எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 7" கட்டுரை தொடர் | ஊரான் வீட்டு நெய்யே...! | அமெரிக்கா உருவான வரலாறு - www.bookday.in

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 7:- ஊரான் வீட்டு நெய்யே…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 7:-

ஊரான் வீட்டு நெய்யே…!

– அறிவுக்கடல்

இரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலியப் போர் எண்ணெய் விநியோகத்தைப் பாதிப்புள்ளாக்கி, உலகம் முழுவதும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிற சூழலில், அதற்குப் பின்னணியிலிருக்கிற அமெரிக்காவின் ஆதிக்க வெறியையும், அதே நேரத்தில் இரான் எடுத்த சாமர்த்தியமான நடவடிக்கைகள் டாலர் என்ற ஆதிக்க நாணயத்தின் அடித்தளத்தையே அசைத்திருப்பதையும் விளக்கும் முயற்சிதான் இந்தத் தொடர். ஆனால், அவற்றுக்குப் பின்புலமாக உள்ள அமெரிக்க வரலாற்றையும் சேர்த்துப் பார்த்தால்தான் முழுமையாகப் புரியும் என்ற அடிப்படையில், தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இங்குக் குறிப்பிடப்படுகின்றன. அதனால், இது முழுமையான அமெரிக்க வரலாறு அல்ல என்பதுடன், கால வரிசைப்படியானதும் இல்லை.

உலகின் பிற பகுதிகளிலுள்ள நிலப்பரப்புகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவது என்ற நோக்கத்துடன் அமெரிக்கக் கண்டங்களுக்குள் வந்த ஐரோப்பியர்களில், ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் தாய்நாடான இங்கிலாந்துனேயே முரண் ஏற்பட்டு, அதை எதிர்த்தே போரிடத் தொடங்கியதுதான் அமெரிக்க விடுதலைப் போர். ஐரோப்பாவிலிருந்த புனித ரோமானியப் பேரரசில் புனிதமும் இல்லை, ரோமானியமும் இல்லை, அது பேரரசும் இல்லை என்று வால்ட்டேர் குறிப்பிட்டதைப் போல, அமெரிக்க விடுதலைப் போர் என்பதில் போராடியவர்கள் அமெரிக்கர்களும் இல்லை, போராடியது விடுதலைக்காகவும் இல்லை, ஆங்கிலேயர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டதுதான் என்பதால் அது போரும் இல்லை என்பதுதான் உண்மை! திருடியதைப் பங்கிடும்போது திருடியவர்களுக்குள் சண்டை வருவதைப்போல, அடுத்தவர் சொத்தைப் பிடுங்கியவர்கள், அதன் மீதான ஆதிக்கத்திற்காக அவர்களுக்குள் அடித்துக்கொண்டதுதான் அமெரிக்க விடுதலைப்போர்.

குடியேற்றங்களை அமைத்திருந்த ஐரோப்பியர்களுக்கு, அமெரிக்காவின் தொல்குடியினரான செவ்விந்தியர்களுடன் ஏற்பட்ட மோதல்களிலிருந்து காத்துக்கொள்வதற்காகவே படைகள் தேவைப்பட்டன என்றும், தங்கள் குடியேற்றங்களுக்கு சிறிய அளவிலான படைகளை அனுப்பிய இங்கிலாந்து, அந்தப் படைகளுக்கான செலவுகளுக்கும் குடியேற்றங்களிடமே நிதி கேட்டு, வரிவிதிப்புச் செய்துவிட்டு, இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை மறுத்ததுதான் விடுதலைப் போருக்குக் காரணம் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. முதலில், தொல்குடியினருடனான மோதல் என்று சொல்வதே பாதி உண்மையை மறைக்கிற கூற்றுதான். ஏனென்றால், அந்தத் தொல்குடியினரின் நிலப்பரப்பை இவர்கள் ஆக்கிரமிக்க முயன்று, அதை அவர்கள் தடுக்கும்போது அவர்களைத் தாக்கியதை மோதல் என்று பொதுவான பொருளில் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?

உதாரணமாக எல்லையில் இந்திய, பாகிஸ்தானிய படைகளுக்கிடையே சண்டை வந்தால் அது மோதல். கார்கில் வரை வந்தால் அது ஊடுருவல் அல்லவா? அமெரிக்காவிலும் ஆங்கிலேயர்கள் பிடித்துக்கொண்ட மண்ணையும் தாண்டி, தொல்குடியினரின் இடத்திற்குள் ஊடுருவிச் சென்று ஆக்கிரமிக்க முயன்றதைத்தான் மோதல் என்று வரலாற்றில் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் ஆங்கிலேயர்களோ, பிற ஐரோப்பியர்களோ மேலும் தொல்குடியினரின் பகுதிகளுக்குள் செல்ல முயற்சிக்காமலிருந்து, அப்போது தொல்குடியினர் தாக்கியிருந்தாலும் அதுதான் விடுதலைப்போர்! ஏனென்றால் ஐரோப்பியர்கள்தான் ஆக்கிரமிப்பாளர்கள்!

அப்படி ஆக்கிரமிப்பதில் ஐரோப்பியர்களுக்கு இடையில் நடைபெற்ற ஃப்ரெஞ்ச்-இந்தியப் போர் என்பதை முன்பே பார்த்தோம். அந்தப் போரின் இறுதியில் மிசிசிப்பி நதியிலிருந்து, அப்பலேச்சிய மலைத் தொடர் வரையான பகுதி ஃப்ரான்சிடமிருந்து இங்கிலாந்திடம் வந்தது. ஆனால், அமெரிக்கத் தொல்குடியினருடன் மோதல்களைத் தவிர்ப்பதற்காக அப்பலேச்சிய மலைத்தொடருக்கு மேற்கிலுள்ள அந்தப் பகுதியை இந்தியன் ரிசர்வ் என்ற பெயரில், தொல்குடியினருக்கான இடமாக விட்டுவைக்க இங்கிலாந்து முடிவு செய்து, 1763இன் அரசப் பிரகடனம் என்பதையும் வெளியிட்டது. அந்தப் பிரகடனம், அமெரிக்காவிலிருந்த இங்கிலாந்துக் குடியேற்றங்கள் அப்பலேச்சிய மலைத்தொடருக்கு மேற்கிலுள்ள நிலப்பரப்புகளைக் கைப்பற்றக்கூடாது என்று தடைவிதித்தது. கண்ணில் காண்பது அத்தனையும் தங்களுக்கே என்று எல்லாவற்றையும் பிடிக்க முயற்சித்த அந்தக் குடியேற்றங்களின் நிலப்பசிக்கு இந்த உத்தரவு இடையூறாக வந்து, இங்கிலாந்தின்மீதான எதிர்ப்பு உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தது.

ஏற்கெனவே குறுகிய காலம் வர்ஜீனியா குடியேற்றத்தின் குடிப்படையில் பணியாற்றிவிட்டு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காததால் அதைவிட்டு விலகி, அரசியலுக்கு வந்து, வர்ஜீனியாவின் சட்டமன்றம் போன்ற அவைக்கு ஃப்ரடரிக் கவுண்ட்டி என்ற இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் ஜார்ஜ் வாஷிங்டன். 10 மாதங்கள் அவருடன் படையிலிருந்தவர்களுக்கு பரிசு வேண்டும் என்று முன்பே அவர் கேட்டிருந்தார். அது குடிப்படை என்பதால் சம்பளமெல்லாம் கிடையாது. ஏராளமாகக் கிடந்த அமெரிக்க நிலத்தை ‘ஊரான் வீட்டு நெய்யே…’ என்று சன்மானமாக வாரி வழங்குவதுதான் அவர்களின் வழக்கம். அப்படி அவர்களுக்கு வழங்குவதற்காக வாஷிங்டனிடம் வழங்கப்பட்ட நிலம் எவ்வளவு தெரியுமா? 23,200 ஏக்கர்! அந்த நிலம் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்று வீரர்களை நம்பச் செய்து, பெயரளவுக்கு விலை கொடுத்து அதில் 20,147 ஏக்கர் நிலத்தை வாஷிங்டனே எடுத்துக்கொண்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று வீரர்கள் பின்னாளில் உணர்ந்தனர்.

ஏற்கெனவே வாஷிங்டனின் கொள்ளுத் தாத்தா காலத்திலேயே அமெரிக்காவில் குடியேறிவிட்டதால் குடும்பத்தின் சொத்திலிருந்து வாஷிங்டனின் பங்காக ஒரு பண்ணையும், சில அடிமைகளும் கிடைத்திருந்தனர். வாஷிங்டனின் மனைவி மார்த்தாவிற்கு அவரது குடும்பச் சொத்திலிருந்து அவரது பங்காக 6,000 ஏக்கர் நிலம் வந்ததுடன், அவரது குடும்பச் சொத்தான மேலும் 12,000 ஏக்கரும் வாஷிங்டனின் பொறுப்புக்கே வந்தது. இவற்றுக்குப் பின்னர்தான் மேலே குறிப்பிட்ட 20,147 ஏக்கர்! இவ்வளவு நிலத்தின் வருவாயையும் வாஷிங்டன் அனுபவித்துக் கொண்டிருந்த பின்னணியில்தான், இங்கிலாந்து அரசு அப்பலேச்சிய மலைகளைத் தாண்டிய நிலங்களைப் பிடிக்கக்கூடாது என்று சொன்னது அவருக்கு கோபத்தை மூட்டியது. அப்படியான வசதி மற்றும் மனநிலையில்தான் அங்கிருந்த பிற ஆங்கிலேய பண்ணை உரிமையாளர்களும் இருந்தனர். இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு ட்ரம்ப் தன் சொந்த மற்றும் தன் நாட்டின் வணிகத்துக்காக எந்த நாட்டையும் கைப்பற்ற முயற்சிப்பது இதே மனநிலையின் தொடர்ச்சிதான்!

இதற்கிடையில் வரிவிதிப்புக்கு எதிரான போராட்டங்களால் முத்திரைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் டவுன்ஷெண்ட் சட்டத்தால் வரிவிதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக, இங்கிலாந்தின் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார் வாஷிங்டன். இந்தியாவை ஆங்கிலேயர் அடிமைப் படுத்தியிருந்தபோது அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஒரு பொருள் இருந்தது. ஆனால், ஆங்கிலேயர்களே ஆங்கிலேயப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்தை நன்றாகக் கவனித்தால் அவர்களது சுயநலத்தின் தீவிரம் புரியும். அந்த சுயநலம் எந்த விழுமியத்துக்கும் கட்டுப்படுவதில்லை!

ஃப்ரெஞ்சுக் காரர்களை எதிர்க்க தொல்குடியினரைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஃப்ரெஞ்சுக் காரர்களிடமிருந்து கைப்பற்றிய நிலத்தைத் தொல்குடியினருக்கு விட்டுக்கொடுக்குமாறு அவர்களது சொந்த அரசு சொன்னபோது தங்கள் அரசையே எதிர்த்தார்கள்.

தாய்நாடு வரி கேட்டதும், தாய்நாட்டின் பொருட்களே வேண்டாம் என்றார்கள்.

தாய்நாட்டை எதிர்க்க, முன்பு தோற்கடித்த அதே ஃப்ரெஞ்சுக் காரர்களின் உதவியையும் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க விடுதலைப்போர், அதில் ராணுவத்துக்குத் தொடர்பில்லாத வாஷிங்டன் தளபதியானது ஆகியவற்றை அடுத்து வருகிற அத்தியாயங்களில் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *