வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 20:-
சொந்த நாட்டின் நெருக்கடியை தீர்க்க முடியாத அமெரிக்க அரசு
– அறிவுக்கடல்
1878இல் ஒரு வழியாக அமெரிக்க அரசே உலோக நாணயம் வெளியிடத் தொடங்கிவிட்டது. அரசின் காகித டாலர் (க்ரீன்பேக்ஸ்) பணமும் தொடர்ந்து புழக்கத்திலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால், அமெரிக்க டாலர் என்பது நிலையான இடத்தை எட்டியிருக்குமே? அதுதான் இல்லை. இந்திய ரூபாய் என்றால் ரிசர்வ் வங்கி மட்டும்தான் வெளியிடும், அது குறிப்பிட்ட வடிவத்தில்தான் இருக்கும் என்பதைப் போன்ற ஒற்றை நிலையையே அமெரிக்க டாலர் அப்போதும் அடையவில்லை. ஆயிரக்கணக்கான தேசிய வங்கிகள் ஆளாளுக்கு வெளியிட்ட டாலர் நோட்டுகளும் புழக்கத்திலிருந்தது ஒருபுறம் என்றால், அந்த வங்கிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, முறைப்படுத்தும் ஏற்பாடு இல்லை என்பது மறுபுறம்.
இருப்புப்பாதை போன்ற புதிய துறைகளில் ஏராளமான லாபம் வருகிறது என்று மக்களிடமிருந்து நிதிதிரட்டி, அளவுக்குமீறி அந்தத் தொழிலைச் செய்வது அமெரிக்கா உருவானதிலிருந்தே காணப்படுகிற நடைமுறை. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பலவீனம் மிகை உற்பத்தி என்று மார்க்ஸ் குறிப்பிடுவதை அமெரிக்க வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பார்க்க முடியும். இதனால் மீண்டும் மீண்டும் நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடியும். அந்த எல்லா நெருக்கடிகளிலும் நிலையான பணமும், உறுதியான வங்கித்துறையும் இல்லாதது முக்கியப் பங்காற்றியிருப்பதையும் புரிந்து கொள்ளலாம்.
அப்படித் திரும்பத் திரும்ப நெருக்கடிகளைப் பார்த்திருந்த நிலையில் 1890களில் அமெரிக்காவுக்கு வெளியில் ஏற்பட்ட சில நெருக்களால் அச்சமுற்று, அமெரிக்க மக்கள் காகிதப் பணத்தைத் தங்கமாக மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். உலோக நாணயங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டதுடன், காகித டாலரை ஏற்க மறுப்பதும் தொடங்கியது. அதாவது அமெரிக்க அரசே வெளியிட்ட டாலரும் செல்லாமல் போகத் தொடங்கியது. இதற்கிடையில் சில இருப்புப்பாதை நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த செய்தியும், இன்னும் சில நெருக்கடிகளும் வெளிப்பட, வங்கிகளிலிருந்த தங்கள் பணத்தை எடுக்க மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இது 1893இன் நெருக்கடியாக மாறியது. இந்த நெருக்கடியில் மட்டும் மக்களுக்குப் பணத்தைத் திருப்பித்தர முடியாமல் ஓடிப்போன (Bank run) வங்கிகளின் எண்ணிக்கை 575. அத்துடன் சுமார் 15 ஆயிரம் வணிக நிறுவனங்களும் திவாலாயின.
இப்படியான நம்பிக்கையின்மையைத் தவிர்க்க 1900 மார்ச் 14 அன்று கோல்ட் ஸ்டேண்டர்ட் (Gold Standard) சட்டம் நிறைவேற்றப்பட்டது. க்ரீன்பேக்ஸ் டாலர் நோட்டுகள் வந்தபின், நடைமுறையில் (de facto) தங்கத்தின் விலை அளவிற்கு காகித டாலரைத் தங்கமாக மாற்றிக்கொள்ள முடிந்தாலும், சட்டப்படி (de jure) தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் டாலரின் மதிப்பை நிர்ணயிக்கும் கோல்ட் ஸ்டேண்டர்ட் அப்போதுதான் அமெரிக்காவில் முதன்முறையாக ஏற்பட்டது. அதன்படி, ஒரு ட்ராய் அவுன்ஸ் (31.1 கிராம்) என்பது 20.67 டாலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. இது டாலரின் மீதான நம்பிக்கையை உயர்த்தியது.

ஆனாலும், 1907இல் ஏற்பட்ட மற்றொரு நெருக்கடி, பங்குச் சந்தையை அதன் உச்சத்திலிருந்து 50 சதவீதம் வீழ்ச்சியடையச் செய்தது. அக்காலத்தில், ட்ரஸ்ட் கம்பெனிகள் என்பவை மக்களிடமிருந்து நிதியைத் திரட்டி, பங்குச் சந்தை ஊக வணிகம் உட்பட பலவற்றிலும் முதலீடு செய்தன. பெரிய ட்ரஸ்ட் கம்பெனிகளுள் ஒன்றான நிக்கர் பாக்கர் ட்ரஸ்ட் என்பது, செம்புச் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊக வணிகத்தில் ஈடுபட்டு திவாலாக, அதனால் ஏற்பட்ட பதற்றம் அடுத்தடுத்து அத்தகையை கம்பெனிகளின் வீழ்ச்சியையும், வழக்கம்போல வங்கிகள் மூடப்படுவதையும் ஏற்படுத்தியது. இதனைத் தடுக்க 73 நகரங்களில் வங்கிகள் மக்களுக்கு பணம் தருவதையே நிறுத்தின.
வேடிக்கை என்னவென்றால், பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு தீர்க்கிற திறமையோ, வலுவோ அன்றைய அமெரிக்க அரசுக்கு இல்லை. 1873, 1907 நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதில், வங்கித்துறைத் தொழிலதிபரான ஜே.பி.மார்கன்தான் முக்கியப் பங்காற்றினார். முந்தைய நெருக்கடியில், மிகப்பெரிய அளவுக்குத்தன் சொந்த நிதியுடன், வங்கியாளர்களைக் கூட்டணியாக்கி, அவர்களிடமிருந்து 3.5 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை அமெரிக்க அரசுக்குக் கொடுத்து அரசைக் காப்பாற்றினார்.
1907இன் நெருக்கடியில் நியூயார்க் பங்குச் சந்தை மூடப்படும் நிலையைத் தடுக்க, சில நிமிடங்களில் 25 மில்லியன் டாலர்களைக் கொடுத்தார். அடுத்தடுத்து மூடப்படும் நிலையிலிருந்த ட்ரஸ்ட் கம்பெனிகளுக்கும் பிற வங்கியாளர்களிடமிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் காப்பாற்றினார். ஒரு கட்டத்தில் மேலும் நிதி தர மற்றவர்கள் தயாராக இல்லாதபோது, வங்கியாளர்கள், ட்ரஸ்ட் கம்பெனி நிர்வாகிகள் என்று மொத்தம் 120 பேரை அவரது அலுவலகத்தின் நூலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். அனைவரும் சேர்ந்துதான் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர்களை ஏற்கச் செய்து, தேவையான நிதியை அவர்கள் தர ஒப்புக்கொண்டபின் அதிகாலை 4.45 மணிக்குத்தான் திறந்து விட்டார். அப்படி அந்த நெருக்கடியின் போது அவர் திரட்டிக்கொடுத்த தொகை சுமார் 90 மில்லியன் டாலர்கள்.
இன்று உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் தலையிடுகிற அமெரிக்க அரசு, அன்று தன் சொந்த நாட்டில் நடந்த நெருக்கடிகளைக்கூடச் சமாளிக்க முடியாத நிலையில்தான் இருந்தது என்பதற்கு, இதைப் போன்ற பல உதாரணங்கள் உண்டு. சரியாகச் சொன்னால், தனியார் முதலாளிகள் தாங்களே கூட்டணி அமைத்து தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதாகத்தான் அங்கு நிலைமை இருந்தது.
உண்மையில், 1668இலேயே உருவாகிவிட்ட ஸ்வீடனின் ரிக்ஸ்பேங்க், 1694இல் உருவான இங்கிலாந்தின் பேங்க் ஆஃப் இங்கிலாந்து போன்ற மத்திய வங்கிகள் செய்கிற வேலையைத்தான் ஜே.பி.மார்கன் என்ற தனி முதலாளி செய்திருக்கிறார் என்பதை அமெரிக்கா அதன்பின்னர்தான் உணரத் தொடங்கியது.

ஆனால் மத்திய வங்கியின் தேவையை முதலாளிகள் முன்பே உணர்ந்திருந்தனர். 1907இன் நெருக்கடி ஏற்படுவதற்குப் பல மாதங்கள் முன்பே, குன் லோயப் அண்ட் கோ என்ற முதலீட்டு வங்கியின் தலைவர் ஜாகோப் ஷிஃப், மத்திய வங்கி இல்லையென்றால் ஒரு மிகப்பெரிய நிதித்துறை நெருக்கடியை நாடு சந்திக்கும் என்று கூறியிருந்தார். அவர் கூறியபடியே நெருக்கடி ஏற்பட்டு, முடிவுக்கும் வந்தபின், ஜே.பி.மார்கன் என்ற தனி முதலாளியின் செல்வாக்கைக் கண்டு பிற முதலாளிகளுக்கும், அரசுக்கும் அச்சம் ஏற்படத் தொடங்கியிருந்தது.
அப்படியான பின்னணியில் செனட்டிலிருந்து ஒரு குழுவினர் ஐரோப்பாவிற்குச் சென்று, இங்கிலாந்தின் மத்திய வங்கி மற்றும் 1876இல் தொடங்கப்பட்டிருந்த ஜெர்மெனியின் மத்திய வங்கியான ரீச்ஸ்பேங்க் ஆகியவை எப்படிப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் காக்கின்றன என்று ஆய்வு செய்து, ஒரு பரிந்துரையை அளித்தனர். அந்தப் பரிந்துரை அடிப்படையில் ஒரு மத்திய வங்கியை உருவாக்கும் முன்மொழிவு 1912இல் காங்கிரசில் வைக்கப்பட்டாலும் கண்டுகொள்ளப்படவில்லை. உண்மையில் பணம் என்பதை – அதாவது அமெரிக்காவின் டாலரை – அரசின் பொறுப்பாக ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க அரசுக்குத் தயக்கமிருந்தது.

1913லும் இந்த முன்மொழிவு காங்கிரசில் வைக்கப்பட்டு, முக்கியத்துவமளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டது. அவ்வாண்டில் உட்ரோ வில்சன் அதிபரானபின், இரு அவைகளின் தலைவர்கள், நாணய (கரன்சி) குழுக்கள் உள்ளிட்டவர்களை அவரே ஒருங்கிணைத்து, புதிய சட்ட முன்வடிவை உருவாக்கச் செய்தார். அதற்கும் எதிர்ப்புகள் எழ, அனைத்துத் தரப்பினருக்கும் தனித்தனியான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏற்கச் செய்தார். இறுதியாக 1913 டிசம்பர் 23இல் அது சட்டமாகி, இன்று உலகின் அனைத்து நாணய நடவடிக்கைகளிலும் தாக்கம் செலுத்துகிற அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் உருவானது. மத்திய வங்கி உருவானாலும், அது டாலர் நோட்டுகளை வெளியிட்டாலும், தேசிய வங்கிகளும் டாலர் நோட்டுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன என்பதால், ஒரே அமெரிக்க டாலர் நோட்டுகளாக அப்போதும் மாறவில்லை. விளக்கமாக அடுத்த பகுதியில் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

