அமெரிக்க நிலப்பரப்பு விரிவாக்கம் மற்றும் வரலாற்று வரைபடம் - வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் கட்டுரை. Map of US territorial expansion and historical acquisitions - Vaazhnthu Ketta Vallathikkam article.

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 4:- வாங்கியவையும், கைப்பற்றியவையும்..! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 4:-

வாங்கியவையும், கைப்பற்றியவையும்..!

– அறிவுக்கடல்

இரானைத் தாக்குவதற்கு முன் ட்ரம்ப் கூறியவற்றுள் குறிப்பிடத்தக்கவை, கனடாவை அமெரிக்க மாநிலமாக்குவதாகச் சொன்னதும், பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்பதும். ‘இதென்ன பிரமாதம், அதெல்லாம்விட பெசல் ஐட்டம் ஒன்னு இருக்கு’ என்ற மாதிரி, கிரீன்லாந்து நாட்டையே விலைக்குக் கேட்டதும் நடந்தது. ஒரு நாட்டையே விலைக்குக் கேட்கிறவர் நமக்கெல்லாம் கோமாளியாகத் தெரிவது இயல்புதான். ஆனால், அமெரிக்கா என்ற நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 41 சதவீதம் விலைக்கு வாங்கப்பட்டதுதான்! என்னது, நாட்டில் பாதி விலைக்கு வாங்கப்பட்டதா என்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். ஆனால், அமெரிக்கா என்பது எல்லாக் காலக்கட்டத்திலுமே ஒரு வணிக நிறுவனமாகத்தான் செயல்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் நினைவிற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா என்ற இப்போதைய நாட்டை உருவாக்கியவர்கள், வட அமெரிக்கக் கண்டத்தில் இங்கிலாந்து உருவாக்கிய 13 குடியேற்றங்களில் இருந்த ஆங்கிலேயர்கள் என்றுதான் பொதுவாக நாம் அறிந்திருப்போம். ஆனால், என்ன உண்மை என்றால் அந்த 13 குறியேற்றங்கள்கூட முழுமையாக ஆங்கிலேயர்கள் உருவாக்கியவை அல்ல. 10 குடியேற்றங்கள் மட்டுமே அவர்கள் உருவாக்கியவை! மற்றவை பிற நாடுகளிடமிருந்து இங்கிலாந்து கைப்பற்றிக்கொண்டவைதான். நெதர்லாந்து உருவாக்கியிருந்த நியூ நெதர்லாந்தைக் கைப்பற்றி நியூ யார்க் என்றும், அதன் மற்றொரு குடியேற்றத்தை நியூ ஜெர்சி என்றும், ஸ்வீடன் உருவாக்கியிருந்த நியூ ஸ்வீடனைக் கைப்பற்றி டெலாவர் என்றும் பெயரிட்டுக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். மொத்தத்தில் உண்மையிலேயே ஆங்கிலேயர்கள் உருவாக்கிய 10 குடியேற்றங்களின் பரப்பு என்பது இன்றைய அமெரிக்க நாட்டின் மொத்தப் பரப்பில் வெறும் 8.1 சதவீதம் மட்டும்தான். அது மட்டுமின்றி, ஏழாண்டுப் போரின் (அங்கு ஃப்ரெஞ்ச் இந்தியப் போர்) முடிவில் ஃப்ரான்சிடமிருந்து இங்கிலாந்து கைப்பற்றிய வட அமெரிக்க மண்ணின் அளவு, தற்போதைய அமெரிக்காவின் பரப்பில் சுமார் 70 சதவீதம் என்றாலும், அதன் பெரும்பகுதி இப்போது கனடாவாக இருக்கிறது.

The 13 Colonies | U.S. History and Geography

அமெரிக்க மண்ணின் தொல்குடியினரான செவ்விந்தியர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலம்தான் அனைத்துக் குடியேற்றங்களுமே என்றாலும், அதிலும்கூட மற்றவர்கள் உருவாக்கி வைத்திருந்த குடியேற்றங்களைக் கைப்பற்றிக்கொண்டது என்ற ‘வழிப்பறி’தான் அமெரிக்க நாட்டின் தொடக்கமே என்று சொன்னால் அது தவறாக இருக்காது. அதனால்தான் அமெரிக்க மண்ணின் மைந்தர்களுடன் மட்டுமின்றி, பிற குடியேற்றங்களுடனும்கூட ஆங்கிலேயர்கள் போரிட்டுக்கொண்டே இருக்க நேர்ந்தது. அதற்காக அவர்களே குடிப்படைகளைத் திரட்டிக் கொண்டாலும், உதவிக்கு சிறிய அளவில் படைகளை அனுப்பிய இங்கிலாந்து, அதற்குரிய செலவுகளைக் குடியேற்றத்தினர்தான் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வரி விதிக்கத் தொடங்கியது. தங்கள் மீதான அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவே இங்கிலாந்து – அவர்களது தாய்நாடுதான்! – வரிவிதிப்பதாகக் கருதிய குடியேற்றத்துக்காரர்கள், பதிலுக்கு, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்க, அது ஏற்கப்படாததாலேயே விடுதலைப்போர்வரை சென்றது!

1783இல் பாரிஸ் ஒப்பந்தத்தின்மூலம் விடுதலையடைந்த, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று அழைத்துக்கொண்ட, அந்த 13 குடியேற்றங்களுக்கு, மிசிசிப்பி நதியிலிருந்து கடலுக்குச் சரக்குகளை எடுத்துச் செல்வதில் சிக்கல் இருந்தது. ஏனென்றால் அப்பகுதி ஃப்ரான்சின் குடியேற்றமாக இருந்தது. மிகப்பெரிய பரப்பு என்றாலும், மிகக்குறைந்த மக்கள் இருந்தால், அதன் உரிமையை ஸ்பெயினிடம் வழங்கியிருந்தது ஃப்ரான்ஸ். நியூ ஆர்லியன்சில் சரக்குகளைக் கையாளவும், மிசிசிப்பி நதியில் எடுத்துச்செல்லவும் 1795இல் பிங்க்னி ஒப்பந்தம் என்பதை ஸ்பெயினுடன் செய்துகொண்டாலும், நெப்போலியன் பேரரசரானபின் 1800இல் ஃப்ரான்சிடம் இந்தப் பகுதியை ஸ்பெயின் ஒப்படைத்துவிட்டது. தனது வணிகத்திற்கு முக்கியம் என்பதால் அந்தப் பகுதியையே ஃப்ரான்சிடமிருந்து 15 மில்லியன் டாலர்களுக்கு விலை கொடுத்து வாங்கியது அமெரிக்கா. அமெரிக்கா என்பது நாடல்ல, வணிக நிறுவனம் என்பது இப்போது புரிந்திருக்கும். லூசியானா பர்ச்சேஸ் என்று சொல்லப்படும் அந்த நடவடிக்கையின்மூலம் பெறப்பட்ட நிலப்பரப்பு மட்டும் இன்றைய அமெரிக்க நாட்டில் சுமார் 23 சதவீதம்!

1803இல் ஃப்ரான்சிடமிருந்து லூசியானாவை(இப்போது கிட்டத்தட்ட 260 கோடி டாலர்கள் செலவிட்டு!) வாங்கிய அமெரிக்கா, அதோடு சேர்ந்தது என்றுகூறி, ஃப்ளோரிடாவின் சில பகுதிகளைப் பிடித்துக்கொண்டதுடன், அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான 1812இன் போரில், இங்கிலாந்துக்கு ஆதரவாக ஸ்பெயின் போரிட்டபோது மேலும் சில பகுதிகளையும் கைப்பற்றியது. நியூ ஸ்பெயின் என்று பெயரிடப்பட்ட மெக்சிகோ, கரீபியக் கடலிலிருந்த ஸ்பெயினின் பிற குடியேற்றங்கள் ஆகியவற்றுக்கிடையே, தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் இடமாக மட்டுமே ஃப்ளோரிடாவைப் பயன்படுத்திவந்த ஸ்பெயினுக்கு, இந்த ஊடுருவல்கள் உள்ளிட்டவற்றால், ஃப்ளோரிடா உண்மையில் சுமையாக மாறியிருந்தது. 1807-14இல் நெப்போலியனுடனான தீபகற்பப் போரிலும் ஈடுபட்டு துவண்டே போய்விட்ட நிலையில் ஸ்பெயின் இருந்தபோதுதான், ஃப்ளோரிடாவை அமெரிக்கா விலைக்குக் கேட்டது. ஸ்பெயின் ஒப்புக்கொள்ள, ஃப்ளோரிடாவை 50 லட்சம் டாலர் கொடுத்து அமெரிக்கா வாங்கியது. ஃப்ளோரிடாதான் அமெரிக்காவின் முதன்மை நிலப்பரப்பில் ஐரோப்பியர்கள் குடியேறிய முதல் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

History of U.S. Land Acquisitions | Purchases, Territories, Costs, Dates, &  Acres | Britannica

1853இல் மெக்சிகோவிடமிருந்து கொஞ்சம் நிலப்பரப்பை 10 மில்லியன் டாலர்களுக்கும், 1867இல் வட அமெரிக்கக் கண்டத்தின் வடக்குக் கோடியில், அதாவது கனடாவுக்கும் அப்பால் இருக்கிற அலாஸ்கா பகுதியை 7.2 மில்லியன் டாலர்களுக்கும் அமெரிக்கா வாங்கியது. அப்படி விற்றுக் கிடைத்த தொகையை, ரஷ்யாவில் ரயில்வே அமைப்பதற்காக அமெரிக்கக் கம்பெனிகளுக்கே ஜார் கால ரஷ்யா வழங்கியது தனிக்கதை. இன்னும் 1898இல் பிலிப்பைன் தீவுகளை ஸ்பெயினிடமிருந்து 20 மில்லியன் டாலர்களுக்கும், 1917இல் வர்ஜின் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டாலர்களுக்கும் அமெரிக்கா வாங்கியது. இவை தவிர போர்கள், ஆக்கிரமிப்பு போன்ற வழிகளில் டெக்சாஸ், ஆரகன், ஹவாய் தீவுகள் என்று அமெரிக்கா கைப்பற்றிய நிலப்பரப்புகளின் பட்டியல் நீளமானது.

சற்று உற்று நோக்கினால், இந்த எல்லா நடவடிக்கைகளுமே அமெரிக்காவின் வணிகத்தை முதல் நோக்கமாகக் கொண்டுதான் நடந்திருப்பதை உணரலாம். உதாரணமாக, வடக்குக் கோடியில் உள்ள அலாஸ்காவில்கூட கம்பளி, மீன் வளம் ஆகியவை நிறைந்திருப்பதைக் கருத்திற்கொண்டே அமெரிக்கா வாங்கியது. இப்படி ஏராளமாக வாங்கியதில் எல்லைகளைக்கூடச் சரியாக வரையறுக்க முடியாமல் போனதும் நிகழ்ந்துள்ளது. ஃப்ளோரிடாவை வாங்கியபோது ஏற்பட்ட ஆடம்ஸ்-ஓனிஸ் ஒப்பந்தத்தில் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமல் போய், குறுகிய காலத்தில் மெக்சிகோவிற்கு விடுதலை கிடைத்தபோது புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள நேரிட்டது.

பின்னாளில் கனடாவான, அப்போதைய பிற இங்கிலாந்துக் குடியேற்றங்களுடனும் இதே சிக்கல்தான். 1783இல் பாரிஸ் ஒப்பந்தத்தின்மூலம் அமெரிக்காவை இங்கிலாந்து ஏற்றுக்கொண்டாலும், பிரிட்டிஷ் வட அமெரிக்கா என்று குறிப்பிடப்பட்ட, இங்கிலாந்தின் ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளுடன் எல்லைப் பிரச்சினைகள் தொடர்ந்தன. அவை குறித்து அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் ஏற்பட்டாலும், 1812-15இல் ஒரு போராகவே மாறியது. மேலும், இரு நாடுகளுமே மேற்குப் பகுதியில் விரிவாக்கம் செய்துகொண்டே சென்றபோது, விரிவாக்கப் பகுதிகளின் எல்லைகளைத் தீர்மானிக்க உருவான ‘மீன்வளப் பகுதிகள், எல்லை, அடிமைகள் குறித்த ஒப்பந்தம்’, சுலபமாக அளப்பது முதலானவற்றுக்காக, வடக்கு 49 பாகை நிலநிரைக்கோட்டில் (தீர்க்க ரேகை) நேர்க்கோடாக வரையறுக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்தும், அமெரிக்காவும் சில பகுதிகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க நேரிட்டது. தன் மண்ணில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு பகுதியை அமெரிக்கா விட்டுக்கொடுத்தது, வரலாற்றிலேயே இதில் மட்டும்தான்.

அந்த ஒப்பந்தத்தின் பெயரிலிருந்தே, அதுவும் வணிகத்தை நோக்கமாகக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்கர்களுக்கு அது தங்கள் தாய் மண் அல்ல என்பதாலும், வணிகம் மட்டுமே நோக்கமாக இருப்பதாலும்தான் மிக எளிதாக பிறரது நிலப்பரப்பைக் கைப்பற்றுவேன் என்பது, விலைக்குக் கேட்பது என்பதெல்லாம் செய்ய முடிகிறது. அது மட்டுமல்ல, பனாமாவின் உரிமையைக் கைப்பற்றுவேன் என்ற ட்ரம்ப், இரானிடம் ஹோர்முஸ் நீரிணையைச் சேர்ந்து நிர்வகிக்கலாம் என்று கேட்பதும் அதனால்தான். அப்படியெல்லாம் வணிகமாக மட்டுமே நிலப்பரப்பைப் பார்த்ததால்தான் எது தங்கள் நாடு என்றுகூடத் தெரியாமல் அடுத்த நாட்டு எல்லைக்குள் போய் கோட்டையே கட்டியது அமெரிக்கா. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *