வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 12:-
ஆட்சி அமைவதற்கு முன்பே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி…!
– அறிவுக்கடல்
சம்பளம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே நிரந்தர ராணுவம் வேண்டாம் என்று முடிவெடுத்தவர்கள்தான் ‘அமெரிக்காவின் முதலாளிகள்’ என்று பார்த்தோம். அவர்களுக்காககப் போராடிய வீரர்கள் எப்படி இருப்பார்கள்? ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’ என்பார்களே அப்படித்தான்!
விடுதலைப் போரில் 1781 அக்டோபரில் யார்க் டவுன் யுத்தத்தில் இங்கிலாந்து தோற்று, இங்கிலாந்துப் படைகள் சரணடைந்தபோதே அமெரிக்காவின் வெற்றி முடிவாகிவிட்டது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி, நடந்துகொண்டிருந்த நிலையில், இங்கிலாந்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நியூயார்க்கை கண்காணிப்பதற்காக, காண்ட்டினெண்ட்டல் ஆர்மி என்றழைக்கப்பட்ட அமெரிக்க விடுதலைப்படை, நியூயார்க்குக்கு அருகிலுள்ள நியூபர்க் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. விடுதலைக்குப்பின், விடுதலைப்படை வீரர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் பாதி ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று 1780இல் கூட்டணிப் பாராளுமன்றம்(காண்ட்டினெண்ட்டல் காங்கிரஸ்) உறுதியளித்திருந்தது. ஆனால் நிதித்துறையை கவனித்துவந்த ராபர்ட் மோரிஸ், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் 1782இலிருந்து வீரர்களுக்கு ஊதியமளிப்பதையே நிறுத்திவிட்டு, போர் முடிந்ததும் மொத்தமாக(அரியர்ஸ்) வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டார்.
பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டி, மனுக்களை வீரர்கள் அனுப்பினாலும் பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மை என்னவெனில் கூட்டணியிடம் நிதியில்லை. இறக்குமதிக்கு வரி வசூலித்து நிதி திரட்ட கூட்டணி விரும்பினாலும், குடியேற்றங்கள் அனுமதிக்கவில்லை. வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் அளிப்பது என்பதை தங்கள் பிரதிநிதிகள் ஆதரிக்கக்கூடாது என்றும் பல காலனிகள் சட்டமியற்றின. அதாவது, வேலை முடிந்துவிட்டால், நிலுவைக் கூலியை வழங்க முதலாளி அக்கறை காட்ட மாட்டார் அல்லவா, அதேதான்! அத்துடன், மத்திய அரசு என்ற ஒன்று உருவாகிவிடக்கூடாது என்பதில் மாநிலங்கள் உறுதியாக இருந்தன.
விடுதலை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிவிடும் என்று தெரிந்தபோது, ஊதிய நிலுவையும், ஓய்வூதியமும் கிடைக்காது என்று வீரர்கள் அச்சமுற்றனர். 1783 மார்ச் 10 அன்று, படைகளின் சக்தியைக் காட்ட அழைப்புவிடுத்து, கையெழுத்தில்லாத ஒரு கடிதம் வீரர்களிடையே பரவியது. மறுநாள் (மார்ச் 11) வீரர்களை கூடுமாறு அழைத்த அக்கடிதம், அதிகாரத்தை பாராளுமன்றத்திடமிருந்து ராணுவம் எடுத்துக்கொள்ள அழைப்பு விடுத்தது. அதாவது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – அதுவும், ஆட்சி முழுமையாக உருவாவதற்கு முன்பே! தாய் நாட்டையோ, சொந்த மண்ணையோ காப்பதற்காக அன்றி, வெறுமனே கூலிக்காகப் போரிட்டவர்கள், அந்தக் கூலி தரப்படாதபோது, அதைப் பெறுவதற்காகச் செய்த முயற்சிதான் அது!
இதைப் பற்றி அறிந்த வாஷிங்டன், அந்தக் கூட்டம் முறையற்றது என்று அறிவித்தததுடன், மார்ச் 15 அன்று மற்றொரு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்படவில்லையென்றாலும் திடீரென்று வந்த வாஷிங்டன் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அதுவரை அந்த வீரர்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடும் என்பதாக அவர் ஆற்றிய உரை வீரர்களைத் தயங்கச் செய்தது. கூட்டணிப் பாராளுமன்றத்திலிருந்து வந்த ஒரு கடிதத்தைப் படிக்க முயற்சித்து, கண்ணாடியின்றிப் படிக்க முடியாமல் திணறினார் வாஷிங்டன். விடுதலைக்காகப் போராடி நரையை அடைந்ததோடு, தன் பார்வையையும் இழந்துவிட்டதாக அவர் சொன்னது அனைவரையும் கண்கலங்கச் செய்ததுடன், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியையும் கைவிடச் செய்தது. ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து போகாமல் அமெரிக்கா தப்பித்தது!

எல்லாம் சரி, ஆறுதல் சொன்னால் போதுமா? அதனால், வாழ்நாள் ஓய்வூதியத்திற்கு பதிலாக ஐந்தாண்டுகளுக்கான முழு ஊதியம் பத்திரங்களாக வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துத்தான், அந்த நியூபர்க் சதி முறியடிக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் (ஏப்ரலில்) படைகளைக் கலைப்பதாக அறிவித்தபோதுகூட ஊதிய நிலுவையை வழங்க கூட்டணிப் பாராளுமன்றத்திடம் நிதியில்லை. அதனால், மூன்று மாத ஊதியத்தை (8 லட்சம் டாலர்!) ராபர்ட் மோரிஸ் சொந்த நிதியிலிருந்துதான் வழங்கினார். அதற்கெல்லாம் பிறகும் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்தது கூட்டணிப் பாராளுமன்றம். அந்தக் கடன்களைத் தீர்க்க 13 குடியேற்றங்களும் பங்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
குடியேற்றங்களிடமுள்ள செல்வத்திற்கேற்ப ஒவ்வொரு குடியேற்றமும் வரி தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு குடியேற்றத்தின் செல்வம் என்பதைக் கணக்கிட, அதனிடம் உள்ள நிலத்திலிருந்து மக்கள்தொகைவரை கருத்திற்கொள்ளப்பட்டன. உழைப்பே செல்வத்தை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில், மக்கள்தொகை முக்கியமானதாகக் கணக்கிடப்பட்டது. அடிமைகளை அதிகம் கொண்டிருந்த தென்பகுதிக் குடியேற்றங்கள் அடிமைகளை மக்கள் என்ற கணக்கில் எடுத்துக்கொள்வதை ஏற்கவில்லை. அவர்கள் அடிமைகளை வெறும் சொத்துகளாகக் கருதினார்கள் என்பது மட்டும் காரணமல்ல, வரியைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைக் காரணம்! அதாவது, அவர்களைப் பொருத்தவரை நாட்டுப்பற்று என்றெல்லாம் எதுவுமில்லை, பணம் மட்டும்தான் முக்கியம்!
அதனால், தென்பகுதிக் குடியேற்றங்களுக்கு மக்கள்தொகை, சொத்து ஆகிய இரண்டின் அடிப்படையிலும், வடபகுதிக் குடியேற்றஙகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் வரி நிர்ணயிக்கலாம் என்று தாமஸ் ஜெஃபர்சன் ஆலோசனை கூறினார். அதையும் ஏற்காததால், அடிமைகளை பாதி மனிதர்களாக எண்ணிக்கொள்ளலாம் என்று வர்ஜீனியாவின் பெஞ்சமின் ஹாரிசனும், முக்கால் மனிதர்களாக எண்ணவேண்டும் என்று நியூஇங்கிலாந்து குடியேற்றமும் கூற, இவற்றுக்கு இடைப்பட்டதாக, ஐந்தில் மூன்று பங்கு என்ற தீர்வு முன்மொழியப்பட்டது. அதாவது, ஓர் அடிமை என்பவர் 5இல் 3 பங்கு மனிதர் என்று பொருள்!

இந்த முன்மொழிவும் தோற்றுத்தான் போனது. ஆனால், அடுத்து நடைபெற்ற அரசமைப்புச்சட்ட மாநாட்டில், பிரதிநிதிகள் அவைக்கான பிரதிநிதிகளைக் கணக்கிட, அடிமைகளும் மக்கள்தொகையில் கணக்கிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, அதன்மூலம் தங்கள் பிரதிநிதித்துவம் உயரும் என்பதால் தென்பகுதியினர் ஏற்றுக்கொள்ள, அடிமைகளுக்காகக் கூடுதல் பிரதிநிதித்துவம் என்பதை வடபகுதியினர் ஏற்கவில்லை. இதற்குத் தீர்வாக மீண்டும் இந்த ஐந்தில் மூன்று பங்கு முறை முன்மொழியப்பட்டது. நீண்ட விவாதத்திற்குப்பின், வாக்குரிமையே இல்லாத அடிமைகளால் தங்கள் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதால் தென்பகுதியினரும், அடிமைகளுக்கும் சேர்த்து வரி வசூலிக்கப்படும் என்பதால் வடபகுதியினரும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டனர். அமெரிக்க அரசியல் சட்டத்திலும் இடம்பெற்றிருந்த இந்த ‘ஐந்தில் மூன்று பங்கு சமரசம்’, அடிமை முறை குறித்த பிரச்சினையாலேயே உள்நாட்டுப்போர் ஏற்பட்டபோது, தென்பகுதியினரின் கூடுதல் பிரதிநிதித்துவம் பிரச்சினைகளை ஏற்படுத்தியதால், 1868இல் நீக்கப்பட்டது என்பது தனிக்கதை!
விடுதலைப் போரின் கடன்களைத் திருப்பித் தருவதில், போரில் மிகக்குறைந்த பங்களிப்பைச் செய்திருந்த வடகரோலினா பகுதி, தங்கள் பங்குக்காக, சுமார் 3 கோடி ஏக்கர் (1.2 லட்சம் ச.கி.மீ.) நிலப்பரப்பைக் கூட்டரசுக் கொடுப்பது என்று 1784இல் முடிவெடுத்தது. இவ்வாறு வழங்கப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள், அந்த நிலப்பரப்பை கூட்டரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வடகரோலினா கட்டுப்பாடு விதித்திருந்தாலும், கடனைச் செலுத்துவதற்கு அந்த நிலப்பரப்பு பெரிய உதவியாக இல்லாததால், அதன்மீது கூட்டரசு அக்கறை காட்டவில்லை.
வடகரோலினாவின் குடிப் படைகளோ, கூட்டரசின் ராணுவமோ, எல்லையில் அமைந்திருந்த இப்பகுதியின் பாதுகாப்புக்காக வரவில்லை. கடனிலிருக்கும் கூட்டரசு, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற, அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பிற நாடுகளிடம் தங்கள் பகுதியை விற்றுவிடும் என்று அஞ்சிய இப்பகுதியினர், ‘ஃப்ராங்க்ளின் சுதந்திரக் குடியரசு’ என்ற தனி நாட்டையே உருவாக்கிவிட்டனர். அதாவது, அமெரிக்காவுக்கு நடுவில் தனியாக ஒரு சுதந்திர நாடு!

நிர்வாக அவை, நீதிமன்றம் என்று முழுமையான அரசு நிர்வாகத்தினை உருவாக்கியதுடன், வரிவிதிப்பு, அலுவலர்களுக்கான ஊதியம் முதலானவற்றையும் நிர்ணயித்துவிட்டனர். அதிகாரப்பூர்வமான பொருளாதார முறையாக பண்டமாற்றுமுறை அறிவிக்கப்பட்டு, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சோளம், புகையிலை, ஆப்பிள் மது முதலானவை ஏற்கப்பட்டன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டு நாணயங்களும் ஏற்கப்பட்டாலும், நாணயம் இல்லாததது பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தங்களை ஃப்ராங்க்லேண்ட் என்ற பெயரில் மாநிலமாக இணைத்துக்கொள்ளுமாறு அமெரிக்காவை அவர்கள் வேண்டினர். பதினான்காவது மாநிலமாக இதனை ஏற்க ஏழு மாநிலங்கள் ஆதரவளித்தாலும், கூட்டரசின் விதிகளைத் திருத்த மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டுமென்பதால் அம்முயற்சி தோற்றுப்போனது.
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்மீதான மரியாதையாலேயே அப்பெயரைச் சூட்டியிருந்த இப்பகுதியினர் அவரிடம் உதவி கோரினர். அப்போது, அமெரிக்காவின் தூதுவராக ஃப்ரான்சில் இருந்த அவர், பாராளுமன்றத்தின் முடிவை மீற மறுத்துவிட்டார். எல்லைப்புற பூர்வகுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி வலுவிழந்து, 1789இல் இந்த அரசு கலைக்கப்பட, 1791இல் வடகரோலினா இப்பகுதியை மீண்டும் கைப்பற்றி இணைத்துக்கொண்டது!
மொத்தத்தில் விடுதலைப் போர் என்று தொடங்கியவர்கள் முதலாளிகள். அவர்களுக்கு வணிக நோக்கம் மட்டும்தான் இருந்தது. தங்கள் நாடு என்ற பற்று எல்லாம் இல்லை. அதனால்தான், நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்கள் என்ற உணர்வு இன்றி, சம்பளம் கூடத் தராமல் படைகளையே கலைத்தார்கள்!
போராடிய வீரர்களும் கூலிக்காகப் போராடினார்கள். அதனால்தான், சம்பளம் வரவில்லை என்றதும், போராடியது வீணாகிவிடும், மீண்டும் இங்கிலாந்து கைப்பற்றுவதுகூட நடக்கலாம் என்ற உணர்வு இன்றி, ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்தார்கள்.
இவர்களில் எந்தத் தரப்புக்கும் தங்கள் நாடு என்ற நாட்டுப் பற்று எல்லாம் இல்லை என்பதால்தான், தங்கள் நாட்டிலேயே ஒரு பகுதி தனி நாடாக அறிவித்தபோதும் கவலைப்படவில்லை. அவரவர் வணிகம் நடந்ததா, லாபம் வந்ததா என்பதில்தான் கவனமாக இருந்தார்கள்.
வெறும் வணிகமும் லாபமும் மட்டுமே நோக்கமாக இருந்ததால்தான் மனிதர்களைக்கூட அரை மனிதர், ஐந்தில் மூன்று பங்கு மனிதர் என்றெல்லாம் எண்ணினார்கள்!
அப்படி நாட்டுப் பற்று, மனிதத் தன்மை ஆகிய எதுவுமே இல்லாமல் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதால்தான், ஒரு நாட்டின் இறையாண்மை என்பதைப் பற்றிய எந்த உணர்வுமின்றி எந்த நாட்டையும் தாக்குகிற நாடாக அமெரிக்கா இன்றுவரை இருக்கிறது!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

