வே.பெருமாள் எழுதிய "ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள்" புத்தகம் | Ve Perumal's Oru Communistin Kanavugal Tamil Book Review | எஸ்.விஜயன் | www.bookday.in

வே.பெருமாள் எழுதிய ‘ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள்’ – நூல் விமர்சனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நூல் (‘ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள்’) இது. தோழர் விஎம்எஸ் அவர்கள் 90வது பிறந்ததினத்தை ஒட்டி நடத்தப்பட்ட நிகழ்வில் வெளியிடப்பட்டது. அவருடைய அரசியல் அனுபவத்தை பகிரும் நூலாக இது எழுதப்பட்டிருக்கிறது. இதில் எழுதப்பட விஷயங்களை தோழர் விஎம்எஸ் வாய்மொழியாக கூற தோழர் வே பெருமாள் எழுதியிருப்பதாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்து நடையைப் பார்த்தால் தோழர் விஎம்எஸ்ஸின் எழுத்துநடையே இதில் தெரிகிறது. ஆகவே இதை தோழர் விஎம்எஸ் எழுதியதாகவே கருதி எனது மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன்.

நாஸ்டால்ஜியா (Nostolgia) என்றொரு ஆங்கிலச் சொல் உண்டு. தமிழில் நினைவேக்கம் என்று நான் மொழி பெயர்த்திருக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் பழைய காலத்தை ஒரு ஏக்கத்துடன் நினைத்துப் பார்ப்பது என்ற அர்த்தத்தில் இச்சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது, 1688ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஜோஹான்ஸ் ஹாஃபர் முன்மொழிந்த சொல் இது. சுவாரஸியமான கதையாடலில் நினைவேக்க உத்தி ஆழமான முத்திரையைப் பதித்திருக்கிறது. திரைப்படத்தில் கூட நினைவேக்கம் அவ்வப்போது ஃபிளாஷ் பேக்காக காட்டப்படும். முழு அளவிலன நினைவேக்கக் கதைக்கு பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் படத்தை உதாரணமாகக் கூறலாம்.

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பெரும்பாலும் நினைவேக்கக் கதைகளாகவே அமைந்திருக்கின்றன. இந்நூலும் இதற்கு விதிவிலக்கானதல்ல. மார்க்சிய கருத்தியல் செல்வாக்கிற்குள் நான் வந்த காலத்தில் பழைய தலைவர்களின் நினைவேக்கங்களை தேடித் தேடிப் படித்திருக்கிறேன். எனினும் நினைவேக்க எழுத்துக்களில் ஸ்தாபன, தத்துவார்த்த, அரசியல் அம்சங்களைப் பதித்து எழுதினால் அது பயனுள்ள நூலாக அமையும். இந்த அளவுகோலில் இந்நூலை நோக்கினால் ஸ்தாபன, தத்துவார்த்த, அரசியல் அம்சங்கள் குறைவாகவும் நினைவேக்கம் தூக்கலாகவும் உள்ளதாக அமைந்துவிட்டது என்பதாக நான் கருதுகிறேன். சம்பவங்களின் தொகுப்பாக அமையாமல் அரசியல் அனுபவமாக இருப்பதே வருங்காலத் தலைமுறைக்கு செய்யப்படும் அறிவுக்கடத்தல் முயற்சியாக அமையும்.

உண்மையில் தோழர் விஎம்எஸ் ஒரு நேர்மையாளர். ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசக்கூடியவர் எந்த உள்நோக்கமும் இல்லாமல் இயக்கப்பணிகளைச் செய்தவர். கேரியரிச ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதவர். அவருடன் பழகிய ஒவ்வொரு தோழரின் வாழ்விலும் எதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க தலைவர். இவர் போன்றவர்கள்தான் தடம்புரண்டு நிற்கும் மார்க்சிய இயக்கங்களுக்கு தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தின் முலம் உரிய பாதையை கோடிட்டுக் காட்ட முடியும். வெளிப்படைத் தன்மை உள்ளவர் என்பதால் சமூக ஊடகங்களில் இவர் எழுதும் எழுத்துக்களை படிக்கும் கட்சித் தலைமையானது கொஞ்சம் அடக்கி வாசிங்கோ என்று அவ்வப்போது அறிவுறுத்தப்படுவதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வு என்பதால் இப்புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

இநநூலில் அவர் வாழ்க்கை நிகழ்வுப்போக்குகள்தான் அதிகம் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் அவருக்குள் நடந்த மனப்போராட்டங்கள் இதில் இடம் பெறவில்லை. 1963ம் ஆண்டில் இடதுநோக்கிப் பயணிக்கத் துவங்கினார். 1968ல் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகிறார். 1984ல் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு வருகிறார். இதற்கு முன்பாக மாநிலக்குழு உறுப்பினராகிவிட்டார். பிறகு மாநில செயற்குழு அதன் பின் மாநிலக்குழு, இறுதியில் ஓய்வு என்று அவரது பயணம் நடந்திருக்கிறது. இந்தப் பயணமானது சுமுகமான பயணம் என்று சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் வெடிப்புகளும், துள்ளல்களும் நிறைந்த நிகழ்வுகள் நடந்த ஆண்டுகள் இருவடைய பயண ஆண்டுகளுக்குள் வரும். மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அரசியல் செல்வாக்கு உயர்ந்து பிறகு தேய்ந்து போன காலகட்டமாகும் இது.

முதலாவதாக, சர்வதேச அம்சங்களில் மாபெரும் தத்துவார்த்த சர்ச்சைகள், அதற்கான புரிதல் ஒன்றை வந்தடைந்த 1968ம் ஆண்டு பர்த்துவான் பீளீனம் இவருடைய அரசியல் வாழ்க்கையில் துவக்க கட்டத்தில் நடைபெற்றது. இரண்டாவது, புரட்சிகர கட்சி என்ற அடையாளத்துடன் இயங்கியதை வெகுஜன புரட்சிகர கட்சி என்ற அடையாளத்துடன் இயங்க வேண்டும் என்று முடிவெடுத்த 1978ம் ஆண்டு சால்க்கியா பீளீனம் நடைபெற்ற போது இவர் முன்னணி ஊழியராகிவிட்டார். மூன்றாவதாக, 1991ம் ஆண்டின் சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப்பின் நடந்த 14வது கட்சிக் காங்கிரஸ். அப்பொழுது இவர் மாநாடு நடந்த சென்னை நகரத்தின் மாவட்டச் செயலாளர். இதில் சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் என்று நிறைவேற்றப்பட்ட ஆவணம் 1968ம் ஆண்டின் பர்த்துவான் பீளீன ஆவணத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றிய முடிவுகள் என்பது முக்கியமான நிகழ்வு. நான்காவதாக, 1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி போய் ஐக்கிய முன்னணி அரசு உதித்தபோது தோழர் ஜோதிபாசுவை பிரதமராக உறுப்புக் கட்சிகளால் ஏற்றுக் கொண்டபோது மார்க்சிஸ்ட் கட்சி அதை நிராகரித்தது நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளானது நடைபெற்றதும் இவரது அரசியல் வாழ்வின் உச்சப்பகுதியில்தான். ஐந்தாவதாக, சால்க்கியா பிளீனத்தின் செயல்பாட்டில் அதாவது எதிரெதிர் விஷயங்களான புரட்சிகரத் தன்மையையும் வெகுஜனத் தன்மையையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் கிடைத்த படிப்பினையில் துவக்கப்பட்ட நெறிப்படுத்தும் இயக்கம் நடைபெற்றதும் இவர் மையமான இடத்தில் இருந்தபோதுதான். ஆறாவதாக, சோவியத் ஒன்றிய கலைப்பை யொட்டியும், இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை ஒட்டியும் 2000ம் ஆண்டில் நடைபெற்ற கட்சித்திட்ட மேம்பாட்டு விவாதம். ஏழாவதாக, இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பற்றியும் அதற்கு ஆதரவு விலக்கிக் கொண்டது பற்றியும் நடந்த விவாதங்கள் நடைபெற்றது இவரது அரசியல் பயணத்தின் இறுதிகாலம்.

நினைவேக்கக் கதையாடலில் இந்த ஏழு அம்சங்களைப் பற்றியும் நேரடியாகவோ பூடகமாகவே ஒன்றுமே குறிப்பிடாடதது சற்று ஏமாற்றமளிக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் உடையாடிய போது இந்த ஏழு அம்சங்கள் பற்றியும் இவருக்கென்று ஒரு நிலைபாடு இருந்தது. அத்துடன் இவர் வாதம் செய்யும் முறையானது இவருடன் வாதத்தில் ஈடுபடுபவரை திக்குமுக்காட வைக்கும். அவ்வளவு எளிதில் இவரிடம் நாம் நினைத்த விஷயம் சரி என்று ஒப்புக்கொள்ள செய்துவிட முடியாது. எனினும் ஒவ்வொரு விவாதம் முடிந்த பிறகும் நாம் மீண்டும் படித்துவிட்டு வருவோம் என்றே முடிவெடுப்போம். தோழர் விஎம்எஸ் அவர்களுடன் நடத்தும் விவாதம் எந்தவித மனகசப்பும் இல்லாமல் முடிவடையும்.

மற்றபடி நூலில் சொல்லப்பட்ட விஷயங்கள் சுவையானவை. வாசகரை புத்தகத்தை கீழே வைத்துவிடாமல் படிக்கத் தோன்றுவதுபோல் இருக்கிறது. வாலிபர் சங்க நடவடிக்கைகளை தோழர் பாக்கியம் கூறியதாக சேர்க்கப்பட்ட பக்கங்கள் மட்டும் துருத்தலாகத் தெரிகிறது. காங்கிரஸ்காரர் ப.சிதம்பரம் தோழர் விஎம்ஸ்ஐப் பார்த்து பொலிமிக்கல் மீனாட்சி சுந்தரம் உங்கள் சோவியத் யூனியன் இன்னும் பத்தாண்டுகளின் சிதைவுறும் என்று கூறியதை நினைவு கூறும் விஎம்எஸ் அவர் கூறியதற்கான காரணம் என்ன என்று விவாதித்திருப்பார் அந்த விவாதத்தை சேர்த்திருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வது எல்லாம் முதலாளித்துவ சதிக்கோட்பாட்டிற்குள் அடக்கி கட்சி அணிகளை திருப்தி படுத்திக் கொண்டிருந்த கட்சித் தலைமையானது சமூக ஊடக வெளி திறக்கப்பட்டவுடன் சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போயிருக்கிறது. செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கிறார். ஆனால் நாம் முன்வைக்கும் திட்டங்கள் எதுவும் அமலாக்க முடியாமல் போவது ஏன் என்று குறிப்பிட்டிருக்கலாம். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு நெறிப்படுத்தும் இயக்கம்.

ஆக ஒரு சிறப்பான அனுபவம் பெற்ற ஜனநாயக உணர்வில் ஆழமாக ஊன்றி நிற்கும் தோழர் விஎம்எஸ்இடம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருக்கிறது. குறிப்பாக ஐனநாயக நடைமுறையை மீறல், கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள் கோரும் பொறுப்பாக்கம் இல்லாமை, கேரியரிசம், நெஞ்சாரப் பொய் சொல்லல், ஊழல், கேள்வி கேட்கும் உறுப்பினரை தனிமைப்படுத்த மோடிக்கு முன்பே திமாகி நகல்சல் போன்ற பதங்களை பயன்படுத்தும் உத்தி – இப்படிப்பட்ட குணக்கேடுகள் நிறைந்த இயக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் மாறிய சூழ்நிலையில், இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது எப்படி என்பதை அவரளவில் நடத்திய உட்கட்சிப் போராட்டமும் அவருடைய நூலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

நடப்பு காலத்தில் நடைபெறும் நினைவேக்கங்க உரையாடல்களில் GenZ இளைஞர்கள் Its alright என்று கடந்து செல்வது நினைவேக்க உத்தியை பயன்படுத்தி அவர்களை அரசியல்படுத்துவது பயனளிக்காது என்று மட்டும் தெரிகிறது. எனவே இனிமேல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நினைவேக்கத்தை தவிர்த்து அரசியல் அம்சங்களை தூக்கலாக எப்படிக் கொடுப்பது என்று முயல வேண்டும். தோழர் இந்நூலை மேற்கண்ட கோணத்தில் இரண்டாம் பாகமாக எழுதி வெளியிட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:ஒரு கம்யூனிஸ்டின் கனவுகள்
தொகுப்பாசிரியர்:வே.பெருமாள்
வெளியீடு:தூவல் கிரியேஷன்ஸ்
விலை:₹.300
நூல் விமர்சனம் எழுதியவர்:  

✍🏻 எஸ்.விஜயன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *