வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 16:- மீண்டும் இல்லாமல் போன டாலர் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 16:- மீண்டும் இல்லாமல் போன டாலர் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 16:-

மீண்டும் இல்லாமல் போன டாலர்

– அறிவுக்கடல்

பொதுவான பணம் இன்றி மிகப்பெரிய குழப்பங்களைச் சந்தித்தபின், புதிதாக ஒரு தேசிய வங்கியைத் தொடங்கி, நாடு முழுமைக்கும் பொதுவான பணத்தை வெளியிடும் அதிகாரத்தை அதற்கு அளிப்பது என்று அப்போதைய அதிபர் ஜேம்ஸ் மேடிசன் முடிவெடுத்தார். போர் மற்றும் அதற்குப் பிந்தைய நெருக்கடிகள், நிதி குழப்பங்கள் ஆகியவை ஏற்படுத்தியிருந்த மோசமான அனுபவங்கள், முதல் வங்கியை எதிர்த்த பல தரப்பினரையும் மாற்றியிருந்தது. 1815இலிருந்து எதிர்க்கட்சியினரையும் இணைத்துச் செயல்பட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், அப்படி ஏற்பட்ட இணக்கமும், ‘நல்ல உணர்வுகளின் சகாப்தம்’ (Era of Good Feelings) என்று (கிண்டலாக) பின்னாளில் அழைக்கப்பட்டன. அந்தப் பின்னணியில் தேசிய வங்கி வேண்டும் என்பது பொதுவாக ஏற்கப்பட்டாலும், மாநில இறையாண்மைக்கு எதிரானது என்பதான எதிர்ப்புகள் அப்போதும் எழுந்தன. இதே எதிர்ப்பினை முன்பு எழுப்பியவரான மேடிசன், தற்போது வங்கி தேவை என்பதில் உறுதியாக இருந்தார்.

தொழில்களின் வளர்ச்சி வங்கியின் தேவையை ஏற்படுத்தியதைப் போன்றே, தொழில்களைப் பாதுகாக்கும் அவசியத்தையும் உருவாக்கியது. அதனால், 1816இன் டாரிஃப் அல்லது டல்லாஸ் டாரிஃப் (Dallas Tariff) என்று அழைக்கப்படும் இறக்குமதி வரியையும் மேடிசன் இதே காலகட்டத்தில் விதித்தார். நெப்போலியப் போர்களுக்கு முன்பு, விவசாயம் உள்ளிட்டவற்றின்மூலம் உற்பத்தியாகும் பொருட்களை – அதாவது பிற உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை – ஏற்றுமதி செய்துவிட்டு, உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைத்தான் அமெரிக்கா செய்துகொண்டிருந்தது. போர்க் காலத்தில் அந்த இறக்குமதிகள் நின்று போனதால், தங்களுக்கான தேவைகளை இங்கேயே உற்பத்தி செய்யத் தொடங்கியிருந்தது. உதாரணமாக முன்பு பருத்தியை ஏற்றுமதி செய்து, துணியை இறக்குமதி செய்த நிலையில், இப்போது இங்கேயே துணி உற்பத்தியாகத் தொடங்கியிருந்தது. அப்படியான உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட முதல் இறக்குமதி வரி – டாரிஃப் – இதுதான். அதாவது, இன்று வாயைத் திறந்தாலே டாரிஃப் என்று ட்ரம்ப் சொல்லுகிறாரே, அதற்கெல்லாம் பாட்டன் இந்த 1816இன் டாரிஃப்தான்!

படம் 1: 1816இன் டாரிஃப்

சரி, வங்கிக்கு வருவோம். முதல் வங்கியை அலெக்சாண்டர் ஹாமில்டன் எப்படி உருவாக்கியிருந்தாரோ, அதே அடிப்படையில் இரண்டாவது ‘பேங்க் ஆஃப் த யுனைட்டட் ஸ்டேட்ஸ்’ உருவாக்கப்படுவதற்கான பட்டயம் 1816இல் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே மாநிலங்களின் தனியார் வங்கிகள் கட்டுப்பாடின்றி அச்சிட்டிருந்த பணத்தாள்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த வங்கிக்கு இருந்தது. நெப்போலியப் போர்கள் முடிந்து ஐரோப்பா மீண்டிருந்த நிலையில், அதற்காகக் கூடுதல் உற்பத்தி தேவைப்பட்டது. அதற்கு உதவும் வகையில் நிறையக் கடன்களை இந்த வங்கி வழங்கி ஊக்குவித்தது.

எல்லைப் பகுதிகளில் விரிவாக்கம் செய்வதற்காக, அந்தப் பகுதிகளில் மக்கள் குடியேறுவதை ஊக்கப்படுத்த ஏக்கர் வெறும் 2 டாலர் என்ற விலையில், குறைந்த பட்சம் 160 ஏக்கர் என்ற அளவில் நிலத்தை அரசு விற்பனை செய்தது. அதாவது, இலவசமாகக் கைப்பற்றிய அமெரிக்க மண்ணைத்தான் அப்படி விற்பனை செய்தது. அதையும் கால்வாசிப் பணம் மட்டும் தந்துவிட்டு, நிலத்தைப் பெற்றுக்கொண்டு, மீதியை தவணைகளாக 4 ஆண்டுகளில் செலுத்தினால் போதும்! அப்படி வாங்குவதற்கு இந்த இரண்டாவது வங்கியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதி கிளைகள் ஏராளமாகக் கடன்களை வழங்கின.

படம் 2: இரண்டாவது வங்கியின் டாலர்

அப்படியான நடவடிக்கையில் அந்தக் கிளைகளே கட்டுப்பாடின்றி காகிதப் பணத்தை அச்சிட்டன. அப்படி வெளியிட்ட மேற்குப்புறக் கிளைகளின் கடன்களைக் குறைக்க வங்கி 1818இல் அறிவுறுத்தியது. கடன்களை மாநில வங்கிகளின் நோட்டுகளாகத் திருப்பிச் செலுத்துவதை அவை ஏற்றன. வசூலிக்கப்பட்ட மாநில வங்கி நோட்டுகளை மாற்றித் தங்கமாகத் தருவதற்கு அந்த மாநில வங்கிகளிடம் தங்கம் இல்லை. அதனால் அடமானம் வைக்கப்பட்டிருந்த பண்ணைகளையும், சொத்துகளையும் பறிமுதல் செய்யத் தொடங்கியது 1819இன் பதற்றமாக மாறியது.

பொருளாதார மந்தம், பதற்றம் ஆகியவை அமெரிக்க வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும். அமெரிக்கா என்ற நாடாக மாறியதிலிருந்து தொடங்கி, 2008 நிதி நெருக்கடி, கோவிட் காலப் பொருளாதார நெருக்கடி வரை 48 பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா சந்தித்திருக்கிறது. அவற்றில் இந்த 1819இன் நெருக்கடிதான் போர் அல்லாத சமாதான காலத்தில் ஏற்பட்ட முதல் பெரிய நெருக்கடியாகும்.

படம் 3: அமெரிக்காவின் முதல் பெருமந்தம் என்று குறிப்பிடப்படும் 1819இன் நெருக்கடி பற்றிய ஒரு நூலின் அட்டைப்படம்

மறுபுறம், போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் விவசாய உற்பத்தி மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையைச் சரியச் செய்தது. மேலும் இந்தியாவிலிருந்து வந்த பருத்தியும் ஐரோப்பாவில் பருத்தி விலையைக் குறையச் செய்தது. இந்தியாவிலிருந்து என்றால், அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தி, ஐரோப்பிய சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் அமெரிக்காவையும் பாதித்தது!

இதனாலும் விவசாயிகளால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. வங்கிகள் பறிமுதல் செய்த சொத்துகளால் ஏராளமான விவசாயிகள் நிலத்தை இழந்தனர். அதனால் நிலத்தின் விலை குறைந்தது. இவற்றால், மாநில வங்கிகள் திவால் ஆயின. அப்படி திவால் ஆன வங்கிகள் வெளியிட்டு, புழக்கத்திலிருந்த நோட்டுகள் மதிப்பிழந்தன. அதனால், நகரங்களிலும் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஃபிலடெல்ஃபியாவில் மட்டும் 75 சதவீதத் தொழிலாளர்கள் வேலையிழந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

படம் 4: மிசிசிப்பியைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கியின் டாலர்
படம் 4: மிசிசிப்பியைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கியின் டாலர்

ஏற்கெனவே வங்கி என்பது அரசமைப்புச் சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்று போராடியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? நெருக்கடியே வங்கியால்தான் உருவானது என்ற கருத்து பரவத் தொடங்கியது. விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டதால், வங்கி என்பதே சாதாரண மக்களுக்கு எதிரானது என்பதாக எதிர்ப்பு எழத் தொடங்கியது. வங்கியின் தலைவர் வில்லியம் ஜோன்ஸ் பதவி விலகினார். தொடக்கத்தில் அளிக்கப்பட்ட அதிகப்படியான கடன்களும், ஏராளமாக அச்சிடப்பட்ட பணமும்தான் பிரச்சினை என்ற நிலையில், சரி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், 1822 வரை நெருக்கடி தொடர்ந்தது.

பெரும்பாலான அமெரிக்கர்களிடையே கெட்ட பெயரை வங்கி ஈட்டியிருந்த நிலையில், 1823இல் அதன் (மூன்றாவது) தலைவராக நிக்கோலஸ் பிடில் நியமிக்கப்பட்டார். பிடில் சீராகக் கடனை விரிவாக்கி, வங்கியை உறுதியான நிலைக்குக் கொண்டு வந்தார். விரிவடைந்து கொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வங்கி சிறப்பாகச் செயல்படுவதாக முன்னாள் கருவூலத்துறை செயலாளர் பாராட்டுமளவுக்கு வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக மாறின. அமெரிக்காவின் பணம் என்பது நம்பகத்தன்மை பெறத் தொடங்கியிருந்தது. மக்களும் வங்கியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.

அப்படியான நேரத்தில் அதிபர் பதவிக்கு வந்த ஜேம்ஸ் மன்ரோவுக்கு, வங்கியைப் பிடிக்கவில்லை. அதிபரானதிலிருந்தே வங்கியைக் குறை சொல்லிப் பேசிக் கொண்டிருந்தார். பிரச்சினை இதுதான் – குறைவான விலைக்கு ஏராளமான நிலம் வாங்கி, நெருக்கடி கால கடன் வசூலில் பறிமுதல் போன்றவற்றில் நிலத்திலும், காகிதப் பணத்திலும் தனிப்பட்ட முறையில் இழப்பைச் சந்தித்திருந்தார்! அதனால், வங்கிமீது குற்றச் சாட்டுகளை எழுப்பினார். வங்கி இப்போது சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் வங்கிக்கு எதிராக இருந்த சிறு பிரிவினர் அவரை ஆதரித்தனர்.

1816இல் வங்கிக்கு அளிக்கப்பட்ட அனுமதிப் பட்டயம் 1836இல் முடிவுக்கு வரவிருந்தது. நெருக்கடியிலிருந்து மீண்டு, பெரும்பகுதி மக்களின் நம்பிக்கையையும் ஈட்டியிருந்ததைப் பயன்படுத்தி, வங்கிக்கான அனுமதியை நீட்டிப்பதை முன்கூட்டியே செய்துகொள்ள வங்கியின் தலைவர் பிடில் முயற்சித்தார். 1832இல் அந்த நீட்டிப்பு முன்மொழிவு நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றது. ஆனால், அதிபர் மன்ரோ, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதைச் செல்லாததாக்கினார். அதனால், இரண்டாவது வங்கியும் 1836-டன் முடிவுக்கு வருவது உறுதியானது.

அதன்பின், 1833இலேயே கூட்டரசின் நிதிகளை அதிபர் மன்ரோ, தனக்கு வேண்டப்பட்ட மாநில வங்கிகளுக்கு (Pet Banks!) மாற்றினார். 1836இல் அமெரிக்காவின் வங்கி என்ற தகுதியை இழந்த வங்கி, பென்சில்வேனியா மாநில வங்கியாக சில ஆண்டுகள் செயல்பட்டு, பின்னர் 1841இல் மூடப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ காகிதப் பணம் என்பது மீண்டும் இல்லாமல் போனது!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *