‘ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள்’ – நூல் அறிமுகம்
ஏன் கம்யூனிஸ்டாக வேண்டும்?
தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்கள் “சென்னையும் நானும்” என்ற தலைப்பில் நமது புக்டே இணையத்தில் 1920 ஆகஸ்ட் செப்டம்பர் வாக்கில் கட்டுரைகளை எழுதத் துவங்கி, அதே ஆண்டு நவம்பர் வரை பத்தொன்பது கட்டுரைகள் அத்தொடரில் வெளிவந்தது. அதற்குப்பின் ஏனோ அவ்வரிசையில் அவர் கட்டுரைகளை எழுதவில்லை. சிறப்பு வாய்ந்த அத்தொடரை ஆவலுடன் வாசித்து வருவோரில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். இத்தொடரை அதன் அடிப்படை அரசியல் காரணமாகவும், சென்னை நகரத்தை மையப்படுத்தியதன் காரணமாகவும் லேசில் மறந்துவிட முடியாது.
சென்னை நகரம் என்பது அன்றைய மதராஸ் மாகாணத்தில் மட்டுமின்றி இன்றும் இடதுசாரி இயக்கங்களின் குவி மையமாக திகழ்ந்த போதிலும், நகரைத்தை மையப்படுத்தி இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெவ்வேறு தருணங்களில் உதிரிகளாக கட்டுரைகள் வெளியிடப்பட்டு வந்த போதிலும், நடைபெற்ற இயக்கங்களை கோர்வைப்படுத்தி பெரிய அளவில் இயக்கத் தலைவவர்கள் எழுதியதில்லை. இத்தனைக்கும் மாகாணத்தின் தலைமையகமாக, இயக்கப் பத்திரிகைகளின் வெளியீட்டகமாக சென்னை இருந்து வந்திருக்கிறது. இருந்தாலும் நகர தொழிற்சங்க வரலாற்றையே ஆய்வாளர் வீரராகவன்தான் எழுதியுள்ளார் என்பது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
இவ்வரிசையில் பல்வேறு கட்டுரைகள் ஜனசக்தியில் வெளிவந்திருந்தபோதிலும் கோர்வையாக வெளிவந்தவற்றை நான் படித்ததில்லை. பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மயிலை லஸ் கார்னரில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியில் வீட்டில் தனி ஆந்திர கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரித்தது பின் இறுதி ஊர்வலம் – பொட்டி ஸ்ரீராமுலு விடுதலைப் போராட்ட வீரராக இருந்த போதிலும் காங்கிரஸ் அவரது கோரிக்கையை கண்டு கொள்ளாதது- இடது சாரிகளின் பங்களிப்பு போன்றவற்றை தோழர் எம்.கே விரிவாகவே பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கின்றார்.
எண்பதுகளின் துவக்கத்தில் வெளிவந்த தோழர் பி.ஆரின் “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்ற வரலாறு இந்த வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகும். திமுகவையும் காங்கிரைசையும் கடுமையாக விமரிசனம் செய்யக்கூடிய இப்புத்தகத்தை காங்கிரசுடன் சம்பந்தப்பட்ட பழனியப்பா நிறுவனம் வெளியிட்டிருந்தது. இத்தனைக்கும் சென்னை நகரில் நடைபெற்ற தொழிற்சங்க இயக்கங்களைப் பற்றி விரிவாகவே அவர் இதில் பதிவு செய்துள்ளார்.
அத்தோடன்றி சென்னை நகரின் வரலாற்றையும் கன கச்சிதமாக விவரணம் செய்திருக்கிறார். சென்னை நகரில் நடைபெற்ற இயக்கங்களை அறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு தோழர் பி ஆரின் புத்தகம் நிச்சயம் எவருக்கும் உதவிகரமாக இருக்கும்.
சென்னை நகரையே உலுக்கிய சிம்சன் போராட்டம், பின்னாளில் நடைபெற்ற டி வி எஸ் வேலை நிறுத்தம், போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகியவை குறித்து பிரசுரங்கள் வெளிவந்திருக்கின்றன. இருப்பினும் விலாவாரியான பதிவொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இதே தருணத்தில் சிம்சன் போராட்டத்தையும் அதில் இடதுசாரிகளின் பங்களிப்பினையும் கொச்சைப்படுத்தி சென்னையை மையமாகக் கொண்டு மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நீலத்தை உமிழ்ந்த மெர்க்குரிப் பூக்கள் எனும் புனைவினை சாவி வார இதழில் தொடராக எழுதியிருந்தார்.
இப்பின்னணியில் தோழர் விஎம்எஸ்ஸின் ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள் ஒரு மாறுபட்ட அரசியல் களவரலாறாகும். முன்னர் குறிப்பிட்ட புக்டேயில் வெளியான பத்தொன்பது கட்டுரைகளை மட்டுமின்றி, நேர்காணல் வாயிலாக அறியப்பெற்ற தகவல்களையும் வே பெருமாள் அவர்கள் தொகுத்தளித்துள்ளார்.
ஒரு ஆலைத் தொழிலாளியாக ஹூஸுர் தோட்டத்தில் விதையிடப்பட்டு இன்றைய தினம் விருட்சமாய் விரிந்து நிற்கும் வே.மீனாட்சிசுந்தரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மார்க்சீய சிந்தாந்திகளில் ஒருவராவார். வி.எம்.எஸ் என்று தோழர்களால் நெஞ்சார அழைக்கப்படும் தோழர் வே.மீனாட்சிசுந்தரம் பண்டித தமிழுக்கு அப்பால் நின்று தொழிலாளி வர்க்கத்தின் மொழியில் அவர்களுக்கான மார்க்சீயக் கல்வி நூல்கள் பலவற்றை அளித்தவர். ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் குறித்த அவரது படைப்பு, சமகால நிகழ்வுகளில் நமது பார்வையும் அணுகுமுறையும் எந்த வகையில் அமைய வேண்டும் என்பதற்கான வகை மாதிரியாக,சட்டகமாக அமைந்தது என்பது மிகையன்று.
பொறியியல் கல்வியை தொடரும்பொருட்டு சென்னை நகரில் பிரவேசித்தவரின் அனுபவங்கள் மிகையின்றி இயல்பாகவும், வாசிப்பு மட்டுமின்றி களப்பணி வாயிலாகத்தான் தலைமைப் பொறுப்பேற்க முடியும் என்பது அழுத்தமாகவும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளது.
சென்னை நகர தொழிற்சாலைகளின் முதலாளிகள் குறித்து அவர் எழுதியது இன்றும் பொருத்தப்பாடு மிக்கதாகவே உள்ளது. அவசர நிலை கால செயல்பாடுகள், அமெரிக்க யுத்த எதிர்ப்பு போராட்டம், மாணவர் சங்கத்துடனான நெருக்கம், ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை வினியோக முறை போன்ற விவரணங்கள் நடைமுறை உத்திகளை வகுப்பதற்கு தோழர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

நகரத்தில் வாடகை வீடு பிரச்னை, மை காஃபி பார் போராட்டம் போன்றவை சுவாரசியம் மிக்கவை மட்டுமின்றி தோழரின் நகையுணர்வினை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
தோழர்கள் விபிசி மற்றும் கஜபதி குறித்து எழுதியுள்ளதை வாசிக்கையில் அவர்கள் குறித்து இன்னும் விரிவாக வாசிக்க வேண்டும் என்ற அவாவைத் தூண்டுகிறது. மக்களுக்கான போராட்டத்தையே அன்றாட வாழ்முறையாகக் கொண்ட அவர்கள் எத்தருணத்திலும் வாசிப்பினை கைவிடவில்லை என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.
தோழர் சத்தியாவைக் காணச் செல்கையில் கஜபதி அவர்களைக் கண்டதுண்டு. அவருடன் பல தருணங்கள் அளவளாவியதும் உண்டு. ஏன் நான் செயல்பட்ட கிளைக்கே பலமுறை வந்திருந்து (சற்றே மூக்குத் தூளை நாசியில் இழுத்துக் கொண்டு) அரசியல் அறிக்கைகளை சர்வ சாதாரண மொழியில் அனைவரும் அறியத்தக்க விதத்தில் முன்வைத்திருக்கிறார். குறைந்தபட்ச தேவைகள்கூட இல்லாத நிலையிலும் போராளியாக, ஒடுக்கப்படுவோரின் அரணாக அமைந்த அவரைப் போன்றோரின் செயல்பாடுகள்தான் நம்மை இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொள்ளச் செய்கிறது.
விஎம்எஸ்ஸின் கனவுகள் ஒரு புறம் இருப்பினும் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவேண்டும் என்பதை மட்டுமின்றி நகர்ப்புற வாழ்முறைக்கேற்ப போராளிகள் தங்கள் வாழ்முறையை எப்படி கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பதை பரிபூர்ணமாக அறியவிரும்வோருக்கும் முப்பத்தி மூன்று அத்தியாயங்களாக பகுக்கப்பட்ட இப்புத்தகம் ஏற்றதொன்றாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள் |
| ஆசிரியர்: | வே.பெருமாள் |
| வெளியீடு: | தூவல் கிரியேஷன்ஸ் |
| விலை: | ₹.300 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 ராமச்சந்திர வைத்தியநாத் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

