எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 2" கட்டுரை தொடர் | கொலம்பஸின் இந்தியத் தேடல் | கொலம்பஸின் பயணம் - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 2:- வணிகத்துக்கு வழிதேடி – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 2:-

வணிகத்துக்கு வழிதேடி

– அறிவுக்கடல்

தமிழ்த்திரைப்பட நகைச்சுவை ஒன்றில், அடுத்த தமிழ்நாட்டு முதல்வர் முருசேன், அடுத்த இந்தியப் பிரதமர் முருகேசன் என்று கூவிவிட்டு, அடுத்த அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் என்று கூவியதையும், ‘கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா’ என்று அந்தப் புகழ்ச்சிக்கு உரியவர் புளகாங்கிதம் அடைந்ததையும் பார்த்திருக்கலாம். அதாவது, எல்லவாற்கும் மேலான, உயர்ந்த நிலை அமெரிக்காவின் அதிபராக இருப்பது என்ற தோற்றம் இருப்பதைத்தான் இது காட்டுகிறது. ட்ரம்ப்கூடத் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டு, இரான் இப்போதே சரணடைய வேண்டும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மொத்தத்தையும் தந்துவிட வேண்டும் என்றெல்லாம் ‘யாரங்கே’ என்று அழைக்கும் மன்னரைப்போல கூவிக்கொண்டிருக்கிறார். ட்ரம்ப்பின் கூவல்கள் அப்படிச் சற்று மனநிலை பிறழ்ந்தவரின் உளறலைப் போல இருந்தாலும், பிற நாடுகளை அதிகாரம் செய்யும் நிலையில்தான் அமெரிக்கா இருக்கிறது என்பது, ட்ரம்ப்பிடம் இந்தியப் பிரதமர் காட்டும் பணிவிலேயே தெரியும்!

பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட இந்தியாவையும், இரானையும் அதிகாரம் செய்வது என்றால் அமெரிக்கர்கள் அதைவிட அதிக வரலாறு கொண்டவர்களாக இருப்பார்களோ? வரலாறெல்லாம் கிடக்கட்டும், முதலில் அவர்கள் அமெரிக்கர்களே அல்ல! கரையான் புற்றை பாம்பு ஆக்கிரமித்துக்கொள்ளும் என்பதைப்போல, வட அமெரிக்கக் கண்டத்திலிருந்த பழங்குடியினரை கிட்டத்தட்ட அழித்தொழித்து அந்த மண்ணைக் கைப்பற்றிக்கொண்ட ஐரோப்பியர்கள்தான் இன்று தங்களை அமெரிக்கர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். அதனால்தான், குடியேறிகள் வெளியேற வேண்டும் என்று ட்ரம்ப் பேசியவுடன், உண்மையான அமெரிக்கர்களான செவ்விந்தியர்கள் ட்ரம்ப்பைப் பார்த்து ‘சரியான முடிவு, நீங்கள் எப்போது வெளியேறப் போகிறீர்கள்?’ என்று கேட்பதான மீம்கள் உலகெங்கும் பரவின.

Samoset - Wikipedia
Native American and American Colonist Relations

சரி, ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்குப் போனது ஏன்? ‘அந்த நல்ல காரியத்தைச் செஞ்சது நீதானா?’ என்றொரு நகைச்சுவை வருமே… அப்படி அந்த ‘நல்ல காரியம்’ நடக்கக் காரணமே இந்தியாதான்! என்னது, இந்தியாவா? ஆம், இந்தியாவைக் கண்டுபிடிக்கிறேன் என்றுதான் கப்பலில் கிளம்பிப் போய், அமெரிக்காவில் இறங்கினார் கொலம்பஸ். இறங்கியதோடு நிற்கவில்லை, அதுதான் இந்தியா என்று சொன்னதுடன், அங்கு கண்ணில் பட்டவர்களையும் இந்தியர்கள் என்று அழைத்ததால்தான் இன்றுவரை அமெரிக்கத் தொல்குடியினர் ‘செவ்விந்தியர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

கொலம்பஸ் போவதற்கு முன்பே அங்கு மனிதர்கள் இருந்தார்கள் என்றால் எப்படி, எப்போது வந்தார்கள்? சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்கக் கண்டத்திற்கு சைபீரியாவிலிருந்து, கடைசி பனி ஊழிக் காலத்தில்(லாஸ்ட் கிளேஷியல் மேக்சிமம்) உறைந்திருந்த கடல்கள், கடற்கரையோரங்கள் வழியாக வந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. சைபீரியாவிலிருந்து வந்தவர்கள் என்றால், அமெரிக்காவிலிருந்தவர்கள் ரஷ்யர்கள் என்றல்லவா பொருளாகிறது? ரஷ்யா என்றெல்லாம் நாடு உருவாவதற்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்தது என்பதால் அந்தக் குழப்பமெல்லாம் இப்போது தேவையில்லை. ஆனால், அமெரிக்காவிற்கு முதலில் வந்தது கொலம்பஸ் அல்ல! ஆம், கொலம்பசுக்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்காண்டிநேவியப் பகுதியைச் சேர்ந்த, வைகிங் என்றழைக்கப்பட்டவர்கள் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அமெரிக்கா உட்பட பயணித்திருக்கிறார்கள். கப்பல்கள் இன்றி நீண்ட படகுகளில், சிறிய அளவில் பயணித்ததால் அங்கு பெரிய குடியிருப்புகளை அவர்களால் உருவாக்க முடியவில்லை.

எல்லாம் சரி, கொலம்பஸ் ஏன் இந்தியாவைத் தேட வேண்டும்? இந்தியாவிற்கு வழியே தெரியவில்லை என்றால் இந்தியாவைப் பற்றி எப்படித் தெரிந்தது? இந்தியாவைக் கண்டுபிடிக்க என்றால், வால்டர் ராலீ சொன்ன எல் டொரோடா போல கற்பனைக் கதைகள், புராணங்களில் கேட்டு இந்தியாவைத் தேடியதாக அர்த்தமில்லை. இந்தியாவிலிருந்து மணமூட்டிகளை ஐரோப்பியர்கள் இறக்குமதி செய்துகொண்டிருந்த ‘ஸ்பைஸ் ரூட்’ என்ற பாதையை ஒட்டோமான் பேரரசு முடக்கியதால், இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

Dakshinapatha - Wikipedia

‘என்ன… அமெரிக்க டாலர் வருவதற்கு முன்பே ஏற்றுமதி இறக்குமதியெல்லாம் நடந்ததா?’ என்று வடிவேல் பாணியில் கேட்கக்கூடாது. அமெரிக்க மண்ணை மட்டுமல்ல, உலக வணிகம் வரை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிற அனைத்துமே, ஏற்கெனவே இருந்ததைப் பிடித்துக்கொண்ட நடவடிக்கைதான். பண்டைய எகிப்து, ரோமானியப் பேரரசு காலத்திலேயே இந்தியாவுடன் வணிக உறவுகள் இருந்தன. உண்மையில் மனிதனின் முதல் தொழில் வணிகம்தான். பீட்டர் வாட்சன் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் லாங் டிஸ்டன்ஸ் ட்ரேட்’ என்ற நூல், ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வணிகம் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறது. விவசாயம் தொடங்கி 15 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, 3.15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாக மாறிய நிலையில், தங்கள் பகுதியில் கிடைத்தவற்றை மற்றொரு பகுதியிலுள்ள மனிதக் குழுவிடம், அங்குக் கிடைப்பவற்றுக் பரிமாற்றிக் கொண்டதே வணிகத்தின் தொடக்கம் மட்டுமல்ல, அதுவே எண்ணிக்கைக்கு, கணிதத்துக்கு, இவற்றுக்குப் பின்னர் மொழிக்கும் வழிவகுத்தது.

அப்படியான வணிகத்தைத்தான் செங்கடல் வழியாக இந்தியாவுடன் ஐரோப்பியர்கள் செய்து கொண்டிருந்தனர். 1453இல் கான்ஸ்டாண்ட்டிநோப்பிளை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசு அவர்களது கட்டுப்பாட்டிற்குள் சென்றது. சிலுவைப் போர்களில் புனித மண்ணின் (ஜெருசலேம்) மீதான உரிமைக்காக கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் போரிட்டிருந்த பின்னணியில் கிறித்தவ வணிகர்களை ஒட்டோமான் துருக்கியர்கள் அனுமதிக்க மறுக்க, மிளகு, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் என்று இந்தியாவிலிருந்து வாங்கிக்கொண்டிருந்த வெனிஸ் வணிகர்களின் வணிகம் தடைப்பட்டுப்போனது.

ஏற்கெனவே ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலிருந்த பாதையைத்தான் ஒட்டோமான் பேரரசு முடக்கியிருந்ததால், புதிய வழியைக் கண்டுபிடிக்கும் தேவை ஸ்பெயினுக்கு இருந்தது. அதனால், இண்டீஸ் (இந்தியத் தீவுகள் – அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தார்கள்!) பகுதியைக் கண்டுபிடிக்கிற பொறுப்பைக் கொலம்பசுக்குக் கொடுத்தது ஸ்பெயின். கொலம்பஸ் கண்டுபிடிக்கிற நிலப்பரப்பு அனைத்துக்கும் அவரே ஆளுனர், அங்கு செய்யப்படும் வணிகம் அனைத்திலிருந்தும் 10 சதவீத பங்கு, கொலம்பசுக்குப்பின் அவரது வாரிசுகளுக்கும் இவை தரப்படும் என்று ஏராளமானவற்றை அளிப்பதாக ஸ்பெயினின் அரசர் உறுதியளித்தார். 1492இல் சாண்ட்டாஃபி-யில் செய்துகொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் இவ்வளவு பெரிய பலன்களை அளிக்க ஒப்புக்கொண்டதால், சாண்ட்டாஃபி சரணாகதிகள் என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

Capitulation (treaty) - Wikipedia
சாண்டா ஃபே உடன்படிக்கை

ஸ்பெயின் அரசு அப்படி சரணாகதி அடைந்த நிலையில் புறப்பட்ட கொலம்பஸ், ஆஃப்ரிக்காவைச் சுற்றிக்கொண்டு கிழக்கு நோக்கிச் செல்வதைவிட, உலகம் உருண்டை என்பதால், ‘தலைகீழாகத்தான் குதிப்பான் இந்தக் கோட்டைசாமி’ கதையாக, மேற்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைவது எளிது என்று பயணித்து, சென்றடைந்த இடம்தான் அமெரிக்கா. ஒப்பந்தத்தில் எங்குமே இந்தியா என்று குறிப்பிடாததால், கண்டுபிடித்த அனைத்திலும் சொன்னபடி பங்கு வேண்டும் என்று கொலம்பஸ் கேட்டது தனிக்கதை.

அமெரிக்காவில் முதல் ஐரோப்பியக் குடியேற்றத்தை 1565இல் ஸ்பெயின் தற்போதைய ஃப்ளோரிடா பகுதியில் அமைத்தது. அமெரிக்கக் கண்டத்தில் ஸ்பெயின் நிரந்தரக் குடியேற்றங்களை நிர்மாணித்துவிட்டதுடன், ஸ்பெயினுடன் இணைந்து, போர்ச்சுகல்லும் ஆசியா, தென்அமெரிக்கா, ஆஃப்ரிக்காவிலும், ஃப்ரான்ஸ் அமெரிக்காவிலும் குடியேற்றங்களை உருவாக்க முயன்றுகொண்டிருந்தன. எதிரியான ஸ்பெயினின் துறைமுகங்களை ஆங்கிலேயர்கள் கொள்ளையிட அனுமதித்திருந்த அரசி எலிசபெத், இங்கிலாந்தும் கடல்கடந்த பேரரசை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனுமதியளித்ததையடுத்தே அமெரிக்கா தொடங்கி, உலகம் முழுவதுமான ஆங்கிலேயக் குடியேற்றங்களும், ஆக்கிரமிப்புகளும் உருவாயின. தற்போதைய அமெரிக்காவினை உருவாக்கியது இங்கிலாந்து அமைத்த குடியேற்றங்கள்தான் என்றாலும், இங்கிலாந்து அமைத்த முதல் குடியேற்றமே காணாமல் போனது வேடிக்கையான சோகம்.

இங்கிலாந்தின் தொடக்ககாலக் குடியேற்றங்களில் ஒன்று ரோயநோக் தீவில் ஏற்படுத்தப்பட்டது. 1585இல் இங்கு குடியேற்றம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அமெரிக்கப் பூர்வகுடிகளின் கடும் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது. 1587இல் ஜான் ஒய்ட் என்பவர் இங்கு ஒரு குடியிருப்பை வெற்றிகரமாக அமைத்து, அதன் ஆளுநராகவும் ஆனார். 1587 ஆகஸ்ட் 18 அன்று அவருக்கு ஒரு பேரக்குழந்தை பிறந்தது. அந்நிய மண்ணில் பிறந்த முதல் ஆங்கிலேயக் குழந்தை என்று இதுவே பதிவு செய்யப்பட்டுள்ளது. வர்ஜினியா டேர் என்ற அக்குழந்தையின் பெயராலேயே, தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள இப்பகுதி, டேர் கவுண்ட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. தேவையான பொருட்களைக் கொண்டுவருவதற்காக இங்கிலாந்துக்குச் சென்ற ஒய்ட், ஸ்பெயினுடனான இங்கிலாந்தின் போர் காரணமாக உடனடியாகத் திரும்ப முடியவில்லை. 1590 ஆகஸ்ட் 18 அன்று, தன் பேத்தியின் மூன்றாம் பிறந்த தினத்தன்று ரோயனோக்கில் தரையிறங்கியபோது, அங்கு யாருமே இல்லை. பழங்குடியினருடன் சண்டை நடந்த அடையாளமோ, உடல்களோ இல்லை. குடியிருப்புகளும் அகற்றப்பட்டிருந்த முறையானது, அவர்களே அங்கிருந்து வெளியேறியதுபோன்ற தோற்றத்தைத் தந்தது. இன்றுவரை அந்தக் குடியேற்றத்திலிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில், 2007க்குப்பின் டிஎன்ஏ சோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முயற்சித்து என்று இன்றும் தேடிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா! அப்படித் தொல்குடியினரிடம் தோற்ற, சொந்த மக்களையே கண்டுபிடிக்க முடியாத அமெரிக்கா எப்படி இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கிறது? அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *