Vasuthenthira's Red Parrot Novel in tamil translated by Yumavasuki book review by Dhurai. Arivazhakan சிவப்புக் கிளி நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்

நூல் அறிமுகம்: வசுதேந்திராவின் சிவப்புக் கிளி நாவல் தமிழில்:யூமா வாசுகி – துரை. அறிவழகன்



மண்மணம் பேசும் கிளி

இயற்கையை நேசிப்பதும், இயற்கையோடு ஒன்றிப்போவதுமே மகத்தான கலைகள் பிறப்பதற்கான ஊற்றுக்கண்ணாக அமையமுடியும். இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்த நம் மூதாதையரின் தொன்ம வாசம் கொண்ட மண்ணை ஊடுருவிப் பார்க்கவும் உணரவும் நெகிழ்வான கண்கள் வேண்டும். அத்தகைய கண்கள் கொண்ட கலை ஆளுமைகளால் மட்டுமே உன்னதக் கலைப் படைப்பைப் படைக்க முடியும். இயற்கை, மண்மீதான நேசம், கவித்துவ மொழி என பல நிறங்கள் கரைந்து உருக்கொள்ளும் படைப்பு மனம் கொண்டவரான கன்னட மேதமை “வசுதேந்திரா”வின் அத்தகைய உன்னதப் படைப்புதான் “சிவப்புக் கிளி” எனும் நாவல்.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்திலுள்ள “சாத்தூரில்” பிறந்தவர் “வசுதேந்திரா” அவர்கள். பால் புதுமையினருக்கான உள்ளூர் அமைப்புகளோடு இணைந்து களப்பணி ஆற்றுபவர் இவர். இவரது நூல்கள் அனைத்தும் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை கண்டு சாதனை படைத்தவைகள். “கன்னட சாகித்திய அகாதெமி” விருது உள்பட பல்வேறு விருதுகளை தனது மகுடங்களாகக் கொண்ட சிறப்புப் பெற்றவர் “சிவப்புக் கிளி” மூல நூலின் ஆசிரியர் “வசுதேந்திரா” அவர்கள்.

பல்லுயிர்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் இடையிலான உறவு குறித்த உணர்வு ரீதியிலான புரிதலுடன் ஒரு படைப்பு உருக்கொள்ளும் போது அப்படைப்பு காவியத்தன்மை பெறுகிறது. அக்காவியத்தன்மை என்பது அழகியல் வடிவம் சார்ந்ததாக மட்டுமில்லாமல் வாசக மனதைத் தைத்து ஒரு மகத்தான மாற்றம் நோக்கி அழைத்துச் செல்வதாகவும் அமைந்துவிடுகிறது.
இவ்வாறு கலை மேன்மையும், சமூக அக்கறையும் கொண்ட படைப்புகளே காலத்தின் தேவையாக உள்ளது; காலத்தின் உன்னத ஆன்மா இப்படைப்புகளின் வழியாகவே மலர்ந்து பேசுபொருளாக நிலைத்து நின்றுவிடுகின்றன. நேசமும், பிணைப்பும் என்பது மனிதர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல; புல், பூண்டு, வெட்டுக்கிளி, இலை, தழை, பறவை, மரம் என பிரபஞ்சத்தின் சகல பல்லுயிர்களையும் ஒன்றிணைத்து மலரும் இம்மண்ணின் மகத்தான உறவாகும். இவ்வாறான பேரன்பு கொண்ட ஆத்மாவில் பிறக்கும் எழுத்துக்கள்தான் காலத்தின் முகத்தில் அறையும் சாட்சியங்களாக நிலைக்கின்றன.

பிரச்சாரம், அறிவுறுத்தல் எனும் காரணிகள் ஏதும் துருத்தி நிற்காமல் அழகியலுக்குள் கரைந்து உருவாகும் “சிவப்புக் கிளி” போன்ற படைப்புகளே காலத்தில் அழியாத கலைமேன்மை கொள்கின்றன. ஒரு இலையின் நுனியிலுள்ள பனித்துளிக்கும் இப்பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இடையிலான மகத்தான தொடர்புக் கண்ணிகள் குறித்த விழிப்புற்ற ஆன்மாவை “வசுதேந்திரா”வின், சிவப்புக் கிளி வழியாகப் பார்க்க முடிகிறது. கலையின் வெற்றியும் கலைஞனின் வெற்றியும் இத்தகைய விழிப்புற்ற ஆன்மாவில்தான் அடங்கியுள்ளது.

வசுதேந்திராவின் களங்கமற்ற மற்றும் அறிவகங்காரமற்ற மொழி, இயற்கையோடு கரையும் போது அழகிய படிமங்கள் பூத்து வாசிப்பு மனங்களை பரவசப்படுத்திவிடுகிறது. சூரிய கதிர்களின் தீண்டலில் காற்றோடு பனி கலக்கும் கணத்தில் மண்ணிலிருந்து வெளிப்படும் மணம், வசந்த காலத்தில் துளிர்க்கும் தளிர் இலைகள், ஈர நிலத்தில் விழுகையில் ‘சொத்’தென்ற சப்தம் எழுப்பும் பனம் பழம், பனங்குருத்தை மென்றபடி பம்மிக் கிடக்கும் காடைகள் என மனிதன் அவதானித்து நேசம் கொள்ள இயற்கை எல்லையற்று விரிந்து இருக்கிறது. சிறுதுளி நீர்ச்சொட்டுக்குள் மறைந்து நிற்கும் குளம், குட்டை, ஓடை, ஏரி, கடல் என விரியும் நிலவியலைப் பேசத் தெரிந்தவனே அசலான கலைஞனாகப் பரிமளிக்க முடியும். அவ்வாறு தன் சிறகுகளை விரித்து நிற்கும் கலைஞராக வசுதேந்திராவை ‘சிவப்புக் கிளி’ நூல் வழியாகப் பார்க்க முடிகிறது.

மண்ணை ஆளும் விகார மனம் மனிதனுக்குள் விழித்தெழும் போதெல்லாம் இயற்கை தன் வசீகர முகத்தை மாற்றிக் கொண்டுவிடுகிறது. பலவேறு படைப்புகளில் தன் மனம் தொட்ட பாத்திரங்கள் குறித்து ஒரு பதிவில் சொல்லும் போது “சிவப்புக் கிளி” நாவலில் வரும் ‘ ஈரப்பா’வின் கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார் ‘யூமா வாசுகி’ அவர்கள்.
மரபு வழியிலான அறிவை நவீன எந்திரங்களின் கண்டுபிடிப்புகள் வழியாக மனிதன் ஆள நினைக்கும் போது இயற்கை எதிர்வினை புரியத் தொடங்குகிறது. தாவரங்கள் குறித்த அறிவுச் செழிப்பை வைத்திய அறிவாக மறுவரைவு செய்த “இருளர்” மொழியை நவீனம் உள்ளுணர வேண்டும். ‘காடர்’ மற்றும் ‘இருளர்’ பழங்குடி இன மக்களின் தொன்ம அறிவை நோக்கி நவீனம் திரும்பும் போது புதிதான சிலவற்றை மனித இனம் பெறமுடியும் என்பது திண்ணம். அத்தகைய சிந்தனைப் புள்ளி நோக்கிய திறவாக அமைந்துள்ளது “வசுதேந்திரா”வின் ‘சிவப்புக் கிளி’ நாவல்.

நிகழ் புள்ளியில் நின்று மூதாதையர் வாழ்வை நோக்கியும், இனி வரும் தலைமுறை சந்ததிக்கான வாழ்வை நோக்கியும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது “சிவப்புக் கிளி” நூல். நவீன முன்னகர்வு எனும் பொய்யுரைக்கு நாம் தொலைத்து வரும் மண்ணையும், வாழ்வையும் பேசுகிறது இந்நாவல்.
நவீனம் என்ற பூச்சோடு எந்திரங்களின் துணை கொண்டு மனிதன் இந்தப் பூமியை ஆளத்தொடங்குகையில் அவன் எதையெல்லாம் இழக்கிறான், எப்படி அழுக்கடைகிறான் என்பதை பச்சை நிறம் மறைந்து சிவப்புப் பூச்சுப் பெறும் கிளிவழி குறியீடாகப் பேசுவதே நாவலின் சிறப்பாக அமைகிறது. கிளிகளின் இறக்கைகள் நிறம்மாறும் போது மனித குல வாழ்வை அச்ச ரேகைக்கள் சூழ்ந்து பதைபதைக்க வைத்துவிடுகிறது.

“விவசாயத் தோட்டம்” குறித்த ஒரு பால்ய வயதுச் சிறுவன் எழுதும் கட்டுரை வழியாக மலரும் நாவல் மூதாதையர் மண்ணின் உடங்கருவல் வாடையோடு முற்றுப்பெறுகிறது. தொன்ம மண்ணின் பாரம்பரிய விதை வித்தாக வாழும் “ஈரப்பா”வின் வாழ்வு சிதைவதை அடிக்கோடாகக் கொண்டு தலைமுறை மாற்றம் காட்சி பெறுகிறது.
பால்ய நிலத்தின் நிறம் மாறும் ஒரு சமூக அவலம் வாசிப்பு மனதைத் தைத்து ரணமாக்கிவிடுகிறது. மண்ணுடனும், இயற்கையுடனும் பிணைந்திருந்த நம் தொன்ம வாழ்விலிருந்து விலகும் போது நம் சுவாசப்பாதையில் படியும் அழுக்கைச் சுட்டி அகவிழிப்பை ஏற்படுத்தும் வகையில் நாழி ஓட்டு அடுக்குகளாக காட்சிபெறுகிறது நாவலின் களம். மூதாதையர் வாழ்வின் பொருள்பொதிந்த வாசம் சுமந்து, பதைபதைக்கச் செய்கிறது “வசுதேந்திரா”வின் “சிவப்புக் கிளி” எனும் அழகியல் சாரம் கொண்ட குறியீட்டு நாவல்.

நூல் : “சிவப்புக் கிளி”
கன்னட மூலம் : ‘வசுதேந்திரா’
மலையாளம் வழி தமிழில்: ‘யூமா வாசுகி’
விலை: ரூ.40 /- பக்கங்கள் : 48
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
Web : Tamizhbooks.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *