வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 8:-
நாடு அல்ல, முதலாளிகளின் கூட்டணி…!
– அறிவுக்கடல்
முடியரசர்கள் பிற நாடுகளைக் கைப்பற்றிய செய்திகள் வரலாறு முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் போர்களும், இழப்புகளும் ஏற்பட்டு, அவற்றுக்கான பலன்களாகவே அந்த நாடுகள் கிடைத்திருக்கும். அதனால் அவற்றின் மதிப்பும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உலகையே ஆள நினைத்த அலெக்சாண்டர், தீரமுடன் எதிர்த்து நின்ற புருஷோத்தமன்(போரஸ்) தோற்ற பின்னும் அவர் நாட்டை அவரிடமே அளித்துச் சென்றது, அந்தப் போரின் மதிப்பை மட்டுமல்ல, நாடு என்பதன் மதிப்பையும் உணர்ந்து, அதற்காகவே புருஷோத்தமன் உறுதியாக எதிர்த்து நின்றார் என்பதையும் புரிந்திருந்தால்தான். அப்படியான புரிதல் இருந்தால், (இரான் என்ற) ஒரு நாகரிகத்தை முழுமையாக அழிக்கப் போகிறோம் என்று கொக்கரிக்கத் தோன்றாது.

ஆம்! போரிட்டுக் கைப்பற்றாமல், அந்த மண்ணிலிருந்தவர்களை அழித்துவிட்டு, எளிதாக ‘எடுத்துக்கொண்ட’ ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதான் இன்றைய அமெரிக்க நாடு. அதாவது, திருடிய பொருளின் மதிப்பு திருடனுக்குத் தெரிந்திருக்காது என்பதைப் போல! ஒரு திரைப்படத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் கேமெராவைத் திருடிய திருடன் அதன் மதிப்பிற்குத் தொடர்பில்லாத மிகக் குறைந்த விலைக்கு விற்றதாகக் காட்டியிருப்பார்களே, அப்படித்தான்!
அதுசரி, ‘எடுத்துக்கொண்ட’ ஆங்கிலேயர்கள் என்றால், அவர்கள் மட்டும்தான் அப்படிச் செய்தார்களா என்று கேட்கத் தோன்றும். ஆம் என்பதுதான் உண்மை. அமெரிக்க மண்ணைப் பிடித்திருந்த பிற ஐரோப்பியர்களில் உதாரணமாக ஸ்பானியர்கள் படையெடுப்பாக நடத்தி, அங்கிருந்த தொல்குடியினரை வெற்றி கொண்டு, மண்ணைக் கைப்பற்றினார்கள். ஃப்ரெஞ்ச்சுக் காரர்களோ, அங்கிருந்த தொல்குடியினருடன் கூட்டு வைத்துக்கொண்டு, வணிக மையங்களை உருவாக்கினார்களே தவிர, பெரிய காலனிகளாக அமைக்கப் பெரும்பாலும் முயற்சிக்கவில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள்தான், கொஞ்சம் கொஞ்சமாகக் காலனிகள் அமைத்து, விவசாயம் செய்து, எதிர்த்த தொல்குடியினரைக் கொன்று, நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டவர்கள். படையெடுப்பு இல்லை, நாடு பிடிக்கின்ற பெரிய போர் இல்லை, ஆனால், மண் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
அப்படி வந்தவர்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. அதாவது, அமெரிக்கக் கண்டத்துக்குத் தனியார் சென்று விவசாயம் செய்ய அரசு இங்கிலாந்து அனுமதித்ததே தவிர, அதற்கு நிதியுதவிகூட அளிக்கவில்லை என்பதால், முதலாளிகள் தாங்களே நிதி திரட்டி, தாங்களே பிடித்துக்கொண்ட மண் என்பதாகத்தான் இங்கிலாந்தின் காலனிகள் அமைந்திருந்தன.
அதற்கும் மேல் தேவைப்பட்ட மூலதனத்திற்கு, அமெரிக்காவில் ஏராளமாகக் ‘கிடந்த’ நிலத்தையே அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது, சில செல்வந்தர்கள் மக்களிடம் நிதி திரட்டி, ஒரு நிறுவனத்தைத் தொடங்கி (உதாரணமாக ப்ளைமவுத் கம்பெனி, வர்ஜீனியா கம்பெனி) அமெரிக்கக் கண்டத்திற்கு வந்து விவசாயம் செய்யத் தொடங்குவார்கள். அங்கு அந்த கம்பெனிதான் அறிவிக்கப்படாத அரசாங்கம்! அடுத்து, யாரெல்லாம் தொழிலாளர்களை அழைத்து வர முடியுமோ அவர்களுக்கு அதற்கேற்ப – ஒரு தொழிலாளிக்கு 50இலிருந்து 100 ஏக்கர் வரை – நிலம் இலவசமாக வழங்கப்படும். இதற்குப் பெயர் ஹெட்ரைட் சிஸ்டம் – தலை உரிமை முறை! அதாவது, ஏராளமாக நிலம் கிடக்க, உழைக்க ஆள் பற்றாக்குறை. அதனால், தொழிலாளியை அழைத்து வர கப்பல் செலவை ஏற்கிற முதலாளிக்கு இவ்வளவு நிலம் இலவசமாக வழங்கப்பட்டது. இலவசமாக என்று சொன்னாலும், அவர்களுக்கே அது இலவசமாகக் கிடைத்த அடுத்தவர் நிலம்தான்! அப்படி நிலத்தை ஆக்கிரமிப்பதை தொல்குடியினர் எதிர்த்தால் அவர்களைக் கொன்றுவிடுவார்கள். அவ்வளவுதான்!
தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள் 5இலிருந்து 7 ஆண்டுகள் வரை பிணைத் தொழிலாளிகளாகப் பணிபுரிந்தபின் விடுவிக்கப்படுவார்கள். விடுவிக்கப்பட்டாலும், அதுவரை அவர்கள் பிணைத் தொழிலாளிகளாகத்தான் (கொத்தடிமை!) பணியாற்றியிருப்பதால், அவர்களிடம் சேமிப்பு என்றெல்லாம் எதுவும் இருக்காது. அதனால் அவர்கள் அதன்பின்னும் அவர்களிடமே குறைந்த கூலிக்குப் பணியாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால், அப்படி அவர்கள் விடுவிக்கப்பட்டபின் அளிக்கப்பட்ட சொற்பக் கூலியையும் தர விரும்பாமல்தான் ஆஃப்ரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கி அழைத்துச் சென்றனர். அடிமைகளை அழைத்து வருகிறவர்களுக்கும் – அதாவது உழைக்க ஆட்களைக் ‘கொண்டு’ வருகிற எவருக்கும் – ஏராளமான நிலம் வழங்கப்பட்டது. அப்படி சேர்த்துத்தான் ஜார்ஜ் வாஷிங்டன் இறக்கும்போது அவரிடம் 52 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலமிருந்தது.

இப்படி ஏராளமான நிலம் விலை கொடுக்காமல், போரிடாமல் எளிதாகக் கிடைத்தாலும், அப்படி எடுத்துக்கொண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுக்கு வரி எதுவும் செலுத்தவில்லை. ஏனென்றால் அமெரிக்கக் கண்டத்தில் போய் காலனி அமைக்கவும், விவசாயம் செய்யவும் அவர்களுக்கு அரசு அனுமதி அளித்ததே தவிர, நிதியெல்லாம் அளிக்கவில்லை. அதனால், அரசும் வரி என்றெல்லாம் யோசிக்கவில்லை.
ஏனென்றால், வரி என்று விதிக்கவில்லையே தவிர, இங்கிலாந்து அரசுக்கு இந்தக் காலனிகளால் வருவாய் இருந்தது. அதாவது, அமெரிக்கக் கண்டத்திலிருந்த இங்கிலாந்தின் காலனிகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி எதுவானாலும் இங்கிலாந்தின் வழியாகத்தான் நடக்க வேண்டும் என்று நேவிகேஷன் ஆக்ட்ஸ் என்ற பெயரில் சட்டங்கள் இயற்றி, அதில் வரி வசூலித்தது இங்கிலாந்து அரசு. அத்துடன், பஞ்சு, மரம் போன்ற உற்பத்திக்கு உதவும் எந்த மூலப் பொருளானாலும் இங்கிலாந்துக்கு மட்டும்தான் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டினால், இங்கிலாந்தின் தொழில் வளர்ந்து, அரசுக்கு மேலும் வருவாய் கிடைத்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், இவர்கள் மேலும் மேலும் நிலத்தைக் கைப்பற்றுவதில் ஃப்ரெஞ்சுக் காரர்கள் இடையூறாக வந்து, ஃப்ரெஞ்ச்-இந்தியப் போர் என்பது ஏற்பட்டது. அந்தப் போரின் முடிவுக்குப்பின் மேற்கில் மேலும் நிலத்தைக் கைப்பற்றக்கூடாது என்று ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து அரசே தடைவிதித்தது. அதுவரை எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம், தடுக்க மட்டுமல்ல, வரி கேட்கவும் யாருமில்லை என்றிருந்த நிலையில், அதற்கு மேல் நிலமில்லை என்று தங்கள் அரசே சொன்னாலும் ஏற்க முடியாத அளவுக்கு நிலத்தின்மீது அவர்களுக்கு வெறி ஏற்பட்டிருந்தது. இன்றுவரை அந்த வெறி அடங்கவில்லை என்பதைத்தான் கனடாவையும், வெனிசுவேலாவையும் அமெரிக்காவின் மாநிலமாக்குவதாகவும், க்ரீன்லாந்தை விலைக்கு வாங்குவதாகவும் கொக்கரிக்கும் குரல்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில், அமெரிக்கக் கண்டத்தில் ஃப்ரெஞ்ச் இந்தியப் போர் என்பது, முதல் உலகப் போர் என்று சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுமளவுக்கு உலகம் முழுவதும் நடந்த ஏழாண்டுப் போரின் காலத்திலேயே நடந்து, அதன் ஒரு பகுதியாகவும்கூட குறிப்பிடப்படுகிறது. அந்த ஏழாண்டுப் போரின் இறுதியில் மிகப் பெரிய கடனாளியாகியிருந்தது இங்கிலாந்து. அதனால், கடனை அடைக்க வருவாய்க்கான எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டுமென்று தேடும்போதுதான், அமெரிக்கக் கண்டத்திலிருந்த காலனிகளைப் பாதுகாக்க படைகளை அனுப்பிப் போரிட்டாலும், வரியெல்லாம் வாங்கவில்லையே என்று இங்கிலாந்து அரசுக்கு உறைத்து, வரி விதிக்கத் தொடங்கியது. அதாவது, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதி என்று வரி விதிக்க முயற்சித்தது.
ஆனால், இங்கிலாந்து அனுப்பிய படைகள் போதுமானவையாக இல்லாமல், மக்களே குடிப்படையாகப் போரிட்டதால், தாங்களே போரிட்டதாக எண்ணிக் கொண்டிருந்த ‘காலனி முதலாளிகளுக்கு’ வரி செலுத்த விருப்பமில்லை. சரியாகச் சொன்னால், அரசு என்ற கட்டுப்படுத்தும் அமைப்பே இன்றி, முதலாளிகள் மட்டும் ஒரு நாட்டில் இருந்தால் எப்படி இருப்பார்களோ அப்படி இருந்துவிட்டவர்களுக்கு, திடீரென்று தங்களை ஓர் அரசு ஆட்சி செய்வது என்பதை ஏற்க முடியவில்லை.
அதனால், இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் அமெரிக்கக் கண்டத்திலிருந்த ஆங்கிலேயர்களும் வாக்களித்து, காலனிகளின் பிரதிநிதிகளும் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோர, அதனை இங்கிலாந்து அரசு ஏற்கவில்லை. அதாவது, தங்களுக்குக் கட்டுப்பட்டவைதான் அமெரிக்காவிலிருந்த காலனிகள் என்று அதிகாரத்தை நிலைநாட்டுவது இங்கிலாந்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், யாருடைய ஆளுகைக்கும் ஆட்படாதவர்களாகத் தொடர்வதுதான் காலனிகளிலிருந்த ஆங்கிலேயர்களின் விருப்பமாக இருந்தது. அதனால்தான் தாய்நாட்டுடனேயே போரிட்டு, விடுதலையும் பெற்றாலும், ஓர் ஒன்றுபட்ட கூட்டரசு என்பதை ஏற்கத் தயங்கி, பின்னர் ஏற்றாலும் இறையாண்மை கொண்ட நாடு என்ற பொருளில் ஸ்டேட் என்று காலனிகளை மாற்றி, அந்த மாநிலங்களுக்கே அதிக உரிமைகள் என்றே இன்றுவரை அமெரிக்கா இயங்குகிறது.
அந்த மாநிலங்களில், இங்கிலாந்தின் 13 காலனிகளை உருவாக்கியவை வணிக நிறுவனங்கள் அல்லது தனி முதலாளிகள்தான் என்ற அடிப்படையில், இன்றைய மாநிலங்களும்கூட முதலாளிகளின் நலன் காக்கும் அமைப்புகள் என்று சொல்லக்கூடியவையாகத்தான் செயல்படுகின்றன. அப்படியான நிலையில்தான், லாபத்திற்காக எதையும் செய்யும் மூலதனத்தைப் போல, எந்த மண் தங்கள் நலனுக்குத் தேவை என்றாலும், ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி, ஆக்கிரமித்து, தங்கள் கட்டுப்பாட்டில் ‘எடுத்துக்கொள்ளலாம்’ என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு மாறவேயில்லை.
பொதுவாக ஒரு கம்பெனி தொடங்கினால்கூட முதலாளி மூலதனம் போட்டுத்தான் தொடங்குவார். ஆனால், அமெரிக்காவில் காலனிகளை அமைத்த ஆங்கிலேயக் கம்பெனிகளோ, அதைக்கூட மக்களிடமிருந்து, அதுவும் எளிய மக்களிடமிருந்து, லாட்டரி என்ற பெயரில் ஏய்த்துப் பிடுங்கித்தான் மூலதனமாக்கின. அடுத்த பகுதியில் பார்ப்போம்!
📚 எழுதியவர்:

அறிவுக்கடல்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

