வழிகூறும் மூளை (மனித இயல்பின் புதிரை நீக்குதல்) – நூல் அறிமுகம்
மனிதனுடைய இயல்பினை மனமாற்றங்களை நடத்தையைப் புரிந்துக் கொள்வது மிகவும் கடினம். அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. அதற்கு காரணமான மனிதனின் மனம், கலை உணர்வு, நோய், கோபம், விருப்பம் போன்றவற்றிற்கான காரண காரியங்களை ஒன்பது அத்தியாயங்களாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் ஆசிரியர் வி.எஸ். ராமச்சந்திரன் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மற்றும் நரம்பு அறிவியல் செயல் திட்டத்தின் பேராசிரியர் ஆவார். அவர் மேற்கொண்ட ‘நடத்தை நரம்பியலின்’ ஆய்வு பார்வையே இந்நூல்.
தன்னுடைய விதியை தானே நிர்ணயம் செய்யும் தன்மையைக் கொண்ட ஒரே மற்றும் முதல் சிற்றினம் மனித இனம் மட்டும் தான். ஏதோ ஒரு விதத்தில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் தனித்தன்மை கொண்டவர்களாக உள்ளார்கள் மனிதர்கள். தன்னிலைக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் ஒரு நியூரான் மனித மூளையில் உள்ளது. ஆகையால் மனிதர்கள் மற்ற விலங்குகளில் இருந்து தனித்தன்மை வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.
“காணலும், அறிதலும்” என்ற கட்டுரையில் பார்வை என்பது கண்களின் வழியாக மட்டும் காண்பவை அல்ல; கண்கள் இருந்தாலும் மூளை பார்க்காவிட்டால் கண்ணிருந்தும் பலனில்லை. ஏனென்றால் பார்வையின் மூலம் அறிந்து கொள்ளும் வண்ணம், உருவம், நபர்கள் போன்றவற்றின் பாகுபாட்டை பகுத்துக் கொடுப்பது மூளை தான். மூளையில் முப்பதுக்கும் மேற்பட்ட பார்வை பகுதிகள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் பல நுண்ணிய செயல்களைக் கட்டுப்படுத்தும். நம்முடைய புலன் உணர்வு மாறினால் நாம் காணும் காட்சிகள் மாறும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
காட்சியானது நாம் காணும் இடங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. நாம் பார்ப்பவை அனைத்தும் உண்மையல்ல என்பதற்கு பல செய்முறை சான்றுகளும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பொருளை நாம் எப்படி சரியாக அடையாளம் காண்கிறோம்? பார்த்தவுடன் ஒவ்வொன்றையும் பற்றிய தகவல்களை எப்படி உடனேயே நினைவில் மீட்க முடிகிறது? பல முகங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறோம்? என்பதற்கான விடையை சொல்லும் புதிர் இந்த புத்தகம்.
உளவியல் படித்தவர்களுக்கு கால்டனை தெரியாமல் இருக்காது. இதில் பிரான்சி கால்டன் கூறியது, “தாழ்ந்த வகை ஜீன்களை பெற்றிருப்பதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருப்பதாகவும், அதனால் அவர்களின் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அப்படி தடை செய்யா விட்டால் கீழ்த்தர ஜீன்கள் அதிகமாகி தன்னைப் போன்ற உயர்மட்ட பணக்கார மக்களின் ஜீன் சேர்மத்தை மாசுப்படுத்தி விடும் என்ற அவருடைய நினைப்பு இனவெறியைத்தான் வெளிக்காட்டுகிறது.
சில எண்கள் சிலருக்கு குறிப்பிட்ட நிறத்தில் தெரிவது காண்பதற்கும் மனதில் உருவகப்படுத்திக் கொள்வதற்குமான எல்லை நரம்பியலில் ஏற்படும் நழுவல் என “ஒன்றிய உணர்வு” நிலை குறித்து எடுத்துரைத்துள்ளார்.
‘இன்சுலா’ உடலின் உள்ளிலிருந்து வரும் உள்ளக உணர்வுகளைப் படமாக்கும் மற்றொரு மூளைப்பகுதி. மனித இனம் இத்தகைய நாகரீகமான வாழ்வியலை ஒரு மொழி, கலை, அறிவியல் வளர்ச்சி போன்றவை உருவாக காரணமாக இருந்தவை பற்றி விளக்கும் கட்டுரையில் பண்பாட்டினைச் சுவாசிக்கவும், பண்பாடாக வாழவும் திறன் பெற்ற ஒரே ஒரு சிற்றினமாக நாம் மாறுவதற்கு காரணமான “ஆடி நியூரான்கள்” பற்றியும் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் ஏதோ ஒரு செயல் செய்வதை பார்க்கும் பொழுது நமக்கும் அதனை செய்வது போல் தோன்றும். இப்படி நாம் காணும் ஒவ்வொரு செயலையும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல் இருக்க காரணமானவற்றை அறிந்துக் கொள்ள இந்நூல் உதவும்.
மேலும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சில ஆய்வுகளையும் கூறியுள்ளார். மேலும் தடுமாற்றமான கண் இயக்கம், தசை ஒத்தியங்காமை, அகந்தையான நடை, விழி நடுக்க நோய் போன்றவை ஆட்டிசம் கொண்ட குழந்தைகளிடம் காணப்படுவதில்லை எனவும், ஆட்டிசம் கொண்டவர்களுக்கு மற்றவர்களிடம் பரிவு காட்டாமை, சமூகத்திறன்கள் இல்லாமை போன்றவை காணப்படும் என்பதையும் அறிந்துக் கொள்ள முடியும்.
பெரும்பாலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுடைய பணிகளை தாங்களாகவே செய்ய முடியாத சூழலில், பாட்டு பாடுவது, ஓவியம் வரைவது, போன்ற பல திறன்களைப் பெற்றுள்ளது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதற்கு அவர்களின் சமூக சங்கட தன்மை, உணர்ச்சி முயற்சி இன்மை, மொழி பற்றாக்குறை, ஊக்கத்தடை போன்ற மூளையின் பல பரப்புகள் சிதைவுற்று இருந்தாலும் அவர்களின் வலது புறவமை மடலில் ஒரு திட்டுப் புறணித் திசு சிதைவுறாமல் இருப்பதால் அவை காரணமாக இருக்கின்றன என்பதையும் கூறி, அதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகளையும் இந்நூலின் மூலமாக விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் பல்வேறு வகையான மனக்குழப்பங்களை உருவாக்கும் ஒரு மிகையான புலன்சார் பாரத்தை சுமக்க வேண்டியுள்ளது. அதற்கான காரணம் கூறப்பட்டு உலகைப் பற்றிய தகவல் மூளையின் புலன்சார் பகுதிகளில் முதன் முதலில் பிரித்தறியப்பட்டு பின்பு ‘அமிக்டாலா’ பகுதிக்கு அனுப்பப்படுவதையும், அமிக்டாலா மூளையின் உணர்ச்சி மையத்தின் வாயிற்படியாக இருப்பதையும் நாம் அறியலாம்.
மனிதனின் தனி சிறப்பே கலைத்திறன்களை ரசிப்பது தான். மனிதனைப் போன்று சில பூச்சிகள், பறவைகள், விலங்குகளுக்கு இருக்கும் ரசனையின் உதாரணங்களைக் கூறி அதற்கான அறிவியல் மற்றும் உளவியல் காரணங்களை கூறியுள்ளார். அதில் ஆஸ்திரேலியா, நியூகினி போன்ற பகுதிகளில் காணப்படும் “கொடிப்பந்தல்” பறவை கட்டும் கூட்டை பற்றிய செய்தி மிகவும் வியப்பாக இருந்தது.
மானிட வாழ்க்கையியல்கள் மற்றும் கலைகளின் அறிஞர்களிடம், அறிவியலும் ஒரு நாள் அவர்களுடைய துறைகளை விழுங்கி விட்டு அவர்களுக்கு வேலையில்லா தன்மையைக் கொடுத்து விடும் என்ற பயம் உள்ளது. அந்த பயத்தின் அறிகுறிதான் “நியூரான் பொறாமை”. இவை உண்மைக்கு அப்பாற்பட்டது எனவும், ஆனாலும் அத்தகைய கண்டுபிடிப்புகள் மனிதனின் மூளையில் கிடைக்கக்கூடியது என்பதையும் உணர்த்துகிறது.
அறியப்பல தகவல்கள் அடங்கிய நூலாக இருந்தாலும் இன்னும் எளிதில் விளங்கிக் கொள்ளும் அளவிலான மொழி நடையில் இருந்திருக்கலாம்.
மூளைச் செயல்பாடு, நரம்பியல், உளவியல் மீது ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கான பயனுள்ள நூல்.
நன்றி
நூலின் விவரங்கள்:
நூல் : வழிகூறும் மூளை (மனித இயல்பின் புதிரை நீக்குதல்)
ஆசிரியர் : டாக்டர்.வி.எஸ். ராமச்சந்திரன், தமிழில் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.495
பக்கங்கள் : 520
புத்தகம் வாங்க:
எழுதியவர் :
✍🏻தீபா ராஜ்மோகன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

