வாழ்வை விளையாட்டாக நினைக்காதவர் – அகவி
மாமாவை
எடுக்கும் போது
இருந்திருந்தாற்போல் வந்தது
சோவென மழை
இறந்து பல மாதங்கள்
ஆன பிறகும்
ஒற்றை மகளாய் இருக்கும்
மனைவியின்
கேவல்
கழிவறையிலும்
சமையலறையிலும்
கேட்டுக் கொண்டே இருந்தது
பொய்க் கணக்குக் காட்டி
கவரில் பணம் வைத்து
பொன்னாடை போர்த்தி
கையெழுத்து போடச் சொல்வான்
என்னால அத செய்ய முடியாது
மண்டல உடற்கல்விஆய்வாளர் பணியைக்கூட
வேண்டாம் என்று சொல்லிவிட்டார்
எவரையும்
சின்ன சொல்லால்
ஒரு போதும்
ஏசியதில்லை
மரியாதை தெரியாமல்
நடந்தவனைக்கூட
அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்
எனக் கடந்து போவார்
கடன உடன வாங்காமல்
வீடு கட்டி
மகளுக்குக் கல்யாணம் கட்டி
பேரப்பிள்ளைகள் பேரில்
தொடர் இருப்பு வைத்து விட்டு
கைநிறைய ஊதியம் வாங்கும்
தன் மகளுக்குச் செலவு வைக்கக் கூடாதென
தன் சாவிற்கு
தயார்பணம் பதுக்கி வைத்திருந்தவர்
தன் சிறு நிலத்தின் விளைச்சலை
மகள் வீடு நிரப்பி நிரப்பி
விவசாயம் செய்தவர்
கேணி ஊற்றை காணும் போதெல்லாம்
கடவுளைப் பார்த்த பரவசத்தில்
முறுவலிப்பார்
மகள் வீட்டிற்கு
ஒரு நாள் கூட வந்து சாப்பிடாத
மாமனார்
உடம்பு முடியாத
ஆறு மாத காலத்தில்
எங்களோடு இருந்தது
பெரும் ஆசுவாசம்
பெரிய பெரிய பதவியில்
இருந்தவர்கள் எல்லாம்
வாழ்க்கையை
ஒரு விளையாட்டாக கழித்து விட்டே போகையில்
அவர்
விளையாட்டாக நினைத்ததே இல்லை
இந்த வாழ்வை
ஒரு மாலை நேரத்தில்
மழையை
வரவழைத்துக் கொண்டு
விடை பெற்றவர்
மண்ணுக்குள்
மேகங்களைக் கொண்டு தான் போர்த்திக் கொண்டு
படுத்திருப்பார்
வாழ்வை விளையாட்டாக நினைக்காதவர்
கவிதை எழுதியவர்:
முனைவர் அகவி
31Z/55 A
அரணாரை வடக்கு
ஏ.வி.ஆர் நகர்
பெரம்பலூர் 621212
***********************************
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Semma arumai vaazhkai vaazhavae ippadithaan endru unara vaithu vittathu.