வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 26:- வேண்டவே வேண்டாம் போர் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 26:- வேண்டவே வேண்டாம் போர் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 26:-

வேண்டவே வேண்டாம் போர்

– அறிவுக்கடல்

முதல் உலகப்போர் முடியும்போது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், கடன் கொடுக்கும் நாடாகவும் அமெரிக்கா மாறியிருந்தது. அமெரிக்க விடுதலைப் போர் முடிந்தவுடன் ராணுவத்தைக் கலைத்ததைப் போலவே, உலகப் போர் முடிந்த பின்னும் அமெரிக்கப் படைகளின் பெரும்பகுதி கலைக்கப்பட்டது. அதாவது, ஊரில் பெரிய வணிகராக இருப்பவர் யாருடனும் சண்டை சச்சரவு இன்றி, அனைவருடனும் இணக்கமாக இருந்து வணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் கவனமாக இருப்பார் அல்லவா? அப்படித்தான், போர் என்பது தங்களுக்குத் தொடர்பில்லாதது மட்டுமல்ல, தேவையில்லாததும்கூட என்பதான நிலைப்பாடு அமெரிக்காவுடையது.

அப்படியான அமெரிக்கா உலகப்போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டவுடன் போர்ச் செலவுகள் – அதாவது படைகளுக்கான செலவு அதிகமாயிருக்கும் அல்லவா? போர் முடிந்ததும் அதனை உடனே குறைக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும், பாராளுமன்றமும் வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே உடனடியாகப் படைகள் குறைக்கப்பட்டன. போரின்போது செலவுகள் கூடுதலாக இருந்தாலும், போர் முடிந்தபின் குறைந்துவிடும். அந்தச் செலவுகூடத் தேவையில்லை என்ற வியாபாரி கணக்குதான் அமெரிக்காவுடையது. அப்படி எவ்வளவு செலவானது? 1920இல் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு சுமார் 2.3 பில்லியன் டாலர்கள். இன்றைய மதிப்புக்கு அதை மாற்றினால் சுமார் 35 பில்லியன் டாலர்கள். இன்றைய பாதுகாப்புச் செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் 1.4 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, இப்போது அமெரிக்கா படைகளுக்காகச் செய்கிற செலவில் 40இல் ஒரு பங்கு! அதற்கே அன்று வீண் செலவு என்று படைகளைக் குறைத்தது. போரில் இறங்கும் வரையான காலத்தில் ஏராளமான ஏற்றுமதிகளைச் செய்து வரலாறு காணாத லாபத்தை ஈட்டியிருந்தாலும்கூட, படைகளுக்காகச் செலவு வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்குத்தான் அமெரிக்காவின் போர் பற்றிய பார்வை இருந்தது.

அது மட்டுமல்ல, போர்கள் தொடர்ந்து நடந்தால் வணிகம் பாதிக்கப்படும் என்பதுதான் அன்றைய அமெரிக்காவின் பார்வை. அதனால்தான் 1919-20இல் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில், இன்னொரு பெரிய (உலக) போர் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் (League of Nations – ஐநாவுக்கு முந்தைய கூட்டமைப்பு) உருவாவதில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் முக்கியப் பங்களித்து, அதற்காக நோபல் பரிசையும் பெற்றார்.

லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பில் உறுப்பினரான, ஆகாத நாடுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பில் கடைசிவரை அமெரிக்கா உறுப்பினராகச் சேரவில்லை. அதற்கும் காரணம் போரைத் தவிர்ப்பதுதான். லீக் ஆஃப் நேஷன்ஸ் உறுப்பு நாடுகளில் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானால், பிற நாடுகளும் அதற்குத் துணையாகப் போராடும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதாவது, அதில் அமெரிக்கா உறுப்பினரானால், மீண்டும் போரிடும் சூழல் உருவாகலாம். எனவே, போர் அறிவிக்கும் உரிமை பாராளுமன்றத்திற்குத்தான் உண்டு என்று கூறி, அதில் உறுப்பினராவதை அமெரிக்கப் பாராளுமன்றம் ஏற்கவில்லை.

அதாவது, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை! போர் வந்தால் வணிகம் பாதிக்கும் என்பதால் போரைத் தடுக்க ஓர் அமைப்பை உருவாக்கலாம். ஆனால், அதன் உறுப்பினர்களுக்குப் பிரச்சினை என்றால் துணைக்குப் போரிட வேண்டும். அதற்கும் தயாராக இல்லை. ஏனென்றால், முதல் அதிபர் வாஷிங்டன் என்ன சொல்லியிருக்கிறார்? ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களிலும், ‘தேவையற்ற’ சண்டைகளிலும் தலையிடாமல் வியாபாரத்தை மட்டும் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

வியாபாரத்தை மட்டும் பார்த்தாலும் பிற நாடுகள் ஏதாவது போரை ஏற்படுத்திவிட்டால் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு இருந்தது. அதனால்தான் பாரிஸ் அமைதி மாநாட்டிலேயே, போரை உருவாக்கிய நாடு என்று ஜெர்மெனிமீது குற்றம் சுமத்தி, அந்நாடு கடற்படையும், வான்படையும் வைத்துக்கொள்ள உரிமை இல்லை, 1 லட்சம் படை வீரர்களுக்குமேல் வைத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையிலேயே சொல்லிவிட்டார்கள். சரி… ஜெர்மெனியைத் தடுத்தாயிற்று, வேறு யாராவது போரை உருவாக்கிவிட்டால்?

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மெனி கையெழுத்திடுவதைச் சித்தரிக்கும் ஓவியம். நடுவில் கையில் பேப்பருடன் இருப்பவர் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன்

அதனால்தான் வாஷிங்டன் கடற்படை மாநாடு என்பதை அமெரிக்காவே ஏற்பாடு செய்தது. அன்றை அமெரிக்க அதிபர் வாரன் ஹார்டிங்-கின் அழைப்பின் பேரில் 1921-22இல் நடைபெற்ற அந்த மாநாட்டில் அன்றைய 5 பெரும் சக்திகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஃப்ரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் எவ்வளவு எடையுள்ள போர்க்கப்பல்கள் வைத்துக்கொள்ளலாம், அனைத்துக் கப்பல்களின் மொத்த எடைக்குக் கட்டுப்பாடு, கப்பல்களில் பொருத்தப்படும் பீரங்கிகளின் குண்டு எத்தனை அங்குலம் இருக்கலாம் என்பதற்குக் கட்டுப்பாடு ஆகியவை ஒப்பந்தமாக்கப்பட்டன. உதாரணமாக, அமெரிக்காவிற்கு 5,25,000 டன்கள் மொத்த எடை, ஒரு கப்பல் 35,000 டன் என்று அனுமதிக்கப்பட்டது என்றால், அவர்கள் 35,000 டன் எடை கொண்ட போர்க்கப்பல்களை அதிகபட்சமாக 15 கப்பல்கள் மட்டுமே வைத்திருக்கலாம் (35,000 × 15 = 525,000). அதை விடுத்து, 10,000 டன் எடையில் 52 போர்க்கப்பல்களை அவர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அந்த ஒப்பந்தத்தின் பெயர் 5 சக்தி ஒப்பந்தம் (Five-Power Treaty).

5 சக்திகளின் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட கடற்படைக் கட்டுப்பாடுகள்

அது மட்டுமல்ல இன்றும் 4 சக்தி ஒப்பந்தம், 9 சக்தி ஒப்பந்தம் ஆகியவையும் செய்யப்பட்டன. பசிஃபிக் கடலில் இருந்த தீவுகள் பலவும் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஃப்ரான்ஸ் ஆகியவற்றின் உடைமைகளாக இருந்தன. அவற்றில் ஒருவரின் உடைமையில் மற்றொருவர் தலையிட்டால் போராகிவிடுமே? அதனால், பசிஃபிக் கடலில் உள்ள ஒவ்வொரு நாட்டின் உடைமையையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்பதுதான் 4 சக்தி ஒப்பந்தம்.

இதற்கடுத்தது 9 சக்தி ஒப்பந்தம். சீனாவில் நிலவிய அரசியல் குழப்பங்களால் சீனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதில் மேற்கத்திய நாடுகளும், ஜப்பானும் போட்டியிட்டன. சீனாவின் பல பகுதிகள் ஜப்பானின் கட்டுப்பாட்டிலிருந்தன. அதனால், சீனக் குடியரசின் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும், சீனாவில் வர்த்தகம் செய்வதில் அனைத்து நாடுகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், எந்தவொரு நாடும் சீனாவில் தங்களுக்கு மட்டும் சாதகமான பிரத்யேக வர்த்தக உரிமைகளையோ அல்லது ஏகபோகப் பகுதிகளையோ உருவாக்கக் கூடாது என்று அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஃபிரான்ஸ், இத்தாலி, சீனா, பெல்ஜியம், நெதர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய 9 நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் 9 சக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.

மொத்தத்தில், ‘இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது’ என்று வடிவேல் சொன்னதைப் போல, தான் போரிடுவதில்லை என்பதுடன், வேறு எந்த வகையிலும் போர் ஏற்பட்டுவிடவே கூடாது என்பதற்க அமெரிக்கா மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டது! இன்னும் சொல்லப் போனால், முதல் உலகப் போரில் ஏராளமாக லாபமீட்டி, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடன் வழங்கியிருந்ததில், அந்தக் கடனைத் திருப்பித்தர ஜெர்மெனி தர வேண்டிய இழப்பீடுகள் குறுக்கிட்டபோது, அவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தது. அப்போதுகூட, உலக நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடுகிற சக்தியாக வளர்ந்துவிட்டதாக அமெரிக்கா கருதவில்லை. அதனை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *