வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 29:-
உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா!
– அறிவுக்கடல்
முதல் உலகப் போர் வரை, இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டாம் உலகப்போர்வரை ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை. ஆனாலும், இரண்டு உலகப் போர்களுக்கிடையில் பன்னாட்டு உறவுகள் தொடர்பான பல நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. போர்கள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ், நாடுகளின் படைகளைக் கட்டுப்படுத்த கூட்டப்பட்ட வாஷிங்டன் கடற்படை மாநாடு, ஐரோப்பிய நாடுகளின் கடன்களில் உதவ உருவாக்கப்பட்ட டாவ்ஸ் திட்டம், யங் திட்டம், ஹூவர் மாரட்டோரியம் போன்றவற்றை முந்தைய பகுதிகளிலேயே பார்த்தோம். அப்படி இரண்டு உலகப்போர்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும்கூட, இன்னொரு பெரிய போர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தன. ஏனென்றால், முதல் உலகப்போரில் ஏராளமாகச் சம்பாதித்திருந்தாலும், போர் முடிந்தபின் ஏற்பட்ட நெருக்கடிகளைத்தான் அமெரிக்கா பெரிதாகக் கருதியது. அதனால், அமைதிக்கால வணிகம்தான் சிறந்தது என்று அது நம்பியது.
மீண்டும் போர் வரக்கூடாது என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய கவலையாக இருந்ததைப் போன்றே ஃப்ரான்சுக்கும் ஜெர்மெனியைப் பார்த்து அச்சமிருந்தது. (முதல்) உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் அது மீண்டும் எழுச்சி பெற்று தங்கள் நாட்டின் மீது படையெடுக்கலாம் என்று ஃபிரான்ஸ் அஞ்சியது. அதிகாரமற்ற லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு செயல்பாடின்றியும் இருந்ததால், ஃபிரான்ஸ் தனது பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவுடன் ஒரு இருதரப்பு (Bilateral) பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்பியது. 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் அரிஸ்டைட் ப்ரையண்ட் (Aristide Briand), ஃபிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு ‘போரை ஒரு தீர்வாகப் பயன்படுத்த மாட்டோம்’ என்று ஒருவருக்கொருவர் உறுதியளிக்கும் ஒப்பந்தத்தை முன்மொழிந்தார். இதன் மூலம் பிரான்ஸ் மீது தாக்குதல் நடந்தால் அமெரிக்காவின் ஆதரவைப் பெறலாம் என்பது அவரது கணக்காக இருந்தது.
வாஷிங்டன் காலத்திலிருந்து ஐரோப்பிய விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்து வந்த அமெரிக்கா, ஃபிரான்சுடன் மட்டும் ஒப்பந்தம் செய்தால், அது ஐரோப்பிய அரசியலில் தங்களைச் சிக்க வைக்கும் என்று கருதியது. அதைத் தவிர்க்க அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் பிராங்க் பி. கெல்லாக் (Frank B. Kellogg), இரு நாடுகளுக்கு இடையேயான அந்த ஒப்பந்தத்தை, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாக (Multilateral Pact) மாற்ற முன்மொழிந்தார். 1928 ஆகஸ்ட் 27 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அமைதிக்காக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக பிராங்க் பி. கெல்லாக்கிற்கு 1929 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. (அரிஸ்டைட் ப்ரையண்டிற்கு ஏற்கனவே 1926-ல் லோகார்னோ ஒப்பந்தத்திற்காக (Locarno Treaties) நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது).

தொடக்கத்தில் ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகள் இதில் கையெழுத்திட்டன. பின்னர், உலகெங்கிலும் உள்ள சுமார் 62 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தன. ஆனால், தற்காப்புக்காக (Self-defense) போர் தொடுப்பதற்கு இந்த ஒப்பந்தத்தில் அனுமதி இருந்ததைப் பயன்படுத்தி பல நாடுகள் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தின. ஒப்பந்தத்தை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவர்களுக்குத் தண்டனை வழங்கவோ எந்தவொரு வலுவான வழிமுறையும் இதில் இல்லை. இதன் விளைவாக, இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில ஆண்டுகளிலேயே சீனாவின் மஞ்சூரியாவின் மீதான ஜப்பானியப் படையெடுப்பு, அதன்பின்னர் 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றால் இந்த ஒப்பந்தம் முழுமையாகத் தோல்வியடைந்தது தனிக்கதை. ஆனால், பெரிய போரும் வந்துவிடக்கூடாது, அதைத் தடுக்க ஃப்ரான்சுடன் உடன்படிக்கை செய்து, ஃப்ரான்சுக்காக அமெரிக்கா போரிடும் நிலையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் அணுகுமுறை, போர்களைத் தவிர்ப்பதில் அமெரிக்கா எவ்வளவு முனைப்பாக இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன.
இந்த கெல்லாக் ப்ரையண்ட் ஒப்பந்தத்தில் ஜப்பானும் கையெழுத்திட்டிருந்தது. ஆனாலும், 1931 ஆம் ஆண்டில் ஜப்பானிய இராணுவம் சீனாவின் மஞ்சூரியா பகுதி மீது திடீர் படையெடுப்பை நடத்தியது. மஞ்சூரியாவைக் கைப்பற்றிய ஜப்பான், அங்கு தன் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘மஞ்சுகுவோ’ என்ற ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கியது. இன்றைய அமெரிக்காவாக இருந்தால், உடனே தன் படைகளை அங்கே அனுப்பியிருக்கும். ஆனால், அன்றைக்கிருந்தது வேறு அமெரிக்கா! ‘நிம்மதியா வியாபாரத்தைப் பார்க்க விடாமல் ஏதாவது ஒரு நாடு இன்னொன்றின் மேல் போர் தொடுத்து பிரச்சினை செய்கிறதே’ என்பது அன்றைய அமெரிக்காவின் மைண்ட் வாய்ஸ் ஆக இருந்திருக்கும்!

அதனால் என்ன செய்தது தெரியுமா? 1932 ஜனவரி 7 அன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹென்றி எல். ஸ்டிம்சன் (Henry L. Stimson) ஜப்பான் மற்றும் சீனாவுக்கு ‘கெல்லாக்–ப்ரையண்ட் ஒப்பந்தம் அல்லது ஒன்பது பெரும் சக்திகளின் ஒப்பந்தத்திற்கு முரணாக ஏற்படுகிற எந்த நிலைமை அல்லது மாற்றத்தையும் அமெரிக்கா அங்கீகரிக்காது’ என்ற ஒரே ஒரு குறிப்பை மட்டும் அனுப்பினார். வன்முறையால் ஏற்பட்ட பிரதேச மாற்றங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று அறிவிப்பதும், சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தங்களை மதிக்க வலியுறுத்துவதும்தான் அமெரிக்காவின் நோக்கங்கள். ஆனால், அதையும் இராணுவ அல்லது பொருளாதார நடவடிக்கை இல்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்க மட்டும்தான் அன்றைய அமெரிக்காவால் முடிந்தது. இன்றைய அமெரிக்காவுடன் ஒப்பிட்டால், எவ்வளவு பெரிய மாற்றம் என்பது புரியும்!
அதைத் தொடர்ந்து லீக் ஆஃப் நேஷன்ஸ் அவையும் இதையொத்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. என்ன நடந்திருக்கும்? ஜப்பான் மன்சுகுவோவிலிருந்து வெளியேறவில்லை. மாறாக லீக் ஆஃக் நேஷன்ஸ்-இலிருந்து வெளியேறிவிட்டது. அவ்வளவுதான் அன்றைய அமெரிக்காவின் ‘இராஜதந்திர’த்திற்கு இருந்த மரியாதை! (“இன்னும் பயிற்சி வேண்டுமோ?” என்ற 23ஆம் புலிகேசியின் நிலைதான்!)
இதற்கிடையில், 1920-களில் அமெரிக்கா அடைந்த அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி (Roaring Twenties) முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் ஒரு மாபெரும் வீழ்ச்சியாகியிருந்தது. முதல் உலகப்போருக்குப் பின் அமெரிக்கத் தொழிற்சாலைகளும் விவசாயமும் அசுர வேகத்தில் பொருட்களை உற்பத்தி செய்தன. ஆனால், உழைக்கும் மக்களின் ஊதியம் அதற்கேற்ப உயரவில்லை. தேங்கிய பொருட்களை வாங்க ஆளில்லாததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையிழப்பு அதிகமானது.
1920-களில் அமெரிக்கர்கள் தங்கள் சேமிப்பைத் தாண்டி, வங்கிகளில் கடன் பெற்றுப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர். பங்கின் உண்மையான மதிப்பை விட ஊகத்தின் அடிப்படையில் விலை உயர்த்தப்பட்டது. அக்டோபர் 1929-ல் பங்குச்சந்தை சரிந்தபோது (Wall Street Crash), பல லட்சம் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் திவாலாகினர். பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தபோது, சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டிய அமெரிக்க மத்திய வங்கி தலைகீழாகச் செயல்பட்டு, வட்டி விகிதங்களை உயர்த்திப் பணப்புழக்கத்தைக் குறைத்தது. இதனால் சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழிந்தன. பங்குச்சந்தைச் சரிவாலும் விவசாயக் கடன் வசூலாகாததாலும் அமெரிக்காவில் 9,000-க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகின. மக்களின் வாழ்நாள் சேமிப்புகள் அனைத்தும் காற்றில் கரைந்து போயின.
இப்படியான பின்னணியில், உள்நாட்டுத் தொழில்களைக் காப்பாற்றுவதாகக்கூறி ஸ்மூட்-ஹாவ்லி சுங்கவரிச் சட்டம் (Smoot-Hawley Tariff Act, 1930) என்ற பெயரில், இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரலாறு காணாத வரிகளை விதித்தது. இதற்குப் பதிலடியாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரிகளை உயர்த்தின. இதனால் சர்வதேச வர்த்தகம் சுமார் 66% சரிந்தது. மந்தநிலை உலகம் முழுவதும் பரவி உலகப் பெருமந்தமாகியது (Great Depression). பொருளாதார மந்தநிலை உலக நாடுகளை வறுமையிலும் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் தள்ளியபோது, மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து சர்வாதிகாரிகளை ஆதரிக்கத் தொடங்கினர்.
முதல் உலகப்போரின் இழப்பீட்டைச் செலுத்துவதற்கு ஜெர்மனி அமெரிக்காவின் கடனை முழுமையாக நம்பியிருந்தது. பெருமந்தத்தால் அமெரிக்கா தனது கடன்களைத் திரும்பக் கேட்டபோது, ஜெர்மன் பொருளாதாரம் முற்றிலுமாகக் சரிந்தது. வேலையின்மை 30%ஐத் தொட்டது. இந்த வறுமையையும் கோபத்தையும் பயன்படுத்தியே, ‘வேலையும் ரொட்டியும் தருவேன், இழந்த பெருமையை மீட்பேன்’ என உறுதியளித்து ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்க ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் ராணுவ உற்பத்தியைக் கையில் எடுத்தன. போர் விமானங்கள், டாங்கிகள், வெடிமருந்துகள் எனப் பெரிய அளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினர். இது பின்னாளில் நேரடியாக உலகப் போருக்கு வழிவகுத்தது.
ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய ஃபாசிச நாடுகள் எதிர்காலத்தில் உலகப் போரை நோக்கிச் செல்லலாம் என்றும், அது தங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் அமெரிக்கா 1930களின் ஆரம்பத்திலேயே ஆழமாக அஞ்சியது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்த அமெரிக்க முதலாளிகளையும், தொழில்களையும் பாதுகாப்பதற்காக அமெரிக்கா படைகளை நிறுத்துவது உள்ளிட்ட தலையீடுகளை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செய்ததை முந்தைய பகுதியில் பார்த்தோம். ஆனால், உலகப் போர் வந்துவிட்டால், அப்படியான அண்டை நாடுகளின் ‘தயவு’ தேவைப்படும் என்று கருதி, அங்கிருந்த படைகளை 1930களில் தொடக்கத்தில் அமெரிக்கா தானாகவே திரும்ப அழைத்துக்கொண்டது. நல்ல அயலவர் கொள்கை (Good Neighbor Policy) என்றழைக்கப்படும் அந்த நடவடிக்கை பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

