வழி மாறிவிடும் வனப்பகுதிகள்
வனங்கள் நம் நாட்டின் இன்றியமையாத, இயற்கை தந்த கொடை, செல்வம், அல்லவா? நாட்டின் பொருளாதார
முன்னேற்றம் மட்டும் அல்லாமல், பருவ கால மாற்றம் நிர்ணயித்தல், கார்பன் உறிஞ்சு தளம், வனவிலங்குகளின்,
சரணாலயம், அரிய வகை தாவரங்களின் இயற்கை இருப்பிடம், பழங்குடி மக்களின் வாழ்விடம், முக்கிய சூழல்
அமைப்பு என பல்வேறு பணிகளை காடுகள் உள்ளடக்கி அமைந்துள்ளன. எனினும், சமீப காலத்தில், அறிவியல்
தொழில் நுட்பம், தொழிற்சாலைப் பெருக்கம், மலைப்பகுதி தோட்ட, விவசாயம், மக்கள் குடியேற்றம், சுற்றுலா, புதிய
கட்டுமானங்கள், மாசுபாடு, விலங்கு அழிப்பு, மரங்கள் வெட்டுதல், வணிக மயமான வாழ்க்கை முறை! போன்ற
வெவ்வேறு காரணிகளால் வனங்கள் வழி மாறிவிடுகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், 1990-2000 ஆண்டுகளுக்கு இடையில், 384,000 ஹெக்டர் வனப்பகுதிகள் குறைந்து போய்விட்டது. மேலும்
6,68,400 ஹெக்டர் வன நிலங்கள் 2015 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் வழி மாறி, வேறு காரணங்களுக்காக மாற்றம்
செய்யும் நிலை வந்துவிட்டது. அதிக அளவில் கட்டுமானப் பணிகள், தொழிற் சாலை பெருக்கம், சுரங்க தொழில்,
மக்கள் பெருக்கம், விவசாயம், வணிக காரணங்கள் மட்டுமே முதன்மைப் படுத்தப் பட்டு அதிக அளவில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் பரிதாப நிலை நம் நாட்டில் உருவாகிவிட்டது.
2022-23 ஆம் ஆண்டுகளில் 17.381.88 ஹெக்டர் அளவுள்ள வனங்கள் நமது நாட்டில், வேறு பல காரணங்களுக்காக
மாற்றம் செய்யப்பட்டது. இது முந்தைய 2021-22 ஆண்டினை விட 3.5% அதிகம் ஆகும். குறிப்பாக ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், உத்ராகண்ட், உத்திர பிரதேசம் ஆகிய 5 ஐந்து மாநிலங்களில் 50% காடுகள் இவ்வாறு அழிக்கப்பட்டு, மாற்றம் ஆகிவிட்டது. 2014-15 ஆம் ஆண்டு முதல் 2022-23 வரை கணக்கெடுத்தப்படி, மத்திய பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில், மிக அதிக அளவுக்கு காடுகள் மாற்றம் அடைந்து வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழிவுப் பாதைக்கு மாறிவிட்ட அவலம் வருத்தத்துடன் இங்கு பதிவு செய்யவேண்டியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகள், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் முறையே 21% மத்திய பிரதேசம், 13% ஒடிசா, தெலுங்கானா
8%, மற்றும் குஜராத் 7% வனங்கள் வழி மாறிவிட்டன.
17381.88 ஹெக்டர் வன நிலங்கள் (2022-23) மாறியதற்கு முக்கிய காரணங்களாவன, சாலை அமைத்தல், சுரங்க
தொழில் (65%)மின்சார மாற்ற கம்பிகள் போன்றவை என அறியப்பட்டுள்ளது. பொதுவாக அருணாச்சலப்ரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்ரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து காடுகள்
அழிக்க ப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை ஏற்படுத்தும் அதிர்ச்சி நிலை உள்ளது. எனினும் தமிழ் நாடு, கேரளா, தெலுங்கானா, திரிபுரா, டெல்லி, அசாம் ஆந்திர பிரதேசம் மேற்கு வங்காளம்,ஆகிய மாநிலங்களில் மட்டும், காடுகள் அழிக்கும், மாற்றம் செய்வது மிகவும் குறைவாக உள்ள நிலை, சற்று திருப்தி அளிக்கிறது. மொத்தத்தில் கடந்த
பத்து ஆண்டுகளில் 18 மாநிலங்களில்,காடழிப்பு பிரச்சனை அதிகரித்துள்ளது.

மேற்கண்ட புள்ளி விபரங்கள் அறிவியல் பூர்வமான, ஆய்வு கணக்கெடுப்பு, நமக்கு கொஞ்சம், வருத்தம், அயர்ச்சியினை தருகிறது. ஆனால், இந்த விபரங்கள் மூலம் நம் இந்திய நாடு, இயற்கை இழப்பு, வளர்ச்சி என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று நிகழ்ந்து வருவதும் கண்டனத்துக்குரியது. வனங்கள் எப்போதும், மனித வரலாறு, சமூக பொருளாதார மேம்பாடு, ஆகியவற்றில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள நிலை யாவரும் அறிந்ததே. 1976 வரை மாநில நிர்வாகம் பட்டியலில் இருந்து வந்த வன பாதுகாப்பு தொடர்பான நடை முறைகள் மாற்றம் செய்யப்பட்டு, இந்திய நாட்டின் மைய அரசு,வன அமைச்சகம் 1980ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி பெற்ற பின், மக்கள் நலனுக்காக காடுகள், வனம் சாரா பணிகளுக்கு தர வழி ஏற்படுத்தியது. எனினும் 1988 ஆம் ஆண்டு தேசிய வனக் கொள்கை அடிப்படையில் காடுகளிலிருந்துகிடைக்கும் நேரடியாக பொருளாதார பயன்பாடுகளுக்கு இரண்டாம் நிலை, முக்கியத்துவம் மட்டும் தரப்படும் என அன்றைய அரசு முடிவு செய்தது. இதனால் 1,50,000 ஹெக்டர் வன நில மாற்றம், வெறும் 35,000 ஹெக்டர் ஆக குறைவு பெற்றது. வன பாதுகாப்பு சட்ட நடவடிக்கை மூலம் வன அழிவு குறைந்து போன நிலை தெளிவாகியது.
எனினும், வனப் பாதுகாப்பு சட்டம் (திருத்தம்) 2023, பல்வேறு விரும்பத் தகாத, வகையில் காடுகளுக்கு ஊறுகளை விளைவிக்கும், வகையில் இருப்பதாக தெரிகிறது. உண்மையில் கார்பன் உமிழ்வுகளை, முற்றிலும் குறைக்கக் குறிக்கோள் கொண்டு, மரக் கன்றுகளை வனங்களுக்கு வெளிப்புற பகுதியில் நடுவதற்கு திட்டம் இருக்கிறது. ஆனால், இயற்கைக் காடுகளை அழித்து பல்வேறு வளர்ச்சி பணிகளுக்குத் தாரை வார்த்துவிட்டு, ஈடு செய்ய மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்த முனைவது, ஏற்புடையதல்ல. வன பாதுகாப்பு சட்டம், 2023,(திருத்தம் ) வனம் சாராத வனம் அழிப்பு பணிகளுக்கு ஏதுவாக, அமைந்துள்ள நிலை வருத்தம் தருகிறது.

இயற்கை பாதுகாப்பில், காடுகளின் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்து வருகிறோம். அறிவியல் அறிஞர்கள்
அவ்வப்பொழுது பருவ கால மாற்றம், புவி வெப்ப மயமாதல் பற்றிய அபாய உண்மைகளை கூறி தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். ஆனால், இருக்கும் காடுகள் அழித்துவிட்டு புதிதாக மரக்கன்றுகள் நட்டு, உருவாகி வரும் வனங்களில் நெடுங்காலமாய் இருந்து வரும் உயிரின வேற்றுமையினை நிச்சயம் நாம் காண இயலாது.. அறிவியல் உண்மைக்கு புறம்பாக, இயற்கைக்கு எதிரான செயல்கள் எவ்வாறு கரிமம் உறிஞ்சு தொட்டிகளாக புதிய காடுகளை மாற்றம் செய்யும் நிலை வரும்? சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில், அறிவுரை, ஆலோசனை கூறும் முன்னாள் அதிகாரிகள், விஞ்ஞானிகள் கருத்துக்களும் மறுக்கப்பட்டு வரும் நிலை மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு நாடு வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்கள் நிச்சயம் தேவை என்பதை நாம் மறுக்க இயலாது! அறிவியல், தொழில் நுட்பம், தொழிற்சாலை, சாலைகள், பாலங்கள், கட்டுமானங்கள், நகரமயமாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை மட்டுமே மேம்பாடு, வளர்ச்சி என்ற கருத்து, தவறு என்பதை அரசும், மக்களும் முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்தால் நன்று. இயற்கை காடுகள் என்பது நீண்ட காலமாக இந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு
பல்வேறு உயிரியல் சேவைகளை செய்து வரும் மனிதனால் மீண்டும் உருவாக்க இயலாத தொழிற்சாலை! அங்குள்ள
உயிரின வேற்றுமை, நம் நாட்டின் திரும்பப் பெற முடியாத உடைமை ஆகும். அவற்றை சுற்றுலா வளர்ச்சிக்காக
பொது மக்கள் சென்று பார்த்து, அதனால் வருவாய் ஈட்ட எண்ணுவது நிச்சயம் தவிர்க்க முயற்சி செய்யும் நிலை
வர வேண்டும்.

இயற்கை காடுகள், பல்வேறு பொருளாதார வளர்ச்சி காரணங்களுக்கு தனியார் பெரு முதலாளிகளுக்கு உடைமை ஆக்குவது, காடுகளில் உள்ள பழங்குடி மக்கள் அவர்களின் வாழ்விடத் திலிருந்து வெளியேற்றம், வன
விலங்கு வேட்டை, அண்டை நாடுகள் நம் நாட்டு காடுகள் உள்ளே புகுந்து ஆக்கிரமிப்பு, ஆன்மீக அடிப்படையில் இயற்கை காடுகளில் ஆன்மீக தலம் அமைத்தல், சுற்றுலா உணவகங்கள், திரைப்பட படப்பிடிப்புக்காக காடுகளின் உட்பகுதியில் சென்று ஆக்கிரமிப்பு, மாசுபாடு பற்றிய உண்மை விழிப்புணர்வு மக்கள் பெறவேண்டும். மொத்தத்தில் அரசுத்துறைகள், பொதுமக்கள், அறிவியல் அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் இயற்கை பற்றிய தெளிவான சிந்தனை பெற வேண்டும். இல்லையேல் நம் நாட்டின் இயற்கை காடுகள் பாதுகாப்பு என்பது ஒரு பொழுது போக்கு விழிப்புணர்வு நிலையிலிருந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போல் ஆகிவிடும்! சிந்திப்போம்!
கட்டுரையாளர் :
முனைவர். பா. ராம் மனோகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

