எழுத்தாளர் அறிவுக்கடல் எழுதிய "வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம்" கட்டுரை தொடர் | டாலருக்கு எதிரான யுவானின் எழுச்சி (De-dollarization) | பெட்ரோடாலர்கள் - www.bookday.in

புதிய தொடர் 1:- வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம் – அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட வல்லாதிக்கம்

– அறிவுக்கடல்

வாழ்ந்துகெட்ட குடும்பம் என்பது தமிழில் பயன்படுத்தப்படுகிற ஒரு சொலவடை. ஒரு காலத்தில் மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், அவற்றை இழந்து சாதாரண வாழ்க்கைக்கு வருவதை இப்படிக் குறிப்பிடுவார்கள். இன்றைய அமெரிக்காவின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான். ஒருபுறம் ‘உலக நாட்டாமையாக’ அனைத்து நாடுகளையும் மிரட்டிக் கொண்டிருந்த நிலையிலிருந்து, ஹார்முஸ் நீரிணையை மட்டும் எப்படியாவது திறந்துவிட்டால் போதும் என்று இரானிடம் கெஞ்சுகிற நிலை… மறுபுறம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாக, இரான் ஹார்முசைத் திறந்தால் தங்கள் உத்தரவின்படி திறந்ததாகச் சொல்லிக் கொள்வது… சரியாகச் சொன்னால், ‘எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்’ என்ற விவேக் நகைச்சுவையைப் போன்ற நிலையில் இருக்கிறது அமெரிக்கா!

மற்றொரு புறம், ‘ஊர் உலகத்துக்கெல்லாம்’ தடைவிதிக்கப் பயன்படுத்திய டாலருக்கு இரான் தடைவிதித்துவிட்ட நிலைமை. ஹார்முசைக் கடக்கக் கட்டணம் செலுத்த வேண்டும், ஆனால் அதை டாலரில் செலுத்த முடியாது என்று இரான் கூறிவிட்ட நிலையில், ‘தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா’ என்கிற மாதிரி, எல்லாவற்றுக்கும் சீன யுவானே வைத்துக்கொள்ளலாம் என்ற மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது, நீரிணையைக் கடக்கக் கட்டணம் யுவானில் செலுத்த வேண்டும் என்ற நிலையில், அங்கு வாங்குகிற எண்ணெய்க்கான விலையையும் இரான் யுவானில் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும்போது, டாலர் எதற்கு? மற்ற எண்ணெய் வள நாடுகளும்கூட இன்று ஏராளமாக சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிற நிலையில் யுவான் வாங்கிக் கொள்வதும், வைத்துக்கொள்வதும் உதவியாக இருக்குமே? அன்று டாலரை வைத்துக்கொள்ள அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்ததும் ஒரு காரணம்தானே? இன்று அந்த இடத்தில் சீனா அல்லவா இருக்கிறது? அமெரிக்காவே சீனாவிடமிருந்து மின்னணு பொருட்களையும், தொழில்நுட்பக் கருவிகளுக்கான மூலப் பொருட்களையும் இறக்குமதி செய்துகொண்டு பதிலுக்கு பன்றிக் கறியையும், சோயாபீனையும் அல்லவா சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது? அதாவது, சீனாவின் தொழில்நுட்ப, உற்பத்தி வளர்ச்சி, அமெரிக்காவை விவசாய நாடாக்கிக் கொண்டிருக்கிறது என்ற நிலை ஏற்பட்டுப் பல ஆண்டுகளாகிவிட்டன!

வாழ்ந்து கெட்டதெல்லாம் சரி, அமெரிக்கா எப்படி ‘வல்லாதிக்கம்’ என்ற அந்த உச்சத்திற்குச் சென்றது? நான்காயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றைக் கொண்ட சீனா, இரான், இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளை விடவும் பலம் பொருந்திய நாடாக, வல்லாதிக்கமாக 250 ஆண்டுகளுக்கும் குறைவான வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா மாறியது எப்படி? 242 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை பெற்றபோது, தனக்கென்று ஒரு ராணுவம் வைத்துக்கொள்ளக்கூட வசதியற்ற நாடாக, அதெல்லாம் தேவையற்ற செலவு என்று எண்ணிய நாடாக, ராணுவத்தைக் கலைத்து, கப்பற்படையின் கப்பல்களைக்கூட விற்பனை செய்துவிட்ட நாடான அமெரிக்கா, உலகிலேயே அதிகமாக ராணுவத்துச் செலவிடும் நாடாக, தனக்கு அடுத்த நிலையிலிருக்கிற நாட்டைப்போல மூன்று மடங்கு செலவிடுகிற நாடாக மாறியது எப்படி?

தங்கள் விடுதலைப் போரில் ஃப்ரான்ஸ் துணைக்கு வந்திருக்காவிட்டால் வெற்றி பெற்றிருக்கவே முடியாது என்ற நிலையிலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அதே ஃப்ரான்சிற்குப் பிரச்சினை ஏற்பட்டபோதுகூட, ‘நாங்க யார் வம்பு தும்புக்கும் போறதில்ல…’ என்று நடுநிலை வகிப்பதாக அறிவித்து, போர்களே வேண்டாம் என்று கூறிய அமெரிக்கா இன்று உலகம் முழுவதும் ஏராளமான ராணுவ நிலைகளை நிறுவிக்கொண்டு, அனைவரையும் மிரட்டுகிற நிலைக்கு வந்தது எப்படி?

இன்னும் சொல்லப்போனால், முதல் உலகப்போரில் அமெரிக்கப் பயணிகள் கப்பலான லூசிட்டானியா, ஜெர்மென் யு-போட்களால் (நீர்மூழ்கிகள்) மூழ்கடிக்கப்பட்டு, 1,198 பேர் பலியானபோதுகூட நடுநிலை வகிப்பதாகச் சொன்ன நாடு அமெரிக்கா. இங்கிலாந்துக்குப் பொருட்கள் கிடைக்கக்கூடாது என்று அமெரிக்காவின் சரக்குக் கப்பல்களை ஜெர்மெனி மூழ்கடித்தபோதுதான் முதல் உலகப்போரிலேயே இறங்கிய நாடு அமெரிக்கா. அவ்வளவுக்கு தங்கள் வணிகம்தான் முக்கியம் என்றிருந்த அந்த நாடு, இன்று சீனா, மெக்சிகோ, வியட்னாம், தைவான், இந்தியா உட்பட ஏராளமான நாடுகளுக்கு வர்த்தகப் பற்றாக்குறை (அதாவது இந்த நாடுகளிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வதைவிடக் குறைவு) கொண்ட நாடாக மாறியது எப்படி?

அவ்வளவு இறக்குமதிக்கும் எங்கிருந்து பணம் வருகிறது? காகிதத்தில் டாலர் என்று அச்சிட்டாலே அது பணம் என்பதாக டாலர் மாறியது எப்படி? அமெரிக்க உள்நாட்டுப் போரின் முடிவில், இதே டாலர்களை மக்கள் கடனாகக் கருதியதால், கருவூலத்திலிருந்த தங்கத்தையெல்லாம் விற்றுக் கடனை அடைத்த அமெரிக்காவிடம், பின்னாளில் உலகின் மொத்த தங்கக் கையிருப்பின் பெரும்பகுதி வந்து சேர்ந்தது எப்படி?

‘போர்த்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துகிட்டும் போர்த்திக்கலாம்’ என்பதாக டாலராகவும் பயன்படுத்தலாம், தங்கமாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்று டாலரைக் கொடுத்துவிட்டு, கையிலிருக்கும் தங்கத்தைவிட அதிக டாலரை அச்சடித்துச் செலவு செய்துவிட்ட அமெரிக்கா, அதைச் சமாளித்தது எப்படி? தங்க மதிப்பு இல்லாத அந்த வெற்றுக் காகிதத்துக்கு மதிப்பளிக்க, ‘ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே’ என்று பிற நாடுகளின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்திக்கொண்டது எப்படி?

அந்த நிலையையே உலக நாடுகளின் உழைப்பில் வாழ்வதற்கான வழியாக மாற்றிக் கொண்டது எப்படி? அதைப் பயன்படுத்தியே ‘ஊரை விட்டுத் தள்ளி வைச்சிருக்கேன், அன்னந் தண்ணி புழங்கக்கூடாது’ என்ற கட்டப்பஞ்சாயத்து கதையாக, ஐநாவைக்கூட மதிக்காமல் தன்னிச்சையான பொருளாதாரத் தடைகள்வரை விதிப்பது, கியூபா, இரான் உள்ளிட்ட பல நாடுகளையும் பன்னெடுங்காலமாக நெருக்கடிக்குள்ளாக்கி வருவது ஆகியவற்றைச் செய்ய முடிந்தது எப்படி?

இந்த அனைத்தையும் அறிந்துகொண்டால்தான் இன்று அமெரிக்கா எதையெல்லாம் இழக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், அடுத்தடுத்த பகுதிகளில் அந்த ஆர்வமூட்டும் வரலாற்றைச் சுருக்கமாகவும், விறுவிறுப்பாகவும் பார்ப்போம்.

அது மட்டுமே அன்றி, டாலர் இல்லையென்றால் என்னென்ன மாற்றங்கள் வரலாம், டாலருக்கு பதில் யுவான், அமெரிக்காவுக்கு பதில் சீனா என்றால், சீனா மற்றொரு ஏகாதிபத்தியமாக மாறுகிறதா, ஒற்றைத் துருவம் மட்டும்தான் மாறுகிறதா அல்லது, பல்துருவ உலகாக மாற்றம் பெறுகிறதா போன்றவற்றையும் பார்ப்போம்!

📚 எழுதியவர்:

அறிவுக்கடல்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *