வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 21:-
மத்திய வங்கி வந்தாலும் மாறாத குழப்பங்கள்
– அறிவுக்கடல்
இந்தத் தொடரின் தொடக்கத்திலிருந்தே, அமெரிக்காவின் பலவீனமான, மோசமான பக்கங்களைத்தான் குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், அமெரிக்க வரலாற்றின் அவலங்களை அம்பலப்படுத்துவது இத்தொடரின் நோக்கமல்ல. ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு, அமெரிக்காதான் உலகின் மிகப்பணக்கார நாடு, உலகமே அமெரிக்காவிற்குக் கட்டுப்பட்டது என்பனவற்றைப் போன்ற தோற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அப்படியான பின்னணியில்தான் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தால் பிற நாடுகளுக்கு இழப்புகள் ஏற்படுகின்றன என்பதைக்கூட ஏற்க முடியாத அளவுக்கு, டாலர் இல்லையென்றால் உலகமே இயங்காது என்ற கற்பிதம் நிலவுகிறது. அப்படியெல்லாம் கற்பனை செய்கிற அளவுக்கு அமெரிக்கா பெரிய ‘அப்பா டக்கரும்’ இல்லை, அமெரிக்க டாலர் ஆகச் சிறந்த நாணயமும் இல்லை என்பதை வெளிப்படுத்தி, உலகப் பொருளாதார அறிஞர்கள் நீண்டகாலமாகப் பேசி வருகிற ‘டாலர் ஆதிக்கத்தின் முடிவு’ விரைவாகி வருவதை விளக்குவதுதான் நோக்கம். அதற்காகத்தான் நாடு உருவாகி நூறாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முறையான நாணயக் கட்டமைப்பைக்கூட உருவாக்க முடியாத நாடு என்பதை விளக்க டாலரின் பரிதாபமான வரலாற்றை விரிவாகப் பார்க்க வேண்டியதாயிற்று.
ஒரு நாடு புதிதாக உருவாகும்போது, அதற்கான சட்ட திட்டங்கள், நாணயக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்க சற்றுத் தாமதம் ஆவதில் என்ன பெரிய பலவீனம் இருக்கிறது என்று தோன்றலாம். மனிதகுல வரலாற்றில் சக்கரம், நெருப்பு போன்ற புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கத்தான் நீண்ட காலம் ஆனதே தவிர, கண்டுபிடிக்கப்பட்டதை மற்றவர்கள் பயன்படுத்த அல்ல. உலகம் முழுவதும் ஏற்பட்டுவிட்ட வளர்ச்சிகளை ஏற்காத (அந்தமான்) செண்ட்டினல்கள் இன்றும் காட்டுமிராண்டிகளாகத்தானே இருக்கிறார்கள்? ஏற்றவர்கள்தான் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க முடிகிறது. அமெரிக்காவே கூட, இங்கிலாந்தின் மேக்னா கார்ட்டா, ரோமானியக் குடியரசின் சட்டத்தின் ஆட்சி, இங்கிலாந்தின் பாராளுமன்ற வடிவம், ஆங்கிலேய உரிமைச் சட்டம் உள்ளிட்டவை மட்டுமல்ல, அமெரிக்கக் கண்டத்துத் தொல்குடியினரின் இராக்கோ கூட்டமைப்பிலிருந்துகூட கூட்டரசு வடிவம் என்று ஏற்கெனவே இருந்தவற்றை ஏற்றுக்கொண்டுதான் தனது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 1783இல் விடுதலை ஒப்பந்தம் கையெழுத்தாகி, 4 ஆண்டுகளில், 1787இல் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்த அமெரிக்காவால், மத்திய வங்கியை 130 ஆண்டுகளுக்கு உருவாக்க முடியவில்லை என்பதுதான் கவனிக்கத்தக்கது.
நாடுகளின் அரசு வடிவங்கள் பண்டைய காலத்திலிருந்தே இருந்தன, அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பின்பற்றினார்கள், ஆனால் பணமும் வங்கியும் அப்படி அல்ல என்று தோன்றலாம். ஆனால், உலகின் முதல் மத்திய வங்கியாக ஏற்கப்படும் ஸ்வீடனின் ரிக்ஸ் வங்கி, அமெரிக்கா விடுதலை பெறுவதற்கு 115 ஆண்டுகளுக்கு முன்பே 1668இல் உருவாகிவிட்டது. அதுவும்கூட நாடு முழுமைக்கான மத்திய வங்கி என்ற அடிப்படையில்தான் முதல் மத்திய வங்கி என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில், மத்திய வங்கி என்ற முறை, 1401இலேயே பார்சிலோனா நகராட்சிக்கான வங்கியாக டவுலா டி கான்வி தொடங்கப்பட்டபோதே உருவாகிவிட்டது. அதாவது அமெரிக்க விடுதலைக்குச் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே மத்திய வங்கி உருவாகிவிட்டது!

இந்த வங்கிகள் எதற்காகத் தொடங்கப்பட்டன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். தங்களிடம் இருக்கிற பொருட்களைக் காட்டி, மற்றவர்களிடம் இருப்பதை ஏற்கத் தயாராக இருந்தால் பரிமாற்றம் முடிந்துவிடும் ‘ஊமைப் பண்டமாற்று’ என்பது மனிதன் பேசக் கற்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகம் தொடங்கிவிட்டதாக பீட்டர் வாட்சன் எழுதிய ‘ஐடியாஸ்’ என்ற நூல் கூறுகிறது. இருவரின் தேவையும், இருவரிடமும் இருக்கும் பொருட்களும் பொருந்தினால்தான் பண்டமாற்று சாத்தியம் என்ற நிலையிலும், பெரிய பொருளைச் சிறிய பொருளுக்கு பிரித்துப் பரிமாற்ற முடியாத நிலையிலும் (மாட்டுக்கு கோழியைப் பரிமாற்ற முடியாது!), மணிகள், சோழிகள் போன்ற பரிமாற்ற ஊடகங்கள் வந்தன. மதிப்பு மிக்க உலோகங்களான தங்கம் வெள்ளியின் வரவுக்குப்பின் அவை அனைவராலும் ஏற்கப்பட்டன. கி.மு.700களில் லிடியா என்ற நாடு முத்திரையுடன்கூடிய தங்க நாணயத்தைத் தொடங்கி வைத்தது. சீனாவில் கி.பி.7ஆம் நூற்றாண்டில் அதிக அளவிலான செப்பு நாணயங்களைச் சுமப்பதற்கு பதிலாக அவற்றைக்கொடுத்து பெற்ற ரசீது காகிதப் பணமாகப் புழங்கியது. அதன்பின் குப்ளாய் கான் ஆட்சியில் தங்கமாக மாற்றத்தக்கது அல்லாத உறுதிமொழி அடிப்படையிலான காகிதப்பணமே வந்தாலும், தோல்வியுற்றது. ஆனால், சீனாவிலிருந்து கற்று வந்த ஐரோப்பிய வணிகர்கள், தங்கத்தைக் கொடுத்து, சிறிய மதிப்புகளில் பல ரசீதுகளாகப் பெற்று (உதாரணமாக 100 கிராம் தங்கம் – 100 ரசீதுகள் 1 கிராம் வீதம்), யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்படிப் பயன்படுத்தியது சிறிய பரிமாற்றங்களுக்கும் அதைப் பயன்படுத்தச் செய்து, காகிதப் பணமாக உருப்பெற்றது. இதுதான் பணத்தின் சுருக்கமான வரலாறு. ஆனால், ரசீதுக்குரிய தங்கத்தை எல்லோரும் ஒரே நேரத்தில் கேட்பதில்லை என்பதால், கையிருப்பு தங்கத்தைவிட அதிகமான ரசீதுகளை அச்சிட்டு விநியோகித்தது, வங்கிகளின் மூடலுக்கு வழிவகுத்த நிலையில்தான் அவற்றை நெறிமுறைப்படுத்த மத்திய வங்கிகள் உருவாயின.

அப்படி ஏற்கெனவே உருவாகிவிட்ட நாணயம், காகிதப்பணம் போன்றவற்றை வெளியிடும் நடைமுறையையோ, மத்திய வங்கி என்ற நடைமுறையையோ அமெரிக்கா பின்பற்றவில்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. அரசு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றிற்கு முன்னுதாரணங்களைப் பின்பற்றிய அமெரிக்கா இதில் அதைச் செய்யவில்லை. பணத்தின் வரலாற்றில் காணப்படுகிறவையான பண்டமாற்று, அதன் பலவீனங்கள் தொடங்கி, வங்கிகள் திவால் வரை அனைத்தையும் இந்த 130 ஆண்டுகால வரலாற்றில் அமெரிக்காவும் சந்தித்திருப்பதைக் காண முடியும். அதாவது, ஏற்கெனவே உருவாகிவிட்ட வசதிகளைப் பயன்படுத்தத் தயாராக இல்லாத செண்ட்டினல்களைப் போலத்தான் அமெரிக்கா செயல்பட்டது. அதன் பொருளாதார நிர்வாகம் அப்படித்தான் இருந்தது!
எல்லாம் சரி, அதுதான் 1914இலேயே மத்திய வங்கியைத் தொடங்கி, எல்லாவற்றையும் சரி செய்துவிட்டார்களே என்று தோன்றலாம். மத்திய வங்கியைத் தொடங்கினார்கள் என்பது வரை மட்டும்தான் சரி. எல்லாவற்றையும் சரி செய்தார்கள் என்பது முழுமையாகச் சரி அல்ல. முதலில் அது இந்தியாவில் ரிசர்வ் வங்கி என்று ஒற்றை அமைப்பு இருப்பதைப்போல இல்லை. அமெரிக்காவை 12 மாவட்டங்களாகப் பிரித்து, மாவட்டத்திற்கொரு ஃபெடரல் ரிசர்வ் அமைக்கப்பட்டது. ஏனென்றால் அவ்வளவுதான் அங்கிருந்த ஒற்றுமை. தெற்கில் முடிவெடுத்தால் வடக்கு ஏற்காது என்கிற நிலை. இந்த 12 ஃபெடரல் ரிசர்வ்களிடையேகூட ஒற்றுமை இல்லை. ஆளுக்கொரு வட்டி விகிதம், ஒன்று பத்திரங்களை விற்றால், இன்னொன்று வாங்குவது என்று ஏராளமான குழப்பங்கள். இவற்றிற்கிடையே நிலவிய ஒருங்கிணைப்பு இன்மை என்பது பொருளாதாரப் பெருமந்தம் (Great Depression) காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.
அத்துடன் அமெரிக்காவிலிருந்த எல்லா வங்கிகளையும் ஃபெடரல் ரிசர்வ் கட்டுப்படுத்தவில்லை. வங்கிகள் விரும்பினால் உறுப்பினர் ஆகலாம், அவை ஃபெடரல் ரிசர்வின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும், அவற்றுக்கு உதவிகள் போன்றவை கிடைக்கும் என்பதுதான் நிலை. ஆயிரக்கணக்கான மாநில வங்கிகள் ஃபெடரல் ரிசர்வில் உறுப்பினராகச் சேரவில்லை. ஒழுங்குபடுத்தப்படாமல் அவ்வளவு வங்கிகளை வைத்துக்கொண்டு ஃபெடரல் ரிசர்வ் எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியும்? அதனால்தான், பொருளாதாரப் பெருந்தத்தின்போது, 1930-33 காலத்தில் மட்டும் மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். அந்த வங்கிகளின் மக்கள் வைத்திருந்து இழந்த பணம் (அக்காலத்திலேயே) சுமார் 7 பில்லியன் டாலர்கள். 1933 மார்ச் 6 திங்கள் அன்றிலிருந்து 4 நாட்களுக்கு அமெரிக்காவின் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டன . ஒரு நாட்டில் எல்லா வங்கிப் பரிமாற்றங்களும் 4 வேலை நாட்களுக்கு நின்று போவது எவ்வளவு மோசமான நிலை? வங்கிகளின் நிதிநிலை, ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தபின் திறக்கப்படும் என்று அந்த மூடல் அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 4 ஆயிரம் வங்கிகள் மீண்டும் திறக்கப்படவே இல்லை!

அது மட்டுமல்ல, ஒரே டாலர் நோட்டு என்பதைக்கூட ஃபெடரல் ரிசர்வ் தொடங்கப்பட்டு 32 ஆண்டுகளுக்கு உருவாக்க முடியவில்லை. ஒரு புறம் ஃபெடரல் ரிசர்வ் டாலர் நோட்டுகளை அச்சிட்டால், மறுபுறம் ஆயிரக்கணக்கான தேசிய வங்கிகளின் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்திலிருந்தன. அப்படிப் புழக்கத்திலிருந்த பிற வங்கி நோட்டுகள் மட்டும் அக்காலத்திலேயே 700இலிருந்து 750 மில்லியன் டாலர்கள் வரை இருந்தன!
அமெரிக்க அரசு நினைத்திருந்தால் அந்த நோட்டுகளை உடனடியாக ஃபெடரல் ரிசர்வ் நோட்டுகளுக்கு மாற்றிக்கொடுத்திருக்க முடியும். ஆனால், ஃபெடரல் ரிசர்வ் ‘கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கிற’ வேலையைச் செய்தது. அந்த நோட்டுகள் அரசின் பத்திரத்தைப் பிணையாக வைத்து அச்சிடப்பட்டிருந்ததால், அந்தப் பத்திரங்களின் அளவைக் குறைத்து, அதன்மூலம் அந்த நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்க முயற்சித்தது. தொடக்கத்தில் சற்றுக் குறைந்தாலும், பொருளாதாரப் பெருமந்தம் தொடங்கியவுடன், 1932இல் பத்திரங்கள் அதிகரிக்கப்பட, பிற வங்கிகளின் டாலர் நோட்டுகளும் அதிகரித்தன. அதாவது அரசு (ஃபெடரல் ரிசர்வ்) அச்சிடுவதுதான் டாலர் நோட்டு என்ற ஒருமை நிலையை அடைவதிலிருந்து பின்னோக்கித்தான் போனது!
இப்படிப் பட்டியலாக நீள்கிற அளவுக்கு குழப்பங்களைக் கொண்டிருந்த டாலருக்கு, ‘திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதாம் வாழ்வு’ என்று அளித்து உலகம் முழுவதும் கொண்டு சென்றவை இரண்டு உலகப்போர்கள்தான். இன்னுமிருக்கிற அவலங்கள், அவற்றோடே உலக நாணயமான டாலர் ஆகியவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

