அமெரிக்க டாலரின் தோற்றம், காண்டினெண்டல் டாலர் நோட்டுகள் மற்றும் ஆரம்பகால அமெரிக்க பொருளாதார வரலாற்றைக் குறிக்கும் விளக்கப்படம்.

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 13:- செல்லாக்காசான டாலர்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 13:-

செல்லாக்காசான டாலர்…!

– அறிவுக்கடல்

மீண்டும் இரானை அழிக்கப் போவதாக உளறிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். பிரச்சினை என்னவென்றால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆவது விதியின்படி, ஹார்முஸ் நீரிணை இரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை மீறி, ஓமனுக்கு அருகில் மாற்றுப்பாதை ஒன்றை உருவாக்கிக்கொள்ள அமெரிக்கா முயற்சிக்க, அந்தப் பாதையில் சென்ற கப்பல்களை இரான் தாக்கியுள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்பு ஹார்முஸை இரான் கட்டுப்படுத்தவில்லை. போர் முடியும்போது, இரானின் அனுமதியுடன்தான் வளைகுடா எண்ணெய் விநியோகமே நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தேடிச் சென்று அதைக் கொடுத்த அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரியாகச் சொன்னால், இரானை வெற்றிகொள்ளவும் அமெரிக்காவால் முடியவில்லை, தோல்வியை ஏற்கவும் முடியவில்லை.

தோல்வியை ஏற்க முடியவில்லை என்று சொல்லுமளவுக்கு இன்று உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவம், கடற்படை, விமானப்படை என்றெல்லாம் பார்க்கப்படும் (காட்டிக்கொள்ளும்?) அமெரிக்காவின் ஆரம்பக் காலத்தைத்தான் இதுவரை வந்த பகுதிகளில் பார்த்தோம். தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூட படையின்றி, எல்லாப் பக்கமும் அடி வாங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா, இப்படி ‘உலக தாதா’ ஆனதற்கு என்ன காரணம்? இன்று உலக நாடுகள் அனைத்தையும் பொருளாதாரத் தடை என்று அமெரிக்கா மிரட்டுவதற்குக் காரணமாக இருக்கிற அமெரிக்க டாலர்தான் அமெரிக்காவின் இந்த வளர்ச்சிக்குக் காரணமா? அதுவுமில்லை!

உண்மை என்னவென்றால், அமெரிக்கா விடுதலை பெற்ற பின்னும் மிக நீண்ட காலத்துக்கு அமெரிக்க மக்கள் பண்டமாற்று முறையில்தான் பரிமாற்றம் செய்துகொண்டிருந்தார்கள்! என்னது, பண்ட மாற்று முறையா? ஆம்! அதுவும் 19 ஆம் நூற்றாண்டு வரையும்!

அமெரிக்கக் கண்டத்திற்குப் போகவும், அங்கு குடியேற்றம் அமைத்துக்கொள்ளவும் அனுமதி அளித்ததைத் தவிர இங்கிலாந்து அரசு வேறெதுவும் செய்யவில்லை என்று முன்பே பார்த்தோம். அதற்கே லாட்டரி எல்லாம் நடத்தி, நிதி திரட்டித்தான் வந்தார்கள் என்பதால், அந்த முதலாளிகளிடம் பெரிய அளவுக்கு இங்கிலாந்து பணம் இல்லை என்பது ஒரு புறம். மறுபுறம், அமெரிக்காவில் அந்தப் பணத்தைக் கொடுத்து எதையும் வாங்க முடியாது என்பதால் அதைப் பற்றி யாருக்கும் பெரிய அக்கறையும் இல்லை.

ஆனால், அங்கு குடியேற்றம் அமைத்து, விவசாயம் செய்து, பொருட்களை விற்று வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டபின் பரிமாற்றிக்கொள்ள பணம் என்ற ஒன்று வேண்டும் அல்லவா? ஆனால், அந்தக் குடியேற்றங்கள் நாணயம் (பணம்) எதையும் வெளியிடக்கூடாது என்று உறுதியாகத் தடுத்தது இங்கிலாந்து அரசு. அதனால், அமெரிக்காவில் இருந்த இங்கிலாந்தின் குடியேற்றங்களில் இருந்தவர்கள் பண்ட மாற்று மூலமாகத்தான் விற்கவும், வாங்கவும் செய்தார்கள். புகையிலை, நீர்நாய் தோல், கருவாடு, (அமெரிக்கத் தொல்குடியினர் பயன்படுத்திய) சிப்பியில் செதுக்கப்பட்ட வேம்பம் என்னும் மணிகள் ஆகியவை சரக்குப் பணமாகப் பயன்பட்டன. சரக்குப் பணம் என்றால் சரக்கே பணமாகப் பயன்படுவது. அதாவது, பண்டமாற்று என்பதில் ஒருவரிடம் இருக்கும் பொருள் மற்றொருவருக்குத் தேவைப்பட்டு, அவரிடம் இருக்கும் பொருளும் இவருக்குத் தேவைப்பட்டால்தான் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், புகையிலையைக் கொடுத்து வேறு எந்தப் பொருளையும் வாங்கலாம், புகையிலையாகவும் பயன்படுத்தலாம் என்பதால் அது சரக்குப் பணம்.

அமெரிக்காவிலிருந்த பிற (ஐரோப்பிய) நாடுகளின் குடியேற்றங்களுக்கும் அவர்கள் பொருட்களை விற்பனை செய்ததால், அந்த நாடுகளின் நாணயங்கள் கிடைக்கும். குறிப்பாக ஸ்பெயினின் டாலர் அங்கு அதிகம் புழங்கியது. அந்த நாணயத்தை ‘எட்டு (அரைக்கால்) துண்டு’ என்றும் அழைத்தார்கள். ஏனென்றால், சில்லரை – அதாவது குறைந்த மதிப்புக்கு நாணயம் – தேவைப்படும்போது, இந்தக் குடியேற்ற வாசிகள் அந்த டாலர் நாணயத்தை உண்மையிலேயே 8ஆக வெட்டிப் பயன்படுத்தினார்கள். அதையும் அனைவரும் ஏற்கும் அளவிற்கு அங்கு பணத்திற்கான தேவை இருந்தது. அந்த அரைக்கால் துண்டுகளை பிட் என்று அழைத்தார்கள். அந்த 2 பிட்கள் சேர்ந்தால் கால் டாலர் என்பதால்தான் இன்றும் அமெரிக்காவில் கால் டாலர் என்பதை ‘டு பிட்ஸ் (two bits)’ என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் பணம் இருந்தால்தான் வணிகம் வளரும். உதாரணமாக இன்றைய காலகட்டத்தில் ரூ.5 நாணயங்களாக எடுத்துப் போய் ரூ.500க்கு ஒரு பொருள் வாங்க முடியுமா? பணமாக இருந்தாலே இப்படித்தான் எனும்போது, புகையிலையையும், கருவாட்டையும் எடுத்துச் சென்று எவ்வளவு பொருள் வாங்கவோ, விற்கவோ முடியும்? அந்நிய நாணயங்களும் எவ்வளவு கிடைத்துவிடும்? அதனால்தான், ஒரு கட்டத்தில், இங்கிலாந்தின் காலனிகள் தாங்களே இங்கிலாந்தின் நாணயத்தைப் போன்றே பவுண்ட், ஷில்லிங், பென்னி என்று காகிதத்தில் பணம் அச்சிடத் தொடங்கினார்கள். 1690இல் மாசாசூசெட்ஸ் குடா மாநிலம் வெளியிட்ட காகிதப் பணமே, மேற்கத்திய உலகின் முதல் காகிதப் பணமாகும். இங்கிலாந்தின் நாணயத்தைப் போன்றதுதானே தவிர, இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ நாணயம் அல்ல என்பதால் குடியேற்றங்கள் வெளியிட்ட பணத்திற்கு ஏற்பு மிகக் குறைவாக இருந்தது. ஏற்றுக்கொண்டாலும் அதில் குறிப்பிட்டிருக்கிற மதிப்பைத் தர யாரும் தயாராக இல்லை. உதாரணமாக 8 ஷில்லிங் கொடுத்தால், 4 அல்லது, 2 ஷில்லிங் மதிப்புக்குத்தான் பொருள் தருவார்கள். அது மட்டுமின்றி, இங்கிலாந்தின் 13 குடியேற்றங்களில் ஒன்றில் அச்சிடப்பட்ட பணத்திற்கு மற்றதில் மதிப்பு இருக்காது. அப்புறம் எப்படி அது பணமாகும்? அதனால்தான் பண்டமாற்று என்பதே நம்பிக்கைக்குரிய பரிமாற்ற வடிவமாக நீடித்தது.

(படம் 1: பென்சில்வேனியா குடியேற்றம் வெளியிட்ட 3 பென்னி காகிதப்பணம்)

அப்படியானால் தங்கள் நாட்டு (இங்கிலாந்து) அரசுக்கு எப்படி வரி செலுத்தியிருப்பார்கள் என்ற கேள்வியெழும். இங்கிலாந்து அரசு வரியே விதிக்காமலிருந்து வரி விதித்ததால்தானே விடுதலைப்போரே வந்தது! இங்கிலாந்தைப் பொருத்தவரை, அவர்களது அமெரிக்கக் குடியேற்றங்கள் உற்பத்தி செய்கிற எதுவானாலும் இங்கிலாந்தின் வழியாகத்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை உறுதியாக நடைமுறைப்படுத்தியது. இங்கிலாந்தின் வழியாகச் செல்லும் சரக்குகளுக்கு துறைமுகக் கட்டணம், வரி போன்றவைதான் குடியேற்றங்களிலிருநந்து இங்கிலாந்துக்கு வருவாய். அது மட்டுமின்றி, தனக்குத் தேவையான மூலப் பொருட்களை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொண்டு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை குடியேற்றங்களுக்கு அனுப்பியது இங்கிலாந்து. குடியேற்றங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும், இங்கிலாந்து பணம் பெற்றுக்கொண்டு, குடியேற்றங்களுக்குப் பொருட்கள் அனுப்புவதையே பெரும்பாலும் செய்ததால், குடியேற்றங்களில் பணப்புழக்கத்துக்கு வழியே இல்லை.

இப்படியான பின்னணியில்தான், ஃப்ரெஞ்ச் அமெரிக்கப் போருக்குப்பின், குடியேற்றங்களில் நிறுத்தப்பட்ட படைகளுக்காக இங்கிலாந்து வரி கேட்க, அது 1775இல் அமெரிக்க விடுதலைப் போராகியது. விடுதலைப் போருக்கு நிதி வேண்டுமே? போரிடுபபவர்களுக்குப் புகையிலையையும், கருவாட்டையும் ஊதியமாகத் தர முடியுமா? அதற்காகவே 13 குடியேற்றங்களும் உருவாக்கியிருந்த கூட்டணிப் பாராளுமன்றம் (காண்டினெண்டல் காங்கிரஸ்) தனக்கென பணத்தை வெளியிட்டது. அப்போது தங்கள் எதிரியாகிவிட்ட தாய்நாட்டின் நாணயத்தின் அடிப்படையில் பவுண்ட் என்று வெளியிட அவர்கள் விரும்பவில்லை. வேறு என்ன செய்வது என்று யோசித்தால், அப்போது குடியேற்றங்களில் இருந்தவர்கள் பெரும்பாலும் அறிந்திருந்தது ஸ்பானிய டாலரைத்தான் என்பதால் அந்தப் பெயரிலேயே வெளியிட்டார்கள்.

(படம் 2,3: 1525இல் வெளியிடப்பட்ட ஜோச்சிம்தாலேர் – முன் பக்கம், பின் பக்கம்)

இன்று உலகம் முழுவதும் மதிக்கப்படுகிற நாணயமாக டாலர் இருந்தாலும், டாலர் என்ற பெயர் என்னவோ அப்படி சிறப்பானதெல்லாம் இல்லை. தற்போது செக் குடியரசின் பகுதியாக இருக்கிற பொஹீமியா, 16ஆம் நூற்றாண்டில் வெளியிட்ட வெள்ளி நாணயம் ஜோச்சிம்தாலேர். அந்த நாட்டின் ஜோச்சிம் என்ற பள்ளத்தாக்கில் (ஜோச்சிம்தால்) வெள்ளிச் சுரங்கம் இருந்தது. அங்கு தயாரிக்கப்பட்டது என்ற பொருளில் ஜோச்சிம்தாலேர் என்றழைக்கப்பட்டது. ஜெர்மன் மொழியில், தால் என்றால் பள்ளத்தாக்கு என்றும், தாலேர் என்றால் பள்ளத்தாக்கிலிருந்து வந்தது என்றும் பொருள். அந்தத் தாலேர்தான் அங்கிலத்தில் டாலர் என்றானது. பல ஐரோப்பிய நாடுகளும் அதே பெயரைப் பயன்படுத்தின. அமெரிக்கக் கண்டத்தில் ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அந்த நாணயம் அங்கு பரவலாக ஏற்கப்பட்டிருந்தது. அதனாலேயே, காண்டினெண்டல் காங்கிரஸ் தங்கள் நாணத்திற்கு டாலர் என்று பெயரிட்டது.

(படம் 4,5 : 1/6, 2/3 காண்டினெண்டல் டாலர் நோட்டுகள்)

விடுதலைப் போராட்டத்துக்குத் தேவையான நிதி என்பதால் ஏராளமான டாலர் நோட்டுகளை அச்சடித்தது காண்டினெண்டல் காங்கிரஸ். அந்தப் பணம் ‘காண்டினெண்டல்ஸ்’ என்றே அழைக்கப்பட்டது. மொத்தம் 19,99,90,000 டாலர்கள் (20 கோடிக்கு 10 ஆயிரம் குறைவு) அளவுக்கு டாலர்களை அடித்த காங்கிரஸ், 80 டாலர்கள் வரையிலான மதிப்புள்ள நோட்டுகளை அச்சடித்தது. ஏழில் ஒரு பங்கு (1/7), ஆறில் ஒரு பங்கு(1/6), மூன்றில் 2 பங்கு(2/3) என்றெல்லாம் குழப்பமான மதிப்புகளில் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி போன்ற எந்தப் பின்னணியும் இல்லை என்பதால் – அதாவது அந்த நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு என்று மதிப்பு உத்தரவாதப்படுத்தப்படாததால் – மிக விரைவாக மதிப்பிழந்து போனது அந்த டாலர். அதனாலும்தான், விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்கள் தங்களுக்கான ஊதியத்துக்காகப் போரிட நேர்ந்தது. ஒரு கட்டத்தில் 100இல் ஒரு பங்கு அளவுக்கு டாலரின் மதிப்பு சரிந்து போனது. அதாவது, 100 டாலர் கொடுத்தால், ஒரு டாலர் மதிப்புள்ள பொருட்கள்தான் கிடைக்கும் என்ற நிலை! அதனால்தான், மதிப்பற்றது என்று குறிப்பிட ‘நாட் ஒர்த் எ காண்டினெண்டல்’ என்ற சொலவடை இன்றுவரை அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ‘செல்லாக்காசு’ என்று தமிழில் சொல்வதைப் போல – அதுதான் அமெரிக்கா வெளியிட்ட முதல் டாலரின் மதிப்பு! (அதற்குப் பிறகான வரலாற்றைப் பின்னர் பார்ப்போம்.)

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *