வழித்தடங்கள் (Vazhithadangal) – நூல் அறிமுகம்
சங்க இலக்கியம் தொடங்கி வைரமுத்து கவிதைகள் வரையிலான தமிழ் இலக்கிய ஆய்வினை தமக்கேயுரிய ஆய்வுப்பாங்கில் சில கண்டறிதல்களையும் சில ஆய்வுத் தொடக்கப் புள்ளிகளையும் சில விவாதக் கதையாடல்களையும் ‘வழித்தடங்கள்’ என்ற இத்தொகுப்பில் தொ.ப. 16 கட்டுரைகளாக விரித்துள்ளார்.
சங்க இலக்கியங்கள் வழியே சங்க காலத்தை அறிய முற்பட்டு> பாண் நாகரிகம் (Bardic Culture) அழிவுபட்ட நிலையும்;> அரசுருவாக்கமும்> வாணிக வளர்ச்சி நிலையில் வாணிக செல்வாக்கில் வளர்ந்த மதங்களான சமணமும் பவுத்தமும் செல்வாக்குப் பெற்றதும்> அரசுருவாக்கத்துக்கு உதவும் வகையில் வேதப் பெருமையும் வேதியர் உயர்வும் கூறும் நிலையும் என நான்கு கட்டங்களாக சங்க காலத்தை வரையறுக்க முயல்கிறார்.
சங்க கால இலக்கியத்தை ஆய்வுணர்வோடு அணுகிய அறிஞர்களை மூன்று காலகட்டங்களாகப் பிரித்து மூன்றாம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களான நா.வானமாமலை> கோ.கேசவன்> க.கைலாசபதி> கா.சிவத்தம்பி உள்ளிட்டோரை சமூகவியல் விஞ்ஞானப் பார்வையோடு ஆய்வு நெறியை முழுமையாக்கியோர் என எடுத்துரைக்கிறார்.
சங்க இலக்கியங்கள் பிறந்த காலத்திற்கும் தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இடைப்பட்ட கால கருத்தாக்கங்கள் ஊடுருவியிருக்குமோ என்று அவர் இத்தொகுப்பில் எழுப்பியுள்ள வினாவிற்கு இன்னமும் விடை தேடிக் கொண்டிருக்கிறோம்.
சங்க இலக்கியங்களைக் கால வரிசைப்படி அடுக்கும் முயற்சி மா.இராசமாணிக்கனாருக்குப்பின் தொடரப்படவில்லை என்று வருத்தமடைகிறார் தொ.ப.
தொல்காப்பியப் பனுவலின் (Text) ஏற்புடைமையில் அய்யம் எழுப்புகிறார். தொல்காப்பியத்தில் உரையாசிரியர்களின் இடையீடு அதிகமாக உள்ளதாகவும் சங்க இலக்கியங்களில் இல்லாத பல சொற்கள் பொருட்கள் அதில் இருப்பது எப்படி எனக் கேள்வி எழுப்புகிறார். 3000க்கும் மேற்பட்ட சங்கப்பாடல்களில் ஒரு முறை கூடக் காணப் பெறாத ‘வருணன்’ என்னும் பெயர்> தொல்காப்பியத்தின் அடிப்படையான திணை நிலத் தெய்வத்தின் பெயராகக் காட்டப்படுவது எப்படி என்று அடிப்படையை அய்யத்துக்குள்ளாக்குகிறார். வைதீகக் கருத்துத் தாக்கத்தின் பிற்பாடு தொல்காப்பியத்தில் ஏற்பட்டுள்ள இடையீடாக இதனைக் கருதி ஆய்வு மேற்கொண்டால் பல புதிய வெளிச்சங்கள் பிறக்கக்கூடும்.
‘சங்க இலக்கியம் குறை ஆதாரமே> ஆனால் தவிர்க்கவியலாத அளவுக்கு சார்ந்திருக்கப்பட வேண்டிய குறை ஆதாரமாகும்’ என்ற கோ.கேசவனின் கருத்தையே தனது ஆய்வுக்கான அளவுகோல்களில் ஒன்றாக எடுத்துக்கொள்கிறார் தொ.ப.
‘சாதி’ எனும் சொல்லுக்குத் திராவிட வேர்ச்சொல் இல்லை என்றும் தொல்காப்பியத்தில் ஓரிடத்திலும் (நீர்வாழ் சாதி – தொல்.மரபியல்:588) மற்றும் பெரும்பாணாற்றுப்படையில் ஓரிடத்திலும் (பறவைச் சாதி – பெரும்பாண்: 209) மட்டுமே சாதி எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். (அதுவும் அஃறிணைகளுக்காக என்பதை நாம் கவனிக்கவேண்டும்.) ‘ஜா’ என்ற பிறப்பினைக் குறிக்கும் வடசொல்லே ‘ஜாதி’க்கான மூலமென நிறுவுகிறார். இனக்குழு சிதைவுக் காலத்தில் (சங்க காலம்) ஆரிய பார்ப்பனர் வருகையின் மூலம் வருணாசிரமக் கோட்பாட்டை நிலை நிறுத்தும் வகையில் ஏற்கனவே தமிழ்ப்பரப்பில் இருந்த தொழிற்பிரிவுகளை ஊடறுத்து சாதிப்பிரிவுகள் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என முன்னெடுக்கிறார் தொ.ப.. மேலும் அதற்கும் முன்பாக தொல்மந்திர நம்பிக்கையும்> இனக்குழுப் பண்பினைக் காட்டும் ‘கூட்டூண்’ வாழ்க்கையும் கொண்ட> நிலவழிப்பட்ட> தொழில் வழிப்பட்ட மக்கள் திரள்களே தமிழ்ப்பரப்பின் சாதிய அமைப்புக்கு மூலப்படிவங்கள் என நிறுவுகிறார்.
எந்திர நாகரிகத்தின் பின்விளைவு பாரம்பரிய தொழில்நுட்பப் பொருள் உற்பத்தியில் இருந்து விலகிய நிலை நுகர்வுக் கலாச்சாரத்துக்கு வழிவகுத்தது என்று ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறார். இது கத்தி மேல் நடப்பது போல் கையாள வேண்டிய கருத்தாகும் – பழமைவாதம் போற்றும் அடிப்படைவாத அரசியல் பேசும் இக்காலகட்டத்தில் இக்கருத்தை அதற்குத் தக திரித்துவிட வாய்ப்புண்டு. அதனால்> தொ.ப. கூறும் ‘பண்பாட்டு விலகல்’ கருத்தை நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தொல்தமிழ் அல்லது மூலத் திராவிட மொழியில் எட்டு (8) என்பதே முழுமையான அடிப்படை அலகாகக் (Unit) கொண்டிருந்தனர் என்றும் ஒன்பது> தொண்ணூறு போன்றவை ஏதுமில்லை என்றும் எட்டின் வேர்சொல்லான ‘எண்’ என்பது counting & thinking என இரண்டு செயலுக்கும் குறிப்பிடப்படுவது ஒப்புநோக்கத்தக்கது என்று அதனை நிறுவுகிறார்.
தமிழ்ப்பரப்பு வெப்ப மண்டலப் பகுதியாகும் – இங்கு குளித்தல் என்று குறிப்பிடப்படும் சொல் தவறானது என்றும் குளிர்த்தல் என்பதே சரியென்றும் ஆய்வு நோக்கில் நிறுவுகிறார்.
களஆய்வுடன் கூடிய சொல்லாய்வை தன் கட்டுரைகளெங்கும் வலியுறுத்திச் செல்கிறார். அப்போதுதான் பண்பாட்டு மானுடவியல் நோக்கில் தமிழிலக்கிய ஆய்வுகள் முழுமை பெறும் என்கிறார். வெறுமனே நூல்வழி ஆய்வு மட்டுமே ஓர் ஆய்வினை இந்நோக்கில் முழுமையுறச் செய்யாது என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
பாரதிக்கும் பெரியாருக்கும் சமூக விடுதலை என்ற தளத்தில் ஏற்பட்ட வேறுபாடு குறித்துப் பேசுகிறது பாரதியின் கனவும் இன்றைய நிகழ்வும் கட்டுரை.
Hindu Law என்ற தர்ம சாத்திரத்துக்கு எதிராகத் தமிழர் தமது திராவிட சிந்தனை உருவாக்கத்திலும்> அதன் தொடர்ச்சியாக ஒரு தேசிய இனமாகத் தம்மை அடையாளம் காணும் முயற்சியிலும் திருக்குறள் வகித்த இடம் குறித்து திருக்குறள் குறித்த கட்டுரையில் விளக்குகிறார்.
பாரதியின் ஆன்மிகத் தேட்;டத்தை ‘அத்வைதம்’ என்றோ சித்தர் மரபில் ‘மகாசுகம்’ என்றோ ‘காயசித்தி’ என்றோ ஏதேனும் ஒரு சிமிழுக்குள் அடக்கிவிட முடியாதென்றும் அது தனிமனித வேதாந்தமாக மாறாத வகையில் வெகுமக்களுக்கான ஓர் ஆன்மிகமாக இருந்தது குறித்து பாரதியின் சித்த மரபு என்ற கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
பாரதிதாசன் சுப்பிரமணியர் துதியமுதும் கதர் ராட்டை பாடல்கள் எழுதிய காலகட்டத்தையும் மொழியுணர்ச்சியும் சமூக விடுதலைக்கு ஆதாரமாக மொழி விடுதலை இருக்க வேண்டும் என்ற திராவிட இயக்க எழுச்சி காலகட்டத்தில் எழுதிய பாடல்களையும் குறிப்பிட்டு விளக்கி ஒரு படைப்பாளியை அகம்/புறம் சார்ந்து உருவாக்குவதில் காலம் முக்கியப் பங்கு வகிப்பதை நிறுவுகிறார் பாரதிதாசன் குறித்த கட்டுரையில்.
கா.சு.பிள்ளை என்ற தமிழறிஞரின் அறிமுகக் கட்டுரை> புதுமைப்பித்தனின் நெல்லை குறித்த அனுபவ லயிப்புக் கட்டுரை> தெ.பொ.மீயின் இந்திய தேசிய ஒற்றை அடையாளத்தை தமிழ்க்காப்பிய ஆய்வுலகில் நிறுவ முயல்வதை சுட்டி விமர்சிக்கும் கட்டுரை> சிற்பியின் கவிதைகள் குறித்த தொடக்ககால ஆய்வுக்கட்டுரை> வைரமுத்து பாடலாசிரியரா கவிஞரா என்று தமிழின் இசைப்பா> இயற்பா வழி விளக்கும் கட்டுரை> தமிழ்ப்பரப்பில் தவிர்க்கவியலா நீராட்டும் (குளிர்த்தல்) ஆறாட்டும் வழக்கம் பற்றிய கட்டுரை> சுஜாதாவின் புறநானூறு நூல் குறித்த ஆய்வு நோக்கிலான விமர்சனங்கள் என்று தொகுப்பு முக்கிய கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.
ஆய்வு என்றவுடன் வாசிப்பவரை மிரள வைக்கும் வகையிலன்றி மிக எளிமையாக தொடக்க நிலை வாசகர்க்கும் புரிபடும் வகையில் எழுதிச் செல்வது தொ.ப.வின் பலமாகும். எந்த ஆளுமையையும் எந்த நிகழ்வையும் புனிதப்படுத்தாமல் – உணர்வுமிகு நிலை தவிர்த்து – காலத்தையும் வெளியையும் கணக்கில் கொண்டு – ஆய்வுநோக்கில் தனது கண்டடைவுகளுக்கு வந்து சேர்கிறார் தொ.ப. இது தொ.ப.விடமிருந்து ஆய்வறிஞர்கள் கைக்கொள்ள வேண்டிய/கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பண்பாகும்.
மேலும் ஒரு முக்கியமான பண்பாக – மார்க்சிய திராவிட ஆய்வுநெறியில் தமிழ்த்துவம் தோய்ந்து எல்லாக் கட்டுரைகளிலும் தனது கருத்தியலை தொ.ப. முன்னெடுப்பதை கூர்ந்து நோக்கினால் இத்தொகுப்பின் பிரதியாக்கத்தில் காண
முடியும்.
பண்பாட்டு நோக்கிலான தமிழாய்வில் ஆர்வமுடையோர் அவசியம் வாசிக்க வேண்டிய தவிர்க்கவியலாத் தொகுப்பிது என்றால் அது மிகையில்லை.
நூலின் தகவல்கள்
நூல் : வழித்தடங்கள் (Vazhithadangal) – ஆய்வுக்கட்டுரைகள்
ஆசிரியர் : தொ.பரமசிவன் (Tho.Paramasivan)
வெளியீடு : நிமிர் வெளியீடு
தொடர்புக்கு : 8939782116
மின்னஞ்சல் : [email protected]
நூல் அறிமுகம் எழுதியவர் :
– அன்புச்செல்வன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.