எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 5" கட்டுரை தொடர் | முட்டாள்தன கோட்டை | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 5:- முட்டாள்தன கோட்டை..! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 5:-

முட்டாள்தன கோட்டை

– அறிவுக்கடல்

இரான் மீதான போரை அமெரிக்கா தொடங்கிய சில நாட்களிலிருந்து ட்ரம்ப்பின் ட்வீட்களை தொகுத்துப் பார்த்தால், அவர் தெளிவான மனநிலையில்தான் இருக்கிறரா என்ற அய்யம் இயல்பாக எழும்.

மார்ச் 3: ‘நாம் போரில் வெற்றி பெற்றுவிட்டோம்.’

மார்ச் 14: ‘தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.’

மார்ச் 16: ‘நேட்டோ எங்களுக்கு உதவாவிட்டால், அவர்கள் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.’

மார்ச் 17: ‘நேட்டோவின் உதவி எங்களுக்குத் தேவையும் இல்லை; அதை நாங்கள் விரும்பவும் இல்லை.’

மார்ச் 22: ‘ஈரான் அழிந்துவிட்டது.’

மார்ச் 23: ‘ஈரானுடன் நாம் மிகச் சிறந்த, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.’

ஏப்ரல் 7: ‘இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது; அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது.’

இவை வெறும் ‘சாம்பிள்’தான்! அனைத்து நாட்களிலும் வந்த அவரது ட்வீட்களைப் படித்தால், இப்படி ஒருவரின் தலைமையிலுள்ள நாட்டைப் பார்த்தா அஞ்சி நடுங்குகிறார்கள் என்று சிரிப்பு வரும். பைத்தியம் கையில் கத்தி வைத்திருந்து குத்தினாலும் செத்து விடுவோமே, அப்படித்தான் அணு ஆயுதங்களை இயக்கும் நிலையிலிருக்கிற ஒருவர் ட்ரம்ப் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அந்தப் பின்னணியுடன் ‘ஒரு முழு நாகரிகமும் அழியப் போகிறது’ என்று சொன்னதைச் சேர்த்துச் சிந்தித்தால், அந்தச் சொற்களின் தீவிரம் புரியும். வரலாறு முழுவதும், பல அரசர்கள், பல நாடுகளின்மீது போர் தொடுத்து, வென்றிருக்கிறார்கள். பிற நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளை, அரிதான விதிவிலக்குகளைத் தவிர, யாரும் அழித்ததில்லை. அந்த நாட்டின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதுகூட அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. மிகப் பண்டைய காலத்து அரசர்கள்கூட அப்படித்தான் இருந்திருக்கும் நிலையில், நாகரிகம் பெருவளர்ச்சி அடைந்துள்ள 21ஆம் நூற்றாண்டில், மனித நேயம் பற்றி எப்போதும் உலகிற்குப் பாடம் நடத்துகிற அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் ஒரு நாகரிகத்தை அழிப்பதாக அறிவிக்கிறார்.

அவர் அழிப்பதாகச் சொன்னது ஒன்றும் அமெரிக்காவைப் போல, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் தொடங்கிய மண் அது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ப்ரோட்டோ எலமைட் எழுத்து வடிவம் உருவான பகுதி அது. உலகில் இடைவெளியின்றி தொடர்ச்சியாக நாகரிகம் இருந்திருக்கிற பகுதிகளில் இரானும் ஒன்று. என்ன வேண்டுமானாலும் இருக்கட்டுமே, ‘நக்குகிற நாய்க்கு…?’ என்றொரு பழமொழி சொல்வார்களே, அதைப் போல, அமெரிக்காவுக்கு?

அமெரிக்காவுக்கு என்று சொன்னாலும், அது இன்று அமெரிக்கர்கள் என்று சொல்லிக்கொள்கிற அன்றைய ஐரோப்பியர்களைத்தான் குறிக்கும். அமெரிக்கக் கண்டத்திலிருந்த ஏராளமான தொல்குடியினரை அழித்தவர்கள் ஐரோப்பியர்கள்தான். வட, தென் அமெரிக்கக் கண்டங்களில், இந்த ஐரோப்பியர்கள் வருவதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்த தொல்குடியினர் ஏராளம். அருகிலுள்ள படம், ஒவ்வொரு பகுதியிலுமிருந்த தொல்குடியினரைக் காட்டுகிறது.

No diseases, can Americas be colonised : r/powerscales

தொல்குடியினர் என்று குறிப்பிடப்பட்டாலும் பல சமூகங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தன. உதாரணமாக தென் அமெரிக்காவின் இன்கா பேரரசு 3,600 கி.மீ.க்கு சாலைகள்கூட அமைத்திருந்தது. அவர்களின் மச்சுபிச்சு கோட்டை இன்றுவரை வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து எட்டாயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அந்தக் கோட்டை, பிணைக்கும் கலவைகள் எதுவுமின்றி வெறும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், நிலநடுக்கங்களைத் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதை இன்றைய அறிவியலும் வியந்து பார்க்கிறது. துல்லியமாகச் செதுக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ள அந்தக் கற்களுக்கு இடையில் காகிதம்கூட நுழைய முடியவில்லை. எழுத்து வடிவமில்லாவிட்டாலும், தகவல்களை நூலில் முடிச்சுகளின்மூலம் பதிவு செய்த இவர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக்கூடப் பதிவு செய்து வைத்திருந்தனர்.

சிகரவாசிகள் என்று குறிப்பிடப்படும் மூதாதை புவெப்லோ என்ற மற்றொரு தொல்குடியினர், மலைச் சிகரங்களின் பக்கவாட்டில் குடைந்து மிகப்பெரிய குடியிருப்புகளை உருவாக்கியிருந்தனர். கொலராடோ பீடபூமியெங்கும் நூற்றுக்கணக்கான ப்வெப்லோ குடியிருப்புகள் அமைந்து, பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடன் இருந்திருக்கின்றன. இன்றைய அமெரிக்காவின் கொலராடோவில் மேசோ வெர்டீ என்ற இடத்திலுள்ள அவர்களது சிகர அரண்மனை அவர்களது நாகரிக வளர்ச்சிக்கும், கட்டிடக் கலைக்கும் சான்றாக நின்று, இன்றும் யுனெஸ்கோ பாரம்பரியக் களமாகப் பராமரிக்கப்படுகிறது.

Cliff Palace - Wikipedia

மறுபுறம், வட அமெரிக்காவில் பிரமிடுகளைக் கட்டிய மாயா நாகரிகம் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. அங்கு பிரமிடுகளை அமைத்த மற்றொரு நாகரிகமான ஆஸ்டெக் நாகரிகம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் உருவானது. அமெரிக்கத் தொல்குடியினர் என்றாலே தலையில் இறகுகளைச் செருகிக் கொண்டு, வில் போன்றவற்றுடன் காட்சியளிக்கிற உருவமே நமக்குக் காட்டப்பட்டிருக்கும். ஆனால், அங்கு இப்படி முன்னேறிய பல தொல்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்கள் வந்த காலம்வரை அவர்கள் இரும்பைக் கண்டுபிடிக்கவில்லை என்பதால், அவர்களது செம்பு ஆயுதங்கள், இரும்பு ஆயுதங்களை எதிர்கொள்ள முடியவில்லை. இவை போன்ற காரணங்களால் அவர்கள் ஐரோப்பியர்களிடம் தோற்க நேர்ந்தது.

அமெரிக்கக் கண்டங்களுக்குள் ஐரோப்பியர்கள் கால் வைத்தபோது அங்கிருந்த சுமார் 40 லட்சம் மக்களில் கிட்டத்தட்ட 96 சதவீதம் பேர், ஐரோப்பியர்களால் 1492க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இன்றைய அமெரிக்கா செய்த கடைசி இனப்படுகொலை 1800களின் இறுதியில் நடந்த கலிஃபோர்னியா இனப்படுகொலை ஆகும்.

அப்படியான இனப்படுகொலைகள் மூலமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பைப் பெற்றவர்கள் என்பதால்தான், மண்ணின் மைந்தர்கள் என்பவர்களுக்கு இருக்கிற உணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை, மற்றவர்களின் அப்படியான உணர்வையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் பிற குடியேற்றங்களையும் தங்களுடன் இணையச் செய்வது, இல்லாவிட்டால் போரிட்டுக் கைப்பற்றுவது, அதுவும் இல்லாவிட்டால் விலைக்கு வாங்குவது என்றெல்லாம் விரிவாக்கம் நடந்தது. அந்தப் பார்வையுடனேயே உலகம் முழுவதையும் பார்க்கிற நிலை நீடிப்பதுதான் இன்றும் இப்படியான சொற்களை உதிர்க்கப் பின்னணியாக இருக்கிறது.

அந்த 13 குடியேற்றங்களும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற பெயரில் விடுதலை பெற்ற பின்னும், வடக்கிலிருந்த இங்கிலாந்தின் குடியேற்றங்கள் இவர்களுடன் இணைய மறுத்ததால் அவர்களுடனும் இப்படியான மோதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. அப்போது அவை கனடா என்று உருவாகியிருக்கவில்லை. 1867இல்தான் கனடா என்று ஒருங்கிணைந்தன. அப்படி மாறுவதற்கு முன் நடந்த மோதல்களில் அந்தக் குடியேற்றங்களை – அதாவது இங்கிலாந்தை – அமெரிக்காவால் வெல்ல முடியவில்லை. மாறாக அவர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நேரிட்டு அதற்காக ஒரு கோட்டையையும் 1812இல் அமெரிக்கா கட்டியது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள், சுமார் இரண்டே முக்கால் லட்சம் டாலர் செலவிட்டுக் கட்டுமானம் நடந்திருந்த நிலையில்தான், கோட்டை தவறான இடத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, (பின்னாளைய) கனடாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகக் கட்டப்பட்ட கோட்டை, கனடாவுக்குள்ளேயே இருந்தது….!

எதிரி நாட்டுக்குள் கோட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபின், அது அப்படியே கைவிடப்பட்டு, அமெரிக்க எல்லைக்குள் புதிய கோட்டை 1844இல் கட்டப்பட்டது. அமெரிக்க விடுதலைப்போரின்போது, கனடாவின் க்யூபெக் நகரில் கொல்லப்பட்ட அமெரிக்கத் தளபதி மாண்ட்கோமெரி-யின் பெயர் புதிய கோட்டைக்குச் சூட்டப்பட்டது.

இதற்கிடையில், மேற்கு நோக்கிய விரிவாக்கத்தை அமெரிக்காவும், தற்போதைய கனடியப் பகுதியிலிருந்த அப்போதைய இங்கிலாந்து காலனிகளும் செய்துகொண்டே இருந்தன. இதில் எல்லைத் தகராறு தொடர்ந்து ஏற்பட்டபோதுதான், எல்லைகளை மாற்றியமைத்து ‘மீன்வளப் பகுதிகள், எல்லை, அடிமைகள் குறித்த ஒப்பந்தம்’ என்பது ஏற்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட எல்லைகளின்படி, அந்தப் பழைய கோட்டை அமெரிக்க எல்லைக்குள் வந்துவிட்டது. ஆனாலும், கைவிடப்பட்ட கட்டுமானத்திலிருந்த பயன்படக்கூடிய பொருட்களை, ஏற்கெனவே உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்த எடுத்துச் சென்றுவிட்டதால், அதை அப்படியே விட்டுவிட்டு புதிய கோட்டையைக் கட்டியது அமெரிக்கா! பழைய கோட்டைக்குப் பெயர் எதுவும் சூட்டப்படாததால் ஃபோர்ட் ப்ளண்டர் (முட்டாள்தன கோட்டை) என்றே குறிப்பிடப்படுகிறது.

Fort Blunder, America's Most Embarrassing Gun Battery - New ...

இப்படிக் கைப்பற்றும் முயற்சிகளை இங்கிலாந்து போன்ற எதிரிக் குடியேற்றங்களோடு அமெரிக்கா நிறுத்தவில்லை. விடுதலைக்குப்பின் பிற குடியேற்றங்களும் இணைந்து விரிவடைந்ததில் ‘ருசிகண்டு’ நிலப் பசியிலிருந்த அமெரிக்கா, சுமுக உறவிலிருந்த நாடுகளையும்-பகுதிகளையும் கைப்பற்ற, தனியார் படைகளுக்கு மறைமுகமாக நிதியுதவியளித்து, ஃபிலிபஸ்டர் என்ற படையெடுப்புகளை நடத்தியதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *