எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 6" கட்டுரை தொடர் | அமெரிக்காவின் ஆதிக்க வெறி | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 6:- அமெரிக்காவின் ஆதிக்க வெறி..! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 6:-

அமெரிக்காவின் ஆதிக்க வெறி

– அறிவுக்கடல்

ஃபிலிபஸ்டர் படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அந்தச் சொல்லை அறிந்தவர்கள், பொதுவாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் வகையில் தொடர்ந்து பேசுவதுதான் அதற்குப் பொருள் என்று எண்ணியிருப்பார்கள். நாடாளுமன்றம் எடுக்கவிருக்கிற ஒரு முடிவைத் தடுப்பதற்காக, அதாவது, பேசுவதை நிறுத்தினால் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நிலையில், தொடர்ந்து பேசி, அந்த முடிவை எடுக்க விடாமல் தடுப்பது தற்காலத்தில் ஃபிலிபஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. 1957இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டில், கருப்பின மக்களுக்கு ஆதரவான ஒரு முடிவை எடுக்க விடாமல் தடுப்பதற்காக, ஸ்ட்ரோம் தர்மாண்ட் என்ற உறுப்பினர் இவ்வாறு 24 மணி, 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். ஒரே உறுப்பினரோ, பலர் தொடர்ந்து பேசியோ இவ்வாறு முடிவுகள் தடுக்கப்படுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. இப்படியான நடவடிக்கை என்பது, ஜூலியஸ் சீசரின் அவையிலிருந்த இளைய கேட்டோ என்பவரால் கி.மு.60களிலேயே செய்யப்பட்டது என்றாலும், இந்த ஃபிலிபஸ்டர் என்ற பெயர், முறையற்ற படையெடுப்புகளான ஃபிலிபஸ்டர் படையெடுப்புகள் நடத்தப்பட்ட பின்னரே, அதைப் போன்றே இதுவும் முறையற்றது என்ற பொருளில் சூட்டப்பட்டது.

1700களின் இறுதியில் அமெரிக்கா விடுதலை பெற்றபின், அமெரிக்கர்களாகத் தங்களை அழைத்துக்கொள்ளத் தொடங்கிய (உண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த!) ஆங்கிலேயர்கள், அவர்களது நிலப்பரப்பு, பிறரது நிலப்பரப்பு என்ற வேறுபாடு இன்றி, அனைத்தையும் தங்கள் தேவைகளுக்கு – அதாவது விவசாயம், வணிகம் – பயன்படுத்திக்கொள்ளவே முயற்சித்தனர். உலகம் முழுவதும் நாடுகளின் எல்லைகள் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படத் தொடங்கியதே உலகப் போர்களுக்குப் பின்தான் என்பதால், அப்போது வெறும் குடியேற்றங்களாக இருந்த வட அமெரிக்கக் கண்டத்தில் எல்லைக் குழப்பங்கள் இருந்தது இயல்பானதுதான். ஆனால், பிறரின் – அதாவது அமெரிக்கத் தொல்குடியினர் அல்லது பிற ஐரோப்பிய நாடுகளின் – கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளானாலும், அந்த வழியாகத் தங்கள் வணிகப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால், அதை அவர்கள் தடுக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. சரியாகச் சொன்னால், அவர்கள் பிடித்து வைத்திருந்த மண் அவர்களுக்கு மட்டும் உரியது, பிறர் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தங்களுக்குத் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு இருந்தது. தனக்கு வந்தால் ரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னி கதைதான்!

அதனாலேயே அப்படித் தேவைப்பட்ட பகுதிகளில் அனுமதி பெற்று வணிக, சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டது, பின்னர் விலைக்கே வாங்கியது போன்றவைதான் ‘லூசியானா பர்ச்சேஸ்’ போன்ற நடவடிக்கைகள். வட அமெரிக்கக் கண்டத்தில் கிழக்குக் கரையில் சிறிய பகுதியிலிருந்த அவர்கள், மேற்கு நோக்கிச் சென்று, முழுமையாக அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றுவது அவர்களுக்கு கடவுள் அளித்திருக்கிற கடமை என்றே ஒரு கட்டத்தில் கூறிக்கொள்ளத் தொடங்கினார்கள். 1845இல் வெளிப்படையான விதி (விதி என்றால் தலையெழுத்து வகை விதி!) என்று பொருள்படும் Manifest Destiny என்ற சொலவடையே அமெரிக்கர்களிடையே பரவி, எல்லாம் தங்களுக்குரியது என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட, கடவுளால் வாக்களிக்கப்பட்ட மண் (Promised Land) என்று கூறி, யூதர்கள் அரபுப் பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சிப்பதைப் போன்றதுதான் இதுவும்! அமெரிக்கத் தாய், கொலம்பியா என்ற பெண் தெய்வமாக அவர்களை மேற்கு நோக்கி அழைத்துச் செல்வதாகச் சித்தரிக்கும் இந்தப்படம் 1872இல் வரையப்பட்டது. ‘எல்லாம் எங்களுக்கே’ என்ற அமெரிக்கர்களின் உணர்வை இந்தப் படம் தெளிவாக விளக்கிவிடும்!

Manifest Destiny | Summary, Examples, Westward Expansion ...

அதனால்தான், சாணக்கியர் வகுத்த நான்கு வழிமுறைகளாக சாம, பேத, தான, தண்டம் என்பவை கூறப்படுவதைப் போலவே, எல்லாவிதமான வழிகளையும் பயன்படுத்தி விரிவாக்கம் செய்தனர் அமெரிக்கர்கள். அப்படி முயற்சிக்கப்பட்ட ஒன்றுதான் இந்த ஃபிலிபஸ்டர் படையெடுப்புகள். வைகிங்குகள் காலத்து நீளப்படகுகளைப் போன்ற ஒன்றை பின்னாளைய கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தினர். அந்தப் படகுகளின் பெயரான ஃப்ளை போட்டுடன் இணைந்து ஃப்ளைபோட் வ்ரிஜ்பூட்டர் என்று டச்சு மொழியில் அவர்கள் அழைக்கப்பட்டனர். அதாவது, ‘சுதந்திரமாகத் திருடுபவர்’ என்று பொருள்! அப்படியான படகுகளைக் கொண்டு, ஐரோப்பிய நாடுகளில் அரசருக்குத் தெரிந்தே (அனுமதியுடன்) கொள்ளையடிக்கும் தனியார் படைகள் (கொள்ளைக் கூட்டம்தான்!) ஃபிலிபஸ்டுரோ என்று அழைக்கப்பட்டன. அதிலிருந்து, தனியார் (கொள்ளைக்கூட்ட!) படையெடுப்புகள் எல்லாம் ஃபிலிபஸ்டர் என்று அழைக்கப்பட்டன.

அப்படியான படையெடுப்புகளைத்தான் அமெரிக்கா, பிற பகுதிகளின்மீது நடத்தியது. நாய் விற்ற காசு குரைக்காதே? எப்படிப் பிடித்தால் என்ன, அமெரிக்காவுக்கு நிலம் கிடைக்குமே! 1849-51 காலத்தில் நார்சிசோ லோபஸ் என்பவர் தலைமையில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலிருந்த கியூபாவைக் கைப்பற்ற 4 முறை ஃபிலிபஸ்டர் படையெடுப்புகள் நடத்தப்பட்டன. 1853-54 காலத்தில் வில்லியம் வாக்கர் என்பவர் ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலிருந்த பஜா(கீழ்) கலிஃபோர்னியா பகுதியை இப்படியான ஃபிலிபஸ்டர் படையெடுப்பை நடத்தி, கைப்பற்றி, லோயர் கலிஃபோர்னியா குடியரசு என்றே அறிவித்தாலும், பின்னர் கைது செய்யப்பட்டார். 1855-57 காலத்தில் அவரே நிகரகுவாவை இப்படியான ஃபிலிபஸ்டர் படையெடுப்பின்மூலம் கைப்பற்றினார். ஆனாலும், பின்னர் ஹோண்டுராசில் தூக்கிலிடப்பட்டார். 1857இல் ஹென்றி க்ராப் என்பவர் மெக்சிகோவை இப்படியான ஃபிலிபஸ்டர் படையெடுப்பின்மூலம் கைப்பற்ற முயன்று தூக்கிலிடப்பட்டார்.

இந்தப் படையெடுப்புகளை அமெரிக்க அரசு ஆதரிக்கவில்லை என்பதான தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, ஏதோ தனியார் போய் கொள்ளையிட முயன்றதைப் போலக் காட்டிவிட்டு, அவர்கள் அந்த நிலப்பரப்பைக் கைப்பற்றிவிட்டால் அதை அமெரிக்கா எடுத்துக்கொள்வது என்பதுதான் இந்த நடவடிக்கை. அதனால்தான், பஜா கலிஃபோர்னியாவைக் கைப்பற்றி, பின்னர் சிறையிலடைக்கப்பட்டு அமெரிக்கா திரும்பிய வில்லியம் வாக்கருக்கு, ஒரு பெரிய நாயகனுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன், Manifest Destiny என்பது அமெரிக்கர்கள் அனைவரும் அறிகிற வகையில் அப்போது பரப்பப்பட்டது. அதாவது, மக்களால் முடிந்தால் எந்த நிலப்பரப்பை வேண்டுமானாலும் கைப்பற்றுங்கள், அரசு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் என்பதுதான் செய்தி.

இன்னும் சொல்லப் போனால், 1819இல் ஃப்ளோரிடாவை 5 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினாலும், விற்கிற முடிவை ஸ்பெயின் எடுக்கிற அளவுக்கு நெருக்கடி ஏற்பட அங்கு நடந்த புரட்சியும் ஒரு காரணம். ஏதோ உள்ளூரில் நடந்த புரட்சிபோலத் தோன்றினாலும் அதற்குப் பின்னணியிலும் இப்படியான ஃபிலிபஸ்டர் வகை நடவடிக்கைதான் இருந்தது. 1845இல் டெக்சாஸ் பகுதியை அமெரிக்கா இணைத்துக் கொண்டது. அதற்கு முன்பு 1836இல் புரட்சி நடந்து மெக்சிகோவிலிருந்து சுதந்திரக் குடியரசாக அது பிரிந்தது என்று கூறப்பட்டாலும், அந்தப் புரட்சிக்குப் பின்னாலும் ஃபிலிபஸ்டர் நடவடிக்கைதான் இருந்தது. 

ஆக, ஒரு நாடு, அது எல்லைகளையும், மக்களையும் பாதுகாத்துக்கொள்வது என்ற எந்த இயல்பான அணுகுமுறையுமே அமெரிக்காவிடம் ஆரம்பத்திலிருந்தே இல்லை. மாறாக, ஒரு வணிக நிறுவனம், அதன் ஊழியர்கள் எப்படியாவது வணிகத்தை விரிவுபடுத்தினால் போதும் என்று எண்ணுவதைப் போலத்தான் இருந்தது, இன்றுவரை இருக்கிறது!

அப்படியான வணிக நடவடிக்கைகளுக்கு – உற்பத்திக்கு, சரக்குகளைக் கையாள – பிற நாடுகளின் நிலப்பரப்பு தேவையென்றால், அதை எப்படியாவது பெற்று விடுவது என்பதுதான் அமெரிக்காவின் நடைமுறை. அதற்குத்தான் சாம, பேத, தான, தண்டம் என்று விதவிதமான வழிமுறைகள். ஒப்பந்தம் செய்து பயன்படுத்துவது, விலைக்கு வாங்குவது, ஃபிலிபஸ்டர் படையெடுப்பு, சுமுகமாக இணைத்துக்கொள்வது, வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்வது என்று கடைசியாக 1898இல் வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஹவாய் தீவு, 1917இல் வாங்கப்பட்ட வர்ஜின் தீவுகள் வரை இப்படியான நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. 

இவை தவிர, ஒரு நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் தொழில் தொடங்குவது, அதன்பின் அந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆபத்து என்று அந்த நாட்டையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மற்றொரு வகை. அதற்கும் பல உதாரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் கியூபா. ஸ்பெயினிடமிருந்து விடுதலை வாங்கித் தருவதைப்போலக் காட்டிக்கொண்டு, 1898லிருந்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழே வைத்திருந்தாலும், 1959இல் புரட்சியால் வெளியேற்றப்பட்டது. இன்றுவரை க்யூபாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு அப்பட்டமான சான்று!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *