எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 22" கட்டுரை தொடர் | வளர்ச்சி உண்டு, செல்வாக்கு இல்லை | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 22:- வளர்ச்சி உண்டு, செல்வாக்கு இல்லை – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 22:-

வளர்ச்சி உண்டு, செல்வாக்கு இல்லை

– அறிவுக்கடல்

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம்’ என்ற பழமொழியைப் போல, உள்ளூரில் உருப்படியில்லாமல் இருந்த டாலர்தான், இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கிறது என்பதை விரிவாகப் பார்த்தோம். ஆனால், நாட்டின் நாணயத்தை (பணத்தை) சிறப்பாக நிர்வகிக்கவில்லையே தவிர, இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருந்தது.

தொழில்துறையில் ‘முன்னோடி சாதகம்’ (First-mover advantage) என்று குறிப்பிடுவதைப் போலவே, தாமதமாக வருவபவர்களுக்கும் சில சாதகங்கள் (Backward advantage) அமைவதுண்டு. உதாரணமாக, ஒரு புதிய துறை உருவாகி, அதன் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தபின் அத்துறைக்கு வருகிற நிறுவனம், முதிர்ந்த தொழில்நுட்பங்களை நேரடியாகக் கைக்கொள்ள முடியும். அந்தத் துறையில் முன்னதாக நுழைந்து, அந்தத் தொழில்நுட்பங்களின் தொடக்க கால எந்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிற நிறுவனங்கள் மீண்டும் புதிய எந்திரங்களில் முதலீடு செய்ய வேண்டியிருக்கிற நிலையில், தாமதமாக வந்த நிறுவனங்கள் நிரூபிக்கப்பட்ட எந்திரங்களுக்கு மட்டும் செலவு செய்வதால், குறைந்த செலவில் அதிகப் பலனையும் வளர்ச்சியையும் எட்ட முடியும். அப்படியான வசதிகள் அமெரிக்காவுக்குக் கிடைத்தன.

(முதல்) தொழிற்புரட்சியின் காலம் 1760இலிருந்து 1840 என்றால் அமெரிக்கா விடுதலை பெற்றதே 1783இல்! காலம் காலமாகப் பெரிய பொருளாதாரங்களாக இருந்த இங்கிலாந்து போன்ற நாடுகள், விவசாயம் சார்ந்த தொழில்களான நெசவு – விசைத்தறி, ஏற்றுமதிக்குக் கப்பல் போன்ற தொழில்களில் வேரூன்றியிருந்த நிலையிலிருந்து, புதிய தொழில்களுக்கு உடனடியாக மாற முடியாத நிலையில், அமெரிக்கா நேரடியாக எஃகு, ரயில் பாதைகள், வாகனங்கள், மின்சாரம் போன்றவற்றில் நுழைந்தது என்பது தாமதமாக வந்தவர்களுக்கான சாதகம் போன்று அமைந்தது. புதிதாகத் தோன்றி, மிகப்பெரிய அளவில் பங்களித்த அந்தத் துறைகள் அமெரிக்காவின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன.

அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி

அது மட்டுமின்றி, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான நிலம் அமெரிக்காவுக்குக் கிடைத்தது (தொல்குடியினரிடமிருந்து பிடுங்கிக்கொள்ளப்பட்டது!). இந்த நிலம் என்பது மிகப்பெரிய அளவிலான விவசாயத்துக்கு இடமளித்து, பருத்தி போன்ற மூலப்பொருட்களை ஏராளமாக ஏற்றுமதி செய்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் இந்தப் பரந்த நிலப்பரப்பில் சரக்குகளைக் கொண்டு செல்லும் தேவையை ஏற்படுத்தி, அதற்காக இருப்புப் பாதைகள், கால்வாய், கப்பல்கள், சரக்கு ரயில்கள் உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் எஃகு போன்ற பிற தொழில்களையும் வளரச் செய்தன. கிட்டத்தட்ட ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்ற பலன்கள் இந்தப் பரந்த நிலத்தால் கிடைத்தன.

நிலம் இருந்தாலும் அதைத் தொழில்துறைக்கு மாற்றுவது பழைய நாடுகளுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஏனென்றால் நிலத்தின்மீதான உடைமை மிகவும் முக்கியமானதாக இருந்த நிலப்பிரபுத்துவக் கட்டத்திலிருந்து, முதலாளித்துவ தொழில்மய கட்டத்திற்கு மாறுவதை நிலப்பிரபுத்துவ வர்க்கத்தால் அவ்வளவு எளிதில் ஏற்க முடியாது. அமெரிக்காவைப் பொருத்தவரை, நிலம் ஏராளமாக இருந்ததே தவிர அது மரபு வழியாக உடைமையாக இருந்தது அல்ல என்பது மிக முக்கியமான சாதகம். தென்பகுதி மாநிலங்கள் விவசாய உற்பத்தியை நம்பி இருந்ததால் அடிமை முறை தொடர வேண்டும் என்று உறுதியாக நின்றது உள்நாட்டுப் போர் வரை சென்றாலும், அந்த வெறும் 4 ஆண்டுகாலப் போருடன் தீர்வு கிடைக்க, நிலத்தின் மீதான மரபு வழியான பிடிப்பு என்பது இல்லாத நிலையே உதவியது.

அதனால்தான், ‘நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்தி சக்திகளுக்கு இன்மேலும் ஒவ்வாதவை ஆயின. அவை கால் விலங்குகள் ஆயின, அந்த விலங்குகளை உடைதெறிய வேண்டியிருந்தது, உடைத்தெறியப்பட்டன’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறிப்பிடுகிற மாற்றத்தை அடைய, ஏற்கெனவே வளர்ந்த நாடுகளாக இருந்தவற்றுக்கு பல நூறு ஆண்டுகள் ஆன நிலையில், அமெரிக்காவால் சில ஆண்டுகளில் அதை அடைய முடிந்தது. இன்னும்கூடச் சரியாகப் பார்த்தால் அமெரிக்காவில் நிலவியது நிலப்பிரபுத்துவம் என்று கூறுவதே தவறுதான். அது உலகச் சந்தையோடு பிணைந்த தோட்ட அடிமை முதலாளித்துவம். பருத்தி மான்செஸ்டர் தொழிற்சாலைகளுக்குச் சென்றது. பருத்தி இல்லையென்றால் நவீனத் தொழில் இல்லை. எனவே 1861–65 உள்நாட்டுப் போர் ‘நிலப்பிரபுத்துவத்தை உடைத்தல்’ அல்ல. மாறாக, சுதந்திரக் கூலி உழைப்பு முறைக்கும் அடிமைத் தோட்ட முறைக்கும் இடையிலான போர். இரண்டும் முதலாளித்துவ உலகின் உள்ளே இருந்தன. அப்படி நேரடியாக முதலாளித்துவக் கட்டமைப்பிலுள்ள நாடாக உருவானது என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

உள்நாட்டுப்போர் அடிமை முறையின் முடிவுக்கு வழிகோலி, மூலதனத்தின் நேரடி இயக்கத்திற்கு வழிவிட்டது இரண்டாவது தொழிற்புரட்சி (1870-1914) காலத்தில் அமெரிக்கா இன்னும் வேகமான வளர்ச்சியை அடைய உதவியது. கண்டம் தழுவிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் வளர்ந்த எஃகுத் தொழில் ரயில் பாதைகள், பாலங்கள், வானுயர்ந்த கட்டிடங்களுக்கு வழி கோலியது. விளக்கெரிப்பதற்காக மிகப்பெரிய அளிவில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய், உள் எரி என்ஜினின் வருகைக்குப்பின் வாகன எரிபொருளாக மாறத் தொடங்கியது. அறுவடை எந்திரம் உட்பட விவசாயத்துக்குப் புதிய கருவிகள் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவை உணவு ஏற்றுமதியாளராகவும் ஆக்கின. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு நகரங்களை மாற்றியமைத்தது. தொலைபேசி தொழில்துறையின் வளர்ச்சியை மேலும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, வாகனங்களில் ஏற்பட்டுக்கொண்டிருந்த முன்னேற்றங்கள் சாலைப் போக்குவரத்தை அதிகப்படுத்தி, சாலைக் கட்டமைப்புகளையும் வளர்த்தன.

உலகிற்கே ஏற்றுமதியாளராக அமெரிக்கா மாறிவிட்டதைக் காட்டும் கருத்துப்படம்

மொத்தத்தில் அன்றைய வளர்ந்த நாடுகளைவிட மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது அமெரிக்கா. உலகின் தொழில்துறை உற்பத்தியில் 1860இல் 7 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு 1900இல் 24 சதவீதமாகவும், 1913இல் 32 சதவீதமாகவும் வளர்ந்தது என்பதிலிருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்.

இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா வளர்ந்திருந்தது என்றாலும், செல்வாக்குள்ள நாடாக மாறவில்லை. நெப்போலியப் போர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவின் அதிகாரச் சமநிலையை முடிவு செய்ய 1814-15இல் நடத்தப்பட்ட வியன்னா மாநாட்டிற்குப்பின் இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரியா, ப்ரஷ்யா, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள்தான் செல்வாக்கு, நிதிநிலை ஆகியவற்றின்படி ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக இருந்தன. 1861இல் இத்தாலி ஒருங்கிணைப்பும், 1871இல் ஜெர்மெனி ஒருங்கிணைப்பும் நடந்த பின்னணியில் ப்ரஷ்யாவின் இடத்திற்கு ஜெர்மெனி வர, இத்தாலியும் பெரும் சக்தியாக வளரத் தொடங்கியிருந்தது.

ஆனால், அமெரிக்கா அப்படியான நிலைக்கு வர முயற்சிக்கக்கூட இல்லை. அதாவது பொருளாதார வளர்ச்சியை எட்டியிருந்தாலும், செல்வாக்கு பெற்ற நாடாகவோ, ராணுவ வலிமை கொண்ட நாடாகவோ அமெரிக்கா மாறவில்லை. அமெரிக்காவின் தனிமைப் படுத்திக்கொள்ளும் கொள்கை என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிற கொள்கையைத்தான் அமெரிக்கா கடைப்பிடித்தது. ‘நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்ல’ என்ற நகைச்சுவையைப்போல, வியாபாரத்தை – அதாவது உற்பத்தியையும், ஏற்றுமதியையும் – மட்டும் கவனிக்கிற நாடாகத்தான் அமெரிக்கா இருந்தது. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில்கூட, உலகின் பெரிய ராணுவங்களில் 15ஆவது இடத்திற்கும் கீழேதான் அமெரிக்கா இருந்தது. அப்படியான அமெரிக்காவிற்கு உலகப்போர்கள் வழங்கிய வாய்ப்புகள் என்ன என்பதை அடுத்த பகுதிகளில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *