு செய்து 1867ம் ஆண்டு மூலதனத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார். மூலதனத்தின் 2வது, 3வது தொகுதிகளுக்கான குறிப்புகளை மார்க்ஸ் தயார் செய்திருந்தாலும் வெளியிடமுடியவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு அவருடைய உற்ற தோழனான ஏங்கல்ஸ், மார்க்ஸ் தயாரித்த குறிப்பின் அடிப்படையில் இரண்டு தொகுதிகளையும் நூல்களாக்கி வெளியிட்டார். இதைப் போலவே,“ உபரி லாபம்” என்ற மார்க்ஸ் தயாரித்த மூன்று தொகுதிகளையும் மார்க்ஸ் மறைவிற்குப் பிறகு ஏங்கல்ஸ் வெளியிட்டார். உபரி மதிப்பின் கோட்பாடுகள் பற்றி மார்க்ஸ் எழுதியவற்றை, ஏங்கல்சின் மறைவுக்குப் பிறகு, காரல் காட்ஸ்கி மூன்று பகுதிகளாக வெளியிட்டார். இது மூலதனத்தின் நான்காம் தொகுதி என்று குறிப்பிடப்படுகிறது.
மார்க்சின் வாசிப்பு பற்றி அவருடைய சமகாலத்தவர்கள் எழுதிய பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.“தீராத புத்தகப் புதையல்கள் கொண்ட பிரிட்டிஷ் மியூசியத்தின் அற்புதமான வாசகர் அறை அப்போது தயாராகி விட்டது. மார்க்ஸ் அங்கு தினமும் சென்றார். படி! படி! அதுதான் அவர் எங்களுக்கு அடிக்கடி தந்த உத்தரவு என மார்க்சின் தோழர்களின் ஒருவரான வில்ஹெம் லீப்னெட் பதிவு செய்திருக்கிறார்.
மார்க்ஸ் தனக்கு தேவையான நூல்களை சேகரிப்பது மட்டுமல்ல, அவைகளை எப்படி பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “அவர் தனக்கு வேண்டிய புத்தகத்தை, அல்லது குறிப்பை சட்டென்று எடுத்துவிடுவார். பேசிக்கொண்டு இருக்கும்போதே, நடுவில் நிறுத்தி, தான் அப்போது சொன்ன ஒரு வாசகத்தை அல்லது ஒரு புள்ளி விவரத்தை ஒரு புத்தகத்தை எடுத்து நமக்கு ஆதாரமாகக் காட்டி விடுவார். அவரும், அவரது படிப்பறையும் ஒன்றே.
அங்கிருந்த புத்தகங்களும், காகிதங்களும் அவரது சொந்த உடல்உறுப்புகள் போல முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் இருந்தன” என அவரது மருமகன் பால் லபார்க் குறிப்பிட்டிருக்கிறார்.
புத்தகங்களை அவர் அறிவிற்கான ஆயுதங்கள்; ஆடம்பரத்திற்கான பொருட்களல்ல என்று கருதியதோடு, “இவை எல்லாம் என் அடிமைகள், என் இஷ்டத்திற்கு இவை சேவகம் செய்ய வேண்டும்” என்றும் அவ்வப்போது கூறுவார் என்றும் பால் லபார்க் பதிவு செய்துள்ளார்.
மார்க்சால் அத்தனை ஐரோப்பிய மொழிகளையும் படிக்க முடியும். அவற்றில் ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அந்த மொழியின் வல்லுநர்கள் வியக்கும் வகையில் எழுதத்தெரியும். வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு அந்நிய மொழி ஒரு ஆயுதம் என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். தனது 50வது வயதில் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டு, முக்கியமான ரஷ்யப் புத்தகங்களையும், ஆவணங்களையும் மார்க்ஸ் படித்தார்.
கவிஞர்கள், நாவலாசிரியர்கள் தவிர, மார்க்ஸ் அறிவுபூர்வமாக களைப்பாறுதலுக்கு மற்றொரு வழியையும் வைத்திருந்தார். அது கணிதம். அதன் மேல் அவருக்கு விசேச ஈடுபாடு இருந்தது. அல்ஜிப்ரா அவருக்கு ஆத்மதிருப்தியைக் கூட அளித்தது என்று சொல்லலாம். ஏனெனில் வாழ்வின் மிக துயரமான கட்டங்களில் அவர் அல்ஜிப்ராவிடம் அடைக்கலம் புகுந்தார்.
அவரது தனிச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தில் மட்டுமன்றி, அனைத்து நாடுகளின் வரலாறு, தத்துவம். இலக்கியம் ஆகியவற்றிலும் அவருக்கிருந்த விரிவான, ஆழமான புலமையை அவரின் எதிரிகளும் பாராட்டினார்கள். ஷேக்ஸ்பியர், கதே உள்ளிட்ட அவருக்கு முந்தையகால இலக்கியங்களையும், சமகால இலக்கியங்களையும் ஆர்வமாக மார்க்ஸ் படித்திருக்கிறார்.
ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டார், எழுத மாட்டார். உதாரணமாக மூலதனத்தில் ஆங்கிலேயத் தொழிற்சாலைகள் சட்டம் பற்றி சுமார் இருபது பக்கங்கள் எழுதுவதற்காக அவர் இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் தொழிற்சாலை ஆய்வாளர்கள், கமிஷன்களின் அறிக்கைகள் கொண்ட புளூ புக் எனப்படும் புத்தகங்கள் அனைத்தையும் படித்தார்.
“அறிவியலை அடைய ராஜபாட்டை ஏதும் இல்லை”, “புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், சுயமாக சிந்திக்கவும் விரும்புகிற வாசகரையே மனதில் கொண்டு எழுதியுள்ளேன்” என மூலதனம் வாசிப்பவர்களுக்கு நூலின் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலகமே கொண்டாடக்கூடிய மாமேதையாக மார்க்ஸ் விளங்குவதற்கு அவருடைய பரந்த வாசிப்பும், அதைத்தொடர்ந்து அவர் உருவாக்கிய படைப்புகளும் முக்கியமான காரணமாக உள்ளன. வாசித்தால் வானமும் வசப்படும் என்பதையே மார்க்சின் வாசிப்பு நமக்கு உணர்த்துகிறது.
” மாமேதையாக மார்க்ஸ் விளங்குவதற்கு அவருடைய பரந்த வாசிப்பும், அதைத்தொடர்ந்து அவர் உருவாக்கிய படைப்புகளும் முக்கியமான காரணமாக உள்ளன. ”
கச்சிதமான முடிப்பு.நல்ல கட்டுரை