வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 28:-
ராணுவம் அல்ல, முதலாளிகளின் அடியாள் படை!
– அறிவுக்கடல்
கடன்களை வசூலிப்பதில் கடுமை காட்டும் வாய்ப்பு என்பது ஆதிக்கத்தை நோக்கிய படிகளில் ஒன்றாக அமெரிக்காவுக்கு அமைந்தது என்று முந்தைய பகுதியில் பார்த்தோம். அதுவரை அமெரிக்கா பன்னாட்டு உறவுகளில் பெரிய தாக்கம் செலுத்தவில்லை என்று சொல்வதை மறுக்கிற பார்வைகளும் உண்டு. அப்படி மறுக்கிறவர்கள் 1823இல் மன்ரோ கொள்கை, 1898இல் ஃஸ்பானியப் போர், 1899இல் ஓப்பன் டோர் பாலிசி, 1905இல் ரஷ்ய-ஜப்பானியப் போரை முடிக்கத் தலையிட்டது போன்றவற்றைக் குறிப்பிடுவார்கள்.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த பல தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் (உதாரணமாக: மெக்சிகோ, கொலம்பியா, அர்ஜென்டினா) 1810 மற்றும் 1820-களுக்கு இடையில் புரட்சிகள் மூலம் தங்களின் சுதந்திரத்தை அறிவித்தன. ஐரோப்பாவில் பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து ‘புனிதக் கூட்டணி’ (Holy Alliance) என்ற அமைப்பை உருவாக்கின. இந்த நாடுகள் ஸ்பெயினுக்கு உதவி செய்து, மீண்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளை அடிமைப்படுத்த முயலக்கூடும் என்ற அச்சம் அமெரிக்காவிற்கு இருந்தது. ரஷ்யப் பேரரசு வட அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியான அலாஸ்கா மற்றும் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் தனது எல்லையை விரிவுபடுத்த முயன்றதும் அமெரிக்காவை கவலையடையச் செய்தது. அப்படியான சூழலில், புதிய உலகத்தில்(அமெரிக்கக் கண்டம்), பழைய உலகத்தினர்(ஐரோப்பிய நாடுகள்) ஆக்கிரமித்துக் குடியேற்றங்கள் உருவாக்குவதை, அதற்குமேலும் அனுமதிக்க முடியாது என்றும், இருக்கிற குடியேற்றங்களுக்கு தாங்கள் இடையூறு செய்யப்போவதில்லை, அதைப்போல, விடுதலைப் பெற்றவற்றிற்கு பிறர் இடையூறு செய்யக்கூடாது என்றும் 1823இல் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ பேசியது, மன்ரோ கொள்கை என்றே அழைக்கப்படுகிறது.
மன்ரோ அப்படிப் பேசிய காலத்தில் அமெரிக்கா என்ற நாடு முழுமையான வடிவத்தை எட்டியிருக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்திலிருந்த பிற காலனிகளும் – பின்னாளில் கனடாவான பகுதி உட்பட – தங்களுடன் இணையப் போகிறவை என்றும், காலனி ஆகாத – தொல்குடியினரிடம் இருந்த – பகுதிகளும் தங்களுக்கே என்றும் அமெரிக்கா கருதிக் கொண்டிருந்த காலம் அது. அதனால்தான், ஐரோப்பிய நாடுகள் மேலும் அமெரிக்கக் கண்டத்திற்குள் வரக்கூடாது என்பதை மன்ரோ கொள்கை கூறியது.

அடுத்து, 400 ஆண்டுகளாக கியூபா ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் 1898இல் ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்வதைப்போல 12 மடங்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம் அமெரிக்காவுக்குச் சென்றது என்பது மட்டுமில்லை, அதன் இறக்குமதியிலும் 40 சதவீதத்தை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தது. அப்படியான சூழலில்தான் கியூப விடுதலைப் போருக்கு ஆதரவாக, அதாவது, தனது வணிக நலன்களைக் காத்துக்கொள்வதற்காக ஸ்பெயினுடன் அமெரிக்கா போரிட்டது. போரில் வெற்றி பெற்றதால் குவாம், புவெர்ட்டோ ரீக்கோ, ஃபிலிப்பைன்ஸ் ஆகியவை அமெரிக்காவுக்குக் கிடைத்தன.
அந்த காலகட்டத்தில் நீராவி மூலம் இயங்கிய கப்பல்களுக்கு எரிபொருளாக நிலக்கரி மிகவும் அவசியமாக இருந்தது. கலிஃபோர்னியாவிலிருந்து ஆசியாவை நோக்கிச் செல்லும் அமெரிக்க வணிகக் கப்பல்கள் நடுவழியில் நிலக்கரி நிரப்பிக் கொள்ளவும், பழுதுபார்ப்புகளைச் செய்யவும் பசிபிக் பெருங்கடலின் மையத்தில் இருந்த குவாம் முக்கியமாக இருந்தது. அதைப் போலவே, கரீபியக் கடலில் புவெர்ட்டோரீக்கோ முக்கியமாக இருந்தது. ஃபிலிப்பைன்சும் இப்படியான வணிக முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருந்தது.
அடுத்து, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகள் சீனாவைத் தங்களுக்குள் ‘செல்வாக்கு மண்டலங்களாக’ (Spheres of Influence) பிரித்து வைத்திருந்தன. அப்படியான நிலையில், சீனாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களிலும் அனைத்து நாடுகளும் சமமான வணிக உரிமைகளைப் பெற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஜான் ஹே 1899 செப்டம்பரில் அறிவித்ததுதான் ஓப்பன் டோர் பாலிசி. பிரச்சினை என்னவென்றால், தாமதமாக ஆசிய வர்த்தகத்திற்குள் நுழைந்த அமெரிக்காவிற்கு சீனாவில் தனியாக எந்தப் பகுதியும் கிடைக்கவில்லை. இதனால் சீன சந்தையை மற்ற நாடுகள் தங்களுக்குள் முடக்கிவிடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா இக்கொள்கையைக் கொண்டுவந்தது.

ஆசியாவில் ரஷ்யாவும் ஜப்பானும் மஞ்சூரியா மற்றும் கொரியாவைக் கைப்பற்றப் போரிட்டன. இதில் ஜப்பான் வெல்லும் சூழல் நிலவியது. அப்போதைய அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் இரு நாடுகளையும் அமெரிக்காவுக்கு அழைத்து அமைதி ஒப்பந்தம் (Treaty of Portsmouth) செய்து வைத்தார். அமெரிக்கா உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு ‘நடுவராக’ செயல்பட்ட முதல் நிகழ்வு இதுதான். ஆனால், அப்படி நடுவராகச் செயல்படும் பெரிய சக்தியாக மாறும் முயற்சிகூட அன்றைய அமெரிக்காவிடம் இல்லை. உண்மையான நோக்கம் என்னவென்றால், கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவோ அல்லது ஜப்பானோ ஒரு மாபெரும் சக்தியாக மாறுவது, சீனாவில் அனைத்து நாடுகளுக்கும் சமமான வணிக உரிமை என்று அமெரிக்கா ஊருவாக்கிய ஓப்பன் டோர் பாலிசியை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்துவிடும். அதாவது, சீனாவில் அமெரிக்காவின் வணிகத்தைப் பாதுகாப்பதற்காக ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் சமரசம் செய்து வைத்தது அமெரிக்கா.
ஆக ஒரு வணிக நிறுவனம் கடல் கடந்து தொழிற்சாலைகளோ, விற்பனை மையங்களோ வைத்துக்கொள்வதைப் போலத்தான் 1898இல் பெற்ற குவாம், ஃபிலிப்பைன்ஸ் போன்ற பகுதிகளை அமெரிக்கா பார்த்தது. மன்றோ கொள்கை, சீனா பற்றிய ஓப்பன் டோர் பாலிசி, ரஷ்ய-ஜப்பான் அமைதி முயற்சி என்று எதிலுமே பெரிய ஆதிக்க சக்தி, நாடு பிடித்தல் போன்ற நோக்கமெல்லாம் அமெரிக்காவுக்கு அன்று இல்லை. வணிகம் மட்டும்தான் நோக்கமாக இருந்தது.
ஆனால், மன்ரோ கொள்கையில் 1904ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான தியோடார் ரூஸ்வெல்ட் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும் என்ற அவரது அறிவிப்பு ரூஸ்வெல்ட் திருத்தம் என்றே அழைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நிகரகுவா, ஹைட்டி, டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளே நிறுத்தப்பட்டன. மேலோட்டமாகப் பார்த்தால் பன்னாட்டு விவகாரங்களில் அமெரிக்கத் தலையீடு அப்போதே தொடங்கிவிட்டதாகத் தோன்றினாலும் அதுவும் வணிக நடவடிக்கைதான்.
ஏனென்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க முதலாளிகள் ஏராளமான நிறுவனங்களை வைத்திருந்தனர். அந்த நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக யுனைடெட் புரூட் கம்பெனி என்ற ஒரே ஒரு அமெரிக்க நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதிலும் இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழைப்பழத் தோட்டங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நிகரகுவா, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளின் அரசாங்கங்களை விட இந்த நிறுவனம் அதிகப் பணம் படைத்ததாக இருந்தது. தங்களுக்குச் சாதகமாக வரி விலக்கு அளிக்கும் மற்றும் தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கும் அரசாங்கங்களை மட்டுமே இத்தகைய அமெரிக்க நிறுவனங்கள் ஆதரித்தன. அதற்குப் பணியாத அரசுகளை அமெரிக்க ராணுவத்தின் உதவியோடு கவிழ்த்தன. யுனைடெட் புரூட் கம்பெனியின் நலனைப் பாதுகாப்பதற்காக, சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவ ஆட்சியை அறிவித்தது ஹாண்டுராஸ் அரசு. நிலையற்ற அரசுடன், பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தைக்கொண்ட நாட்டைக் குறிப்பிடும் வாழைக் குடியரசு என்ற பதமே இதை உதாரணமாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டது.
அதைப் போலவே, ஹைட்டி, நிகரகுவா மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற நாடுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தன. கடனை வசூலிப்பதாகக் கூறி, இந்த நாடுகளின் சுங்க அலுவலகங்களை (Customs Houses) அமெரிக்கா தன் வசப்படுத்தியது. நாட்டின் முக்கிய வருவாயான இறக்குமதிஃஏற்றுமதி வரிகள் நேரடியாக அமெரிக்க வங்கிகளுக்குச் சென்றன. இதைத் தக்கவைக்கவே ராணுவம் அனுப்பப்பட்டது.
அடுத்து, பனாமா கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்ட ஃப்ரெஞ்சு நிறுவனம் மலையை உடைத்துத் தோண்டுவதில் ஏற்பட்ட சிரமங்கள், ஏராளமான உயிரிழப்புக்களால் 1889இல் திவாலானது. அப்போது கொலம்பியாவின் ஒரு மாநிலமாக பனாமா இருந்ததால், ஆண்டுதோறும் ஒரு கோடி டாலர் தருவதாகக்கூறி, ஒரு புதுப்பிக்கத்தக்க குத்தகை ஒப்பந்தத்தை, 1903இல் கொலம்பியாவுடன் அமெரிக்கா செய்துகொண்டது. இதனை பனாமா மக்கள் ஏற்காத நிலையில், அவர்களால் ஆட்சிக்கு ஆபத்து என்று கொலம்பியா அமெரிக்காவிடம் உதவி கேட்டது. ஆனால், கொலம்பிய அரசின் படைகளை முடக்கி, பனாமா மக்கள் போராட்டத்துக்கு உதவிய அமெரிக்கா, பனாமாவைத் தனி நாடாக்கியது. அப்படி உருவாக்கிய பனாமா கால்வாய் வழியாக நடக்கும் சர்வதேச வர்த்தகத்தைப் பாதுகாப்பது அமெரிக்காவிற்கு மிக முக்கியமாக இருந்தது. பனாமா கால்வாயைச் சுற்றியுள்ள கியூபா, ஹைட்டி, நிகரகுவா போன்ற நாடுகளில் அரசியல் நிலையின்மை ஏற்பட்டால், அது அமெரிக்காவின் கடல்வழி வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதால் அமெரிக்க ராணுவம் அங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
அத்துடன் கியூபாவின் சர்க்கரை மற்றும் புகையிலை தொழில்கள், மற்றும் பிற நாடுகளின் காபி, ரப்பர் போன்ற இயற்கை வளங்களை அமெரிக்க சந்தைக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருந்தது. தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டோ அல்லது நிலச் சீர்திருத்தம் கோரியோ போராடினால், அமெரிக்கப் முதலீடுகளைப் பாதுகாக்க அமெரிக்க ராணுவம் உடனடியாகத் தலையிட்டது.
கவனித்துப் பார்த்தால், இந்தியாவில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனிகூட ஒரு கட்டத்தில் வரி வசூல், நிர்வாகம் என்று ஆட்சியையே கைப்பற்றியது. ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ராணுவத்தையே நிறுத்திய அமெரிக்கா, கடன் வாங்கியவரின் கடைக்குச் சென்று அங்கு விற்பனையில் வருகிற பணத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளும் வட்டிக் கடைக்காரரைப் போல, வசூலாகும் வரியை தன் கடனுக்கு எடுத்துக்கொள்வது, தன் நாட்டு நிறுவனத்துக்கோ முதலாளிக்கோ பிரச்சினை என்றால் அடியாட்களைப் போல ராணுவத்தைப் பயன்படுத்துவது என்றுதான் இருந்ததே தவிர, அந்த நாடுகளின் இறையாண்மையை நேரடியாகக் கைப்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், வணிகத்துக்கு வந்த கம்பெனியினால் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா விடுதலைக்காக மிக நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், 1930களில் அமெரிக்கா மீதான எதிர்ப்பால் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் ஜெர்மெனியின் பக்கம் போய்விடுமோ என்ற அச்சம் வந்தவுடனேயே குட் நெய்பர் பாலிசி என்று சொல்லி அந்த நாடுகளிலிருந்த அமெரிக்க ராணுவத்தை திரும்ப அழைத்துக் கொண்டது.
மொத்தத்தில் அமெரிக்கா போர் வேண்டாம் என்று சொன்னாலும், போரிட்டாலும், பிற நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பினாலும் அனைத்தும் வணிகத்திற்காகவே இருந்தனவே தவிர, ஆதிக்க சக்தியாக மாறுகிற எந்த முயற்சியும் அன்றைய அமெரிக்காவிடம் இல்லை!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

