எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 23" கட்டுரை தொடர் | எங்களிடமும் கடற்படை இருக்கிறது | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 23:- எங்களிடமும் கடற்படை இருக்கிறது – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 23:-

எங்களிடமும் கடற்படை இருக்கிறது

– அறிவுக்கடல்

ஊரில் முக்கியமானவராக இருக்க செல்வந்தராகவோ அல்லது மற்றவர்களிடம் மோதி வெல்லும் வலிமை படைத்தவர்களாகவோ இருக்க வேண்டும். உலகிற்கும் அதுதான் நியதி. பொருளாதார பலமோ, படை பலமோ கொண்ட நாடுகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்தும். ஆனால், அந்த இரண்டு தகுதிகளுமே அன்றைய அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்கத் தொழில்கள் வளர்ந்து, உள்நாட்டுப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும்கூட, (முதல்) உலகப்போர் தொடங்கும்போது அமெரிக்காவின் நிகர கடன் 2 பில்லியன் டாலர்கள். கடன் கொடுக்கிற நிலையிலிருந்தவை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான்.

படை பலத்திலும் அதே நிலைதான். மறுபுறம், விடுதலை அடைந்ததும் ராணுவத்தையே கலைத்துவிட்ட நாடு அமெரிக்கா. கடற்படையையும் கலைத்து கப்பல்களையே விற்றவர்கள் அவர்கள். பின்னர் மீண்டும் உருவாக்கினாலும், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, பிரிந்து சென்ற மாநிலங்களின் துறைமுகங்களை முற்றுகையிட்டு அவர்களது வணிகத்தைத் தடுப்பதற்காகத்தான் கடற்படையையே ஓரளவுக்குப் பெரிதாக்கியது அமெரிக்கா. போர் என்று வந்தால் படைகளைத் திரட்டுவதும், கப்பல்களை வாங்குவதும் போர் முடிந்ததும் படைகளைக் கலைத்துவிடுவதும் அவர்களது வாடிக்கை. 1880கள் காலத்தில் அமெரிக்கக் கடற்படையிடம் இருந்தவை மரத்தாலான வெறும் 90 சிறிய கப்பல்கள்தான். அதன் பின்னர்தான் உலோகத்தாலான கப்பல்கள் அமெரிக்கக் கடற்படைக்கு வந்தன. ஆனாலும், அன்றைக்கு இங்கிலாந்து வைத்திருந்த போர்க்கப்பல்களோடு ஒப்பிட்டால், அமெரிக்கப் போர்க் கப்பல்கள் மிகவும் பின்தங்கியவை.

அமெரிக்காவின் பெரும் வெள்ளைக் கப்பலணி

1898இல் ஸ்பெயினுடனான போரில் வென்று புவெர்ட்டோ ரீக்கோ, ஃபிலிப்பைன்ஸ், அதன்பின் அமெரிக்க சமோவா ஆகிய பகுதிகள் கடல் கடந்த பகுதிகளாக அமெரிக்காவுக்குக் கிடைத்த பின்னர்தான், அவற்றைப் பாதுகாக்குமளவுக்குத் திறன் மிக்க கடற்படை என்பதன் தேவையே அமெரிக்காவுக்கு ‘உறைத்தது’. அதைத் தொடர்ந்து பெரிய போர்க்கப்பல்களை கடற்படையில் சேர்க்கத் தொடங்கியது அமெரிக்கா. பெரிய போர்க்கப்பல்கள் என்றால் அது அமெரிக்காவுக்குத்தான். ஏனென்றால் அன்றைய காலத்தில் இங்கிலாந்து உருவாக்கி, பின்னாளில் தரநிலையாக மாறிய ட்ரெட்நாட் போர்க்கப்பல்களைவிட மிகவும் பின்தங்கியவை அந்தக் கப்பல்கள்.

ஆனாலும், அப்போது உருவாக்கிய 16 போர்க் கப்பல்களை உலகைச் சுற்றிப் பல நாடுகளுக்கும் சென்றுவரச் செய்தது அமெரிக்கா. அதாவது, ‘நானும் ரவுடிதான்’ என்று சொன்னதைப்போல, “எங்களிடமும் கடற்படை இருக்கிறது” என்று காட்டிக்கொள்கிற முயற்சி அது. 1898 போரில் ஸ்பெயினின் கடற்படையையே அமெரிக்கக் கடற்படை வென்றுவிட்டதால் ஏற்பட்ட நம்பிக்கை இருந்தாலும்கூட, தான் பெரிய வலிமையான நாடு என்று பறைசாற்றுகிற, பிற நாடுகளுக்குச் சவால்விடுகிற முயற்சியெல்லாம் இல்லை. அதனால்தான் அந்தக் கப்பல்களுக்கு வெள்ளை நிறம் பூசிவிட்டு, அமைதிக் காலத்தில் மேற்கொள்ளப்படுகிற பயணம் என்பதால் வெள்ளை நிறம் பூசியதாகவும் கூறியது அமெரிக்கா. அதாவது, ‘ஐயா நாங்க சண்டைக்கெல்லாம் வரலை’ என்று பொருள். அதனால், அந்தப் பயணத்திற்கே பெரும் வெள்ளைக் கப்பலணி (Great White Fleet) என்ற பெயர் ஏற்பட்டது.

அமெரிக்காவின் பெரும் வெள்ளைக் கப்பலணி சென்ற பாதை

போர்க்கப்பல்களுக்கு அமைதிக் காலத்தில் வெள்ளை நிறம் பூசுவது ஒன்றும் புதிதல்ல எனும்போது அமெரிக்காவை மட்டும் அப்படிச் சொல்லலாமா என்று தோன்றலாம். ஏன் அப்படிப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று புரிந்துகொள்ள இங்கு இன்னொரு நிகழ்வைப் பார்ப்பது உதவும். 1898இல் ஸ்பெயினுடனான போரில் வென்றதில் புவெர்ட்டோ ரீக்கோவும், ஃபிலிப்பைன்சும் கிடைத்தன என்று தொடக்கத்தில் பார்த்தோம். அந்தப் போர் என்பது க்யூப விடுதலைக்கான போர். என்னது, க்யூபா விடுதலைக்காக அமெரிக்கா போராடியதா? ஆம்! ஸ்பெயினிடமிருந்து க்யூபாவை விடுவிக்க, விடுவித்து அமெரிக்க வணிகர்களுக்கு உதவ அமெரிக்காவும் போரிட்டது.

1492இல் வந்திறங்கிய ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் நான்கு நூற்றாண்டுகளாக இருந்த கியூபாவின் விடுதலைப் போராட்டங்கள், 1868இல் தொடங்கிய பத்தாண்டுப் போரிலிருந்தே நிகழ்ந்துகொண்டிருந்தன. அமெரிக்கக் கண்டத்திலிருந்த பெரும்பாலான குடியேற்றங்களை 19ஆம் நூற்றாண்டில் இழந்ததன்மூலம், ஒரு காலத்தில் மிகப்பெரிய குடியேற்ற நாடாக இருந்த ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் வெகுவாகச் சுருங்கிவிட்டிருந்தன. அதனாலும், 400 ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டிலிருந்த கியூபாவை ஒரு குடியேற்றம் என்பதைவிட, ஸ்பெயினின் மாநிலம் என்ற நிலையில் வைத்திருந்ததாலும், ஸ்பெயினுக்கு கியூபா முக்கியமானதாக இருந்தது.

ஆனால், கியூபாவின் கட்டுப்பாட்டை வைத்திருந்த ஸ்பெயினுக்குச் செல்வதைப் போல, 12 மடங்கு ஏற்றுமதி கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்தது. அதாவது கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதமும், இறக்குமதியில் 40 சதவீதமும் அமெரிக்காவுடனாக இருந்தன. விடுதலைப் போராட்டங்களால் நெருக்கடியிலிருந்த கியூபாவின் சர்க்கரைச் சந்தையை அமெரிக்க முதலாளிகள் கிட்டத்தட்ட முழுமையாகவே கைப்பற்றியிருந்தனர்.

அதனால், ஸ்பெயினுக்கு எதிரான போருக்கு ஆயுதங்கள் வாங்க நிதி உதவிகளை மறைமுகமாக அமெரிக்காதான் செய்துகொண்டிருந்ததது. அதே நேரத்தில், அமெரிக்க மண்ணில் ஐரோப்பியர்களின் புதிய குடியேற்றங்களை அனுமதிப்பதில்லை, இருக்கிறவற்றிற்கு இடையூறு செய்வதில்லை என்ற மன்றோ கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள்ளவும் செய்தது. அப்படியான நிலையில்தான் 1873இல் க்யூப விடுதலைப் போருக்கு உதவியதாகக்கூறி, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான வர்ஜீனியஸ் என்ற கப்பலைக் கைப்பற்றி, அதிலிருந்தவர்களில் 53 பேரைப் படுகொலை செய்தது ஸ்பெயின். உண்மையிலேயே க்யூப விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு வாடகைக்குத்தான் அந்தக் கப்பல் விடப்பட்டிருந்தது. ஆனால், வெளிப்படையாக க்யூப விடுதலையை ஆதரிப்பதாகச் சொல்லும் துணிவு அமெரிக்காவுக்கு இல்லை!

கொல்லப்பட்ட 53 பேரில் கப்பலின் தளபதி உட்பட பெரும்பகுதியினர் அமெரிக்கர்கள். இங்கிலாந்தின் குடிமக்களான ஆங்கிலேயர்களும் சிலர் இருந்தனர். இன்றைய நிலையில், சில அமெரிக்கக் குடிமக்களை வேறொரு நாடு கொலை செய்தால் அமெரிக்கா என்ன செய்யும் என்று நமக்குத் தெரியும். உடனடியாக அந்த நாட்டிற்கு மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, போர் வரைகூடச் செல்லத் தயாராக இருக்கும். ஆனால், அந்த 53 பேரைக் கொன்றதற்கு அமெரிக்காவின் எதிர்வினை என்ன தெரியுமா? கண்டனங்கள் எல்லாம் தெரிவித்துவிட்டு, 80 ஆயிரம் டாலர் இழப்பீடு வாங்கிக் கொண்டு, அமைதியாகப் பிரச்சினையை முடித்துக்கொண்டது. அவ்வளவுதான் அன்றைய அமெரிக்காவின் படைபலம், வீரம் எல்லாம்! அதனால்தான் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் வெள்ளை நிறம் என்பதை, போருக்கு வரவில்லை என்று முன்னெச்சரிக்கையாகச் சொல்வதற்காக என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

அதெல்லாம் சரி, ஸ்பெயினுடன் போரிட்டு வென்றதாகத்தானே குறிப்பிடப்பட்டது, அப்படியானால், எப்போது போருக்கு வந்தது என்று தோன்றலாம். இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டபடி, தங்கள் வணிகத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும்தான் அமெரிக்கா போரில் ஈடுபடும் என்பதுதான் அந்தக்கால நிலை. க்யூபா அப்படியான வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியிருந்தது மட்டுமின்றி, அமெரிக்க முதலாளிகள் அங்கு ஏராளமான தொழில்களையும் செய்து வந்தனர். அந்தப் பின்னணியில்தான் க்யூப விடுதலை அமெரிக்காவுக்கு முக்கியமானதாகியது.

மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல் மெய்ன்
மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல் மெய்ன்

க்யூபாவில் விடுதலைப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அங்கிருந்த அமெரிக்கக் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, 1898 ஜனவரியில் அமெரிக்காவின் போர்க்கப்பல் மெய்ன் அனுப்பப்பட்டது. ஹவானா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பல், ஃபிப்ரவரி 15 அன்று ஒரு பெரிய வெடிப்பில் மூழ்கியது. 266 அமெரிக்கர்கள் இறந்த அந்த நிகழ்வு அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், வால் ஸ்ட்ரீட் மற்றும் பெரிய வணிகர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் போர் பாதிக்கும் என்று எதிர்க்கிறார்கள் என்று “சாக்குச் சொல்லி” அமெரிக்கா போரைத் தவிர்த்தது. புலிட்சர் போன்றவர்களின் இதழ்கள் தொடர்ச்சியாக இதைப் பற்றி எழுதியபின், பெரு முதலாளிகள் போருக்கு ஆதரவாக மாறினர். அவர்களில் வலியுறுத்தலில்தான் வேறு வழியின்றி க்யூப விடுதலைக்காக நேரடியாகத் தலையிடுவது என்ற முடிவை அமெரிக்கா எடுக்க நேர்ந்தது.

மெய்ன் மூழ்கடிக்கப்பட்தை நினைவூட்டி போருக்கு வலியுறுத்தும் அமெரிக்கக் கருத்துப்படம்
மெய்ன் மூழ்கடிக்கப்பட்தை நினைவூட்டி போருக்கு வலியுறுத்தும் அமெரிக்கக் கருத்துப்படம்

அதைத் தொடர்ந்து, க்யூபாவிற்கு ஸ்பெயின் விடுதலை அளிக்க வேண்டும் என்று 1898 ஏப்ரல் 19இல் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியது. அடுத்த நாளே அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக ஸ்பெயின் அறிவிக்க, அதற்கடுத்த நாளே அமெரிக்கக் கப்பற்படைக் கப்பல்கள் (அமெரிக்க முதலாளிகளைக் காப்பதற்காக!) க்யூபாவை முற்றுகையிட்டுவிட்டன. 1898 ஏப்ரல் 25 அன்று போர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போரின் முடிவில், ஸ்பெயினுக்கு பதிலாக அமெரிக்காவின் ஆதிக்கத்தில் சிக்கிய கியூபாவால், 1959இல் புரட்சி வெற்றியடையும்வரை மீளமுடியவில்லை என்பதும், காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சியின்போதுகூட அவர்களுக்கு ஆதரவு என்பதாகக் காட்டிக்கொண்டு தங்கள் முதலாளிகளைக் காத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது என்பதும் தனிக்கதைகள்! அவை தற்போதைய தலைப்புக்குத் தொடர்பில்லாதவை. ஆனால், தனது போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில்கூட போரில் இறங்கத் தயங்கும் நிலையில் இருந்தது அமெரிக்கா என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. அது எப்படி மாறியது என்பதை வரும் பகுதிகளில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *