வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 15:- அமெரிக்காவுக்குப் பொருளாதாரத் தடை – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 15:- அமெரிக்காவுக்குப் பொருளாதாரத் தடை – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 15:-

அமெரிக்காவுக்குப் பொருளாதாரத் தடை

– அறிவுக்கடல்

அமெரிக்கா விடுதலை பெற்று, புதிய நாடாகி, தங்களுக்கென்று பணமும் வெளியிட நாணயச் சட்டமும் இயற்றினாலும், அதற்காக முதலில் தொடங்கப்பட்ட வங்கி 20 ஆண்டுகளில் முடிவுக்கு வந்ததைக் கடந்த பகுதியில் பார்த்தோம். அந்த வங்கிக்கான அனுமதி நீட்டிக்கப்படாததால், அந்த வங்கி வெளியிட்ட டாலர் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டு, புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. அப்படியானால், ‘மறுபடியும் முதலில் இருந்தா’? அதேதான்!

அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற அந்த அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான வங்கியோ, பணமோ மீண்டும் இல்லாமற்போனது. அதே நேரத்தில் மாநில வங்கிகள் ஏராளமாக உருவாகத் தொடங்கின. 1811இல் 88 ஆக இருந்த மாநில வங்கிகள் 1816க்குள் 200க்கும் அதிகமாயின என்பது மட்டுமல்ல, ஆளாளுக்கு விதவிதமான டாலர் நோட்டுகளையும் அச்சிட்டன!

இதற்கிடையில், 1812இன் போரும் தொடங்கிவிட்டது. அதென்ன 1812இன் போர்? அமெரிக்கா விடுதலை அடைந்ததே, தங்களது தடையற்ற வணிகத்தின்மீது ஓர் (இங்கிலாந்து) அரசு கட்டுப்பாடு செலுத்துவதை ஏற்க முடியாமல்தான் என்பதை முன்பே பார்த்தோம். விடுதலைக்குப்பின், வணிகம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்கவில்லை என்பதால்தான் தங்கள் நாடு, இறையாண்மை, தங்கள் பணம் என்பதிலெல்லாம்கூட அவர்களுக்கு அக்கறை வரவில்லை. அதாவது, கட்டுப்படுத்த அரசு என்பது இல்லாமல், முதலாளிகள் (நிலவுடைமையாளர்கள்) தங்கள் விருப்பத்துக்கு எதையும் செய்யும் இடமாகவே அதை வைத்துக்கொள்ள விரும்பினர்.

அப்படியான பின்னணியில், ஐரோப்பாவில் நெப்போலியப் போர்கள் ஏற்பட்டு, ஃபிரான்சுடன் இங்கிலாந்து போரிட்டுக்கொண்டிருக்க, அமெரிக்கா ஃப்ரான்சுக்கு ஏற்றுமதி செய்வதை இங்கிலாந்தால் ஏற்க முடியவில்லை. அதாவது, இன்று அமெரிக்கா பிற நாடுகளுக்கு பொருளாதாரத்தடை விதிப்பதைப் போன்று ஃப்ரான்சுடனான வணிகத்துக்கு இங்கிலாந்து தடை விதிக்க, அதை ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை. அதை மீறி சரக்குகளுடன் சென்ற அமெரிக்கக் கப்பல்களை இங்கிலாந்து பிடித்துக் கொண்டதோடு, அதிலிருந்த மாலுமிகளை, அவர்களும் ஆங்கிலேயர்கள்தான் என்று சொல்லி, இங்கிலாந்தின் கடற்படையில் வலுக்கட்டாயமாகப் போரிடச் செய்தது.

(படம் 1: இங்கிலாந்தின் மீது அமெரிக்காவின் போர் அறிவிப்பு)
(படம் 1: இங்கிலாந்தின் மீது அமெரிக்காவின் போர் அறிவிப்பு)

இவை மட்டுமே அன்றி, அமெரிக்கா, அதன் வடமேற்கு எல்லைப் பகுதியில் விரிவாக்கம் செய்துவிடாமலிருக்க, அங்கிருந்த தொல்குடியினருக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் அளித்து உதவிக்கொண்டிருந்தது இங்கிலாந்து. கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக இணைத்துக்கொள்ளும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருந்தது என்பதால் இங்கிலாந்து இவ்வாறு தடுத்தது. இந்தக் காரணங்களால்; 1812 ஜூன் 18 அன்று இங்கிலாந்தின்மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அக்காலத்திய அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட வாஷிங்டன் நகரை இங்கிலாந்துப் படைகள் எரித்தது இந்தப் போரில்தான். அதாவது, அமெரிக்கா ‘குருட்டு தைரியத்தில் சண்டைக்குப் போய் வாங்கிக் கட்டிக்கொண்ட கதை’தான்!

உண்மை என்னவென்றால், விடுதலைக்குப்பின் ராணுவத்தைக் கலைத்துவிட்ட அமெரிக்கா, அதன் மாநிலங்கள் வைத்திருந்த குடிப்படைகள் வந்து போரிட்டு, கனடாவைக் கைப்பற்றி அமெரிக்காவுடன் இணைத்துவிடும் என்று கற்பனை செய்து போரை அறிவித்தது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள், தங்கள் மாநில எல்லைக்கு அப்பால் போரிட குடிப்படை வீரர்களை அனுமதிக்கவில்லை. அது மட்டுமின்றி, குடிப்படைகளுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதும் அவர்களுக்குப் போரிடுவதில் பெரிய ஆர்வமில்லாத நிலையை உருவாக்கியிருந்தது. நெப்போலியப் போர்களில் படைகளைப் பயன்படுத்திகொண்டிருந்த இங்கிலாந்து இங்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்பதால் மட்டுமே அமெரிக்கா தோல்வி அடையாமல் தப்பிக்க முடிந்தது. இரண்டரை ஆண்டுகள் நீடித்த இந்தப் போர் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ளப்பட்டது.

(படம் 2: போர் தொடங்கிய 2 மாதங்களில், அமெரிக்காவின் டெட்ராய்ட், இங்கிலாந்திடம் சரணடைந்ததை சித்தரிக்கும் ஓவியம்)

இந்தப் போரை அறிவித்தபின் போருக்கான செலவுகளுக்குப் பணம் வேண்டுமே? வீரர்களுக்கு ஊதியம், உணவு, ஆயுதங்கள், போக்குவரத்துச் செலவுகள் இவை தவிர இவற்றுக்காக வாங்கும் கடனுக்கான வட்டி ஆகியவை போர்ச் செலவுகள். அமெரிக்காவிடம் மிகக் குறைவாகவே இருந்த தங்கம், வெள்ளியை பிற நாடுகளிலிருந்து வணிகக் கொள்முதலுக்கே அது பயன்படுத்தியது. நாட்டுக்கே பிரச்சினை என்றாலும், வணிகம்தான் அந்த முதலாளிகளுக்கு முக்கியம்! அதனால், இந்தச் செலவுகளுக்கு ட்ரஷரி நோட் என்னும் கடன் பத்திரங்களை அச்சிட்டுப் பயன்படுத்தியது அமெரிக்க அரசு. அவை போதாது என்பதால் மாநில வங்கிகளிடம் கடன் வாங்கியது. அதாவது, அந்த வங்கிகள் வெளியிட்ட பணத்தைக் கடனாக வாங்கி செலவுகளுக்குப் பயன்படுத்தியது.

(படம் 3: போருக்கு நிதி திரட்ட 1812இல் வெளியிடப்பட்ட ட்ரஷரி நோட் என்னும் கடன் பத்திரம்)

இதனால், மாநில வங்கிகள் ஏராளமாகப் பணத்தை அச்சிட்டன. 1811இல் 28 மில்லியன் டாலர்கள் அளவுக்குப் புழக்கத்திலிருந்த மாநில வங்கிகளின் டாலர் நோட்டுகள், 1814இல் 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்குமளவுக்கு இந்த வங்கிகள் நோட்டுகளை அச்சிட்டன. மாநில வங்கிகள் பணத்தை அச்சிட்டாலும், அது அரசின் உத்தரவு பெற்ற பணம் அல்ல என்பதால், கேட்கும்போது தங்கமாகவோ, வெள்ளியாகவோ மாற்றித்தரக்கூடியவையாக இருந்தன. ஆனால், இப்படி ஏராளமாக அச்சிட்டால் அதற்குத் தங்கம், வெள்ளிக்கு எங்கே போவது? அதனால், அப்படி மாற்றித்தருவதை 1814இல் மாநில வங்கிகள் நிறுத்திவிட்டன.

இது எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கிறது அல்லவா? இதைத்தான் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அமெரிக்கா மொத்த உலகிற்கும் செய்தது. முதலில் அமெரிக்க டாலர் என்பது தங்கமாக மாற்றிக்கொள்ளக்கூடியது என்று சொல்லி அதைப் பயன்படுத்தச் செய்தது. சுமார் 20 ஆண்டுகளில் (1966இல்) உலக நாடுகளிடம் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்க, அமெரிக்காவிடம் 3.2 பில்லியன் டாலர்களுக்குத்தான் தங்கம் இருந்தது. 1973இல் டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது என்று அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்துவிட, உலகம் வேறு வழியின்றி டாலருக்குள் முடங்கியது. இதை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘ட்ரையல்’ பார்த்ததைப் போன்றதுதான் தங்கமாக மாற்ற முடியாது என்று 1814இல் அறிவித்ததும்!

நிக்சனின் அறிவிப்புக்குப்பின் உலகிற்கு வேறு வழியின்றிப் போயிருக்கலாம். ஆனால், சொந்த நாட்டுக்குள் அந்த ‘பாச்சா பலிக்கவில்லை’! அப்படி மாற்ற முடியாத நோட்டுக்கு முழுமையான மதிப்பு தர அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. அந்த ஊரின் 100 டாலருக்கு இந்த ஊரில் மதிப்பு 70 டாலர்தான் என்று கடந்த பகுதியில் குறிப்பிட்டதைப் போன்று, குறைவான மதிப்புக்குத்தான் பொருட்கள் கொடுத்தனர். இன்னும் வேடிக்கை என்னவென்றால், ‘எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக்கொள்ளு’மாறு திருவிளையாடல் தருமி சொன்னதைப்போல, எவ்வளவு தொலைவோ அவ்வளவுக்கு அந்த டாலர் நோட்டின் மதிப்பு குறையும்.

புரியவில்லையா? உதாரணமாக தமிழ்நாட்டு வங்கியொன்று அச்சிட்ட ஆயிரம் ரூபாய் நோட்டின் மதிப்பு, அருகில் பெங்களூரில் 900 ரூபாய் என்றால், தொலைவிலுள்ள கல்கத்தாவில் 300 அல்லது 200 ரூபாயாகக்கூட மதிக்கப்படும். இன்றைக்கு உலகையே ஆட்டிவைக்கிற அந்த டாலர், அன்றைக்கு எவ்வளவு கேவலப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறதா? உண்மைதான், அமெரிக்கா என்ற நாடாகி பல பத்தாண்டுகள் ஆனபின்னும்கூட, ஸ்பானிய டாலர் போன்ற பிற நாடுகளின் பணத்துக்கு இருந்த மதிப்பு, அந்த நாட்டின் பணமான டாலருக்கு இல்லை!

1815இன் தொடக்கத்தில் போர் முடிவுக்கு வந்தாலும், நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு விதமான டாலர் நோட்டுகள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புக்குத் தொடர்பின்றி புழங்கியது மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தியது. உதாரணமாக, இந்த ஊரின் 5 டாலர் நோட்டுக்கு ஒரு டாலர் மதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும், அந்த ஊரின் 5 டாலர் நோட்டுக்கு 2 டாலர் மதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும் என்றெல்லாம் இருப்பதைக் கற்பனை செய்ய முடிகிறதா? ஒருவர் நமக்கு 100 டாலர் தர வேண்டும், அவர் பென்சில்வேனியாவிலுள்ள ஒரு வங்கியின் டாலர் நோட்டுகள் கொஞ்சமும், மேரிலேண்டிலுள்ள ஒரு வங்கியின் டாலர் நோட்டுகள் கொஞ்சமும், மாசச்சூசெட்ஸில் உள்ள ஒரு வங்கியின் டாலர் நோட்டுகள் கொஞ்சமும் தந்தால் அதற்கு எப்படி மதிப்புக் கணக்கிடுவது?

இப்படி பணம் புழங்கினால், எப்படி வணிகம் செய்வது? எதை விற்று வாங்கினாலும், அதற்கு மதிப்பு கணக்கிடுவதே பெரிய வேலையாக இருக்கும் அல்லவா? அப்படித்தான் இருந்தது. விடுதலையின்போது மிகப் பெரும்பகுதி விவசாயமாக இருந்த அமெரிக்கா, படிப்படியாக தொழில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. விவசாய உற்பத்தியை ஏற்றுமதி மட்டும் செய்தபோது பரிமாற்றிக்கொள்ள தங்கம் வெள்ளி போதுமாக இருந்தது. தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டு, உள்நாட்டு வணிகம் விரிவடையும்போது வெறும் பண்ட மாற்றையும், பிற நாட்டு நாணயங்களையும் நம்பினால் வணிகம் வளர முடியாதே? அதனால்தான், முதல் வங்கியை வணிகர்களுக்கு உதவக்கூடியது, விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்த்தவர்களுள் ஒருவரான ஜேம்ஸ் மேடிசனே இப்போது அதிபராக இருந்து, இரண்டாவது வங்கி தொடங்கி நாணயம் வெளியிடப்படுவதை ஆதரித்தார்!

அது மட்டுமின்றி, வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இருந்த அதே பிரச்சினை – அதாவது எந்த மதிப்பை எடுத்துக்கொள்வது என்பது – அந்த டாலர் நோட்டுகளில் வரி வசூல் செய்வதால் அரசுக்கும் ஏற்பட்டது என்பதும் இரண்டாவது வங்கியை ஆதரிக்கச் செய்தது. மொத்தத்தில் முதல் வங்கி முடிவுக்கு வந்த 1811இலிருந்து 1816 வரையான காலம் அமெரிக்காவின் நாணய வரலாற்றில் மிகக் குழப்பமான காலங்களுள் ஒன்றாக மாறியது. அவ்வளவுக்கும் பிறகுதான், மீண்டும் நாடு முழுமைக்குமான ஒரு தேசிய வங்கி, பொதுவான டாலர் என்ற கருத்து ஏற்கப்பட்டு, 1816இல் இரண்டாவது வங்கிக்கு அனுமதிப் பட்டயம் வழங்கப்பட்டு, வங்கியும் தொடங்கப்பட்டது. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *