வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 10:- பெரு முதலாளிகள் கூட்டணியின் போர்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 10:- பெரு முதலாளிகள் கூட்டணியின் போர்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 10:-

பெரு முதலாளிகள் கூட்டணியின் போர்…!

– அறிவுக்கடல்

ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்குப் போனார்கள். அனாமத்தாகக் கிடந்த நிலத்தைக் கைப்பற்றி ஏராளமாகப் பொருளீட்டினார்கள். போதும் என்ற நிறைவே இன்றி அனைத்தையும் கைப்பற்ற முயற்சித்தபோது, அந்நாட்டுத் தொல்குடியினருடனும், அங்கு ஏற்கெனவே குடியேறியிருந்த பிற ஐரோப்பியர்களுடனும் மோதல் ஏற்பட்டது. தாய்நாடு (இங்கிலாந்து) பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். படைகளை அனுப்பிய இங்கிலாந்து, வரிகளையும் விதித்தபோது, அதைச் செலுத்த அவர்கள் தயாராக இல்லை. வரிசெலுத்த விரும்பாத வழக்கமான பெருமுதலாளிகளின் அடிப்படைக் குணம்தான் அது. பாராளுமன்றத்தில் இடமளிக்க வேண்டும் என்று சாக்குச் சொன்னார்கள். வரி வசூலிப்பதில் அரசு உறுதியாக இருந்தபோது, சிறிய விவசாயிகளுக்கு ஆபத்து என்பதான தோற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைப் போரிடச் செய்தார்கள். போரில் வென்று தனி நாடானதும் இவர்களே வரிவிதித்தார்கள். பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள் விஸ்கி கலகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டபோது, அதிபர் வாஷிங்டனே 13 ஆயிரம் பேர் கொண்ட படையுடன் போய் அவர்களை ஒடுக்கினார். அவ்வளவுதான் அமெரிக்க விடுதலைப் போரின் சுருக்கமான வரலாறு!

சரி, இந்த வாஷிங்டன் என்ன அவ்வளவு பெரிய ‘அப்பா டக்கரா’? நாம் முதலிலேயே பார்த்தபடி, வகைதொகையின்றி நிலத்தைக் கைப்பற்றிக் கொழித்துக் கொண்டிருந்த பெரு முதலாளிகளுக்கு, அந்த லாபத்தில் சிறிதை அரசு வரியாகக் கேட்டதை ஏற்க முடியவில்லை. வரிக்கு எதிரான போர் என்று மக்களைத் திரட்டினார்கள். தலைமையேற்று நடத்த யாராவது வேண்டுமே? பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பண்ணைகளை வைத்திருந்த ஜார்ஜ் வாஷிங்டன்தான், அந்தப் பெரு முதலாளிகளிலேயே ராணுவ அனுபவம் கொண்டவராக இருந்தார்.

ராணுவ அனுபவம் என்றால், மிகப்பெரிய தளபதியாக இருந்திருப்பார் என்று நமக்குத் தோன்றும். ஆனால், வர்ஜீனியா காலனியின் குடிப்படையில் சிறிது காலமும், ஃப்ரெஞ்ச்-இந்தியப் போரின்போது அமெரிக்காவிலிருந்த இங்கிலாந்து ராணுவத்தில் சிறிது காலமும் பணியாற்றியிருந்தார். ஒன்றிரண்டு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அந்தச் சிறிது காலத்தில் அவரது ராணுவப் பணி எப்படி இருந்தது என்பதை, அந்தப் போர் முடிந்ததும் அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார் என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம். வர்ஜீனியா காலனியின் குடிப்படையில் போரிட்டபோது, ஃப்ரெஞ்சுப் படைகளிடம் அவர் சரணடைந்ததுடன், அவர்களின் தளபதி ஒருவரைப் படுகொலை செய்ததாகவும் தவறுதலாக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட, அதுதான் ஃப்ரெஞ்ச்-இந்தியப் போர் ஏற்படுவதிலேயே ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. அப்படியான பின்னணியில்தான், ஃப்ரெஞ்சு-இந்தியப் போர் முடிந்ததும் பதவி இறக்கம் செய்யப்பட, ராணுவமே வேண்டாம் என்று விலகி, குடும்பச் சொத்தான பண்ணைகளைக் கவனிக்கப் போய்விட்டார்.

வாஷிங்டன் சரணடைவதை விளக்கம் AI படம்

மூன்றாண்டுக்கும் குறைவான குடிப்படைப் பணி, அதே போன்ற சிறிய காலத்திற்கு ராணுவப் பணி ஆகியவைதான் வாஷிங்டனின் அனுபவங்கள். அதையும் விட்டு வந்து 17 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில்தான், அமெரிக்க விடுதலைப் போருக்கு அவரைத் தளபதியாக்கினார்கள். உண்மையில், அவரைவிடச் சிறந்த ராணுவ அனுபவம் கொண்டவர்கள் அங்கிருந்த சிறு விவசாயிகளில், தொழிலாளர்களில் இருந்தாலும், வாஷிங்டன் தளபதியாக்கப்பட்டதற்கு, அது பெரு முதலாளிகளின் போர், அதன் கட்டுப்பாடு அவர்களிடமே இருக்க வேண்டும் என்பது வெளியில் சொல்லப்படாத முக்கியக் காரணம்.

போரை அறிவித்த ‘கான்டினெண்டல் காங்கிரஸ்’ அமைப்பில் இருந்தவர்கள் அனைவரும் நிலப்பிரபுக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பெரும் வணிகர்கள். சாதாரண விவசாயிகள் அல்லது தொழிலாளர்களிடம் தலைமை சென்றால், அது தங்களின் சொத்துரிமைக்கே ஆபத்தாக முடியும் என்று அவர்கள் பயந்தனர். வாஷிங்டன் வர்ஜினியாவின் மிகப்பெரிய நிலப்பிரபு மற்றும் அடிமைகளை வைத்திருந்த செல்வந்தர். ‘அவர் தங்களின் சொத்துகளையும், வர்க்க நலன்களையும் பாதுகாப்பார்’ என்ற நம்பிக்கை அந்த வர்க்கத்திற்கு இருந்தது.

காண்டினெண்டல் காங்கிரஸ் அவையை காட்டும் பழைய ஓவியம்

‘பிரெஞ்சு-இந்தியப் போரில்’ சாதாரண மக்கள் மற்றும் சிறு விவசாயிகள் பலர் துப்பாக்கி ஏந்தி மிகச்சிறப்பாகப் போரிட்ட அனுபவம் பெற்றிருந்தனர். ஆனால், அவர்களைக் கீழ்மட்ட வீரர்களாக மட்டுமே பயன்படுத்தினர். சாதாரண மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் ஃப்ரெஞ்சுப் புரட்சி போல உள்நாட்டுப் புரட்சி வெடித்துவிடுமோ என்ற பயம் அமெரிக்கப் பிரபுத்துவ வர்க்கத்திற்கு இருந்தது. இன்னும் சரியாகச் சொன்னால், பெரு முதலாளிகள் கூட்டணி அமைத்து தங்கள் வணிக நிறுவனங்களைக் காத்துக்கொள்வது போன்ற தன்மையில்தான் அவர்கள் தங்கள் தாய்நாட்டை எதிர்த்தார்கள்.

அதனால், வாஷிங்டன் சிறந்த ராணுவத் தளபதியெல்லாம் இல்லை. உண்மையில் அவர் வென்ற களங்களைவிட, தோற்ற களங்களே அதிகம். உதாரணமாக, 1776இல் நடந்த லாங் ஐலேண்ட் சண்டையில், இங்கிலாந்துப் படைகளின் வியூகம் தெரியாமல் சிக்கி, மூடுபனி நிலவியதால் தப்பி ஓடினார் வாஷிங்டன். அந்த மூடுபனி மட்டும் அன்று இல்லாமலிருந்தால், வாஷிங்டன் அங்கேயே கொல்லப்பட்டு, அமெரிக்க விடுதலைப்போரும் அப்போதே முடிந்து போயிருக்கும்.

உண்மையில், அமெரிக்க விடுதலைப்படை என்பது கூலிப்படையோ அல்லது நிரந்தர ராணுவமோ அல்ல. குளிர்காலம் வந்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய ஊருக்கு ஓடிவிடுவார்கள். அப்படியானவர்களைத்தான் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திய ஆங்கிலேய பிரபுத்துவ வர்க்கம், ஆரம்பக் கட்டங்களில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான உடைகள், காலணிகள் மற்றும் உணவை விநியோகிப்பதில்கூடச் சரியான கவனம் செலுத்தவில்லை. ‘வேலி ஃபோர்ஜ்’ என்ற முகாமில் தங்கியிருந்தபோது, போரினால் இறந்தவர்களை விடக் குளிராலும் பசியாலும் இறந்த வீரர்களின் எண்ணிக்கையே அதிகம். அது மட்டுமல்ல, தப்பியோட முயன்ற அல்லது கிளர்ச்சி செய்த சாதாரண அமெரிக்க வீரர்களுக்குக் கடுமையான சாட்டையடி மற்றும் மரண தண்டனைகளை வழங்கினார் வாஷிங்டன். அதாவது, அடிமைகள் அல்லாத சிறு விவசாயிகள், தொழிலாளர்களை, அவர்களுக்காகப் போராடுவதாக நம்பச் செய்து அழைத்துவந்து, அடிமைகளைப் போலப் பயன்படுத்தி, பெரு முதலாளிகள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தியதுதான் அமெரிக்க விடுதலைப் போர்!

வேலி ஃபோர்ஜ் முகாமின் இறப்புகளை சித்தரிக்கும் AI படம்

ஆனால், வாஷிங்டன் தங்கள் (பெரு முதலாளி – நிலப்பிரபுத்துவ) வர்க்கத்தின் நலன் காக்கும் சிறந்த தலைவராக இருந்தார். ‘ராணுவம் உயிரோடு இருக்கும் வரைதான் புரட்சி உயிரோடு இருக்கும்’ என்பதே அவரது கொள்கையாக இருந்தது. இங்கிலாந்துப் படையுடன் நேருக்குநேர் மோதும் வாய்ப்புகளைத் தவிர்த்தது, தோற்கப் போகிறோம் என்றால் தயங்காமல் பின்வாங்கியது போன்ற நடவடிக்கைகள், அவர்களது படை அழிந்து போகாமல் காத்தன. இங்கிலாந்தின் எதிரியான ஃபிரான்சை துணைக்கு வரச் செய்தது போன்றவையும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன.

விடுதலையை அடைந்தபோது அமெரிக்கத் தரப்பில் சுமார் 25 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. அப்படி உயிரிழந்தவர்கள் அனைவருமே, அரிதான விதிவிலக்குகளைத் தவிர, சிறிய விவசாயிகள், சிறு முதலாளிகள், தொழிலாளர்கள், அடிமைகள் ஆகியோர்தான். அவர்களிலும், களத்தில் இறந்தவர்கள் சுமார் 6,800 பேர்தான். சுமார் 17 ஆயிரம் பேர் நோய்களால் இறந்தனர் என்பதிலிருந்து, அவர்களை அந்த நிலப்பிரபுத்துவ வர்க்கம் எவ்வளவு மோசமாக நடத்தியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அப்படியெல்லாம் தியாகம் செய்து விடுதலையைப் பெற்ற அந்த எளிய மக்களுக்கு விடுதலைக்குப் பிறகாவது அமெரிக்கா அனைத்தையும் வழங்கியதா என்றால் இல்லை என்பதுதான் பதில். போரிட்டவர்களுக்கு தருவதாகச் சொல்லப்பட்டிருந்த ஊதியமே முழுமையாகத் தரப்படாத நிலையில், ஓவ்யூவதியமும் கிடைக்காது என்ற தகவலின்பேரில் அதற்காக மக்கள் கலகம் செய்தனர். மறுபுறம் எளிய விவசாயிகளின்மீது வரி விதிக்கப்பட்டு, அவர்களும் கலகம் செய்தனர். ஊதியமே தர நிதியின்றி ராணுவத்தைக் கலைத்துவிட்டிருந்த அமெரிக்கா, இவர்களை ஒடுக்கவே மீண்டும் ராணுவத்தை உருவாக்கியது. இவையெல்லாம் ஒடுக்கப்பட்டு, இங்கிலாந்து அரசுக்கு பதிலாக அமெரிக்க முதலாளிகளின் கட்டுப்பாடு என்பதாகத்தான் மாறியது. விபரமாக அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *