வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 3:-
வரலாறு முழுவதும் வஞ்சகங்கள்
– அறிவுக்கடல்
அமெரிக்கத் தொல்குடியினரிடம் தோற்று, ஒரு குடியேற்றத்தையே (காலனி) தொலைத்துவிட்டு (இன்றுவரை) தேடுகிற அமெரிக்கா என்று கடந்த பகுதியில் பார்த்தோம். அப்படித் தொடக்கத்தில் அமெரிக்காவுக்குப் போனவர்கள் புதிய நிலப்பரப்பைக் கண்டுப்பிடிக்கப் போனவர்கள் என்பதால் படைகள் இல்லாமலிருந்திருகும் என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அங்கு நிரந்தரக் குடியேற்றங்களை இங்கிலாந்து ஏற்படுத்தியபோதுகூட அங்கு பாதுகாப்புக்கு ராணுவமெல்லாம் இல்லை. அமெரிக்க மண்ணை ஆக்கிரமித்ததால் அம்மண்ணின் தொல்குடியினரான செவ்விந்தியர்கள் இந்த ஆங்கிலேயர்களைத் தாக்குவது தொடர்ச்சியாக நடந்த நிலையில் அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளக்கூட எந்த ஏற்பாடும் இல்லாமலிருந்தவர்கள்தான் இன்று உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறவர்கள்.
![]()
செவ்விந்தியர்களைச் சமாளிக்க முடியாத நிலையில் குடியேற்றங்கள் ஒவ்வொன்றாக தங்களுக்கென்று குடிப்படைகளை உருவாக்கிக்கொண்டன. குடிப்படை என்றால் குடிமக்களே படையாகவும் செயல்பட்டுக்கொள்வது – இரவில் வயலுக்குக் காவலுக்குப் போவதைப் போல! நிரந்தரமான படைவீரர்கள் கிடையாது. அவரவர் தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். பிரச்சினை வந்தால் மட்டும் வந்து சண்டை போட்டுவிட்டு, திரும்ப அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அப்படியான படையை வைத்துக்கொண்டுதான் தொல்குடியினருடன் மட்டுமல்ல, பிற நாடுகளின் குடியேற்றங்களுடனான போர்களிலும் ஈடுபட்டது (அன்றைய) அமெரிக்கா. அதுகூடப் பரவாயில்லை, விடுதலைப்போரில் வென்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற இன்றைய அமைப்பை உருவாக்கியதும் அந்தப் படையையும் கலைத்துவிட்டது என்பதுதான் வேடிக்கை. அதற்குப் பிறகு வருவோம்.
இன்றைய அமெரிக்காவை உருவாக்கியவர்கள் இங்கிலாந்திலிருந்து போனவர்கள் என்றாலும், அவர்களுக்கு முன்னரே அங்கு போர்ச்சுகல், ஸ்பெயின், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ஏனென்றால், ஸ்பெயின் அரசிடம் மிகப்பெரிய சன்மானங்களுக்கான சாண்ட்டாஃபி சரணாகதிகள் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டுதான் கொல்ம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று முன்பே பார்த்தோம். அப்படி ஸ்பெயினின் சார்பாக கேஸ்டைல் அரசி இரண்டாம் எலிசபெத், ஆரகானின் அரசர் இரண்டாம் ஃபெர்டினாண்ட் ஆகியோருடன் 1492இல் சாண்ட்டாஃபி சரணாகதிகள் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு பயணித்த கொலம்பஸ், முதல் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது முதலில் வந்து சந்தித்தது யாரைத் தெரியுமா? அந்த இருவரில் யாரையுமல்ல. மாறாக, போர்ச்சுகலின் அரசர் இரண்டாம் ஜானிடம்தான் தன் பயணத்தில் கண்டுபிடித்தவற்றைப் பற்றி முதலில் சொன்னார். ஏனென்றால், 1470இல் இத்தாலிய வானவியலாளர் டோஸ்கேனல்லி, மேற்கு நோக்கிப் பயணித்தால் இந்தியாவை அடைவது எளிதாக இருக்கும் என்று கூறிதைத் தொடர்ந்து, ‘பெருங்கடல் கடல்’ என்றழைக்கப்பட்ட அட்லாண்ட்டிக் வழியே பயணித்து, ‘ஓரியண்ட்’ என்றழைக்கப்பட்ட கீழை நாடுகளை அடையும் கொலம்பசின் திட்டத்ததை கொலம்பஸ் முதலில் சொன்னது போர்ச்சுகீசின் அரசர் இரண்டாம் ஜானிடம்தான்! ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. 1488இல் பார்த்தலேமு டயஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்தது இந்தியாவை அடையும் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்ததைத் தொடர்ந்தே கொலம்பசின் பயணத்தை ஸ்பெயின் ஏற்க, பயணத்தின் வெற்றியை, அதை அனுமதிக்காத போர்ச்சுகல் அரசரிடம் முதலில் தெரிவித்தார் கொலம்பஸ்.

அவர்தான் போர்ச்சுகல் அரசரிடம் சொன்னபடி இந்தியாவைக் கண்டுபிடிக்கவில்லையே, பிறகு எப்படி அது வெற்றி? ஏனென்றால் கொலம்பஸ் சென்றடைந்த இடம் இந்தியா என்றுதான் அவர் மட்டுமல்ல, ஐரோப்பிய அரசர்களும் நம்பினார்கள். 1502இல் இத்தாலியின் நிலப்பட (மேப்) வரையியலாளரான அமெரிகோ வெஸ்புகி என்பவர், அது வேறு தனி நிலப்பரப்பு என்று சொல்லும்வரை அதை இந்தியா என்றே அவர்கள் எண்ணியிருந்தனர். வெஸ்புகியின் பெயரிலுள்ள அமெரிகோ என்பது, உண்மையில் லத்தீன் மொழியில் அமெரிக்கஸ் என்பதாகும். 1507இல் ஜெர்மானிய நிலப்பட வரையியலாளர் மார்ட்டின் வால்ட்சீமுல்லர் வெளியிட்ட உலக வரைபடத்தில், வெஸ்புக்கியைக் கவுரவிக்கும் விதமாக, இந்த நிலப்பகுதியை அமெரிக்கா என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து அப்பெயரே நிலைத்துவிட்டது. அமெரிக்காவிலிருக்கிற ஹட்சன் நதியின் பெயருக்குக் காணரமான ஹென்றி ஹட்சன் ஆசியாவிற்குக் கடல்வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் என்று 1611இல் காணாமல் போனார் என்பதிலிருந்து, இந்தியாவைத் தேடிக்கொண்டே இருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சரி, கண்டுபிடிக்க ஸ்பெயினிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு, கண்டுபிடித்ததும் போர்ச்சுகலிடம் கொலம்பஸ் சொன்னார் அல்லவா? அடுத்து என்ன நடந்தது தெரியுமா? உடனே அரசர் ஜான், 1479இல் ஏற்பட்ட ஆல்காகோவாஸ் ஒப்பந்தத்தின்படி கேனரி தீவுகளுக்குத் தெற்கே கண்டுபிடிக்கப்படும் அனைத்து நிலப்பரப்புகளும் போர்ச்சுகல்லுக்குத்தான் சொந்தம் என்று எச்சரித்து அனைத்து கத்தோலிக்க அரசர்களுக்கும் கடிதம் அனுப்பினார். அட்லாண்ட்டிக் கடலில் போர்ச்சுகல்லே பலம்வாய்ந்த நாடாக இருந்ததால், பிரச்சினையை சுமுகமாக முடிக்க மற்ற நாடுகள் போப்பை நாடின. அசோரஸ் தீவுகள் அல்லது வெர்டே முனைக்கு மேற்கில் 100 லீக் வரையுள்ள அனைத்தும் கேஸ்டைலுக்குச் சொந்தம் என்னும் இண்ட்டர் கேட்டரா உத்தரவை 1493இல் போப் பிறப்பித்தார். (லீக் என்பது பழங்கால அளவை. ஒரு மனிதன் ஒரு மணி நேரத்தில் நடக்கும் தொலைவு!) இதில் உடன்பாடில்லாத ஜான், மற்ற அரசர்களுடன் நேரடியாகப் பேசி, 270 லீக்வரை என்று என்று ஒரு புதிய ஒப்பந்தத்தை 1494இல் உருவாக்கினார். அதுதான் ‘புதிய உலகத்தை’ (அமெரிக்காவைத்தான்!) இருநாடுகளும் பங்கிட்டுக்கொண்ட டோர்டசில்லாஸ் உடன்படிக்கை. இந்தக் கோட்டிலிருந்து தொடங்குவதாகக் குறிப்பிட்டாலும், எதுவரை என்றே குறிப்பிடடாத தெளிவற்ற வரையறை என்று இருதரப்புக்குமே தெரிந்திருந்தபோதும், மற்றவர் ஏமாந்ததாக நம்பினர்! இந்தக் கோட்டிலிருந்து எதுவரை என்பதற்கான ‘எதிர்க்கோடு’, 1529இல்தான் ஸரகோஸா ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டது.
அப்படி பங்கெல்லாம் பிரித்துக்கொண்ட நாடுகள் ஏற்கெனவே அங்கு குடியேற்றங்களை நிர்மாணித்திருப்பார்கள் அல்லவா? அவர்களது செல்வத்தைப் பார்த்துத்தானே இங்கிலாந்தும் பின் தொடர்ந்தது? ஆம்! ஸ்பெயின், போர்ச்சுகல், ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் மிகப்பெரிய பரப்பிலான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர். அதனால், தொல்குடியினிரிடம் மட்டுமின்றி, இவர்களுடனும் ஆங்கிலேயர்கள் மோத வேண்டியிருந்தது. 1754இல் ஃப்ரெஞ்ச்-இந்தியப் போர் ஏற்பட்டபோது, அமெரிக்க மண்ணில் ஃப்ரெஞ்ச்சுக் குடியேற்றங்களில் அறுபதாயிரம் பேரும், இங்கிலாந்தின் குடியேற்றங்களில் 20 லட்சம் பேரும் இருந்தனர். இங்கிலாந்தின் குடியேற்றங்களுக்கும், ஃப்ரான்சின் குடியேற்றங்களுக்குமிடையே ஏற்பட்ட இப்போர்களில், எண்ணிக்கையில் குறைவாக இருந்த ஃப்ரெஞ்ச்சுக் காரர்கள், ‘இந்தியர்கள்’ என்றழைக்கப்பட்ட அமெரிக்கத் தொல்குடியினருடன் கூட்டணி அமைத்துப் போரிட்டதால், அந்த இருவரையும் எதிர்த்த போர் என்ற பொருளில் இப்பெயரிடப்பட்டது. இது உலகம் முழுவதுமிருந்த ஐரோப்பியக் குடியேற்றங்களுக்கிடையேயான போராகப் பரவியது ஏழாண்டுப் போர் என்றழைக்கப்படுகிறது. இந்தப் போரில் இங்கிலாந்து-ப்ரஷ்யக் கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட 1763 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க மண்ணில் பல பகுதிகளை ப்ரான்ஸ் இழந்தது.
![]()
இதற்குப் பழிவாங்கக் காத்திருந்த ஃப்ரான்சை, இங்கிலாந்தை எதிர்த்த விடுதலைப் போரில் துணைக்கு அழைத்துக்கொள்ள இங்கிலாந்தின் குடியேற்றங்கள் விரும்பின – அதாவது ஆங்கிலேயர்கள் தங்கள் தாய்நாட்டுடன் சேர்ந்து யாருடைய பகுதிகைளைக் கைப்பற்றினார்களோ, அந்த ஃப்ரான்சையே, தங்கள் தாய்நாட்டுக்கு எதிரான போரில் துணைக்கு அழைத்தனர். அதையும், வணிக ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டு, வெளிப்படையான ஒப்பந்தமின்றி (அதாவது ஃப்ரான்சுக்கு தேவைப்படும்போது, பதிலுக்கு ராணுவ உதவி அளிக்க வேண்டிய கட்டாயமில்லாமல்!) ஃப்ரான்சின் ராணுவ உதவியைப் பெற முயற்சித்தனர். ஆனால், ஃப்ரான்சின் வலியுறுத்தலால் வணிகத்துக்கும், ராணுவக் கூட்டுக்குமாக இரு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டது. இதையறிந்ததும் இங்கிலாந்து ஃப்ரான்சின்மீது போரை அறிவிக்க, நேரடியாகவே விடுதலைப்போருக்குள் ஃப்ரான்ஸ் வந்தது.
1763 பாரிஸ் ஒப்பந்தம் ஃப்ரான்சுக்கு இழப்புகளை ஏற்படுத்தியதற்கு பதிலடியாகவே, அமெரிக்க விடுதலைக்கான 1783 பாரிஸ் ஒப்பந்தத்தை ஃப்ரான்ஸ் பார்த்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே, ஃப்ரான்சுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற கோரிக்கை அமெரிக்காவில் எழுந்துவிட்டது. ஃப்ரெஞ்ச்சுப் புரட்சியின்போது, அரசர் பதினாறாம் லூயி கொல்லப்பட்டதும் ஃப்ரான்சுடனான பழைய ஒப்பந்தங்கள் செல்லாமற்போய்விட்டதாக பிற முடியரசுகள் அறிவித்தாலும், அமெரிக்காவின் ஒப்பந்தம் தொடர்வதாக அறிவித்த ஜார்ஜ் வாஷிங்டன், அடுத்த மூன்று மாதங்களில், இங்கிலாந்தும், ஃப்ரான்சும் மோத நேரிட்டபோது, நடுநிலைமையை அறித்தவுடன் இந்த ஒப்பந்தங்கள் பொருளற்றதாயின.
ஐரோப்பியப் பகுதியில் ஃப்ரான்ஸ் முக்கிய சக்தியானதால், அதை எதிர்ப்பதில் உதவி தேவை என்று கருதி (தன்னை எதிர்த்துப் போராடி வென்ற!) அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய இங்கிலாந்து முயன்றதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு, இரண்டும் கூட்டணியாயின! அவர்களிடமிருந்து, வடஅமெரிக்காவிலிருந்த தன் குடியேற்றங்களைப் பாதுகாக்க ஃப்ரான்ஸ் முயற்சித்தது. அப்போது, (தன் விடுதலைக்கு உதவிய!) ஃப்ரான்சின் போர்க் கப்பல்களை அமெரிக்கா தாக்கியதில் அறிவிக்கப்படாத போர் ஏற்பட்டு, 1800இல் ஓர் ஒப்பந்தம் மூலம் முடித்துக்கொள்ளப்பட்டது.
மொத்தத்தில் – ‘புதிய உலகத்தை’ கண்டுபிடிக்க ஸ்பெயினிடம் சன்மானம் பெற்ற கொலம்பஸ், அதைக் கண்டுபிடித்ததும் போர்ச்சுகலுக்குச் சொன்னார். போர்ச்சுகல் தனக்குப் பங்கிருக்கிறது என்று அறிவித்தது!
அவர் கண்டுபிடித்த நிலப்பரப்பிற்குப் போன ஆங்கிலேயர்கள், ஏற்கெனவே இருந்த ஃப்ரான்சிடமிருந்து பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள்.
பின்னர், அதே ஃப்ரான்சின் துணையுடன் இங்கிலாந்திடம் போரிட்டு விடுதலை பெற்றனர்.
அதன்பின் ஃப்ரான்சிற்கும் இங்கிலாந்திற்கும் மோதல் வந்ததும், ஃப்ரான்சைக் கைவிட்டு இங்கிலாந்தின் பக்கம் போனது அமெரிக்கா.
அத்தோடு முடியவில்லை, அதே ஃப்ரான்சின் எஞ்சிpருந்த குடியேற்றங்களில் இருந்தவர்கள் ஃப்ரான்சிற்கு எதிராகப் போராடி விடுதலை பெறச் செய்து, இன்றைய அமெரிக்காவுடன் இணைத்துக்கொண்டதும் நடந்தது. அதையெல்லாம் பின்னர் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

