எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 24" கட்டுரை தொடர் | தாக்கப்பட்டாலும் போருக்கு வராத அமெரிக்கா | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 24:- தாக்கப்பட்டாலும் போருக்கு வராத அமெரிக்கா – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 24:-

தாக்கப்பட்டாலும் போருக்கு வராத அமெரிக்கா

– அறிவுக்கடல்

பார்ப்பதற்கு பெரிய உருவமாக இருக்கிறவர்கள் துணிவின்றி இருப்பதைப் போன்ற பாத்திரங்களை திரைப்படங்களில் பார்த்திருப்போம். கிட்டத்தட்ட அப்படியான நிலைதான் அன்றைய அமெரிக்காவுடையது. பொருளாதாரத்தில் வளர்ந்திருந்தாலும், ஸ்பெயினுடன் போரிட்டு வென்றிருந்தாலும், கடல்கடந்த உடைமைகளைக் காப்பதற்காகக் கடற்படையைச் சற்றுப் பெரிதாக்கினாலும், பிரச்சினை வந்தால் ஒதுங்கிப் போய்விடுவது என்பதாகத்தான் அமெரிக்காவின் நடைமுறை இருந்தது. சாலையில் நடந்து செல்லும்போது வேண்டுமென்றே யாராவது வந்து மோதினால்கூட, ‘பரவாயில்ல, தெரியாம மோதியிருப்பீங்க’ என்று சொல்கிற காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்திருப்போமே, அப்படித்தான்! ஏனென்றால் முதன்மை நோக்கம் வணிகம் மட்டும்தான்! உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் மட்டும்தான் கவனம்!

அப்படியான சூழலில்தான் ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு தன் இளவரசரை ஒரு செர்பியர் கொன்றுவிட்டார் என்று செர்பியாமீது போர் தொடுக்க, ஏற்கெனவே செய்திருந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜெர்மெனியும் துணைக்கு வர, செர்பியாவுக்கு ஆதரவாக (ஜார் கால) ரஷ்யா வர, அது உலகப்போராகியது. ஐரோப்பிய வல்லரசு நாடுகளுக்கிடையே நிலவிய அதிகாரப் போட்டிதான் போருக்கான உண்மையான காரணம் என்பதால் ஐரோப்பாவின் மையப் பகுதியைச் சேர்ந்த ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மெனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மைய நாடுகள் என்ற பெயரில் ஓரணியாகவும், இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நேச நாடுகள் என்ற பெயரில் எதிரணியிலும் போரிட்டன.

‘யாருக்கு என்ன நடந்தால் என்ன, எங்கள் வியாபாரம் மட்டும்தான் எங்களுக்கு முக்கியம்’ என்பதுதான் எப்போதுமே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே உணவுப் பொருட்கள், பருத்தி, எஃகு ஆகியவற்றுடன் வெடிமருந்துகளையும் தாராளமாக ஏற்றுமதி செய்தது அமெரிக்கா. ‘எங்களுக்கு யாரும் எதிரி இல்லை, அதனால் யாருக்கும் பொருள் என்று சொல்ல மாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டு, போரிடும் இரு தரப்புக்கும் விற்பனை செய்தது அமெரிக்கா. மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்த இங்கிலாந்து, அமெரிக்க சரக்குகள் ஜெர்மெனிக்கு செல்லாமல் முற்றுகையிட்டதுடன், சோதனை என்ற பெயரில் ஜெர்மெனிக்குச் செல்லும் அமெரிக்கச் சரக்குக் கப்பல்களை அலைக்கழித்தது, பறிமுதல் செய்தது என்று பல முறைகளில் தடுத்தது. அமெரிக்கா இதைச் சட்டவிரோதம் என்று கூறியது, எதிர்த்துச் சட்டம்கூட இயற்றியது. ஆனால், இங்கிலாந்தை எதிர்த்துப் போர் தொடுக்கவில்லை.

மறுபுறம், அமெரிக்காவின் சரக்குகள் இங்கிலாந்துக்குச் செல்கின்றன, ஜெர்மெனிக்கு வரவில்லை என்பதில் எரிச்சலுற்ற ஜெர்மெனி, அந்தப் போரில் புதிதாகக் களமிறக்கியிருந்த யு-போட் என்னும் நீர்மூழ்கிக் கப்பல்களால் தாக்கி, அமெரிக்காவுக்குச் செல்லும், திரும்பி வரும் கப்பல்களை மூழ்கடிக்கத் தொடங்கியது. இங்கிலாந்துக் கப்பலான ஃபலாபா 1915 மார்ச் 28 அன்று மூழ்கடிக்கப்பட்டதில் அமெரிக்கர் ஒருவரும் இறந்தார். அடுத்து அமெரிக்காவின் எண்ணெய்க் கப்பலான கல்ஃப்லைட் தாக்குதலுக்கு உள்ளானது. மே 7 அன்று இங்கிலாந்தின் லூசிட்டானியா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அதிலிருந்த 128 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர் (பிற நாட்டினருடன் சேர்த்து இறந்தவர்கள் மொத்தம் 1198 பேர்!). அமெரிக்க மக்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அமெரிக்க அரசு ஜெர்மெனியை எதிர்த்தும் போரிடத் தயாராக இல்லை. கடுமையான எதிர்ப்பை மட்டும் பதிவு செய்ய, இனி பயணிகள் கப்பல்களைத் தாக்குவதில்லை என்று ஜெர்மெனி உறுதிமாழி அளித்தது.

படம் 1: லூசிட்டானியா கப்பல் ஜெர்மெனியின் டார்ப்பீடோ தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய செய்தி

ஆனாலும், அடுத்தடுத்து இவ்வாறு நடந்த நிகழ்வுகளில், அமெரிக்கர்கள் இறந்துகொண்டே இருந்தார்கள். அமெரிக்காவும் எச்சரித்துக்கொண்டே இருந்தது. இங்கிலாந்தின் அரபிக் என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அமெரிக்கர்கள் இறந்து, அமெரிக்கா எதிர்த்தபின் ஜெர்மெனி அளித்த உறுதிமொழி, அரபிக் உறுதிமொழி என்று குறிப்பிடப்படுகிறது. அடுத்து ஃப்ரான்சின் சசெக்ஸ் கப்பலில் இவ்வாறு நிகழ்ந்து சசெக்ஸ் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனாலும், மரீனா, ரஷ்யன், லகோனியா என்று கப்பல்கள் மூழ்கடிக்கப்படுவதும் தொடர்ந்து, அவற்றிலிருந்து அமெரிக்கர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்தது என்பது அமெரிக்காவை ஜெர்மெனி எப்படி மதித்தது என்பதை மட்டுமல்ல, அன்றைய அமெரிக்காவுக்கு இருந்த பலம் அவ்வளவுதான் என்பதையும் உணர்த்தும்.

ஜரோப்பாவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மட்டும் அமெரிக்காவை ஜெர்மெனி தாக்கவில்லை. அமெரிக்காவுக்குள்ளேயே பல அழிவு வேலைகள் நிகழ்ந்தன. 1915 ஃபிப்ரவரியில் மேய்ன்-கனடா ரயில் பாலத்தைத் தகர்க்க முயற்சி நடைபெற்றது. ஜூலையில் எரிக் மூண்ட்டர் என்ற ஜெர்மானியப் பேராசியர் அமெரிக்க பாராளுமன்றத்திலேயே குண்டு வெடிப்பை நிகழ்த்தினார். அடுத்து, அதே ஜெர்மானியர் இங்கிலாந்துக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கூறி, அமெரிக்காவின் வங்கித்துறை ஜாம்பவானான ஜே.பி.மார்கன் ஜூனியரைத் துப்பாக்கியால் சுட்டபின் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு ஆயுதம் ஏற்றிச் செல்லும் மின்னஹாஹா கப்பலில் குண்டு (டைம் பாம்) வைத்திருப்பதாக சிறையிலிருக்கும்போதே அவர் கூறினார். அதன்படியே கடலில் அந்தக் கப்பலில் குண்டும் வெடித்தது. உடனே கனடாவுக்குத் திருப்பப்பட்டு கப்பல் காப்பாற்றப்பட்டது.

படம் 2: ப்ளாக் டாம் வெடிவிபத்து பற்றிய செய்தி 50 பேர் இறந்திருக்கக்கூடும் என்கிறது

இன்னும் நடந்த பல நிகழ்வுகளுக்கு உச்சமாக ப்ளாக் டாம் வெடிப்பு நிகழ்ந்தது. ப்ளாக் டாம் என்பது, நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலை உள்ள லிபர்ட்டி தீவு அருகே உள்ள செயற்கைத் தீவு. கப்பல்களில் ஏற்றப்பட வேண்டிய சரக்குகளை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான கிடங்காக இருந்த இந்தத் தீவில், நேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏராளமான ஆயுதங்கள், 910 டன் வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஜெர்மெனியின் சதியால் இங்கு குண்டுவெடிப்பு நிகழ, 5.5 ரிக்டர் நிலநடுக்கம் அளவுக்கு அதிர்வை ஏற்படுத்திய இந்த வெடிப்பில் 40 கி.மீ. தொலைவு வரையிருந்த கட்டிடங்கள் சேதமுற்றன. அன்றைய மதிப்பிலேயே அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 2 கோடி டாலர்கள் (இன்றைக்கு இந்திய ரூபாயில் 4 ஆயிரம் கோடிக்கும் அதிகம்!). அத்துடன், சுதந்திர தேவி சிலையில், சுடரை ஏந்தியிருக்கும் கையும் சேதமுற்றது. அப்போது மூடப்பட்ட, சுடருக்குப் பார்வையாளர்கள் செல்லும் வழி இன்றுவரை திறக்கப்படவில்லை. இதற்காவது கோபம் வந்து அமெரிக்கா ஜெர்மெனியைத் தாக்கியிருக்க வேண்டுமே… அதுதான் இல்லை.

படம் 3: ப்ளாக் டாம் வெடிவிபத்தில் சேதமுற்ற சுதந்திர தேவி சிலை சீரமைக்கப்படுகிறது

இதற்கெல்லாம் பிறகும், 1916 ஜனவரியில் நியூஜெர்சி மாநிலத்தில் கிங்ஸ்லேண்டில் ஒரு வெடிமருந்துத் தொழிற்சாலையில் மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது. இங்கிலாந்துக்கும், ரஷ்யாவுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டிய வெடிபொருட்கள்தான் இங்கு தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன என்பதால், இதுவும் ஜெர்மானிய சதியாகவே கருதப்படுகிறது. அதில் 50 லட்சத்துக்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகள் வெடித்ததுடன், அதைச் சுற்றிப் பல கிலோ மீட்டர்களுக்கு ரயில் பாதைகள் உட்பட பலவும் சேதமுற்றன. இன்னும் பல கப்பல்கள் தாக்கப்பட்டது, மூழ்கடிக்கப்பட்டது, தொழிற்சாலை வெடிப்பு நிகழ்வுகள் என்று அமெரிக்காவுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நீளமான பட்டியலே உள்ளது. 1915-17 காலகட்டத்தில் மட்டும் அமெரிக்காவில் 43 தொழிற்சாலைகளில் காரணம் அறிய முடியாத வெடிவிபத்துகள் நிகழ்ந்தன என்பது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்தும்.

இவ்வளவு பொருள், உயிர் இழப்புகளுக்குப் பின்னும் தன்னை எதிரியாகக் கருதி தாக்குகிற ஜெர்மெனியுடன் மோத அமெரிக்கா தயாராக இல்லை. மாறாக அமெரிக்கப் பாராளுமன்றத்தில், ‘வெற்றியின்றி அமைதி’ (Peace without Victory) என்ற உரையை ஆற்றி, போரைத் தவிர்க்க வேண்டும் என்றார் குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன். போர் நடந்து, ஒரு தரப்பு வெற்றி பெறும்போது அமைதி இருக்காது என்பது அதன் பொருள். அதாவது, போரிடுபவர்களுக்கு ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்துவிட்டு, போருக்குள் அமெரிக்காவும் நுழைய வேண்டியிருக்கும் என்ற நிலை ஏற்பட்டதும், போரால் அமைதி வராது என்ற அறிவுரை சொல்லியது அமெரிக்கா. ஆனால், அவர் அப்படி உரையாற்றி 9 நாட்களில், கட்டுப்பாடற்ற நீர்மூழ்கித் தாக்குதல்களை அறிவித்தது ஜெர்மெனி. அதுதான் அமெரிக்காவுக்கு அன்று இருந்த மரியாதை! அப்போதும் எதிர்த்துத் தாக்க அமெரிக்கா துணியவில்லை!

அடுத்த சில வாரங்களில், ஜிம்மர்மேன் தந்தி என்பது வெளியில் கசிந்தது. அது என்னவென்றால், 70 ஆண்டுகளுக்குமுன் மெக்சிக்கோவிடமிருந்து அமெரிக்கா பறித்த இடங்களை மீட்க உதவுவதாகக்கூறி, அமெரிக்காவுக்கு எதிராக மெக்சிகோவையும் போருக்கு ஜெர்மெனி அழைத்த இரகசியச் செய்தி. அமெரிக்காவின் எல்லைவரை கூட்டணிக்கு ஆள் தேடுகிற வேலையை ஜெர்மெனி செய்யத் தொடங்கியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும், அமெரிக்கா போருக்குத் தயாராக இல்லை. அதுவரை போரில் ஆயுதம் விற்று ஈட்டியிருந்த லாபத்தை, போரிட்டு இழந்துவிடலாம் என்பதுதான் அமெரிக்காவின் பார்வையாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், வியாபாரிக்கு என்றுமே லாப-நஷ்ட கணக்குதானே முக்கியம்!

படம் 4: அமெரிக்க வணிகக் கப்பல் விஜிலன்ஷியா மூழ்கிக்கொண்டிருக்கிறது. மூழ்கடித்த ஜெர்மானிய யு-போட்டிலிருந்து எடுக்கப்பட்ட படம்

அதை உறுதிப்படுத்துகிற நிகழ்வு 1917 மார்ச்சில் நடந்தது. மார்ச் 16-18 தேதிகளில் அமெரிக்காவின் வணிகக் கப்பல்களான சிட்டி ஆஃப் மெம்ஃபிஸ், இல்லினாய்ஸ், விஜிலென்ஷியா ஆகியவை ஜெர்மென் யு-போட்களால் மூழ்கடிக்கப்பட்டன…. அமெரிக்கா போரில் இறங்கியது! அமெரிக்கர்கள் கொல்லப்பட்டபோதும், பயணிகள் கப்பல்கள் தாக்கப்பட்டபோதும், அமெரிக்காவுக்கு உள்ளேயே தாக்குதல்கள் நடந்தபோதும், பாராளுமன்றக் கட்டிடத்திலேயே குண்டு வெடித்தபோதும், சுதந்திர தேவி சிலையே சேதமுற்றபோதும் போர் வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற அமெரிக்கா, அதன் வணிகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதும் போரில் குதித்தது என்பது அதன் முதன்மை நோக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. போரிட அமெரிக்கா தயங்கியதும், அமெரிக்காவின் எச்சரிக்கைகள், கண்டனங்களைத் துளிக்கூட மதிக்காமல் ஜெர்மெனி தொடர்ந்து தாக்கியதும் அன்றைய அமெரிக்கா எவ்வளவு பலவீனமான நாடு என்பதையும் காட்டுகின்றன!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *