அமெரிக்காவின் ஆரம்பகால போர்கள், பழங்குடியினருடனான மோதல்கள், 1814-ல் தீக்கிரையான வாஷிங்டன் நகரம் மற்றும் எழுத்தாளர் அறிவுக்கடலின் உருவப்படத்துடன் வடிவமைக்கப்பட்ட கட்டுரை சிறப்புப் படம்.

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 11:- தப்பி ஓடிய அமெரிக்க அதிபர்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 11:-

தப்பி ஓடிய அமெரிக்க அதிபர்…!

– அறிவுக்கடல்

‘அஞ்சு கொலை ஆறுமுகம்’ என்றொரு பாத்திரத்தில் கவுண்டமணி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அவரைப் பெரிய கொலைகாரர் என்று எண்ணி அனைவரும் அஞ்சிக் கொண்டிருக்க, 5 தேங்காய் குலைகளைத் திருடியபோது பிடிக்க வந்தவர்கள், ‘5 கொலை 5 கொலை’ என்று கத்தியதில் அது அவரது பெயரானதாகவும், கொலை செய்யுமளவுக்கெல்லாம் தனக்குத் துணிச்சல் இல்லையென்றும் அவர் பரிதாபமாகக் கூறுவார். அப்படி ‘பயங்கரமான’ பிம்பம் இருக்கிற பலரும், அந்த பிம்பத்தைக் காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், உண்மையில் அந்த பிம்பம் விபத்தாக ஏற்பட்ட போலி பிம்பமாக இருப்பது அரிதாகவே வெளியில் தெரியும். இப்போது, அப்படி பயங்கரமான பிம்பத்தைக் கொண்டிருக்கிற அமெரிக்காவின் ஆரம்பக்கால வரலாற்றைப் பார்த்தாலும் அப்படித்தான் தோன்றும்.

மேலோட்டமாகப் பார்த்தால், அன்றைய காலகட்டத்தில் உலகின் மிக பலம் வாய்ந்த நாடாக இருந்த இங்கிலாந்தையே தோற்கடித்து உருவானது அமெரிக்கா என்று தோன்றும். ஆனால், தன் வீரர்கள், ஆயுதங்கள், உணவு ஆகியவற்றை மூவாயிரம் மைல்களுக்குக் கொண்டுவந்து போரிட வேண்டியதாக இங்கிலாந்தின் நிலை இருந்தது, இங்கிலாந்துக்குச் சம பலத்துடன் இருந்த ஃப்ரான்ஸ் இந்தப் போரில் இங்கிலாந்தை எதிர்த்து காலனிவாசிகளுடன் சேர்ந்து போரிட்டது என்று பல்வேறு காரணிகள், இங்கிலாந்தின் தோல்விக்குப் பின்னால் இருந்தன. இருந்தும், இங்கிலாந்தையே தோற்கடித்த பிம்பம் மட்டும் அமெரிக்காவுக்குக் கிடைத்தது.

அப்படி இங்கிலாந்தையே தோற்கடித்த அமெரிக்காவைத்தான் ‘தெறிக்க விட்டார்கள்’ அங்கிருந்த தொல்குடியினர். இங்கிலாந்தைத் தோற்கடித்து, விடுதலை பெற்று, மேலும் விரிவாக்குவதே – அதாவது, தொல்குடியினரின் மண்ணைக் கைப்பற்றுவதே – முக்கிய வேலையாக இருந்தவர்கள், அந்தத் தொல்குடியினரிடம் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. வடமேற்கில் உள்ள நிலப்பரப்பைக் கைப்பற்றுகிறோம் என்று ஜோசையா ஹார்மர் என்ற தளபதியின்கீழ் படையெடுத்துப் போய், 1790இல் பாதிப்படையினரை இழந்து திரும்பியது அமெரிக்கா (Harmar’s Defeat). அடுத்த ஆண்டில் செயிண்ட் க்ளேர் என்பவர் தலைமையில் ஆயிரத்துச் சொச்சம் வீரர்களுடன் போய், வெறும் 24 பேர் திரும்பி வந்தது ‘ஆயிரம் பேர் கொல்லப்பட்ட யுத்தம் (Battle of a Thousand Slain)’ என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

(படம் 1: ஆயிரம் அமெரிக்க வீரர்கள் பலியாகிக் கிடப்பதைச் சித்தரிக்கும் படம்)

ஒருபுறம் இப்படித் தொல்குடியினரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டால், மறுபுறம் இங்கிலாந்து…! நெப்போலியப் போர்களின்போது, ஃப்ரான்சின் வணிகத்தைத் தடுக்க இங்கிலாந்து முயற்சிக்க, அதனால் தங்கள் வணிகம் தடைப்படுகிறது என்று இங்கிலாந்தின்மீது அமெரிக்கா அறிவித்ததுதான் 1812இன் போர். டெட்ராய்ட் நதியைக் கடந்து, தற்போதைய கனடாவான ஒண்ட்டாரியோவுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைந்தாலும், அங்கிருந்த மிகச்சிறிய தொல்குடி-இங்கிலாந்துக் கூட்டுப் படையிடம் அமெரிக்கத் தளபதி வில்லியம் ஹல் சரணடைய வேண்டியதாயிற்று.

(படம் 2: அமெரிக்கத் தளபதி வில்லியம் ஹல், தன் படையைவிடச் சிறிய படையிடம் சரணடைவதை விவரிக்கும் ஓவியம்)

அந்தப் போரின்போதே, 1814இல் இங்கிலாந்துப் படைகள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனைக் கைப்பற்றி, தீவைத்து எரித்தன. அமெரிக்க அரசின் கருவூலம், நாடாளுமன்றக் கட்டிடம், போர்த்துறை அலுவலகம் ஆகியவை மட்டுமல்ல, அப்போதைய குடியரசுத்தலைவர் மாளிகையும் எரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் மேடிசன் உடைமைகளுடன் தப்பி ஓடினார். மாளிகையைக் கைப்பற்றிய இங்கிலாந்துப் படைகள், அங்கு நிதானமாக விருந்தெல்லாம் உண்டுவிட்டு, அதன்பின் தீக்கிரையாக்கினர். அப்போதும்கூட, அவர்களை விரட்ட அமெரிக்க ராணுவத்தால் முடியவில்லை. மாறாக, இயற்கையாக மிகப்பெரிய சூறாவளி வீசி, 2 பீரங்கிகள் பறக்க, இங்கிலாந்துப்படை ஓடிப்போனது. இறுதிவரை அமெரிக்கா வெற்றி பெற முடியாமல், 1815 வரை நடைபெற்ற அந்தப் போரை சுமுகமாகவே முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

(படம் 3: வாஷிங்டன் நகரம் தீவைத்து எரிக்கப்பட்டதைக் காட்டும் ஓவியம்)

1835இல் செமினோல் பழங்குடியினர்மீது ஃப்ரான்சிஸ் டேட் தலைடையில் 110 பேர் படையெடுத்துப் போய் 3 பேர் மட்டும் உயிர் பிழைத்தனர். 1866இல் லகோட்டா பழங்குடியினர்மீது செய்யப்பட்ட படையெடுப்பில் 81 பேர் கொண்ட படை போய், அனைவருமே உயிரிழந்தது, நூறு சாவு யுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. 1876இல் அதே லகோட்டா பழங்குடியினரிடம் மோதி, 700இல் 268 பேர் உயிரிழந்தனர். இப்படி, மிகப் பெரிய பட்டியலாக, அமெரிக்காவின் ‘வீர-தீரங்களை’ நிரூபிக்கும் நிகழ்வுகள் உள்ளன.

(படம் 4: தளபதி ஃப்ரான்சிஸ் டேட் போர்க்களத்தில் குதிரையிலேயே பிணமாகக் கிடப்பதைக் காட்டும் ஓவியம்)

‘இந்த மொன்னைக் கத்திய வைச்சுக்கிட்டா இத்தனை நாள் எங்கள பயமுறுத்தின…?’ என்ற வசனம் நினைவுக்கு வந்திருக்குமே? இத்தனை நாள் மட்டுமில்லை, இன்றும்கூட, வெனிசுவேலா அதிபரைப் பிடித்து வைத்துக்கொண்டு, இரானை வலுச் சண்டைக்கு இழுத்து என்று தொடர்கிறது! ‘நான் பில்ட்அப் பண்றனோ, பீலா விடறேனோ அது முக்கியமில்ல, நாம எது பண்ணினாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப் பார்க்கணும்’ என்பதையெல்லாம் திரைப்படத்துக்கு வெளியில் செயலில் காட்டுவது அமெரிக்காதான்!

அதுசரி, இன்று உலகிலேயே ராணுவத்துக்கு மிக அதிகமாகச் செலவிட்டு, மிகுந்த ராணுவ பலம் கொண்ட நாடு என்று காட்டிக்கொள்கிற அமெரிக்காவின் அன்றைய நிலை ஏன் அப்படி இருந்தது? முன்பே குறிப்பிட்டதைப் போல, அமெரிக்காவின் முதலாளிகள் கூட்டணி அமைத்து, தங்கள் நலன்களைப் பாதுகாக்க நடத்தியதுதான் இங்கிலாந்துக்கு எதிரான போர்! இங்கிலாந்தை ‘விரட்டி’, தங்களுக்கு விடுதலை பெற்றாலும் (தங்கள் நாட்டுக்கு என்று புரிந்துகொள்வது நம் தவறு!), முதலாளிகள் முதலாளிகளாகத்தானே இருப்பார்கள்?

நிரந்தரமாகத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த முதலாளி விரும்புவாரா? வேலை இருந்தால் மட்டும் தொழிலாளி வேண்டும் என்பதுதான் அவர்களின் அணுகுமுறையாக இருக்கும். அப்படித்தான், விடுதலைப்போரில் வென்றதுமே, தங்களுக்கு நிரந்தர ராணுவமெல்லாம் தேவையில்லை என்று கலைத்துவிட்டனர் அமெரிக்காவின் முதலாளிகள். 900 (தொள்ளாயிரம்தான்!) வீரர்களாவது நிரந்தரமாகத் தேவை என்று வாஷிங்டன் கேட்டதைக்கூட யாரும் ஏற்கவில்லை. முக்கியமான சில பகுதிகளைக் காக்க என்று வெறும் 30 (முப்பது!) வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள அனைத்து வீரர்களையும் 1783 நவம்பர் 3 அன்றே வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்! அதாவது, 1783 செப்டெம்பர் 3 அன்று விடுதலை ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டே மாதங்களில்! விடுதலைப் போருக்காக ஒரு கடற்படையைக்கூட உருவாக்கியிந்த நிலையில், அதனையும் கலைத்து, அதில் இருந்த கடைசிப் போர்க் கப்பலான அலையன்ஸ் என்பதையும் 1785 ஆகஸ்ட் 1 அன்று வணிகர்களுக்கு விற்றுவிட்டனர்.

படைகளைக் கலைத்ததில் மட்டுமின்றி, மீண்டும் படைகளை உருவாக்கியதிலும் மற்றொரு சிக்கல் முக்கியப் பங்காற்றியது. படைகள் என்றழைக்கப்பட்டாலும், விவசாயம் போன்ற பிற வேலைகளைச் செய்துகொண்டே, தேவையேற்படும்போது வந்து போரிட்ட குடிப்படைதான் என்பதை முன்பே பார்த்தோம். அப்படியானவர்களுக்கு தருவதாகச் சொல்லப்பட்டிருந்த ஊதியமே பல மாதங்களுக்கு வழங்கப்படவில்லை. 1781இல் நடைபெற்ற யார்க்டவுன் முற்றுகையில் இங்கிலாந்து தோல்வியடைந்ததுமே அது பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுவிட்டதால், போரின் தீவிரம் குறைந்துவிட்டது. வேலையின் தீவிரம் குறைந்தால் முதலாளி ஊதியத்தைத் தராமல் தவிர்க்க எல்லா முயற்சிகளையும் செய்வதுதானே இயல்பானது? அப்படித்தான் ஊதியம் நின்று போயிருந்தது. போர் முடிந்ததும், ஓய்வூதியமும் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில், எதுவும் கிடைக்காது என்று புரிந்துகொண்டவர்கள் போராடத் தொடங்கியிருந்தனர். மாசச்சூசெட்ஸ் பகுதியில் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய டேனியல் ஷேஸ் என்பவர் நீதிமன்றங்களையும், அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு, பூட்டிவிட்டார். 1786 ஆகஸ்டில் தொடங்கிய இந்தக் கலகம் அடுத்த ஆண்டு ஜூன் வரை நீடித்தது. 11 மாதங்கள் நீடித்தாலும் ஊதிய நிலுவையைத் தராமலேயே கலகம் ஒடுக்கப்பட்டது.

(படம் 5: ஷேஸ் கலகம் ஒடுக்கப்படுதல்)

ஆனால், கூட்டரசு என்ற ஒன்றும், ராணுவமும் வேண்டும் என்று முதலாளிகள் ஒப்புக்கொள்ள இந்தக் கலகம்தான் வழிவகுத்தது. 1787 செப்டெம்பரில் அரசமைப்புச் சட்ட மாநாடு, கூட்டரசை உருவாக்கியதுடன், விடைபெற்றுச் சென்றுவிட்ட வாஷிங்டன் திரும்ப அழைக்கப்பட்டு, 1789இல் முதல் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். படைகளுக்குத் தலைமையேற்ற வாஷிங்டன் குடியரசுத்தலைவரானதைப் பின்பற்றியே, இன்றுவரை படைகளில் பணியாற்றியவர்களை குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுப்பது அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 45 குடியரசுத் தலைவர்களில் (க்ரோவர் க்ளீவ்லேண்டும், டொனால்ட் ட்ரம்ப்பும் தொடர்ச்சியாக இன்றி இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டது தனித்தனியாக எண்ணப்படுவதால் 47ஆவது என்று குறிப்பிடப்படுகிறது.) 31 பேர் படைகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் 21 பேர் நேரடியாகப் போர்க்களங்களில் போரிட்ட அனுபவம் கொண்டவர்கள். எதையும் போரின்மூலம் தீர்க்க விரும்பும் அமெரிக்காவின் குணத்திற்கு இதுவும் ஒரு காரணம்!

ஆனால், கூட்டரசைக்கூட ஏற்படுத்திய பின்னும் அமெரிக்காவுக்கு ராணுவம் இல்லை. தொடக்கத்தில் குறிப்பிட்ட நிகழ்வான 1791இல் ஆயிரம் பேரை இழந்த வாபாஷ் ஆற்றுப் போருக்குப் பிறகுதான் ராணுவம் வேண்டும் என்று ‘லீஜியன் ஆஃப் த யுனைட்டட் ஸ்டேட்ஸ்’ என்று ஓர் அமைப்பாக பழைய வீரர்களை ஒருங்கிணைத்து, அதன்பின் 1796ல்தான் இன்றைய அமெரிக்க ராணுவமே தொடங்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அனுபவங்களில் எல்லா பக்கமும் அடிகளை வாங்கியபின்தான் படிப்படியாக விரிவாக்கப்பட்டது. வணிகக் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் தாக்கியதால்தான் கடற்படை மீண்டும் உருவாக்கப்பட்டது.

எப்படியானாலும், நிரந்தரமாக வேலை கொடுத்தபின், ‘சும்மா’ சம்பளம் கொடுக்க முடியுமா? ‘;பருத்தி மூட்டை கோடவ்னிலேயே’ இருந்தால் கொடுக்கிற சம்பளத்திற்கு என்ன பயன்? அப்படித்தான், அமெரிக்க ராணுவத்தை அயல் நாடுகளில் தாக்குதலுக்குப் பயன்படுத்துகிறது அமெரிக்க முதலாளி வர்க்கம். ஒரு புறம் கொடுத்த சம்பளத்திற்கு வேலை வாங்கியதாகவும் ஆயிற்று. மறுபுறம் அந்தப் போர்களால் ஆயுத விற்பனையும் சிறப்பாக நடக்கிறது. மறுகட்டமைப்பு என்று டாலரையும் உலகில் புழக்கத்தில் இருக்க வைக்கவும் முடிகிறது. அதனால்தான் தொடர்கிறது இரான் போர்!

(இன்னும் விளக்கமாக அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்!)

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *