“தமிழ்நாட்டில் பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படையான அறிவியலுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு தேவை” கட்டுரை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த நிதி பட்ஜெட் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டிய இலக்கைக் கொண்டுள்ள மாநிலம், அதே போல் இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் அறிவுசார் மையங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது, இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களில் மாநில அரசு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை ஆய்வு செய்வது அவசியமானதாக கருதுகிறேன்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதை விட, அனைத்துத் துறைகளிலும் காலநிலை சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதே மாநில அரசின் சுற்றுச்சூழல் செயல்பாடாக இருந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. அதன் விவரம்.
- 2021-22 நிதியாண்டில், ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்’ (Tamil Nadu Climate Change Mission) துவங்கப்பட்டது இதற்காக மாநில அரசு 500 கோடியை ஒதுக்கியது. மேலும்,
- சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த 100 நீர்நிலைகளை மீட்டெடுக்கும் ‘நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்திற்காக’ (Wetlands Mission) கூடுதலாக 150 கோடியை ஒதுக்கியது.
- அதற்கு அடுத்த ஆண்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சாரப் போக்குவரத்து, மாசு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்கள், வனப் பாதுகாப்பு, சுழற்சி பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் காலநிலை சார்ந்த பிற தொழில்நுட்பங்களுக்கு நிதியளிப்பதற்காக, 1,000 கோடி மூலதனத்துடன் ‘தமிழ்நாடு பசுமை காலநிலைக்கான நிதி ஏற்பாட்டை (Tamil Nadu Green Climate Fund) மாநில அரசு உருவாக்கியது.
2023-24 நிதியாண்டிற்குள், ‘நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டத்திற்கு’ (Project Nilgiri Tahr) 10 கோடியை ஒதுக்கியதன் மூலமும், வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை’ (Green Tamil Nadu Mission) விரிவுபடுத்தியதன் மூலமும், சூழலியல் பாதுகாப்பு முயற்சிகளை அரசு மேலும் விரிவுபடுத்தியது
2024-25 பட்ஜெட்டில், நீலப் பொருளாதாரத்தை’ (Blue Economy) வலுப்படுத்தும் விதமாக( நீலப் பொருளாதாரம் என்றால் கடல் சூழலியல் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்வது) ‘கடல் வளங்களை நிலையாகப் பயன்படுத்தும் திட்டத்தை’ (SHORE) அரசு விரிவுபடுத்தியதுடன், மின்சார வாகனங்களுக்கான மானியங்களையும் வழங்கியது.
2025-26 நிதியாண்டில் அரசின் செலவினங்கள் கணிசமாக உயர்ந்தன; இவ்வாண்டில் எரிசக்தித் துறைக்கு 21,178 கோடியை அரசு ஒதுக்கியது. இந்த ஒதுக்கீட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, நீர்மின் திட்டங்கள் (pumped-storage hydro projects), மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளையும் உள்ளடக்கியது. மேலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் புதிய அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான மையங்களை அமைப்பதற்காக 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
போதுமான நிதி இல்லை:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான (SCIENCE&TECHNOLOGY-S&T) வருவாய் சார்ந்த செலவினங்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும், மாநில அரசின் ஒட்டுமொத்த நிதிசார் முன்னுரிமைகளில் இது மிகச் சிறிய பங்கையே வகிக்கிறது. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை தகவல் அமைப்பின் (NATIONAL SCIENCE AND MANAGEMENT INFORMATION SYSTEM-NSTMIS) புள்ளி விவரப்படி, 2020-21 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஒட்டுமொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக (RESEARCH&DEVELOPMENT-R&D) ஆண்டுக்கு 600 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. NSTMIS, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தலைப்பின் கீழ் உள்ள செலவினங்களைக் கணக்கில் கொள்ளாமல், துறைகள் வாரியாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களை மட்டும் மதிப்பிடுவதால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது.
இந்த எண்ணிக்கையிலும் இரண்டு முக்கிய பரிமாணங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தச் செலவினம் வேளாண்மை (பயிர் ஆராய்ச்சி, பூச்சிக் கட்டுப்பாடு போன்றவை), கால்நடை மருத்துவ சேவைகள் (கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி), பொது சுகாதாரம் (மாநில மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ ஆராய்ச்சி) மற்றும் பிற பயன்பாட்டுத் துறைகள் முழுவதும் பரவியுள்ளது.
பரிமாணம்1: பயன்பாட்டுக்கான ஆராய்ச்சி, அடிப்படை அறிவுசார் சொத்துரிமையை (INTELLECTUAL PROPERTY) உருவாக்குவதில்லை.
பரிமாணம் 2: தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஆண்டுக்கு 600 கோடிக்கும் சற்று அதிகமாக செலவிட்ட அதே காலகட்டத்தில், குஜராத் 922 கோடியும், உத்தரப் பிரதேசம் 1,000 கோடிக்கும் அதிகமாகவும் செலவிட்டுள்ளன.
CHART 1: Expenditure on research and development by select State governments (in ₹ crore)
| State | 2018-19 | 2019-20 | 2020-21 |
| Uttar Pradesh | 974.9 | 830.2 | 1,002.3 |
| Gujarat | 876.3 | 934.5 | 922.6 |
| Punjab | 625.7 | 635.5 | 697.02 |
| Maharashtra | 603.7 | 595.8 | 663.4 |
| Tamil Nadu | 513.8 | 637.7 | 609.7 |
| Andhra Pradesh | 502.4 | 469.2 | 501.5 |
மாநில அரசுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களை வரைபடம் 1 காட்டுகிறது.
ஒரு உலகளாவிய ஒப்பீட்டை மேற்கொள்வதும் அவசியம். தென் கொரியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இன்றைய தமிழ்நாட்டின் நிலைக்குச் சமமாக இருந்த காலகட்டத்திலேயே, அந்நாடு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதத்தை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக (R&D) ஒதுக்கி வந்தது. ஆனால், தமிழ்நாட்டின் மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினமானது, அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதாவது, உலகத்தரம் வாய்ந்த ஒரு நல்ல சூழலமைப்பை வளர்த்தெடுக்கத் தேவையான நிதியில் (தென் கொரிய அளவுகோலின்படி), பாதியளவுக்கும் குறைவாகவே நம்மாநிலம் தற்போது செலவிட்டு வருகிறது. குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கென மாநில அரசு ஒதுக்கும் பிரத்யேக நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாகவே இருந்து வந்துள்ளது.
2021-22 நிதியாண்டிற்கு முந்தைய சுமார் பத்தாண்டு காலத்தில், தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் (TNSCST), சென்னையில் உள்ள அறிவியல் நகரம் (Science City), தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை இயக்குவதற்கும், மாணவர் திட்டங்கள் மற்றும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் என, சராசரியாக ஆண்டுக்கு சுமார் 10 கோடி வருவாய் செலவினத்தையே தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்தது. ஆனால், ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரமாக மாற்றம் பெறத் தொடங்கியபோதும், பசுமை இல்ல வாயுவை ‘முழுவதுமாக குறைக்கும்’ (net zero) இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியபோதும், இச்செலவின விவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 2025-26 நிதியாண்டில் இந்த நிதி ஒதுக்கீடு 67.5 கோடியாகவும், 2026-27 நிதியாண்டில் சுமார் 81 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படை அறிவியலில் கவனம் செலுத்துவதன் அவசியம்
2021-க்கு முந்தைய காலத்திற்கும் 2021-27 காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நிதி ஒதுக்கீடு எட்டு மடங்காக அதிகரித்திருந்தாலும், காலநிலை சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய அளவாகவே காட்சியளிக்கிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும், எரிசக்தித் துறைக்காக மாநில அரசு 21,000 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. சொல்லப்போனால், சென்னை மற்றும் கோவையில் அமையவுள்ள புதிய அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்காக, 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் 100 கோடி நிதியை அறிவிக்கும் வரை, அடிப்படை ஆராய்ச்சிக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த நிதியிலும் பெரும்பகுதி, தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் (TNSCST) போன்ற அமைப்புகள் மூலம் வழங்கப்படும் சிறிய அளவிலான மானியத் திட்டங்கள் (10,000 முதல் 1,00,000 வரை) வாயிலாகவே வழங்கப்பட்டு வந்தது. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (சென்னை) மற்றும் கணித அறிவியல் நிறுவனம் போன்ற மாநிலத்திலுள்ள முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு, பெரும்பாலும் ஒன்றிய அரசே நிதியளிக்கிறது.
CHART 2: Budget allocated to the Science and Technology Centre and the Council for Science and Technology (in ₹ crore)
| Financial Year | Science and Technology Centre | Council for Science and Technology |
| FY21 BE | 5.08 | 3.34 |
| FY22 BE | 5.57 | 3.82 |
| FY23 BE | 5.78 | 3.89 |
| FY24 BE | 5.03 | 0.76 |
| FY25 BE | 5.04 | 0.83 |
| FY26 BE | 4.40 | 0.90 |
| FY27 BE | 4.47 | 0.97 |
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு மாநில அரசு ஒதுக்கியுள்ள பட்ஜெட் விவரங்களை, வரைபடம் 2 காட்டுகிறது.
இதன் விளைவாக, உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறனுக்குத் தேவையான, பரிமாணமடைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கட்டமைப்பு தற்போது தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டின் தற்போதைய செலவினப் போக்கு, அடிப்படை ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக, பசுமைத் தொழில்நுட்பங்களை வெளியிலிருந்து வாங்கும் மாநிலமாக மாற்றிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, சூரிய ஆற்றல் கட்டமைப்புகளை நிறுவுவதில் தமிழ்நாடு தேசிய அளவிலேயே முன்னணியில் திகழ்ந்தபோதிலும், இத்திட்டங்களில் பயன்படுத்தப்படும் 80% சதவீதத்திற்கும் அதிகமான ஒளிமின்னழுத்தத் தொகுதிகள் (photovoltaic modules), சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன அல்லது குஜராத்திலுள்ள அதானி உற்பத்தி மையங்களிலிருந்து பெறப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும் எனவே மாநிலத்தில் நம் இலக்குகளை அடைய அடிப்படையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்.
18-3-26 ஆங்கில இந்து பத்திரிகையில் வெளியான கட்டுரை
📚 எழுதியவர்:
✍️ – வாசுதேவன் முகுந்த்
தமிழில்: மோசஸ் பிரபு
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
