திரைப்பட்ங்களில் மனித குலத்தை அழிக்க வந்த வில்லனாகக் காண்பிக்கப்பட்ட உயிரி உண்மையில் இயற்கையை பாதுகாப்பதில் எவ்விதம் சிறப்பாக உதவுகிறது என்பதை அறியத் தரும் நூல் இது.
இரவில் மட்டுமே இயங்கி பகலில் ஓய்வுடுக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்த பறக்கும் ஒரே உயிரியான வவ்வால் பற்றிய அறிவியல் நூல். எப்போதும் பாழடைந்த இடங்களிலும் குகைகளிலும் உயர்ந்த மரங்களிலும் தலைகீழாகவே தொங்கியபடி உயிர் வாழும் இவைகளின் உடல் அமைப்பும் வாழ்வதற்கேற்ப தகவமைப்பும் எவ்விதம் சிறப்பான செயல்பாட்டில் விளங்குகின்றன என்பதை நூல் தெளிவுற விளக்குகிறது.
அதிக மர்மங்கள் நிறைந்த புரிந்து கொள்ளப்படாத கற்பிதங்களால் சூழப்பட்ட ஓர் உயிரினத்தைப் பற்றிய முழுமையான வரலாற்றுப் பதிவு இது. பறவை பார்த்தல் விலங்குகள் பார்த்தல் போன்ற தன்மையுடன் கூடிய நிகழ்வாக அமையாவிட்டாலும் வவ்வால்கள் பற்றி புரிதல்கள் இன்று அதிகமாக யாருக்கும் பிடிபடுவதில்லை. உலகில் உருவாகும் புதிய புதிய நோய்கள் வவ்வாலுடன் இணைத்துப் பார்க்கப்படுகின்றன. உண்மையில் வௌவால்கள் எப்படியான உயிரினம்? வௌவால்களுக்கும் நோய் பரவுக்கும் என்ன தொடர்பு? வவ்வால்கள் மனித ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் என்ற கற்பிதங்கள் உண்மையா? வவ்வால்களின் வாழ்க்கைச் சூழல் என்ன? குடும்பம் அவற்றின் வாழும் முறைகள் என முழுமையான பார்வையை நமக்கு கற்றுத் தருகிறது இந்த நூல்.
இதில் வவ்வால்கள் மீதான பழைய கற்பித்தங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. மனித ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் வவ்வால்கள் உலகத்தில் எங்கும் இல்லை. ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல வவ்வால்கள் கொல்லும் உயிரியாக கழுத்தில் ரத்தத்தை உறிஞ்சும் உயிரி யாக காட்டப்படுவது நிஜமல்ல.
முழுமையான அறிவியல் செய்திகள் நூல் முழுவதும் தெளிவாகவும் விளக்கமாகவும் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறப்பியல்புகள் தனியாக பட்டியலிடப்படுகின்றன. அதேபோல உலகத்தில் உள்ள வவ்வால் வகைகள் அவை எங்கு எங்கு உயிர் வாழ்கின்றன என்பது தொடர்பான பட்டியலும் வவ்வால்களுக்கு இந்தியாவில் எங்கெல்லாம் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான குறிப்புகளும் இதில் இடம்பெற்று வௌவால் என்ற உயிரினத்தை பற்றிய ஒரு முழுமையான மதிப்பீட்டையும் அவற்றை நாம் எவ்வாறு பாதுகாப்பது என்ற சமூக அக்கறையையும் நமக்குள் விதைத்துச் செல்கிறது இந்த நூல்.

இதில் வவ்வால் பற்றிய நிறைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு அறிவியல் நூலாக இவற்றை நாம் வாசிக்கும்போது இயல்பாகவே எழும் அறிவியல் தொடர்பான கருத்துக்கள் நமக்கு மனதிற்குள் முழுமையாக பதியாது என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக அறிவியல் பதங்களை வாசிக்கையில் ஒரு மந்த நிலை ஏற்படும் என்ற பயமும் அறிவியல் நூல்களை வாசிப்பதில் இருந்து நம்மை விலக்கி வைக்கின்றன. ஆனால் அத்தகைய இடையூறுகள் எதுவும் இல்லாமல் எளிய தமிழில் புரிந்து கொள்ளும்படியான நிலையில் நூலில் வவ்வால் பற்றிய அறிமுகம் தொடங்கி அவற்றின் வாழ்நிலை வரை முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது
கூட்டமாக நெருக்கமாக இருந்து தமது உடல் வெப்பநிலையை தக்கவைத்துக் கொள்வது தமது உடல் எடையைவிட அதிக பூச்சியை உண்பது பகல் நேரத்தில் பறவைகள் பூச்சிகளை வேட்டையாடுவதால் தாம் ஓய்வெடுப்பது இரவு நேரங்களில் வயல்வெளிகளில் பயிர்களை சேதப்படுத்தப் படையெடுக்கும் பூச்சிகளை கூட்டமாகச் சென்று அழிப்பது பகல் நேரத்தின் வெப்பநிலையில் உடலின் இறக்கை அமைப்பு சீர்குலைவதால் சூரிய ஒளியைத் தவிர்ப்பது என பல்வேறு சிறப்பம்சங்களை தமக்குள் வைத்துக்கொண்டு விவசாயத்திற்கும் நன்மை செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் பெரிதளவில் உதவுகின்றன வவ்வால்கள்.
இன்றைய மனித குலம் ஒவ்வொரு முறையும் புதுப்புது நோய்களுடன் போராடிவரும் சூழலில் இயற்கையை பாதுகாக்கத் தவறியதன் விளைவாகவும் காடுகளை அழிப்பதன் தொடர்ச்சியாகவும் வவ்வால்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு அவை ஆபத்துக்கு உள்ளாக நேர்கின்றன. அதேசமயம் நோய்த் தொற்றுகளை அவை சுமந்து வந்து மனிதர்களுக்கு புதுப்புது நோய்களை உருவாக்கக் காரணமாக இருக்கின்றன என்ற தவறான எண்ணம் மனிதர்களுக்குள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு என்பதையும் இந்த நூல் அறிவியலின் அடிப்படையில் தக்க ஆதாரங்களின் அடிப்படையிலும் விளக்கம் தருகிறது.
வவுதல் என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்தே வவ்வால் என்ற சொல் உருவாகியுள்ளது. வவ்வுதல் என்றால் பற்றிக்கொள்ளுதல் என்று பொருள். வவ்வு என்றால் இடத்துக்கும் சுவருக்கும் இடையில் உள்ள பகுதி என்று ஒரு பொருளும் தமிழ் அகராதியில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் வௌவால் என்கிற பெயர் அதற்கு பொருத்தமாகவே அமைந்துள்ளது.
வவ்வால் தொடர்பான சங்க கால நூல்களில் குறிப்பிடப்படும் பாடல்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் ஆராயும் போது இன்றைய அறிவியல் யுகத்தில் வவ்வால்கள் பற்றிய தேடுதலையும் அவற்றின் வாழ் நிலையையும் அறிவதற்கான பல கருவிகள் உள்ள நிலையிலும் அவற்றை முழுமையாக புரிந்து கொள்ளாத சூழலில் அன்றைய காலகட்டத்தில் எவ்விதமான வசதிகள் வாய்ப்புகள் இல்லாத சூழலிலும் வௌவாலின் முழுமையான வாழ்க்கை நிலையை சங்க காலப் புலவர்கள் எவ்விதம் படம் பிடித்துக் காட்டுகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
பகலில் உறங்கி இரவில் உணவு தேடி வாழ்ந்த வவ்வால் இனத்தின் வாழ்க்கை முறை சார்ந்த நுணுக்கமான அம்சங்களை நவீன வசதிகள் ஏதுமற்ற காலத்தில் சங்க காலப் புலவர்கள் பதிவு செய்துள்ள விதம் வியப்பிற்குரியது. இயற்கை காட்டுயிர் வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு தகவல்களை மனித வாழ்க்கை சார்ந்த அகப் பாடல்களில் ஒப்புமையாகவும் நேரடியாகவும் அவர்கள் எழுதியுள்ளனர். ஆனால் இன்றைக்கு எத்தனையோ நவீன வசதிகள் அறிவியல் ஆய்வுகள் இருந்தும் அறியாமை மற்றும் மூடநம்பிக்கையால் வவ்வால்களை எதிரியாகவும் நோய் பரப்பும் கிருமியாகவும் பார்த்து அச்சப்படுகிறோம் ஆனால் உண்மையில் வவ்வால்கள் அப்படியானதொரு சித்திரத்திற்குள் அடங்குவதில்லை.
பறக்கக்கூடிய ஒரே பாலூட்டி வகை சில வகை வவ்வால்கள் புவியின் காந்தப்புலத்தை உணர்ந்து வழி கண்டறியும் தனித்திறன் பெற்றவை பூச்சியுண்ணும் வவ்வால்கள் மீயொலி அலை எனும் அதிக அலைநீளம் கொண்ட ஒளியை எழுப்பும் திறன் பெற்றவை. உடல் எடைக்கு ஈடான பூச்சிகளை பூச்சி உண்ணும் வவ்வால்கள் உண்ணக்கூடியது.
மனிதர்கள் உயிரினங்கள் பயிர்களுக்கு தொல்லை தரும் பல பூச்சிகளை பெருமளவில் வவ்வால்கள் உணவாகக் கொள்கின்றன.
இவற்றின் முதன்மை உணவு பூச்சிகள் மற்றும் கொசு பூச்சிகளை பெருமளவு உண்பதன் மூலம் வேளாண்மை வயல்வெளிகள் காடுகளில் பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு இவை உதவுகின்றன எனவே உழவர்களுக்கு நண்பனாகவே விளங்குகின்றன.
இவை எழுப்பும் மீயொலியின் அலைநீளம் வெகு தூரத்திற்கு கேட்கும் அதேபோல இவை மனிதர்களுக்கு கேட்காத ஒலியை எழுப்பக் கூடியது இவ்வாறு எழுப்பப்படும் மீயொலியின் அளவானது வவ்வால்களின் காதுகளை சேதப்படுத்தாத வகையில் இயற்கையாகவே அவற்றின் காதுக்குள் ஓர் தடுப்பு அமைப்பு இடம்பெற்று அவைகளை சிறந்த தகவமைப்பிற்கு வாழ வைக்கின்றன.
வவ்வால்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து ஆறு மாத அளவிற்கு உறக்க நிலைக்குச் சென்று விடுகின்றன.
சில வகை வவ்வால்கள் தாம் உறிஞ்சிக் குடித்த ரத்தத்தை கக்கி பிற வவ்வால்களுக்கு உணவாக மாற்றி அவர்களையும் வாழ வைக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் காணப்படும் இவைகள் கொசுக்கள் மற்றும் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. கோழி போன்ற சிறு உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி அல்ல நக்கிக் குடிக்கும் ஒரு வகை வவ்வால் மனிதர்களை எந்தச் சூழலிலும் காய்படுத்துவதில்லை.இவ்வகை வவ்வால் இனங்கள் மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவில் காணப்படுகின்றன இந்தியாவில் இல்லை.
நூலின் வழியே வைரஸ் தொற்றுக்கும் வௌவால்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதையும் மனிதர்கள் உலகத்தின் மீதான பேராசையை அதிகப்படுத்தியதும் இயற்கையைப் பாதுகாக்க தவறியதன் வழியாகவும் காடழிப்பின் தொடர்ச்சியாகவும் பெருகிவரும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் புதுப்புது வைரஸ்கள் மனிதர்களுக்குள் பல்கிப் பெருகி விடுகின்றன என்பதையும் தீர்க்கமாக அறிய முடிகிறது.
நூலின் தகவல்கள்
நூல் : வாவுப் பறவை – வௌவால்கள் கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
முதல் பதிப்பு : பிப்ரவரி 2021
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 144
விலை : ரூ.160
நூல் அறிமுகம் எழுதியவர் :

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறந்த ஒரு திறனாய்வு. முழு புத்தகத்தையும் வாங்கி படிக்க ஆவலை தூண்டும் வகையில் உள்ளது. மிக்க நன்றி அய்யா.