இராமன் முள்ளிப்பள்ளம் எழுதிய "வாழ்க்கை ஒரு ஒப்பீடு" சிறுகதை (Vazhkkai Oru Oppidu Short Story) | அரைகுறை முற்போக்காளன் பற்றி பேசும் கதை

சிறுகதை: ’’வாழ்க்கை ஒரு ஒப்பீடு’’ – இராமன் முள்ளிப்பள்ளம்

 வாழ்க்கை ஒரு ஒப்பீடு

– இராமன் முள்ளிப்பள்ளம்

வயது 75, சிவப்பு நிறம், இந்திய சிவப்பு. பெயர் கோதண்டன். தொழில் கற்பனை.

அன்று கற்பனையை யார் தூண்டுவார் அல்லது தானே துவக்கலாமா என நினைத்தவனுக்கு ஒரு அழைப்பு. அவன் கைபேசி தரை சக்கரமாகி சுற்றியது. எடுத்தான் மறு முனையில் பழக்கமான வாசுதேவன் குரல்.

’’ கோதண்டா ஏன் கூப்பிட்டேன் தெரியுமா, நம்ம பழைய காதல் ஹீரோ நீலகண்டன் ஓ பக்கத்துலதான் இருக்கான், எங்கேன்னு கண்டு பிடிச்சு அப்புறம் சொல்றேன், அவன் கிடைச்சா அவனையும் நம்ம வாட்ஸப் குழுவுல சேக்கலாம்’’

’’சரி கண்டுபிடி நீலகண்டன் யாரோட இருக்கான்.’’

’’நிறைய பேரோட இருப்பான் அவன் குடும்பாம்தான் பெரிசாச்சே
அன்றும் அந்த மாலை இருளாகும் நேரத்தில் கற்பனை குதிரையின் கடிவாளத்தை அறுத்தான் கோதண்டன்.

’’ நிறைய பேரோட இருப்பான் அவன் குடும்பாம்தான் பெரிசாச்சே’’. இந்த சொற்கள் அவன் மனச்சாட்சியை உலுக்கியது. கோதண்டன் தனி மனிதன்.

1980-ல் மட்டும் அவன் அந்த அழகிய லாவண்யாவை காதலித்து கை பிடித்து இருந்தால் ! அன்று அவன் வயது இருபத்தி ஐந்து. லாவண்யா பாம்பேயில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்தாள். கிராமத்தையே பார்க்காதவள். ஆற்றுக்கு வந்தாள் பாவடை எடுத்து இடுப்பில் இறுக்கிக் கொண்டு குடத்தில் நீர் நிரப்ப குனிந்தாள் , கால்கள், இடுப்பு, கண்ணம் எல்லாம் அவன் மீது குண்டு மழை பொழிந்தது. அவனுக்கு வெப்ப மூச்சு வந்தது. அவன் ஆற்றில் அமர்ந்த நிலையில், நூறடி தூரத்தில், கழுத்து வரை தண்ணீரில், அவனை தொட்ட நீர் ஆவியாகியது. லாவண்யா மீது காதல் வெறி வந்தது. அவள் பாம்பே சென்றாள். அவன் பைத்தியம் ஆனான். அவன் அவள் மீது கொண்ட காதல் பலருக்கு தெரிந்தது. ஆனால் லாவண்யாவிற்கு மட்டும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. காதலை கவிதை ஆக்கினானே தவிர அவளிடம் சொல்லவில்லை.

அன்று மட்டும் அவளிடம் காதலை சொல்லி மணந்திருந்தால், கற்பனை குதிரை ஒரு மலை மேல் ஏறி அதன் முகட்டில் நின்றது.

அவனுக்கு ஒரு வருடத்தில் குழந்தை பிறந்திருக்கும். அவன் தன் கற்பனைக்கு வளம் சேர்த்தான். முப்பது வயதுக்குள் மூன்று குழந்தை பெற்றிருப்பான். ஆணோ பெண்ணோ மூன்று குழந்தைகள். லாவண்யா சிவப்பு, அவனும் சிவப்பு. மூன்று சிவத்த அழகான குழந்தைகள். மூன்று குழந்தைகள் ஓவ்வொருவருக்கும் மூன்று குழந்தைகள். இந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனால் அவர்களுக்கு திருமணமாகி அவர்களுக்கும் மூன்று குழந்தைகள். சரி கணக்கு பார்ப்போம் என நினைத்தவன், கூட்டல் கணக்கிற்கு சென்றான் கணிதமேதை கோதண்டன்.

அவன், அவன் மனைவி, மூன்று குழந்தைகள் அவர்களின் மூன்று மனைவிகள் 2+3+3+9+9+27 = 51 ஏனோ இதில் தவறு என நினைத்தான். பின் சரியான விடை கண்டு பிடிக்க பின் வருமாறு எழுதி பார்த்தான்.

2 கோதண்டன் + மனைவி

3 மூன்று குழந்தைகள்

3 அவர்களின் மனைவி

9 பேரக் குழந்தைகள்

9 அவர்கள் மனைவிகள்

27 ஒன்பது பேரக் குழந்தைகளின் பிள்ளைகள்

மொத்தம் 53

இந்த ஐம்பத்தி மூன்று பேர் அடங்கிய குடும்ப கூட்டத்தை உருவாக்க தவறினோமே. இதயத்தில் ஒரு முள் குத்தியது. சரி லாவண்யா இல்லா விட்டால் பிரச்னை இல்லை. அப்போது அவன் வேலையற்ற முதுகலை பட்டதாரி. புரட்சி பேசினான், கவிதை எழுதினான். அடுத்து அந்த மருத்துவனின் மகள். அவளைக் குறித்து அவன் எழுதிய கவிதை பசுமையாக நினைவில் இருக்கிறது.

‘’அக்கரையில் இருக்கிறாள் அணங்கு

ஆசை மிகக் கொண்டு விட்டேன் இணங்கு

இக்கரைக்கு வா இசைந்து (அவள் வீடும், அவன் வீடும் காவேரியின் எதிர் எதிர் கரைகளில் இருந்தன)

மருத்துவனின் மகளே மகோன்னத படைப்பே’’

எழுதியது மட்டுமில்லாமல் அதை நாரயணனிடம் படித்து காட்டினான். நாராயணன் அந்த கவிதை காகிதத்தை பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் டாக்டரிடமே காட்டி விட்டான். தூரத்து உறவினாராகிய டாக்டர் அவனை கூப்பிட்டார்.

‘’மாப்பிள்ள ஐஏஎஸ் பாஸ் பண்ணு ஏ பொண்ணு உனக்குத்தான்.’’

ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டுமா. வேண்டவே வேண்டாம். டாக்டர் மகள் உஷா வேண்டாம். உஷா போனால் ஒரு ஆஷா வருவாள். அப்போது ஒரு முடிவுக்கு வந்தான். சொந்த சாதியில் காதலிக்க கூடாது. ஆஷா வந்தாள். ஜெயராணி என்ற பெயரில். கவர்ச்சியாக இருந்தாள். கிறிஸ்துவ பெண் . அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். வீட்டிற்கு அழைத்தாள். அவள் வீட்டில் தேநீர் பருகினான். அவள் அம்மா கேட்டார். அசைவம் சாப்பிடுவியா தம்பி ?
ஆம்லெட் மட்டும் சாப்பிடுவேன்.

உடனே ஐந்து நிமிடங்களில் டபுள் எக் (இரு முட்டை) ஆம்லெட் வந்தது. ’’நாங்க இன்னைக்கு பீஃப் சமச்சிருக்கோம் உனக்கு தர மாட்டோம்.’’

கருனையுடன் ஜெயராணி அம்மா சொன்னார்கள். தன் பிறப்பை நொந்து கொண்டான். தான் ஒரு அரை முற்போக்காளன் என்பதையும் உணர்ந்தான். சரி ஜெயராணி இல்லா விட்டால் பிரச்னை இல்லை.

நாட்கள் சென்றன. அவன் அலுவலகம் சென்ற அதே பேருந்தில் அவள் வந்தாள். பெயர் தெரியாவில்லை. அழகின் நிறம் கருப்பு என்ற விழிப்புணர்வு அப்போதே வந்தது. கிரனைட் சிலை. சரியாக செதுக்கப்பட்ட சிலை. அவள் அருகே சிவத்த பெண் வந்தாள் வெட்கப்படுவாள். அப்படி ஒரு தோற்றம். பெயர் தெரியாத அவள் அவன் அருகே நிற்கும் போது தன்னை சுற்றி ஒரு காந்த மண்டலம் உருவாகியதை கவனித்தான். அவினாசியில் ஏறினாள், திருப்பூரில் இறங்கினாள். ஒரு நாள் காலை முன்னதாகவே அவன் கோவையிலிருந்து புறப்பட்டு அவினாசியில் இறங்கினான். அவள் ஏறும் நிறுத்தம். நெஞ்சம் படபடக்க காத்திருந்தான். இறுதியில் வந்தாள். அவனுள் ஒரு எரிமலை. அவள் முன்னே ஏற அவன் பின்னே படிக்கட்டில் கால் வைத்து உள்ளே சென்றான். அவளை நெருக்கமாக தொடர்ந்து அவள் பின்னே நின்றான். அவள் வாசம் அவனை ஆட்டுவித்தது. திருப்பூர் இரு நிமிடங்களில் வந்து விட்டது போல் தோன்றியது. வழக்கம் போல் இருபது நிமிடங்களில் வர வேண்டிய திருப்பூர் அன்று இரு நிமிடங்களில் வந்து விட்டது போல் ஒரு கிறக்கம். நேரம் ஒரு மாயை. ஒரு மாதம் அது தொடர்ந்தது, அவன் முன்னமேயே வந்து அவினாசியில் இறங்குவது. பல திருப்பூர் பேருந்துகளை தவற விட்டு தவம் இருப்பது. அவள் வந்ததும் அதே பேருந்தில் ஏறுவது. ஒரு நாள் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தது. பேருந்து பழுதானது. தமிழில் ப்ரேக்டவுன் என பேசிக் கொண்டார்கள். அவனும் பேசினான். அவளுடன் பேசினான். அப்போது பெயரை கேட்டு விட்டான். ’’மெர்சி’’ புன்முறுவலுடன் சொன்னாள். மறு நாள் மிகத் துணிவுடன் அவளுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்தான். அவள் புரிந்து கொண்டாள். கேட்டாள்

’’நீங்க அவினாசியில் எங்க இருக்கீங்க ?”’

”’நான் கோவையில இருந்து வர்றேன்.’’

’’அப்ப ஏன் இங்க வந்து பஸ் பிடிக்கிறீங்க ?’’

’’உங்கள பாக்குறதுக்கு.’’

வாழ்க்கையில் முதன் முதலாக வீரமாக அவன் பேசியது இந்த சொற்கள். எந்த தோல்வியை சந்திப்பதற்கும் திடமாக இருந்தான். ஆனால் வெற்றி. மெர்சி மறு நாள் ஞாயிறு வீட்டிற்கு அழைத்தாள்.

ஞாயிறு ஒன்பது மணிக்கு எழுபவன் அன்று ஐந்து மணிக்கு எழுந்தான். ஏழு மணிக்கு அவினாசியில். ஏழு பத்துக்கு மெர்சியின் வீட்டில். அவள் அப்பா குளியல் அறையில் பாட்டு பாடிக்கொண்டிருந்தார். சிறிய வீடு. இயேசு நாதர் சிலுவையில். மெர்சி கேட்டாள்.

’’என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா நிசமாவே பிடிச்சிருக்கா நாங்க எஸ்சி ’’

கோதண்டன் கண்களில் தாரளமாகவே நீர் சுரந்தது.

’’நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா சாரி.’’

அப்பா வந்தார். நெற்றியில் வீபூதி. கழுத்தில் ஆடியது சிலுவை.

’’தம்பி வணக்கம் சொல்றேன், நான் பிடபிள்யுடி ஆஃபிஸ்ல ப்யூன், பெருந்துறை ரோடு திருப்பூருக்கு வலது பக்கம் திரும்புற இடத்துல நாங்க பன்றி இறைச்சி கடை வச்சிருக்கோம். காலையில ஆறுல இருந்து பத்து மணி வரை நான் கடையில இருப்பேன், அப்புறம் மனைவி வந்துருவாங்க, திரும்ப சாயந்திரம் ஆறு மணியில இருந்து நான் கடையில இருப்பேன், நைட் பத்து மணிக்கு மூடுவேன். இதுக்கு பேர் இளம்பிள்ளை கோளாறு. நமக்கும் உங்களுக்கும் சரிப்பட்டு வராது. என் பொண்ணு மனச மயங்க வச்சீட்டீங்க ஆனா நானும் என் மனைவியும் தெளிவா இருக்கோம்.’’

’’ஏன் சரிப்பட்டு வராது, எனக்கு மெர்சி வேணும்.’’

’’மெர்சி ஒன்னும் சாக்லெட் இல்ல உனக்கு கொடுக்க, அடுத்த வாரம் வேளாங்கன்னி கோவிலுக்கு போறோம், திரும்ப வர நாலு நாள் ஆகும், நீ எங்க பன்றி இறைச்சி கடையில் ஒக்காருவயா, என் தங்கச்சி மகன் கிட்ட கடை கொடுத்துட்டு போறோம்.’’

அரை முற்போக்காளன் தலை குனிந்த போது அந்த சிறிய வீட்டில் பக்கத்து அறையில் மெர்சி பெருங் குரலில் அழும் குரல் கேட்டது. அவன் மனம் அழுதது. அதுவே அவனின் கடைசி காதல். அவனை தனி மனிதன் ஆக்கிய காதல். இரத்த தானம் புதியதாக துவக்கினான். மற்ற அலுவலக ஊழியர்கள் அவனை இரத்த காட்டேறி என ஏளனம் செய்தனர். அவன் பொருட்படுத்தவில்லை. ’’யாரையும் திருமணம் செய்யாமலேயே என் குருதி பலருக்கு செல்கிறது’’ என பூரித்தான். அதன் பின் தொடர்ந்தது பறவைகள் சரணாலயத்தில் தானியங்கள் வழங்குதல், குளத்து மீன்களுக்கு பொறி போடுதல்.

மீண்டும் கோதண்டன் கைபேசி தரை சக்கரமாக சுற்றியது. அழைப்பு ஓசையை அவன் நடுக்கத்தில் வைத்திருந்தான். அவ்வப்போது அவன் வாழ்க்கை ஒரு நடுக்கம் என நினைத்தான். வாசுதேவன் மறு முனையில்.

’’கோதண்டா நீலகண்டன் இருக்குற இடத்த கண்டு பிடிச்சீட்டேன், லொகேஷனோட வர்ரேன். நாள காலமே எட்டு மணிக்கே ரெடியா இரு, உன் இடத்துல இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் இருக்கலாம்.’’

கோதண்டன் தன்னை சுற்றி பார்த்தான். இருபதுக்கு இருபது அறை. அதுவே படுக்கை அறை, சமயலறை. (எழுபத்தி ஐந்து வயதில் சமைக்கும் அவலம்) படிக்கும் அறை. சுற்றிலும் என்பது அடிக்கு நாற்பது அடி தோட்டம். நடுவே அவன் ஒரு துறவி. அவன் துறந்தது வாழ்க்கை. மனிதன் பிறப்பது வாழ்ந்திட நொந்திட அல்ல. நாளை நீலகண்டனையும் அவன் பரிவாரத்தையும் காணப் போகிறான். மூன்று மகன்கள், ஒன்பது பேரக்குழந்தைகள் இருபத்தி ஏழு கொள்ளுப் பேரக் குழந்தைகள். ஒரு சமூகத்தை உருவாக்கிய நீலகண்டன் எங்கே அவன் எங்கே. பிறவி பயன் என்ன. புரட்சி பேசுவது கவிதை எழுதுவது இரத்த தானம் தருவது. பறவைகள் சரணாலயத்திற்கு போய் தானியங்கள் தருவது, குளத்திற்கு சென்று மீன்களுக்கு பொறி போடுவது இதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? தன்னிலிருந்து ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டாமா. தன்னைப் போல் எல்லோரும் துறவிகள் ஆனால் புவியும் ஒரு நாள் மற்ற கோள்கள் போல பாலைவனம் ஆகிவிடாதா?.
வீட்டின் முன் கார் ஹாரன். வாசுதேவன் கை அசைத்து அழைத்தான். காருக்குள் அமர்ந்தான். வாசுதேவன் எப்போதும் கேலியும் கிண்டலுமாக பேசுபவன்.

’’கோதண்டா நீலகண்டன் முகவரி கிடைச்சுது. அவன் ஐம்பத்தோரு பேரோட இருக்கானாம். பார் எவ்வளவு பெரிய குடும்பம். எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இல்லை, உனக்கோ கல்யாணமே ஆகல்ல, தேர்தல் வரும் போது ஓட்டுக்கு 5000 ரூபாய்னு வச்சுக்குவோம் அவனுக்கு எவ்வளவு வரும் ?

’’ரெண்டு லட்சத்து அறுபத்து ஐந்தாயிரம்’’

’’தப்பா சொல்ற ரெண்டு லட்சத்து ஐம்பத்து ஐந்தாயிரம்,’’

’’நான் 53 பேருக்கு கணக்கு போட்டேன்.’’

’’இல்ல அவன் 51 பேரோட இருக்கான்.’’

லொகேஷன் வந்து விட்டது. இருவரும் காரில் இருந்து இறங்கினார்கள். கேட் திறக்கப்பட்டது. வழி நெடுகிலும் நெட்டி லிங்கம் மரங்கள் கம்பீரமாக அணி வகுத்து நின்றன. பெரும் கட்டிடம் முன் நின்றனர். அழகிய இளம் பெண் ஒருவர் கேட்டார்.

‘’நீங்க யாரை பார்க்கனும்.’’

’’நீலகண்டன்.’’

’’வாங்க’’ இனிமையான குரல்

மேலே ஒரு பெரும் பலகை. சொற்கள் ஓவியமாக எழுதப்பட்டிருந்தன. கண்ணைப் பறிக்கும் கதிரவனின் பிரதிபலிப்பு அந்த பெயர் பலகையில்.
முதியோர் அமைதி இல்லம்

வாசுதேவன் கேட்டார்

இந்த முதியோர் இல்லத்தில் எத்தனை பேர் இருக்காங்க

’’51 முதியோர்கள்.’’ இளம் பெண் பதில் அளித்தாள்.

இருவர் கைத்தாங்கலாக ஒரு முதியவரை அழைத்து வந்தனர்.

’’கோதண்டா பார் இந்த பெரியவரை எங்கேயோ பாத்துருக்கோம், அறிமுகமான முகம் போல் தெரியுது.’’

’’இவர்தான் நீலகண்டன், நாம தேடி வந்த காதல் ஹீரோ.’’

கோதண்டன் நடுங்கும் கரங்களுடன் நீலகண்டன் கரங்களை பற்றினார் பின் கேட்டார், ‘’என்னைத் தெரியுதா நீலகண்டன்’’

’’நீதான் புரட்சி புரட்சின்னு பேசின கோதண்டராமன். சுருக்கமா கோதண்டன்னு கூப்பிடுவோம்.’’

நீலகண்டன் கண்களில் நீர் குளமாகி நின்றது. ஆனாலும் கேட்டே விட்டார்

‘’ உனக்கு எத்தனை பிள்ளைகள்?”’

’’என் பரிவாரம் 53 பேர், மூன்று பிள்ளைகள் ஒன்பது பேரக் குழந்தைகள், இருபத்தி ஏழு கொள்ளுப் பேரக் குழந்தைகள். மனைவி இல்லை பொய்ட்டா, பொய்யாய் பழம் கதையாய் போய் சேர்ந்து விட்டாள். நான் முதியோர் இல்லத்துல. நல்ல அளவு சாப்பாடு, நல்ல நடைப்பயிற்சி, தூக்கம்தான் வரல. இறுதியில வரக்கூடிய தூக்கம் நிரந்தரமானதுன்னு சொல்றாங்க.’’

’’காரில் திரும்புகையில் வாசுதேவன் சொன்னார், ‘’ கோதண்டா உன் கணக்கும் சரியானது, என் கணக்கும் சரியானது, 51 பேர் முதியோர் இல்லத்துல, நீலகண்டன் குடும்ப எண்ணிக்கை 53.’’

கோதண்டன் பதில் சொல்லும் மனதில் இல்லை அவர் மனதை ஆக்கிரமித்தது நன்றியுரை

லாவண்யாவிற்கு நன்றி

மருத்துவனுக்கு நன்றி

ஜெயராணின் தாய்க்கு நன்றி

மெர்சியின் தந்தைக்கு நன்றி.

புரட்சிக்கு, கவிதைக்கு, இரத்த தானத்திற்கு,. பறவைகள் சரணாலயத்திற்கு, குளத்து மீன்களுக்கு நன்றி நன்றி.

எழுதியவர்:
– இராமன் முள்ளிப்பள்ளம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. ஹனீப்

    மற்றவர்களின் வாழ்க்கையைத் தனதுடன் ஒப்பிடுவது தவறு என்று தெரிந்தபின் மனதில் அமைதி தோன்றுவதை ஆசிரியர் சிறப்பாக கோடிட்டு காட் டியுள்ளார்.

  2. vijayarengan

    failure of a progressive person in his life because of social conditions is portrayed critically.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *