வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 9:- பிறவி குணம்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 9:- பிறவி குணம்…! – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் 9:-

பிறவி குணம்…!

– அறிவுக்கடல்

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றங்களும் அமெரிக்கக் கண்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றைய அமெரிக்கா என்ற நாடாக உருப்பெறக் காரணமானவை இங்கிலாந்துக்குச் சொந்தமான 13 குடியேற்றங்கள்தான். இன்றைய அமெரிக்காவின் அணுகுமுறைகளில் அந்த ‘பிறவி குணம்’ அப்படியே காணப்படுவதால்தான், அதனை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பிறவி குணம் என்றால் அது ஆங்கிலேயர்களின் குணத்தைக் குறிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் குடியேற்றங்களை அமைத்த ஆங்கிலேய முதலாளிகளின் குணத்தைக் குறிக்கிறது.

ஏனென்றால், ஆங்கிலேயக் குடியேற்றங்கள் அனைத்துமே முதலாளிகளால் தனிப்பட்டோ, கூட்டாகவோ, அதற்கென நிறுவனம் அமைத்தோ ஏற்படுத்தப்பட்டவைதான். அப்படியானால் இங்கிலாந்து அரசு அமெரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்தவில்லையா? இல்லை என்பதுதான் உண்மை. அங்குக் குடியேற்றங்களை ஏற்படுத்திய பிற நாடுகளின் அரசுகள் நிதி உதவியளித்து, அரசின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தின. உதாரணமாக ஸ்பெயினின் குடியேற்றங்கள் அந்த நாட்டு அரசால் ஏற்படுத்தப்பட்டு, அந்த அரசின் படைகளாலேயே பாதுகாக்கப்பட்டன. வணிக மையங்களாகவே சிறு குடியேற்றங்களை உருவாக்கிய ஃப்ரான்ஸ்கூட அரசின் நிதியுதவி, பாதுகாப்பு அளித்துத்தான் உருவாக்கியது. ஆனால், இங்கிலாந்தைப் பொருத்தவரை, அனுமதி மட்டுமே அரசு அளித்தது. அந்த அனுமதியைப் பெற்றவர்கள் எப்படியோ நிதி திரட்டி, எப்படியோ அமெரிக்கக் கண்டத்துக்குப்போய், எப்படியோ நிலத்தைக் கைப்பற்றி குடியேற்றம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகத்தான் அது இருந்தது.

வர்ஜீனியா குடியேற்றத்தை அமைப்பதில் நிதித் தேவைக்காக நடத்தப்பட்ட லாட்டரி பற்றிய அறிவிப்பு

இங்கிலாந்தின் 13 குடியேற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் அவற்றில் 10 மட்டும்தான் ஆங்கிலேயர்கள் உருவாக்கியவை, 2 நெதர்லாந்திடமிருந்தும், 1 ஸ்வீடனிடமிருந்தும் பிடுங்கப்பட்டவை என்று முன்பே பார்த்தோம். அந்த 10இல் வர்ஜீனியா, மாசச்சூசெட்ஸ் ஆகியவை தற்போதைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னோடியான கூட்டுப்பங்கு நிறுவனங்களாலும், நியூஹாம்ஷையர், மேரிலேண்ட், வட கரோலினா, தென் கரோலினா, பென்சில்வேனியா ஆகியவை தனி முதலாளிகளாலும், கனெக்ட்டிகட், ரோட் தீவு ஆகியவை முதலாளிகளின் சொந்த நிதியாலும், ஜார்ஜியா என்பது அறக்கட்டளை மூலம் நிதி திரட்டியும் உருவாக்கப்பட்டன.

அமெரிக்காவில் முதல் ஆங்கிலேயக் குடியேற்றம் அமைக்க வர்ஜீனியா கம்பெனிக்கும், பிளைமவுத் கம்பெனிக்கும் 1606இல் அரச அனுமதிப் பட்டயம் வழங்கப்பட்டது. வர்ஜீனியா கம்பெனி அமெரிக்காவில் தங்கமும், வெள்ளியும் ஏராளமாகக் கிடைக்கும் என்று சொல்லிப் பங்குதாரர்களைச் சேர்த்து ஜேம்ஸ்டவுன் குடியேற்றத்தை உருவாக்கினாலும், அப்படிக் கிடைக்காததால் தொடர்ந்து செலவிட நிதி கிடைக்கவில்லை. அதே மாதிரியான நெருக்கடியில் பிளைமவுத் கம்பெனி திவாலாகிவிட்டது. மேலும் தேவைப்பட்ட நிதிக்கு லாட்டரி நடத்தி நிதி திரட்ட அரசரிடம் அனுமதி பெற்றது வர்ஜீனியா கம்பெனி.

பங்குதாரர்களிடம் நிதி திரட்டப்பட்டாலும், சிறிய பங்குகளாக விற்பனை செய்யப்பட்டாலும், அந்தப் பங்கை வைத்திருப்பவர்களுக்கு லாபத்தில் பங்கு தர வேண்டும், அவர்கள் கேட்டால் பங்குத் தொகையையும் திருப்பித்தர வேண்டும். ஆனால், லாட்டரி அப்படி அல்ல. சிறிய அளவிலான பரிசுகளை அளித்துவிட்டு, ஏராளமாக நிதி திரட்டிக்கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, மக்களிடமிருந்தே நிதியையும் திரட்டிக்கொள்ளலாம், முதலாளியே முழு உரிமையாளராகவும் இருக்கலாம் என்பதுதான் லாட்டரியின் தந்திரம். அதே நேரத்தில், லாட்டரி வாங்குவது இங்கிலாந்தை விரிவாக்க உதவும் தேசபக்த கடமை என்றும் பரப்புரை செய்யப்பட்டது. அப்படி 1609இலிருந்து நடத்தப்பட்ட லாட்டரிகளில் ஏராளமான முறைகேடுகள் நடக்க, வர்ஜீனியா கம்பெனிக்கு அளிக்கப்பட்ட லாட்டரி அனுமதியை 1621இல் இங்கிலாந்து அரசர் ரத்து செய்துவிட்டார்.

குடியேற்றங்களை அமைப்பதற்கான நிதியை, இங்கிலாந்திலிருந்த மக்களிடம் திரட்டத்தானே தடை? அமெரிக்காவில் குடியேற்றங்களை அமைத்தபின் அவற்றை நிர்வகித்தது முதலாளிகள்தானே? அவர்கள்தானே குடியேற்ற அரசாங்கமாகவே (கலோனியல் கவர்ன்மெண்ட்) செயல்பட்டார்கள்? எனவே, அங்கு லாட்டரி தடையின்றி செயல்பட்டது. குடியேற்றங்களில் நடப்பதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவோ, அங்கு வசதிகள் செய்து தரவோ இங்கிலாந்து அரசு முயற்சிக்கவில்லை. அதனால், அங்கு உருவாக்கப்பட்ட அனைத்தையும் அதை நிர்வகித்த நிறுவனம் அல்லது முதலாளியே செய்ய வேண்டியிருந்ததால், அதற்கான நிதியை அவர்கள் லாட்டரி மூலமே திரட்டினார்கள். வரி என்று வசூலிக்கப்படாததால் குடியேற்ற அரசை மக்கள் கேள்வி கேட்கவும் முடியாது. லாட்டரியில் பரிசுகள் அளித்துவிட்டதால், முதலாளியோ நிறுவனமோ சொந்தமாகவே அனைத்தையும் செய்ததாகவும் ஆகிவிடும்.

ரோட் தீவில் கூட்ட அரங்கை சீரமைப்பதற்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட லாட்டரிச் சீட்டு

இங்கிலாந்திலிருந்து பிணைத் தொழிலாளர்களாக அன்றி சுதந்திரமானவர்களாக வந்த எளிய ஆங்கிலேயர்கள்கூட, அமெரிக்காவில் ஏராளமாகக் கிடைத்த நிலத்தை மலிவாக வாங்கி, வசதியுடன் வாழத் தொடங்கியிருந்தனர். அதனால் அங்கு மிகப்பெரிய அளவிலான நடுத்தர வர்க்கமும் உருவாகியிருந்தது. இவர்களிடமிருந்து லாட்டரியால் பெரிய அளவில் நிதி திரட்ட முடிந்தது. அமெரிக்காவின் மதிப்பிற்குரிய ஐவி லீக் என்றழைக்கப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (அப்போது காலேஜ் ஆஃப் நியூ ஜெர்சி), கொலம்பியா பல்கலைக்கழகம் (அப்போது கிங்’ஸ் காலேஜ்), பென்சில்வேனியா பல்கலைக்கழகம், டார்ட்மவுத் கல்லூரி ஆகியவை உட்பட பலவும் லாட்டரியால் திரட்டப்பட்ட நிதியால்தான் உருவாக்கப்பட்டன. பொதுக் கட்டிடங்கள், சாலைகள், தேவாலயங்கள் என்று அனைத்தும் லாட்டரியாலேயே உருவாக்கப்பட்டன.

அப்படி லாட்டரிக்காகச் செலவிடுவது பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் என்பதால் அது தன்னார்வமாகச் செய்யப்படுகிற ஒன்றாக இருந்த நிலையில்தான் இங்கிலாந்து அரசு வரி விதிக்க முயற்சித்ததை அவர்களால் ஏற்க முடியவில்லை. அதனாலேயே தாய் நாடான இங்கிலாந்தையே எதிர்த்துப் போரிட்ட அவர்கள், அந்த விடுதலைப் போருக்குத் தேவைப்பட்ட நிதியையும் லாட்டரி மூலமே திரட்டினார்கள்.

அமெரிக்க விடுதலைப் போருக்கு நிதி திரட்ட யுனைட்டட் ஸ்டேட்ஸ் லாட்டரி என்ற பெயரிலேயே நடத்தப்பட்ட லாட்டரிச் சீட்டு

விடுதலைக்குப் பின் அரசின் செலவுகளுக்காக வரி விதிக்க முயற்சிக்கப்பட்டபோதும் விஸ்கி கலகம் போன்ற எதிர்ப்பியக்கங்கள் எழுந்தன. உண்மையில் அன்றைய அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ பணம் இல்லை என்பதால், பண்டமாற்று முறையில்தான் வணிகம் நடந்தது. விவசாயிகளைப் பொருத்தவரை ஏராளமான தானியங்களை எடுத்துச் சென்று வேறு பொருட்களை வாங்குவதைவிட, அதை விஸ்கியாக்கி பண்டமாற்று செய்வது எளிதாகவும், கெட்டுப்போகாததாகவும் இருந்த நிலையில்தான் விஸ்கிக்கு வரி விதிக்கப்பட்டது. அது மொத்தப் பண்ணைக்கும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திய பெரிய செல்வந்தர்களைவிட, பொருளின் அளவுக்கேற்ப வரி செலுத்திய சிறிய விவசாயிகளுக்கு அதிக வரி என்பதாக இருந்தது. ஒருவேளை பெரிய செல்வந்தர்களை அதிகம் பாதிக்கக்கூடியதாக அந்த வரி இருந்திருந்தால், ரத்து செய்யப்பட்டிருக்கும் என்பதுதான் அமெரிக்காவின் எதார்த்தம். ஆனால், சிறிய விவசாயிகளைப் பாதிப்பதாக இருந்ததால் 13 ஆயிரம் வீரர்களை அனுப்பி அந்தக் கலகம் ஒடுக்கப்பட்டது.

ஆனாலும், அந்தக் கலகம் வரி வசூல் என்பது சிரமமானது என்ற நிலையை ஏற்படுத்தியதால், மாநிலங்கள் தங்கள் செலவுகளுக்கு ஏராளமான லாட்டரிகளை நடத்தத் தொடங்கின. 1790-1830 காலம் அமெரிக்காவில் லாட்டரிகளின் பொற்காலம் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், அவற்றில் நடைபெற்ற ஏராளமான முறைகேடுகளால் 1830களில் படிப்படியாக பல மாநிலங்களும் லாட்டரிகளைத் தடை செய்தன. மீண்டும் 1964இலிருந்து படிப்படியாகப் பல மாநிலங்களும் லாட்டரியை அனுமதித்தன என்பது தனிக்கதை.

ஆனால், வரி வசூலிக்கிற அரசுக்கு மக்களுக்குப் பதிலளிக்கிற கடமை இருக்கிறது என்ற நிலையில், லாட்டரியால் நிதி திரட்டிய குடியேற்றங்கள் தனிப்பட்ட கம்பெனிகளாகவே செயல்பட்டன. அந்தக் கம்பெனிகளின் கூட்டணியாகவே அமெரிக்கா என்ற நாடும் உருப்பெற்றது. அதன்பின்னும் அப்படிப்பட்ட தனியார் கம்பெனி என்ற ‘பிறவி குணம்’ இன்றுவரை தொடர்வதுதான் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *