வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 17:- ஓடிப்போன வங்கிகள் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 17:- ஓடிப்போன வங்கிகள் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 17:-

ஓடிப்போன வங்கிகள்

– அறிவுக்கடல்

அமெரிக்காவின் பொதுவான டாலர் நோட்டு என்பது நான்காவது முறையும் தோற்றுப் போனது என்பதைப் பார்த்தோம். இரண்டாவது பேங்க் ஆஃப் த யுனைட்டட் ஸ்டேட்ஸ்-இன் அனுமதிப் பட்டயத்தை நீட்டிப்பதை, அமெரிக்காவின் அதிபரே வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்திவிட்ட பின்னணியில் டாலர் நோட்டு என்பது மீண்டும் இல்லாமற்போனது. மத்திய வங்கி அமைக்கப்பட்ட இரு முறையுமே, அது பொதுவான டாலர் நோட்டை அச்சிடத் தொடங்கியதும், மாநில அளவிலான தனியார் வங்கி நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளைச் செய்தது. கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், ஒரு நாட்டின் பணத்தை ‘பொதுவான பணம்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மோசமான நிலை, அரசமைப்புச் சட்டமெல்லாம் வந்துவிட்ட எந்த நாட்டிற்கும் உலகில் ஏற்பட்டிருக்காது. அப்படிப் பல விதமான பணத் தாள்கள் புழக்கத்திலிருந்து, அவை பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்படுவதும் நடந்துவிட்டது. ஆனால், அந்தப் ‘பொதுவான’ பணம் மீண்டும் இல்லாமற் போய்விட்டது.

பொருளாதார வளர்ச்சியில் பரிமாற்ற ஊடகம் என்பது மிகவும் முக்கியமானது. சிறிய அளவு உற்பத்தியை பண்டமாற்று முறையில் விற்பனை செய்துவிட முடியும் உற்பத்தி விரிவடையும்போது, பரிமாற்ற ஊடகம் இன்மை என்பது அதன் வளர்ச்சி வேகத்தில் குறுக்கிடுவதாக இருக்கும். பரிமாற்ற ஊடகம் ‘பணம்’ என்ற அளவுக்கு வளர்ச்சியடைந்துவிட்ட சமூகங்களில், அந்தப் பணம் இல்லாமல் வணிகம் செய்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. நம் வீட்டிலிருக்கிற தென்னை மரத்தில் காய்த்தவற்றில் ஒரு தேங்காயைக் கொடுத்து கொஞ்சம் காய்கறி வாங்குவது என்று கற்பனை செய்தால் இந்தக் குழப்பம் புரியும். இரண்டின் மதிப்பும் சரியா என்பது ஒருபுறம் என்றால், காய்கறி வைத்திருப்பவருக்கு தேங்காய் தேவைப்பட்டால்தானே அதை வாங்கிக்கொண்டு நமக்குக் காய்கறி தருவார்? எனவே, பணம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அமெரிக்காவில் அப்போதும் உலோக நாணயங்கள் இருந்தன என்றாலும், சிறிய பரிவர்த்தனைகளுக்குத்தான் அவை பயன்பட்டன. உற்பத்தியும் வணிகமும் வளர்வதுதான் பணத்திற்கான தேவை என்பதால், பெரிய பரிவர்த்தனைகளுக்கான காகிதப் பணம் மிகவும் அவசியமாக இருந்தது.

விளைவு? மாநிலங்களே டாலர் நோட்டுகளை அச்சிடத் தொடங்கின. மாநிலங்கள் என்றால் மாநில அரசுகள் நேரடியாக அல்ல. மாநிலங்கள் அனுமதியளித்துத் தொடங்கப்பட்ட தனியார் வங்கிகள் அச்சிட்டன. ஒரு பெரிய நாடு, ஆனால் அதன் மக்கள் ஏதோ ஒரு தனியார் வங்கி அச்சிடுகிற காகிதங்களைப் பணம் என்று பயன்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு பரிதாபத்துக்குரிய நிலை? யார் அச்சிட்டால் என்ன, அதற்கு மதிப்பிருந்தால் போதாதா என்ற கேள்வியெழலாம். அதைப் புரிந்துகொள்வதற்கு நாம் பணத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்வது அவசியம். 

படம் 1: ஒரு தனியார் வங்கி வெளியிட்ட டாலர் நோட்டு

நம் ரூபாய் நோட்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று எப்போதாவது படித்திருக்கிறீர்களா? உதாரணமாக 100 ரூபாய் நோட்டில், ‘இதைக் கொண்டு வருபவருக்கு நான் ரூ.100 தருவதாக உறுதியளிக்கிறேன்’ என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையொப்பமிருக்கும். அதுவே 100 ரூபாய்தானே, அதைத்தானே ஒருவர் கொண்டு வருகிறார், அதையே தருவதாகச் சொல்கிறார்களே என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இந்த மாதிரியான நோட்டுகளை ‘ஃபியட் கரன்சி’, அதாவது உறுதிமொழி நாணயம் என்று அழைக்கிறார்கள். இவற்றில் அந்த அரசின் உறுதிமொழி மட்டும்தான் மதிப்பை உருவாக்க வேண்டும். அதனால்தான் ஒரு நாட்டின் பணம் மற்றொரு நாட்டில் செல்லுபடியாவதில்லை. ஏனென்றால் இந்திய அரசின் உறுதிமொழியை உதாரணமாக ஜெர்மெனியின் மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதே? மற்றொரு அரசையே நம்ப முடியாது எனும்போது, ஏதோ ஒரு தனியார் வங்கியை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டிய அவல நிலையில்தான் அமெரிக்க மக்கள் இருந்தார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்கது. 

படம் 2: ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட டாலர் நோட்டு

ஆனால், அந்த டாலர் நோட்டுகள் முழுமையாக ஃபியட் கரன்சி வகையைச் சார்ந்தவை அல்ல. பணம் என்பது உருவான காலத்தில், தங்கம் அல்லது வெள்ளியாலான நாணயங்களாக (காயின்) இருந்தது. அதாவது, அதை உருவாக்கிய அரசை நம்ப வேண்டிய அவசியமின்றி, அதிலிருக்கிற தங்கமே அதன் மதிப்பை உறுதிப்படுத்திவிட்டது. காகிதப் பணம் உருவாகும்போது, அது எவ்வளவு தங்கத்திற்கு ஈடானது என்று அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, அந்தக் காகிதப் பணத்தைக் கொடுத்தால் அந்த அளவு தங்கம் கிடைத்துவிடும் என்ற உறுதி இருந்தது. பின்னாளில் கோல்ட் ஸ்டேண்டர்ட் என்று முறைப்படுத்தப்பட்டதைப் போன்று தெளிவான வடிவம் இல்லையென்றாலும், தங்கமாக (ஸ்பீஷி) மாற்றித்தரப்படும் என்பதுதான் அந்தப் பணத்தின்மீதான நம்பிக்கை.

அப்படித் தருவதற்கு அந்தத் தனியார் வங்கிகளிடம் போதிய தங்கமோ, பிற சொத்துகளோ இருக்க வேண்டுமே? அதற்காக, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் (மாநில அரசின் பத்திரங்கள் உட்பட) ஈடாக வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த ஈட்டுத் தொகை அளவுக்குள்தான் நோட்டு அடிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் சட்டங்கள் இயற்றின. ஆனால், இந்தச் சட்டங்களுக்குப் பெயரே ஃப்ரீ பேங்கிங் சட்டங்கள். ஏனென்றால், அந்த சட்டங்கள் குறிப்பிடுகிற வரையறைகளை நிறைவு செய்கிற யார் வேண்டுமானாலும் தனியாக அனுமதியெல்லாம் இன்றி வங்கி தொடங்கலாம். இப்படி ஏராளமான வங்கிகள் அனுமதிக்கப்பட்டதால் 1837-63 காலம் ஃப்ரீ பேங்கிங் ஈரா என்றே அமெரிக்க வரலாற்றில் அழைக்கப்படுகிறது.

ஆண்டுவங்கிகள் எண்ணிக்கை
(சுமார்)
Notes circulation
(மில்லியன் டாலர்)
1837758–800149
1840900107
1850824131
18571,400+214
18601,500–1,600207

அதனால் வகை தொகையின்றி தனியார் வங்கிகள் திறக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 1,600 வங்கிகள் இருந்தன. ஒவ்வொன்றும் பல மதிப்புகளில் (denomination-களில்) டாலர் நோட்டுகளை வெளியிட்டதால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாறுபட்ட வடிவமைப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. நோட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புக்கும் அவை ஏற்கப்படவில்லை. ஒரு Note-இன் உண்மையான மதிப்பு அதை வெளியிட்ட வங்கியின் நம்பகத்தன்மை, தொலைவு, மற்றும் உள்ளூர் சந்தையைப் பொறுத்து மாறியது. ‘Bank note reporters’ என்று பத்திரிகைகளே தொடங்கப்பட்டு, அவை இந்த discount விகிதங்களை வெளியிட்டன. இது இன்று நாம் பார்க்கிற டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பதைப் போன்றது அல்ல. மாறாக, ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு கடைக்குப் போனால், எத்தனை ரூபாய்க்குப் பொருள் கிடைக்கும் என்பதைப் போன்றது. வரலாற்றில் இவ்வளவு மோசமான நிலையில், அமெரிக்க டாலரைத் தவிர வேறெந்த நாட்டு நாணயமும் (பொருளாதார நெருக்கடிகள் இல்லாத சாதாரண காலத்தில்) இருந்திருக்கவே முடியாது. 

படம் 3: ஒரு தனியார் இருப்புப்பாதை அமைக்கும் நிறுவனம் வெளியிட்ட டாலர் நோட்டு. நிறுவனம் மட்டுமல்ல, இருப்புப்பாதையும் தனியாருடையது. அதில் தனியார் ரயில்கள் செல்லும். அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.

நாம் சேமிப்பு என்பதையே பணமாகத்தான் சேமிப்போம். ஏனென்றால் அது நிலையானது. 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, மாற்றிக்கொள்ளும் காலம் முடிந்தும், பலர் அந்த நோட்டுகளை மாற்ற முடியுமா என்று பரிதவித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஏனென்றால், பணமாக எதற்குள்ளாவது போட்டு வைத்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செலவு செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்களுக்கு அக்காலத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. அதனால், உடனடியாகச் செலவு செய்ய வாய்ப்பில்லாத எந்தப் பணத்தையும் தங்கமாக மாற்றித் தரும்படி, அந்தப் பணத்தை வெளியிட்ட வங்கிக்குப் போய் விடுவார்கள். ஆனால், ஃப்ரீ பேங்க்கிங் என்று வரைமுறையின்றித் தொடங்கப்பட்ட வங்கிகள் பல நேரங்களில் தங்கம் (அல்லது வெள்ளி) இல்லை என்று மறுப்பது அங்கு இயல்பானது. ஏனென்றால், ஈடாக வைத்திருக்கிற பத்திரங்களின் மதிப்பையெல்லாம்விடப் பல மடங்கு அதிகமாக பணத்தை அச்சிட்டிருப்பார்கள். சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்களும் இல்லாத நோட்டுகள் என்பதால், கள்ள நோட்டுகள் வேறு ஏராளமாகப் புழங்கும். 

அப்படி ஒரு வங்கியில் ஒருவருக்கு தங்கமாக மாற்றித் தர முடியாது என்று சொல்லிவிட்டால், அந்த வங்கியின் பணம் வைத்திருக்கிற அனைவரும் உடனே அந்த வங்கிக்குப் படையெடுத்துவிடுவார்கள். ஒரே நேரத்தில் தங்கம் தர முடியாததால், அந்த வங்கியின் உரிமையாளர் நம் ஊர் ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி வங்கியை மூடிவிட்டு ஓடிவிடுவார். இதைத்தான் அமெரிக்காவில் பேங்க் ரன் என்கிறார்கள். வங்கிகள் திவால் ஆவது அங்கு இன்றுவரை பேங்க் ரன் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு ஓடிப்போன வங்கிகள் 1837இல் மட்டும் 343! இந்த 1837-63 காலகட்டத்தில் இவ்வாறு கிட்டத்தட்ட 50 சதவீத வங்கிகள் மூடப்பட்டனவாம்! பெரும்பாலான வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை.

இவை தவிர, தங்கமாக மாற்ற மக்கள் வங்கிக்கு வந்துவிடக்கூடாது என்று வங்கியை வெகு தொலைவில் தொடங்குவார்களாம். அதை வைல்ட் கேட் (காட்டுப் பூனை) பேங்க்கிங் என்று அமெரிக்காவில் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் காட்டுப் பூனைகள் அலைகிற இடங்களில் – அதாவது காடுகளில் – இந்த வங்கிகள் தொடங்கப்பட்டு, மக்களை ஏமாற்றின என்று பொருள்! 

படம் 4: மிச்சிகனில் தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் மூடப்பட்ட ‘பேங்க் ஆஃப் சிங்கப்பூர்’ என்ற வைல்ட் கேட் வங்கி வெளியிட்ட டாலர் நோட்டு

மொத்தத்தில் வங்கிகள் என்ற பெயரில் மட்டுமல்ல, நாட்டின் பணம் என்ற பெயரிலும் அமெரிக்க நாட்டு மக்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டனர். சுதந்திர வங்கிக் காலம் என்பது வங்கிகள் ஏமாற்றிவிட்டுச் சுதந்திரமாகச் செல்லும் காலமாகவே இருந்தது. 1837இலும், 1857இலும் இரு பொருளாதார நெருக்கடிகள், இடையில் ஒரு நீண்ட பொருளாதார மந்தம் ஆகியவை ஏற்பட்டாலும்கூட, அமெரிக்க டாலர் என்பது அமெரிக்கா முழுமைக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற புரிதல் அமெரிக்க உள்நாட்டுப் போரின்போதுதான் வந்தது. அதைப் பின்னர் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *