வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 19:- சொந்தமாக நாணயம் வெளியிடத் தொடங்கிய அமெரிக்கா – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 19:- சொந்தமாக நாணயம் வெளியிடத் தொடங்கிய அமெரிக்கா – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 19:-

சொந்தமாக நாணயம் வெளியிடத் தொடங்கிய அமெரிக்கா

– அறிவுக்கடல்

உள்நாட்டுப் போரின்போது நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிரமம்தான் அமெரிக்க அரசை முதன்முதலில் நேரடியாக டாலர் நோட்டு அச்சிடச் செய்தது, அது க்ரீன்பேக்ஸ் என்றழைக்கப்பட்டது என்று பார்த்தோம். அந்த நோட்டை அச்சிடும்போது, பணம் என்றால் தங்கத்துக்கு மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும் என்ற ‘கோல்ட் ஸ்டேண்டர்ட்’ நடைமுறையை நிறுத்தி வைத்து, வெறும் உறுதிமொழி நாணயமாக வெளியிட்டது.

உண்மை என்னவென்றால், அமெரிக்க அரசிடம் இருந்த தங்கத்தை, போர்ச் செலவுகளுக்காகத் தீர்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நோட்டு வெளியிடப்பட்டதே தவிர, அமெரிக்காவுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய காகித டாலர் வேண்டும் என்பதற்காக அல்ல. அதனால்தான், தேசிய அளவிலான வங்கிகள் நாடு முழுமைக்கும் செல்லத்தக்க பணத்தை வெளியிடவும் அனுமதித்தது. எந்த வங்கி வெளியிட்டிருந்தாலும் அந்தப் பணத்தை மற்ற வங்கிகள் அதே மதிப்புக்கு ஏற்க வேண்டும் என்ற அரசின் வலியுறுத்தலாலேயே அந்தப் பணத்துக்கு மதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், அது சட்டப்பூர்வ பணம் அல்ல என்று காட்டவே, அரசு அச்சடித்த க்ரீன்பேக்ஸ் நோட்டுகளில் ‘லீகல் டெண்டர்’ என்று அச்சிடப்பட்டது.

அரசைப் பொருத்தவரை, தங்க மதிப்பு இல்லாத அந்த க்ரீன்பேக்ஸ் நோட்டுகள், போருக்கு நிதிதிரட்ட அச்சிடப்பட்டவை மட்டுமே. அதாவது கடன் பத்திரங்களைப் போன்றவை. அதனால், 1865இல் போர் முடிந்தபின் அந்த நோட்டுகளை அரசு அச்சிடவில்லை. அத்துடன், போர் முடிந்ததுமே க்ரீன்பேக்ஸ் நோட்டுகளைத் திரும்பப் பெறவும் தொடங்கியது. ஆயிரக்கணக்கான தேசிய வங்கிகள் அச்சிட்ட மாறுபட்ட (பெயர்கள் கொண்ட) டாலர் நோட்டுகளைத்தான் புழக்கத்தில் வைத்துக்கொள்ள அமெரிக்க அரசு முயற்சித்தது. ஆனால், தேசிய வங்கிகளின் நோட்டுகளின் மதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பதால் மக்கள் அந்த நோட்டுகளை பத்திரப்படுத்திக்கொண்டனர். இதனால், பழைய மாநில வங்கிகளின் நோட்டுகள்தான் அதிகம் புழக்கத்திலிருந்தன.

இவ்வாறு நடைபெறும் என்பதை விளக்கும் க்ரெஷம் விதி (Gresham’s law), ‘ஒரே மதிப்புள்ள இரு வகை பணம் புழக்கத்திலிருக்கும்போது, எதற்கு மதிப்பு அதிகமோ (அல்லது உண்மையான மதிப்பு உள்ளதோ) அது புழக்கத்திலிருந்து மறையும்’ என்று கூறுகிறது. உதாரணமாக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தின் சாவரீன் பவுண்ட் ஸ்டெர்லிங் தங்க நாணயங்களை இந்தியாவில் புழக்கத்தில் விட்டபோது, அதில் 22 காரட் தூய்மையுள்ள 8 கிராம் தங்கம் இருந்ததால், மக்கள் அதைச் சேமிப்பாக வைத்துக்கொண்டனர். அது புழக்கத்தில் குறைந்தது. அதனால்தான், ஷெர்ஷா சூரியால் உருவாக்கப்பட்டு, முகலாயர்களால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டிருந்த ரூபாயையே ஆங்கிலேயர்கள் முறைப்படுத்தி இந்தியாவின் பணம் ஆக்கினார்கள். அந்த இங்கிலாந்து நாணயத்திலிருந்த 22 காரட், 8 கிராம் தங்கத்தை இந்தியர்கள் சேமித்ததால், அதன் பெயரிலேயே இன்றுவரை அது பவுன் (பவுண்ட்), சவரன் (சாவரீன்) என்று இந்தியாவில் (மட்டும்) அழைக்கப்படுகிறது.

க்ரெஷம் விதி

அப்படி, தேசிய வங்கிகளின் நாணயங்கள் புழக்கத்தில் குறைய, அதைச் சரிசெய்ய மாநில வங்கி நோட்டுகளுக்கு வரி விதிக்கப்பட்டு, அவை ஒழிக்கப்பட்டன. ஆனால், தேசிய வங்கிகளின் நோட்டுகளும், அரசின் க்ரீன்பேக்ஸ் நோட்டுகளும் பணவீக்கத்தால் மதிப்பு குறைந்துகொண்டே வந்தன. அதனால், ஸ்பீஷி என்னும் டாலர் நாணயங்களாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியது. அமெரிக்க அரசின் காகித டாலர்களை நம்பாத அமெரிக்க மக்கள், உலோக நாணயங்களாக இருந்த டாலர்களை மட்டும் நம்பியது எப்படி? உண்மை என்னவெனில், அவர்கள் அமெரிக்க அரசை நம்பவில்லை, அந்த நாணயங்களில் இருந்த தங்கம் அல்லது வெள்ளியின் மதிப்பைத்தான் நம்பினார்கள்.

அது மட்டுமல்ல, அந்த நாணயங்களும் அமெரிக்க அரசின் நாணயங்கள் என்று சொல்வதே முழு உண்மையல்ல. ஏனென்றால், அமெரிக்க மக்களில் யார் வேண்டுமானாலும் வெள்ளியை எடுத்துச் சென்று, அரசின் நாணயச் சாலையில் கொடுத்து, இலவசமாக அமெரிக்க டாலர் நாணயங்களாக உருவாக்கிக்கொள்ளலாம் என்பதுதான் அங்கு தொடக்கத்திலிருந்தே இருந்த நடைமுறை. அதாவது, அரசே அச்சிட்டாலும் டாலருக்கு மதிப்பில்லை, அரசு உருவாக்கவில்லை என்றாலும் டாலர் நாணயங்களுக்கு அவற்றிலிருந்த வெள்ளியால் மதிப்பிருந்தது என்பதன் பொருள், அமெரிக்க டாலர் என்பதற்கு மதிப்பில்லை, வெறும் தங்கத்துக்கும், வெள்ளிக்கும்தான் மதிப்பு என்பதுதான்! 1873இல் இயற்றப்பட்ட நாணயச்சட்டம்தான் (Coinage Act of 1873) யார் வேண்டுமானாலும் தங்கள் வெள்ளியை அமெரிக்க டாலராக உருவாக்கிக்கொள்ளலாம் என்பதையே முடிவுக்குக் கொண்டு வந்தது. 1878இல்தான் (Bland-Allison Act-க்குப்பின்) அரசே வெள்ளியை வாங்கி டாலர் நாணயமாக வெளியிடத் தொடங்கியது.

1873இன் நாணயச் சட்டம்

(முந்தைய பகுதியில் குறிப்பிட்ட) 1873இன் பதற்றமும் ஏற்பட்ட பின்னர், மக்களுக்கு காகித டாலரின்மீதான நம்பிக்கை இன்னும் குறைந்து, டாலர் நாணயங்களாக மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதைத் தொடர்ந்து 1875இல் காகித டாலர்களை நாணயங்களாக மாற்றித்தரும் சட்டம் (Specie Payment Resumption Act) இயற்றப்பட்டது. அச்சட்டம் 1879 ஜனவரி 1க்குப்பின் நாணயங்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியது.

காகிதப் பணத்தில் கடன் கொடுத்திருந்தவர்களுக்கு வெள்ளியாகத் திரும்பக் கிடைப்பது லாபம் என்பதால் அவர்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்தனர். ஆனால், இப்போது காகித டாலரை ஆதரிப்பவர்கள் முன்பைவிட அதிகமாக ஆகியிருந்தனர். விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட பலரும் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும் என்பதால் காகித டாலரின் ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். அதனால், க்ரீன்பேக்ஸ் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை 1878இல் நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்ட க்ரீன்பேக்ஸ் நோட்டுகளையும் மீண்டும் புழக்கத்தில் விடவேண்டும் என்று 1878 மே 31இல் சட்டம் இயற்றப்பட்டது.

அதாவது, அமெரிக்க அரசின் நிலையான காகித டாலர் என்ற நிலைப்பாடு முதன்முதலில் 1878இல்தான் ஏற்பட்டது என்பது மட்டுமல்ல, உலோக டாலர்களையும்கூட அமெரிக்க அரசே உலோகம் வாங்கி உருவாக்குவதும் அப்போதுதான் தொடங்கியது. ஆனால், அவற்றுடனேயே ஆயிரக்கணக்கான தேசிய வங்கிகளின் டாலர் நோட்டுகள் புழக்கத்திலிருப்பதும் அனுமதிக்கப்பட்டது என்பதால், அவையும் அமெரிக்கா முழுமைக்குமான ஒரே பணமாகவோ, உலகம் மதித்து ஏற்கிற பணமாகவோ அப்போதும் – அதாவது 1878இல்கூட – மாறவில்லை!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *