வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 18:-
பிரிந்து சென்ற மாநிலங்கள் அச்சிட்ட டாலர்
– அறிவுக்கடல்
பணம் என்ற ஒன்று இல்லை என்பதற்கு அரசோ, மக்களோ பெரிதாகக் கவலைப்படவில்லை என்றால் என்ன பொருள்? பணம் தவிர்க்க இயலாததாக எப்போது மாறும்? அனைவருமே விற்று, வாங்குகிற நடவடிக்கையில் ஈடுபடும்போதுதான். அப்படி இல்லாமல் இருக்க முடியுமா? காலையில் எழுந்து ஒரு டீ குடித்தாலே பணம் தேவைப்படுகிறதே? ஆம், டீக் கடைக்காரர் விற்று, நாம் வாங்குகிறோம். ஆனால், நிலவுடைமைக் காலத்தில், பண்ணையடிமைகளாக இருந்தவர்களுக்கு உணவுக்கு தானியம் வழங்கியதோடு முடிந்துவிடும். நிலத்திலேயே இருந்து, காலை எழுந்ததிலிருந்து, இரவு உறங்கும்வரை உழைத்தவர்களுக்கு, பொங்கித் தின்ன கொஞ்சம் அரிசி கிடைத்தபின் வாங்க என்ன இருக்கிறது? படிப்படியாக வேறு பொருட்கள் கிடைக்கத் தொடங்கும்போதுதான் வாங்குவது என்ற தேவையே வரும். அப்போது, அவர்களிடம் பணம் இருக்க வேண்டும் என்பதால்தால் தொழில் வளர்ச்சியுடன் சேர்ந்து அவர்கள் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நிலவுடைமைக் காலத்தில் அடிமைகளும், தொழில்வளர்ச்சி வரும்போது சந்தையும் தேவைப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்திற்குச் சென்று விவசாயம் செய்யத் தொடங்கியபோது தேவைப்பட்ட அடிமைகள், தொழில் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியிருந்த வடபகுதி மாநிலங்களுக்கு சந்தையாக மாற வேண்டியிருந்தது. அதே நேரத்தில் இன்னும் விவசாய உற்பத்தியை முதன்மையாகக் கொண்டிருந்த தென்பகுதி மாநிலங்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அடிமை முறை மனிதத் தன்மையற்றது என்று கூறி வடபகுதி மாநிலங்கள் எதிர்க்கத் தொடங்கியிருந்த நிலையில், 1861இல் தென்பகுதியின் 11 மாநிலங்கள் (அப்போது மொத்தம் 34 மாநிலங்கள்தான்!) கன்ஃபெடரசி என்ற பெயரில் தனி நாடாகப் பிரிந்துவிட்டதாக அறிவித்தன. அத்துடன், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர், தனியாக டாலர் அச்சிடுவது எல்லாம் தொடங்கிவிட, அது அமெரிக்க உள்நாட்டுப் போராகியது. ‘சுதந்திர உழைப்பு முறைக்கும், அடிமை முறைக்குமான போராட்டம்’ என்று மார்க்ஸ் இதனைக் குறிப்பிட்டார்.

பிரிந்து போனவர்கள்கூட கன்ஃபெடரேட் ஸ்டேட்ஸ் டாலர் என்று பொதுவான பணம் அச்சிட்டுவிட, அமெரிக்க அரசுக்குப் பொதுவான பணம் இல்லை! அதனால், போருக்கு நிதி திரட்டுவதில் அமெரிக்கா கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. வேறு வழியின்றி 1862இல் சட்டப்பூர்வப் பணச் சட்டம் (Legal Tender Act) என்பது இயற்றப்பட்டு, அமெரிக்க அரசே பொதுவான காகித டாலரை அச்சிடத் தொடங்கியது. இந்த டாலர் நோட்டுகளின் பின்புறத்தில் ‘இது அமெரிக்க அரசின் சட்டப்பூர்வப் பணம்’ என்று பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்ததால், க்ரீன்பேக்ஸ் (Greenbacks) என்றே இவை அழைக்கப்பட்டன.

ஒரு வழியாக தற்போதைய டாலர் வந்துவிட்டதா? அவசரப்படாதீர்கள்! இதுவும் இன்றிருக்கிற டாலர் அல்ல. இது வந்தபின்னும் வேறு வங்கிகள் அச்சிடுகிற நோட்டுகள் அனுமதிக்கப்பட்டன. அதைப் பற்றிப் பார்ப்பதற்குமுன் இந்த நோட்டைப் பற்றிய விபரங்களைப் பார்த்துவிடுவோம். இது ஓர் உறுதிமொழி நாணயமாகும். அதாவது, குறிப்பட்ட அளவு தங்கத்திற்கு மாற்றத்தக்கது என்பதான மதிப்பெல்லாம் இன்றி, அரசின் உறுதிமொழி மட்டுமே மதிப்பை உருவாக்கியது. அதனால் ஒரு கட்டத்தில் நாணயங்களாக (காயின்) 100 டாலர் கொடுத்து வாங்கக்கூடிய தங்கத்திற்கு இந்த காகிதப் பணத்தில் 258 டாலர்கள் தர வேண்டும் என்கிற அளவுக்கு மதிப்பு குறைந்து கொண்டே வந்தது. வேறு வழியின்றி , 1863இல் மாநிலங்களுக்குள் சுருங்காமல் நாடு முழுவதும் செயல்படும் தேசிய வங்கிகள் தொடங்கலாம், அவை டாலர் நோட்டு அச்சிடலாம் என்று தேசிய வங்கிச்சட்டமும் (National Banking Act), தேசிய பணச் சட்டமும் (National Currency Act) இயற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஏராளமான தேசிய அளவிலான வங்கிகள் தொடங்கப்பட்டன. அவற்றின் பெயரில் தேசிய வங்கி (National Bank) என்பது இடம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்தியதால் அனைத்துமே தேசிய வங்கி என்ற பெயருடன் (உதாரணமாக: Franklin National Bank, Crocker National Bank, Broad Street National Bank) இருந்தன. சட்டம் இயற்றப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் 729 தேசிய வங்கிகள் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்க, ஏற்கெனவே மாநில வங்கிகளாக இருந்த 934 வங்கிகள் தேசிய வங்கிகளாக மாறின. 1913இல் அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தொடங்கப்படும்போது, (இடையில் ஏராளமானவை திவால் ஆகி மூடப்பட்ட பின்னும்) சுமார் 7400 தேசிய வங்கிகள் இருந்தன.
பிரச்சினை என்னவென்றால், இந்த வங்கிகள் தனித்தனியாக டாலர் நோட்டுகளை அச்சிட்டன. முந்தைய காலத்தைவிட ஒரு முன்னேற்றம் என்னவென்றால், அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரி நோட்டுகளை அச்சிட வேண்டும் என்று சட்டம் கூறியதால் நோட்டுகள் ஒரே மாதிரி இருந்தன. ஆனால், பார்க்கத்தான் ஒரே மாதிரி இருந்தனவே தவிர, எல்லா நோட்டுகளிலும் அந்தந்த வங்கியின் பெயர்தான் அச்சிடப்பட்டிருந்தது. மறுபுறம் அரசே அச்சிடுகிற க்ரீன்பேக்ஸ் வகை டாலர் நோட்டுகளும் புழக்கத்திலிருந்தன. ஆக, மறுபடியும் அடிப்படையில் இரண்டு வகையான டாலர் நோட்டுகளும், அதிலும் இரண்டாவது வகையில் ஆயிரக்கணக்கான மாறுபட்ட வங்கிகளின் பெயர்களைக் கொண்ட டாலர் நோட்டுகளும் புழங்கத் தொடங்கின. 1913இல் ஃபெடரல் ரிசர்வ் தொடங்கப்பட்டாலும், 1935 வரை இந்த தேசிய வங்கி நோட்டுகள் புழக்கத்திலிருந்தன.

தேசிய வங்கிகள் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநில வங்கிகளின் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்க அவற்றுக்கு வரிவிதிக்கப்பட்டது. வெளியிட்ட வங்கி அல்லது புழக்கத்தில் விடுகிற வங்கியிடமிருந்து நோட்டுகளின் மதிப்பில் 2 சதவீதம் வரியாக 1863இல் விதிப்பது தொடங்கப்பட்டு, 1865இல் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில வங்கிகளின் நோட்டுகள் குறுகிய காலத்திலேயே புழக்கத்தைவிட்டு மறைந்து, குழப்பத்தை இரண்டு வகை (அரசு, தேசிய வங்கிகளின்) டாலர்களுக்குள் சுருக்கின.

இதற்கிடையில், 1873இல் ஜே கூக் அண்ட் கம்பெனி என்ற ரயில் பாதை அமைக்கும் நிறுவனம் திவால் ஆனது. அன்று அமெரிக்கா முழுவதும் இருப்புப்பாதை அமைத்து, அதில் செல்லும் ரயில்களுக்குக் கட்டணம் வசூலிப்பது முக்கியமான தொழில். 1868-73 காலகட்டத்தில் மட்டும் 53 ஆயிரம் கி.மீ.க்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. தொழில்வளர்ச்சிக்கு உதவியதால் இருப்புப்பாதை அமைக்க நிலம், பிற சலுகைகள் ஆகியவற்றை அரசு அளித்தது. அதைப் பயன்படுத்திக்கொள்வதற்காக தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்ட இருப்புப் பாதைகளில் வருவாய் இல்லை. அக்காலத்திலேயே தந்தி மூலம்கூட பத்திரம் விற்று மக்களிடம் இந்த நிறுவனம் நிதி திரட்டியிருந்தது. இந்த நிறுவனம் திவாலானவுடன் அமெரிக்கப் பங்குச் சந்தையே 10 நாட்களுக்கு மூடப்பட்டது. நெருக்கடிக்குள்ளான வங்கிகள் கடன்களைத் திருப்பிக் கேட்டதில் 18 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதோடு, 10 மாநிலங்களே திவாலாகிவிட்டதாக அறிவித்தன. 1879 வரை நீடித்த இந்தப் பொருளாதார நெருக்கடிதான் முதலில் க்ரேட் டிப்ரஷன் என்று அழைக்கப்பட்டு, 1920களின் இறுதியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதால், பின்னர் லாங் டிப்ரஷன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நெருக்கடியின்போதும், 1884, 1890, 1893, 1907 என்று திரும்பத்திரும்ப ஏற்பட்ட நெருக்கடிகளின்போதும் ஏராளமான வங்கிகள் திவாலாயின. மொத்த வங்கிகளில் 20.4 சதவீத வங்கிகள் (5இல் ஒன்றைவிட அதிகம்!) திவாலாயின. 1863-1934 காலகட்டத்தில் மட்டும் அமெரிக்காவில் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 3,984! அப்போதைய ஆறுதல் என்னவென்றால், இந்த வங்கிகளுக்கு நோட்டு அச்சிடும் அனுமதியை அளிப்பதற்கு ஈடாக பத்திரங்களில் முதலீடு செய்யச் செய்திருந்தது. அதைப் பயன்படுத்தி, மூடப்பட்ட வங்கிகளின் நோட்டுகளுக்கும் அரசு பணம் கொடுத்ததால், மக்களுக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனாலும்கூட, விடுதலையடைந்து ஒன்றேகால் நூற்றாண்டு ஆகியும், ஒரே டாலர் நோட்டு என்ற இடத்தை அமெரிக்கா அடையவில்லை! அமெரிக்க டாலரும் உறுதியான நாணயமாக மாறவில்லை. அதன்பின்னும் தொடர்ந்த பிரச்சினைகள்தான் 1913இன் இறுதியில் ஃபெடரல் ரிசர்வ் சட்டத்தை இயற்றச் செய்து, மத்திய வங்கியைத் தொடங்கச் செய்தது. அடுத்த பகுதியில் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

