வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 25:-
அமெரிக்க இராணுவம் 17ஆம் இடத்தில்
– அறிவுக்கடல்
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல, உலகமே அடித்துக்கொண்டால் அமெரிக்காவுக்கு லாபம் என்று ஓரமாக நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவும், அந்த வியாபாரத்துக்குப் பிரச்சினை என்பதால் போரில் இறங்க வேண்டியதாகிவிட்டது. ‘சிங்கம் களம் இறங்கிருச்சு’ என்று வடிவேலுவைப் பார்த்துக் கத்தியதைப் போல, அமெரிக்காவே களத்திற்கு வந்து விட்டது, பிறகு என்ன என்று தோன்றலாம். உண்மை என்னவென்றால், அந்த வடிவேலு நகைச்சுவைக்கு நேரடியாகப் பொருந்துகிற நிலையில்தான் அன்றைய அமெரிக்கா இருந்தது.
உலக அளவில் 17ஆவது இடம்தான் 1900களின் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தின் நிலை! (முதல்) உலகப் போர் தொடங்கியபோது அமெரிக்க ராணுவத்திலிருந்த வீரர்களின் எண்ணிக்கை 98,544 என்று அமெரிக்கப் பாராளுமன்ற நூலகத்தின் (Library of Congress) ஆவணங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு லட்சம் வீரர்கள்கூட இல்லாத நாடு! அன்று உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் அருகில் அமெரிக்கா ஒரு சிறு துரும்பு அளவுக்குத்தான் இருந்தது. எவை அப்படியான பலம் வாய்ந்த நாடுகள்?
உலகப்போர் தொடங்கிய காலத்தில் உலகின் மிகப்பெரிய நிரந்தர ராணுவத்தைக் கொண்ட நாடு ரஷ்யாதான். அதாவது, புரட்சிக்கு முந்தைய ஜார் கால ரஷ்யா! போர் தொடங்கும்போது ரஷ்ய ராணுவத்திலிருந்த வீரர்களின் எண்ணிக்கை 59 லட்சம். போர்க்காலத்தில் திரட்டப்பட்ட வீரர்களோடு சேர்த்து, உலகப் போரில் ரஷ்ய ராணுவத்தின் பலம் 1.2 கோடி என்பதுடன் ஒப்பிட்டால் அமெரிக்க ராணுவம் எவ்வளவு சிறியது என்பது புரியும். கிட்டத்தட்ட 122இல் ஒரு பங்கு! ஜெர்மெனியிடம் 45 லட்சம் வீரர்களும், ஃப்ரான்சிடம் 35 லட்சம் வீரர்களும் இருந்தனர் என்பதும் அமெரிக்காவின் அன்றைய நிலையை உணர்த்தும்.

அதே காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் வலிமையான கடற்படையைக் கொண்டிருந்த நாடு இங்கிலாந்து. 70க்கும் அதிகமான மிகப்பெரிய போர்க்கப்பல்களைக் கொண்டிருந்த அப்படையில் இரண்டரை லட்சம் வீரர்கள் இருந்தனர். அதன் படையில் 22 (அந்தக் காலத்தின்) அதிநவீன ட்ரெட்நாட் (Dreadnought) போர்க்கப்பல்கள், 9 பிரம்மாண்டமான பேட்டில்க்ரூசர் கப்பல்கள் மற்றும் 40க்கும் அதிகமான பழைய (ட்ரெட்நாட்டுக்கு முந்தைய) போர்க்கப்பல்களும் இருந்தன. அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படையில் 10 ட்ரெட்நாட் போர்க்கப்பல்களும், சுமார் 20 பழைய போர்க்கப்பல்களும் மட்டும்தான் இருந்தன. 57 ஆயிரம் வீரர்களைக் கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படையில் பேட்டில்க்ரூசர் கப்பல் ஒன்றுகூட இல்லை. கடற்படையின் வலிமையிலும் அமெரிக்கா எவ்வளவு பின்தங்கியிருந்தது என்பதை இது உணர்த்தும். இதுவேகூட, 1900களின் தொடக்கத்தில் மிகச்சில பழைய வகைப் போர்க்கப்பல்களைக் கொண்டிருந்த நிலையிலிருந்து, அப்போதுதான் சில ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட்டிருந்த அளவாகும்!
அன்றைய காலகட்டத்தில் வான்படை அல்லது விமானப்படை என்று தனியாக எந்த நாடும் வைத்திருக்கவில்லை. ஏனென்றால் 1903இல்தான் விமானம் என்பதே உருவாகியிருந்தது. தனியாக வான்படையை உருவாக்கிய முதல் நாடு இங்கிலாந்துதான். அதுவும் 1918இல்தான். ஆனாலும், ஜெர்மானியப் படைகளிடம் மிக அதிகமாக சுமார் 250 விமானங்கள் இருந்தன. அத்துடன் என்ஜின் பொருத்தப்பட்ட பலூன் போன்ற அமைப்பைக் கொண்ட வான்கப்பல்களின்மூலம் (Zeppelin) இங்கிலாந்தின் பல இடங்களில் ஜெர்மெனி குண்டு வீசியது. ஏனென்றால் அன்றைய விமானங்களைவிட இவை அதிகத் தொலைவு பறக்கக்கூடியவையாக இருந்தன. ஃப்ரான்சிடம் 130 விமானங்களும், இங்கிலாந்திடம் 100 விமானங்களும் இருந்தன. போர் தொடங்கிய காலத்தில் அமெரிக்கப் படைகளிடம் இருந்தவை வெறும் 6இலிருந்து 12 பழைய விமானங்கள் மட்டும்தான். அவையும் பயிற்சிக்குத்தான் பயன்படுபவையாக இருந்தனவே தவிர, போருக்குச் செல்லும் நிலையில் இல்லை.

அப்படியான நிலையில் ஓரமாக நின்று, சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டே, வியாபாரமும் பார்ப்பது என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு சரியானதுதானே? போருக்கே வராவிட்டாலும் ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால் மறு தரப்புடனான வியாபாரம் பாதிக்கும் என்பதுதான் அமெரிக்கா நடுநிலை என்று காட்டிக்கொள்ள முயற்சித்ததற்கான காரணம். ஆனால், உண்மை நிலைமை எப்படி ஆனது என்றால், தங்கள் எதிரிக்குப் பொருட்கள் கொடுத்து உதவுகிறது அமெரிக்கா என்று இரு தரப்புமே நினைத்தன. பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தது. எதிரிக்குச் செல்லும் சரக்குகளைத் தடுக்க இரு தரப்புமே முயற்சிக்க, அதில் வெற்றிபெற்ற இங்கிலாந்தின் முற்றுகையால் ஜெர்மெனிக்குப் பொருட்கள் கிடைக்காமல் போக, தனக்கு இல்லாதது யாருக்கும் இல்லை என்று ஜெர்மெனி அந்தச் சரக்குக் கப்பல்களை மூழ்கடித்தது. தன் கப்பல்களை மூழ்கடித்த ஜெர்மெனிக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க வேண்டியதாகியது.
உலகப்போர் தொடங்கும்போது அமெரிக்கா மிகப்பெரிய கடன்கார நாடு. அதற்கு ஐரோப்பிய நாடுகள் ஏராளமாகக் கடன் (அல்லது முதலீடு) அளித்திருந்தன. அப்படியான கடன்கள், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் (GDP) 15 சதவீதம் என்ற மிகப்பெரிய அளவுக்கு இருந்தன. போர் தொடங்கியதும் போரிட்ட நாடுகள் எல்லா வளங்களையும் போரை நோக்கித் திருப்பின. மனிதர்கள் போருக்கு அனுப்பப்பட்டனர், தொழிற்சாலைகளில் பிற உற்பத்திகள் நிறுத்தப்பட்டு, ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன, விவசாயத்திற்கான வளங்கள்கூட போருக்காகத் திருப்பிவிடப்பட்டன (உதாரணமாக விவசாயத்துக்கான யூரியா வெடிமருந்து தயாரிக்க திருப்பிவிடப்பட்டது) என்பனவற்றால் அந்த நாடுகள் இறக்குமதியைப் பெருமளவு சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. அந்த இறக்குமதியை ஏற்றுமதி செய்கிற நாடாக, போரில் ஈடுபடாத அமெரிக்கா வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது.
அதனால், 1913இல் 2.4 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவின் ஏற்றுமதி, 1917இல் 6.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது. இயந்திரங்கள், உலோகங்கள், வாகனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி 480 மில்லியன் டாலர்களிலிருந்து, 1.6 பில்லியன் டாலர்களாகவும், உணவுப்பொருட்களின் (விவசாய விளைபொருட்களின்) ஏற்றுமதி 190 மில்லியன் டாலர்களிலிருந்து 510 மில்லியன் டாலர்களாகவும் உயர்ந்திருந்தது. 1914இல் பொருளாதார மந்த நிலையிலிருந்த அமெரிக்கா, உலகப் போரால் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.
அமெரிக்காவுக்குக் கடன் வழங்கியிருந்த – அதாவது முதலீடு செய்திருந்த – நாடுகள், போர்ச் செலவுகளுக்காக, முதலீடுகளைத் திரும்பப் பெற்றன. ஏற்றுமதியால் ஏராளமாகச் சம்பாதித்திருந்த அமெரிக்காவுக்கு அப்படித் திருப்பித் தருவது சிரமமாக இல்லை என்பது மட்டுமல்ல, அந்த நாடுகளுக்கே கடன் கொடுக்கக்கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தது. அந்த நாடுகளும் போர்ச் செலவுகளுக்காக அமெரிக்காவிடமே கடன் வாங்கின. அதாவது, போரால் அவர்களது உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கே பொருள் விற்று, அந்தப் பணத்தில் அவர்களுக்கே கடனும் வழங்கி அவர்கள் போரைத் தொடரவும் உதவியது அமெரிக்கா. போர் தொடர்ந்தால் மேலும் வருவாய்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்…!

விளைவு போரின் இறுதியில் இங்கிலாந்து 4.7 பில்லியன் டாலர்களும், ஃப்ரான்ஸ் 4 பில்லியன் டாலர்களும் அமெரிக்காவுக்குக் கடன்பட்டிருந்தன. நேச நாடுகள் மொத்தமாக 10.35 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிடம் கடன்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், கடன் வழங்கும் நாடாகவும் அமெரிக்கா மாறியது.
இதற்கிடையில், அமெரிக்காவும் போரில் ஈடுபடவேண்டியதாகிவிட்டது அல்லவா? அப்படி போருக்குள் நுழையும்போது 80 ஆயிரம் வீரர்களை ராணுவத்தில் கொண்டிருந்த அமெரிக்கா, கட்டாய ராணுவ சேவையை நடைமுறைப்படுத்தி, 23,95,742 வீரர்கள் என்ற எண்ணிக்கையை அடைந்தது. அதே காலகட்டத்தில், ரஷ்யப் படையில் 1.2 கோடி, ஃப்ரெஞ்சுப் படையில் 80 லட்சம், ஜெர்மானியப் படையில் 50 லட்சம், இங்கிலாந்துப் படையில் 40 லட்சம் என்ற எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தார்கள் என்பது, அப்போதும் அமெரிக்கப்படை சிறியதுதான் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். (புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யா போரிலிருந்து விலகிக்கொண்டது.)
அமெரிக்காவின் கடற்படை விரிவாக்கப்பட்டு, அதனிடம் 300 கப்பல்கள் இருந்தன. ஆனால், இங்கிலாந்தின் கடற்படையிடம் ஆயிரக் கணக்கில் கப்பல்கள் இருந்தன. 1918 ஏப்ரல் 1-இல் தனியாக வான்படையை உருவாக்கியிருந்த இங்கிலாந்திடம் 22 ஆயிரம் விமானங்கள் இருந்தன. அமெரிக்காவும் விமானங்களைப் படையில் சேர்த்திருந்தது என்றாலும், இங்கிலாந்தின் விமானங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவுக்குத்தான் அமெரிக்காவிடம் வமானங்கள் இருந்தன. அத்துடன், அவற்றையும் ஃப்ரான்சிடமிருந்தும், இங்கிலாந்திடமிருந்தும்தான் அமெரிக்கா வாங்கியது. போர் விமானங்களைத் தயாரிக்கும் திறன் அமெரிக்காவிடம் இல்லை. அது பயிற்சி விமானங்களைத்தான் தயாரித்தது.
அமெரிக்காவின் படைகளை விரிவாக்கியதுடன், அமெரிக்க வரலாற்றில் அதுவரை இல்லாத அளவு 44 மாதங்கள் தொடர்ந்த மிகப் பெரிய வளர்ச்சியையும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு அளித்த உலகப்போர் முடிந்துவிட்டது. உலகின் மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா வளர்ந்துவிட்டது என்று நமக்குத் தோன்றும். ஆனால், நடந்தது வேறு!
போரின் முடிவில், கடற்படையும் சேர்த்து மொத்தம் 43 லட்சம் வீரர்களாக இருந்த அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கை, 1920இல் எவ்வளவாக இருந்தது தெரியுமா? 2,04,292! ஆம், வெறும் 2 லட்சம்தான்! போர் முடிந்ததும் (வழக்கம்போல!) படைகளைக் கலைத்து, வீரர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது அமெரிக்கா. அத்துடன் போருக்காக உருவாக்கப்பட்ட பெரும்பாலான கப்பல்கள், விமானங்களும் விற்கப்பட்டுவிட்டன. அதாவது, ‘உலக நாட்டாமை’ என்ற கற்பனைகூட அமெரிக்காவுக்கு அன்று இல்லை! பிறகு என்னதான் நடந்தது? அடுத்து வருகிற பகுதிகளில் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

