வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 14:-
இல்லாமல் போன இரண்டாவது டாலரும், முடிவுக்கு வந்த மூன்றாவது டாலரும்!
– அறிவுக்கடல்
சென்னையிலிருந்து பெங்களூருக்குச் சென்று பேருந்து நிலையத்தில் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டில் வாங்குகிறீர்கள். ரூ.20 போக மீதியாக ரூ.50 தருகிறார் கடைக்காரர். ஏனென்று கேட்டால் உங்கள் ஊர் 100 ரூபாய்க்கு இங்கு மதிப்பு 70 ரூபாய்தான் என்கிறார். அவர் மீதியாகத் தந்த 50 ரூபாய் நோட்டும் வேறு மாதிரியிருக்கிறது. ஏனென்றால் அது வேறு வங்கியால் அச்சிடப்பட்டது. இப்படி ஒரு நிலையை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 1913 வரை அமெரிக்காவின் நிலை கிட்டத்தட்ட இதுதான்!
விடுதலைப் போருக்குமுன் கூட்டணி அமைத்த 13 ஆங்கிலேயக் காலனிகளும் காண்டினெண்டல் டாலர் என்று வெளியிட்டு 100இல் ஒரு பங்காக மதிப்புக் குறைந்ததைக் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்த 100இல் ஒரு பகுதி என்பதுகூட, 1790இல் அரசு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பின்னர் மாற்றிக்கொள்ளும் பத்திரங்களாகத் தந்தபோது தரப்பட்ட மதிப்புதான். அதாவது, தான் வெளியிட்ட 100 டாலருக்கு அரசே ஒரு டாலர்தான் தர முடியும் என்று சொன்னது. ஆனால் அதை மக்கள் ஏற்க மறுப்பது அதற்கு முன்பே நடந்துவிட்டது. 1775 ஜூன் தொடங்கி 1779 நவம்பர் வரை வெளியிடப்பட்ட இந்த காண்டினெண்டல் டாலர்கள் 1781 மே மாதத்திலேயே புழக்கத்திலிருந்தே மறைந்துவிட்டது. அதாவது, அந்தப் பணத்திற்கு பொருள் தர யாரும் தயாராக இல்லை. இங்கிலாந்துப் படைகள் தங்கள் பங்கிற்கு ஏராளமான கள்ள நோட்டுகளை இந்தப் பணத்திற்கு அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டதும் இந்தப் பணத்தின் நம்பகத்தன்மை குறைவதில் பங்காற்றியது. அதைத்தான் செல்லாக்காசான டாலர் என்று கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆக, வெளியிட்ட 6 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே அமெரிக்காவின் முதல் டாலர் செல்லாமல் போனது. இந்த நிலையில்தான் நிதித்துறைக்கு மேற்பார்வையாளராக 1781இல் ராபர்ட் மோரீஸ் நியமிக்கப்பட்டார். அவர் காண்டினெண்டல் காங்கிரசின் அனுமதியுடன் பேங்க் ஆஃப் நார்த் அமெரிக்கா என்பதை 1781 டிசம்பரில் தொடங்கினார். அமெரிக்காவின் முதல் வணிக வங்கி இதுதான். இதற்கு மூலதனமாக 4.5 லட்சம் டாலர் அளவுக்கு வெள்ளி ஃப்ரான்சிலிருந்து கடனாக வாங்கப்பட்டது. தங்கம், வெள்ளியாக மாற்றத்தக்க டாலர் நோட்டுகளை இந்த வங்கி பென்சில்வேனியாவிலிருந்து அச்சிட்டது. (ஏனென்றால் பென்சில்வேனியாவின் ஃபிலடெல்ஃபியாதான் அப்போது அமெரிக்காவின் தலைநகராக இருந்தது!) அவை பென்சில்வேனியாவைச் சுற்றியுள்ள பகுதியில்தான் புழக்கத்திலிருந்தன. நாணயம் (பணம்) வெளியிட இந்த வங்கிக்கு 1781இல் அளிக்கப்பட்ட அனுமதியை 1785இல் காண்டினெண்டல் காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால், இந்த வங்கி தொடர்ந்து பணத்தையும் வெளியிடவில்லை, இந்தப் பணமும் புழக்கத்திலிருந்து படிப்படியாக மறைந்தது.

மக்கள் ஸ்பானிய டாலர்கள், பிற வெளிநாட்டு நாணயங்கள், சில அமெரிக்க மாநிலங்கள் வெளியிட்ட பணம் ஆகியவற்றையும் பயன்படுத்தினாலும், நம்பிக்கைக்குரியதாக பண்டமாற்று முறைதான் தொடர்ந்தது. இந்த நிலையில், 1787இல் நடைபெற்ற, அரசமைப்புச் சட்ட மாநாடு, மாநிலங்கள் பணம் வெளியிடக்கூடாது என்று தடைவிதிக்க, மாநிலங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த பணமும் இல்லாமல் போனது. காண்டினெண்டல் டாலரை வெளியிட்டு, அது செல்லாமலே போன கசப்பான அனுபவத்தால், காங்கிரசும் பணம் வெளியிடத் தயாராக இல்லை. மொத்தத்தில் தனக்கென்று பணம் என்ற ஒன்றே இல்லாத நாடாகத்தான் அமெரிக்கா இருந்தது.
1787இல் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, இன்றைய அமைப்பிலான அரசும் உருவாகி, 1789இல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டனும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், நாட்டுக்கு ஒரு பொதுவான நாணயம்(பணம்) உருவாக்கப்படவில்லை! புதிய அரசின் (முதல்) முதல் கருவூலத்துறைச் செயலாளரான அலெக்சாண்டர் ஹாமில்டன், ஒரு மத்திய வங்கி வேண்டும் என்ற கருத்தை 1779இலிருந்தே சொல்லிவந்தவர். இப்போது அவரே கருவூலத்துறைச் செயலாளராகிவிட்ட நிலையில், 1 கோடி டாலர்கள் மூலதனத்துடன் ஒரு வங்கியைத் தொடங்கலாம், அதன்மூலம் பொதுவான பணத்தை வெளியிடலாம், கடன்கள் வழங்கலாம் என்று முன்மொழிந்தார். அதற்கு 20 லட்சம் டாலர்களை அரசு முதலீடு செய்வது என்றும், மீதமுள்ள 80 லட்சம் டாலர்களை பங்கு விற்றுத் திரட்டுவது என்றும் கூறினார். ஆனால், ஏற்கெனவே போரிட்டவர்களுக்கே ஊதியம் தர முடியாத அளவுக்கு கடன் நெருக்கடியில் இருக்கிற அமெரிக்கா எங்கிருந்து 20 லட்சம் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்வது? அரசின் முதலீடான 20 லட்சம் டாலர்களுக்கும் வங்கியின் 20 சதவீதப் பங்குகள்தான் தரப்படும் என்பதால், வாங்கப் போகிற அந்தப் பங்குகளையே அடமானமாகக் கொண்டு, பங்குகளை வாங்குவதற்கே அரசுக்கு அந்த வங்கியே கடன் தரும் என்றும், அந்தக் கடனை 10 ஆண்டுகளில், சமமான தவணைகளாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இல்லாத பணத்தில் பங்கு வாங்குவது பிரச்சினையாகவில்லை. மாறாக வங்கி தொடங்குவதே எதிர்ப்புக்குள்ளாகியது. அப்போதுதான் இயற்றப்பட்டிருந்த அரசமைப்புச் சட்டம் வங்கியைத் தொடங்குவதையோ, பணம் வெளியிடுவதையோ பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதால், இந்த நடவடிக்கையே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தாமஸ் ஜெஃபர்சனும், ஜேம்ஸ் மேடிசனும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதாவது, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத எதுவாக இருந்தாலும் அது மாநிலங்களின் அதிகாரம் என்பதுதான் அவர்களது வாதம். அது மட்டுமின்றி, ஒரு மத்திய அளவிலான வங்கி, பணம் என்பதெல்லாம், ஒரு மத்திய அரசு என்பதை உறுதிப்படுத்தும் என்பதால், அப்படியான ஒன்று அந்தக் கூட்டமைப்புக்கே எதிரானது என்று வாதிட்டனர். 20 சதவீதப் பங்குகளை அரசு வாங்கியபின் மீதமுள்ள 80 சதவீதப் பங்குகளை அந்நியர்களும் வாங்க முடியும் என்பதால், மற்ற நாட்டினர் தங்களைக் கட்டுப்படுத்தும் வழியாக இந்த வங்கி ஆகிவிடும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறினர். இப்படியான பின்னணியில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு வாஷிங்டனிடம் வர, மிகுந்த தயக்கம், தீவிர ஆலோசனை ஆகியவற்றுக்குப்பின் அதனை அவர் ஏற்றுச் சட்டமாக்கினார். இப்படித் தொடங்கப்பட்டதுதான் பேங்க் ஆஃப் த யுனைட்டட் ஸ்டேட்ஸ் என்ற பெயருடைய, ஆனால் அமெரிக்க வரலாற்றில் ‘முதல் வங்கி’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிற வங்கி.

அரசு பங்கு வாங்க வாங்கிய 20 லட்சம் டாலர்களை 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டுமே? அதற்கு வருவாய் வேண்டுமே? அதற்காக, இறக்குமதி செய்யப்படும் மது வகைகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதுடன், அமெரிக்க விவசாயிகளே உற்பத்தி செய்த மது வகைகளுக்கும் வரி விதிக்கப்பட்டது. இதுதான் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்கு விதிக்கப்பட்ட முதல் வரி. அப்போது முதன்மையாக நடைமுறையிலிருந்தது பண்டமாற்று முறைதான். அதில் முக்கிய பரிமாற்ற ஊடகமாக – அதாவது பணம் என்ற நிலையில் இருந்தது – விஸ்கி. அதற்கு வரி விதிக்கப்பட்டது, பணத்திற்கே வரி விதிக்கப்பட்டதைப் போன்றதாகி, அதுதான் சுமார் 4 ஆண்டுகள் நீடித்த விஸ்கி கலகத்துக்கும் வழிவகுத்தது. பெரும்பாலும் சிறு விவசாயிகள் போராடிய இந்தக் கலகத்தை, அப்போதைய அமெரிக்க அதிபரான வாஷிங்டனே, 13 ஆயிரம் குடிப்படையினருக்குத் தலைமையேற்றுச் சென்று ஒடுக்கினார். அமெரிக்காவில் அரசியல் கட்சிகள் உருவாவதில், 4 ஆண்டுகள் நீடித்த இந்த விஸ்கி கலகம் முக்கியப் பங்காற்றியது.
1792இல்தான் நாணயச் சட்டம் (காயினேஜ் ஆக்ட்) இயற்றப்பட்டு, இந்த வங்கிக்கு நாணயம் வெளியிடும் உரிமை 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. அப்போதே காகித நாணயங்கள் டாலர் மதிப்பில் வெளியிடப்பட்டன. ஃபிலடெல்ஃபியாவில் நாணயச்சாலை தொடங்கப்பட்டபின், 1793இலிருந்து செப்பு நாணயங்களும் வெளியிடப்பட்டன. இவை (அன்றைய) அமெரிக்கா முழுமைக்குமான பொதுப் பணமாக இருந்தாலும், நகரங்கள் தவிர்த்த பிற பகுதிகளில் பண்டமாற்று முறைதான் முதன்மையாக இருந்தது என்பதுடன், பிற நாடுகளின் நாணயங்களும் புழக்கத்திலிருந்தன.

இதற்கிடையில் கருவூலத்துறை செயலாளர் அலெக்சாண்டர் ஹாமில்டன் 1795இல் பதவி விலகிவிட, புதிதாக வந்த ஆலிவர் வோல்காட் ஜூனியர், நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த முதல் வங்கியிலுள்ள அரசின் பங்குகளை விற்க வேண்டும் என்றார். அதாவது, அந்த வங்கியிலேயே கடன் வாங்கி வாங்கிய பங்குகளைத்தான் விற்று, அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்கப் போவதாகச் சொன்னார் ஆலிவர் வோல்காட். அது முறையல்ல என்று ஹாமில்டன் எதிர்த்தாலும், அவரது எதிர்ப்பு வெற்றி பெறவில்லை. அதனால் அந்த வங்கி கிட்டத்தட்ட முழுமையான தனியார் வங்கியாகியது.
இந்த வங்கிக்கு நாணயம் வெளியிடும் அனுமதி 20 ஆண்டுகளுக்குத்தான் அளிக்கப்பட்டிருந்தது என்பதால் அது 1811இல் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த வங்கி முன்மொழியப்பட்டபோதே எதிர்த்தவர்கள், இப்போதும் அதே எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டனர். இன்னும் சொல்லப்போனால், வங்கி என்பதே நிதி மூலதனம், முதலாளிகள் ஆகியோருக்கு உதவும் அமைப்பு என்றும், பணம் என்ற ஒன்றே தேவையில்லை என்றும் எதிர்க்கிற நிலப்பிரபுத்துவ மனநிலையில்தான் அவர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட பிற்போக்காளர்களின் ஆதிக்கம்தான் அமெரிக்காவில் நிலவியது என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த வங்கியின் அனுமதியைப் புதுப்பிக்கும் முன்மொழிவு, இரு அவைகளிலும் சரியாக ஒவ்வொரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனது. வங்கியின் பெரும்பான்மைப் பங்குகளை ஸ்டீஃபன் ஜிரார்ட் என்பவர் வாங்கி, வங்கியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார். அமெரிக்க அரசின் பணம் வெளியிடும் நடைமுறை மீண்டும் இல்லாமற்போனது.
1775இல் வெளியிடப்பட்ட முதல் டாலர் 6 ஆண்டுகளுக்குள் மதிப்பிழந்து போனது. 1781இல் பேங்க் ஆஃப் நார்த் அமெரிக்கா வெளியிட்ட டாலர், 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அரசே உருவானபின் 1792இல் உருவான இந்த மூன்றாவது டாலரும் 20 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாணயம் (பணம்) வெளியிடுகிற மத்திய அமைப்பு என்பதே அமெரிக்காவில் இல்லை. 5 ஆண்டுகளுக்குப்பின்? அடுத்த பகுதியில் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

