எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 27" கட்டுரை தொடர் | கடன் கொடுத்ததால் கிடைத்த அதிகாரம் | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 27:- கடன் கொடுத்ததால் கிடைத்த அதிகாரம் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 27:-

கடன் கொடுத்ததால் கிடைத்த அதிகாரம்

– அறிவுக்கடல்

அமெரிக்கக் கண்டத்தில் தொல்குடியினரிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலத்தில் விவசாயமும், தொழில்களும் செய்து உலகிற்கே ஏற்றுமதி செய்து அமெரிக்கா என்ற நாடு பொருளாதாரத்தில் வளர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் உலகப்போர் குறுக்கிட்டது. தங்கள் வணிகத்திற்கு இடையூறாக அமெரிக்கா கருதிய அதே உலகப்போர்தான் இன்னும் அதிக ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, கடன்கார நாடாக இருந்த அமெரிக்காவை கடன் தருகிற நாடாகவும் உயர்த்தியது. ஆனாலும், போரே வேண்டாமென்று அமெரிக்கா முயற்சிகள் மேற்கொள்ள என்ன காரணம்?

போர்க்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் விவசாய உற்பத்தி உட்பட முடங்கியது என்பதைப் பார்த்தோம். போர் முடிந்தபின் அந்த எல்லா உற்பத்திகளும் மீண்டும் தொடங்கின. இதனால் அமெரிக்காவின் ஏற்றுமதிகள் குறையத் தொடங்கின. குறிப்பாக விவசாய (உணவு) ஏற்றுமதி மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. ஆயுத உற்பத்திக்கான ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன. வெடிமருந்து, கப்பல் கட்டுமானம் போன்ற துறைகள் கிட்டத்தட்ட தேவையற்றுப் போயின. இவற்றுக்காக மாற்றியமைக்கப்பட்டிருந்த தொழிற்சாலைகள் மீண்டும் பழைய உற்பத்திகளுக்கு மாற வேண்டியிருந்தது.

மறுபுறம் போருக்காக உயர்த்தப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, பல லட்சம் வீரர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் என்று முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இவர்கள் அனைவரும் இப்போது பிற துறைகளில் வேலை வாய்ப்பினைத் தேடும் நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே ஏற்றுமதி குறைந்து, அதனால் உற்பத்தியும் குறைந்த நிலையில், வேலை வாய்ப்பும் குறைந்தது. அப்படிக் குறைந்த வேலை வாய்ப்பினைத் தேடி, மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் படையெடுத்தனர்.

இன்னொருபுறம் போர்க் காலத்தில் ஏற்பட்டிருந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இது உள்நாட்டுத் தேவையைக் குறைத்து, உற்பத்தியை மேலும் குறைத்தது. ஏற்கெனவே போர்க்காலத்தில் உயர்த்தப்பட்டிருந்த கூலி போருக்குப்பின் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நெருக்கடிகளாலும் ஊதியம் மேலும் குறைந்தது. அதனால், சியாட்டிலில் பொது வேலைநிறுத்தம், அமெரிக்கா முழுவதும் எஃகு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பாஸ்டன் காவல்துறையினர் வேலைநிறுத்தம், நிலக்கரித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், நியூஇங்கிலாந்து தொலைபேசித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சிகாகோ ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் என்று வரிசையாக வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. இவற்றில் 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கத் தொழிலாளர்கள் பங்கேற்றுப் போராடினர். இந்த வேலைநிறுத்தங்கள் 1919இன் வேலைநிறுத்த அலை என்றே குறிப்பிடப்படுகின்றன.

1919 அக்டோபர் 1 வேலைநிறுத்தத்தின் போது புரூக்ஸைட் பூங்காவில் கிளீவ்லேண்ட் எஃகுத் தொழிலாளர்களின் மாபெரும் கூட்டம்

வேடிக்கை என்னவென்றால், போரினால் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிகளால் இந்தியா, ஐரோப்பா உட்பட உலகம் முழுவதுமே இத்தகைய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றாலும், அமெரிக்காவுக்கு எதிராக போல்ஷ்விக்குகள் (ரஷ்யக் கம்யூனிஸ்ட்கள்) சதி செய்வதாக அமெரிக்கா அஞ்சி நடுங்கியது. பால்மர் ரெய்டுகள் என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் நாடு கடத்தப்பட்டாலும், மிகப் பெரும்பான்மையினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததுடன், மக்களே எதிர்க்கவும் தொடங்கினர். இப்படியான பின்னணியில்தான், போரில் பெரும் லாபம் ஈட்டியிருந்தாலும், அமைதிக்காலமே தொடர்ந்த வணிகத்துக்கு நல்லது என்று அமெரிக்கா கருதி, போர் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டது.

அதே நேரத்தில் நேச நாடுகளுக்கு, போருக்குக் காரணமான மைய நாடுகள் இழப்பீடு தர வேண்டும் என்று பாரிஸ் அமைதி மாநாடு கூறியது. ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி ஆகியவற்றின் பொருளாதாரங்கள் மிகமோசமாகச் சீரழிந்திருந்ததால், 132 பில்லியன் (13,200 கோடி) தங்க மார்க்குகளை (2025 மதிப்பில் 605 பில்லியன் – 60,500 கோடி அமெரிக்க டாலர்கள்!) ஜெர்மெனி மட்டுமே தர வேண்டுமென்று முடிவாகியது. ஆண்டுதோறும் 2 பில்லியன் தங்க மார்க்குகளுடன், ஜெர்மெனியின் ஏற்றுமதி மதிப்பில் 26 சதவீதத்தையும் தர வேண்டுமென்று 1921இல் உருவான லண்டன் திருப்பிச் செலுத்தும் திட்டம் கூறியது. பணமாக மட்டுமின்றி, நிலக்கரி, மரம், இயந்திரங்கள் போன்ற பொருட்களாகவும் தர அனுமதிக்கப்பட்டது.

எவ்வளவு வேகமாகவும், அதிகமாகவும் பணவீக்கம் ஏற்பட்டது என்பதைக் காட்டும் வரைபடம்

ஆனால் ஜெர்மெனியால் அவ்வளவு தொகையைத் தர முடியாததால் ஜெர்மெனியின் முக்கியத் தொழில்துறை நககரமான ரூர் என்பதை 1923 ஜனவரியில் ஃப்ரான்ஸ் மற்றும் பெல்ஜியம் படைகள் கைப்பற்றின. இதனால் ஏற்கெனவே மோசமாக இருந்த ஜெர்மெனியின் பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி அதி உயர் பணவீக்கம் (Hyperinflation) ஏற்பட்டது. எவ்வளவு பணவீக்கம் என்றால், 1922இல் 160 மார்க்குகளுக்கு விற்கப்பட்ட ரொட்டி (ஒரு லோஃப் ப்ரெட்), 1923இல் 20 கோடி மார்க்குகளுக்கு விற்கப்படும் அளவுக்குப் பணவீக்கம் ஏற்பட்டது. இதனால், புதிதாக ரெண்ட்டன்மார்க் என்ற நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1923 நவம்பரில் ஒரு லட்சம் கோடி பழைய பேப்பியர் மார்க்குகளுக்கு ஒரு ரெண்ட்டன்மார்க் என்று மாற்றித் தருமளவுக்கு ஜெர்மெனியின் பணம் மதிப்பிழந்து போயிருந்தது.

50 ட்ரில்லியன் அதாவது 50 லட்சம் கோடி மார்க் நோட்டு – ஜெர்மானிய பில்லியானென் என்பது ட்ரில்லியன்

ஜெர்மெனியின் அந்தப் பொருளாதார நெருக்கடி அமெரிக்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. உலகப் போருக்காக ஐரோப்பிய நாடுகள் ஜெர்மெனியிடம் கடன் பெற்றிருந்தன என்று முன்பே பார்த்தோம். ஜெர்மெனி இழப்பீடு தராததால் அந்தக் கடனைத் திருப்பித் தர முடியவில்லை என்று அந்த நாடுகள் கூறின. அதாவது, ஜெர்மெனியிடமிருந்து வாங்கித் தருகிற பொறுப்பு அமெரிக்காவிடம் மறைமுகமாக வந்தது.

அப்படியான நிலையில்தான், ஜெர்மெனியிடமிருந்து எப்படி வசூலிப்பது என்று முடிவு செய்ய 1924இல் அமைக்கப்பட்ட குழுவிற்கு அமெரிக்கரான சார்லஸ் டாவ்ஸ் (Charles G. Dawes) தலைவராக்கப்பட்டார். அக்குழு உருவாக்கிய திட்டம் டாவ்ஸ் திட்டம் என்றே அழைக்கப்படுகிறது. அதன்படி, அமெரிக்கா ஜெர்மெனிக்குக் கடன் தரும், அதை வாங்கி ஜெர்மெனி ஐரோப்பிய நாடுகளின் இழப்பீட்டுத் தவணையைத் தரும், அதை வாங்கி அந்த நாடுகள் அமெரிக்காவின் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள் என்பதுதான் திட்டம். ‘அதுக்கு பருத்தி மூட்டை கோடவுன்லயே இருந்திருக்கலாமே’ என்று தோன்றினாலும், ஜெர்மெனிக்குக் கடன் வழங்கியதில் அமெரிக்காவுக்கு வட்டியும் வரும், ஐரோப்பிய நாடுகளின் கடனும் திரும்ப வரும் என்று ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பதுதான் அமெரிக்காவின் கணக்கு. ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே’ என்பதை அமெரிக்கா என்றுமே தவறவிட்டதில்லை. அந்தக் கடன்களுக்கு உத்தரவாதமாக ஜெர்மன் ரயில்வேயும், அதன் மத்திய வங்கியான ரீச்ஸ்பேங்கும் கடன் வழங்கும் நாட்டின் மேற்பார்வையின்கீழ் கொண்டுவரப்பட்டன. அப்போது ஏற்பட்ட போர்ப் பதற்றத்தைத் தணித்ததால், டாவ்சுக்கு 1925இல் அமைதிக்கான நோபல் பரிசும் கிடைத்தது.

கடன்களைப் பெற ஜெர்மெனி வெளியிட்ட பத்திரம்

இவற்றால் ஜெர்மன் பொருளாதாரம் சற்று மீண்டது. அதே நேரத்தில் அமெரிக்கக் கடன்களைச் சார்ந்திருக்கிற நிலை ஜெர்மெனிக்கு ஏற்பட்டது. இந்தத் திட்டம் பெரும்பாலும் அமெரிக்க தனியார் வங்கிகளின் குறுகிய காலக் கடன்களையே நம்பியிருந்தது. 1929இல் அமெரிக்காவில் பங்குச் சந்தை நெருக்கடி ஏற்பட்டபோது அமெரிக்க வங்கிகள் பணத்தைத் திரும்பக் கேட்டன. அத்தோடு இந்த டாவ்ஸ் திட்டம் முடிவுக்கு வந்தது.

அந்தச் சிக்கலைத் தீர்க்க 1929இல் அமைக்கப்பட்ட குழுவிற்கும் ஓவன் யங் (Owen D. Young) என்ற அமெரிக்கரே தலைவராக்கப்பட்டார். அந்தக் குழுவின் பரிந்துரை யங் திட்டம் என்றழைக்கப்படுகிறது. அது கடனில் 20 சதவீதத்தைக் குறைத்ததுடன், அதனை 59 ஆண்டுகளுக்கு (1988 வரை) செலுத்தலாம் என்றும் மாற்றியமைத்தது. அந்தத் தவணைகளைக் கையாளுவதற்காகவே பேங்க் ஆஃப் இண்ட்டர்நேஷனல் செட்டில்மெண்ட் (BIS) என்பதும் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டு ஜெர்மெனியின் பொருளாதாரம் மோசமானதால், இத்திட்டமும் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1931இல் அனைத்து பன்னாட்டு இழப்பீடுகளையும், கடன் தவணைகளையும் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் அறிவித்தது ஹூவர் மாரட்டோரியம் என்றழைக்கப்படுகிறது. அதாவது ஐரோப்பிய நாடுகளின் கடனை அமெரிக்காவும் கேட்காது, அந்த நாடுகளும் ஜெர்மெனியிடம் இழப்பீட்டுத் தவணையைக் கேட்கக்கூடாது. அமெரிக்கா விட்டுக்கொடுக்கிற தொகை சிறியதாகவும், பிற நாடுகள் விட்டுக்கொடுக்க வேண்டிய தொகை அதிகமாகவும் இருந்தாலும், அதுவும் ஒரு தீர்வாகக் கருதப்பட்டது. அப்படியும் பிரச்சினை தீராததால், 1932இல் நடைபெற்ற லோசேன் மாநாட்டில் (Lausanne Conference) இழப்பீட்டை வெறும் 3 பில்லியன் மார்க்குகளாகக் குறைக்கப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஐரோப்பிய நாடுகளின் கடனை அமெரிக்கா குறைத்தால்தான் இழப்பீடு குறைக்கப்படுவதை ஏற்க முடியும் என்று அந்த நாடுகள் கூறிவிட்டதால் இந்தத் திட்டமும் தோல்வியுற்றது.

ஹூவர் மாரட்டோரியம் – அமெரிக்கா விட்டுக்கொடுப்பது குறைவாகவும், பிற நாடுகள் விட்டுக்கொடுக்க வேண்டியது அதிகமாகவும் இருப்பதைக் காட்டும் படம்

இதற்கிடையில் ஜெர்மெனியின் ஆட்சியாளராகியிருந்த ஹிட்லர் ஒரு காசுகூடத் தரமுடியாது என்று அறிவித்துவிட்டார். யங் குழுவால் 112 பில்லியன் மார்க்குகளாகக் குறைக்கப்பட்டிருந்ததில் அதுவரை ஜெர்மெனி செலுத்தியிருந்த 21 பில்லியன் மார்க்குகள் போக எஞ்சியிருந்த 91 பில்லியன் மார்க்குகளை மட்டுமின்றி, டாவ்ஸ் மற்றும் யங் திட்டங்களுக்காகத் தனியார் வங்கிகளுக்குப் பத்திரங்கள் அளித்துப் பெறப்பட்டிருந்த கடன்களையும் திருப்பித் தர முடியாது என்று ஹிட்லர் அறிவித்துவிட்டார். இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜெர்மெனியால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மறுசீரமைப்புக்காகத் தரப்பட்ட கடன்களுடன், இந்த (குறிப்பாக அமெரிக்க) வங்கிகளின் கடன்களையும் திருப்பித்தர வேண்டுமென்று 1953இல் லண்டன் கடன் ஒப்பந்தம் உருவானது. அந்தத் தொகையிலும் 50 சதவீதத்தைத்தான் தரமுடியும் என்றும், அதையும் இரு ஜெர்மெனிகளும் இணைந்தபின்தான் தர முடியும் என்றும் மேற்கு ஜெர்மெனி சொல்லிவிட, அதன்படியே 1990இல் தொடங்கி, 2010இல் செலுத்தி முடித்தது தனிக்கதை.

ஆனால், இந்த அனைத்து நடவடிக்கைகளிலும், கொடுத்த கடனை வசூலிக்கிற நோக்கம் மட்டுமே அமெரிக்காவுக்கு இருந்தது என்பது சற்று கவனமாகப் பார்த்தால் புரியும். அதற்கும் மேலாக, பொருளாதார அடிப்படையிலோ, ராணுவ அடிப்படையிலோ ஆதிக்கம் செலுத்துகிற முயற்சி இல்லை என்பதும் புரியும். ஆனால், கடன் கொடுத்தவர் கடனைத் திரும்பப் பெற குரல் உயர்த்தி மிரட்டக்கூட முடியும் என்பதைப் போல, கடனை வசூலிப்பதில் தனது அதிகாரத்தைக் காட்ட முடியும் என்ற ஒரு புதிய பலத்தை அமெரிக்கா உணர்ந்தது . ஆதிக்க சக்தியாகப் பின்னாளில் அமெரிக்கா மாறுவதில் இது ஒரு முக்கியப் படியாக அமைந்தது.

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *