7000 ஆண்டுகளுக்கு முன் விமானம் இருந்ததாக ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மஹரிஷி பரத்வாஜ் கூறியிருக்கிறார் என கேப்டன் ஆனந்த் போடாஸ் 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.
இவர் பைலட் பயிற்சி மையத்தின் ஓய்வு பெற்ற முதல்வர் ஆவார். இந்த விமானம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கும் ஒரு கோளில் இருந்து மற்றொரு கோளிற்கு பயணித்து இருக்கிறது என மிகப் பெருமையாகப் பேசி இருக்கிறார்.
ஆனால் ரைட் சகோதரர்கள் 1903ல் தான் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். நாம் 7000 வருடங்களுக்கு முன்னரே விமானத்தைக் கண்டுபிடித்துள்ளோம். விமான சம்ஹிதா என்ற நூலில் பரத்வாஜ் முனிவர் விமானம் செய்வதற்கான பல உலோகக் கலவைகள் குறித்தும் எழுதியுள்ளாராம்.ஆனால் இன்று நாம் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம் என வருத்தப்பட்டுள்ளார்.
எனவே நமது இளைய தலைமுறைகள் இந்நூலைப் படித்து விமானத்திற்கான உலோகக் கலவைகளை நம் நாட்டிலேயெ தயாரிக்க வேண்டும் என்று கேப்டன் ஆனந்த் போடோஸ் மேலும் கூறுகிறார்.
பண்டைய காலத்தில் சில விமானங்கள் 60க்கு 60 அடியாகவும் சில சமயங்களில் 200 அடி இருந்த்ததாகவும் அவற்றை ஜம்போ விமானம் என குறிப்பிட்டார்கள் என பெருமையுடன் குறிப்பிடுகிறார். பண்டைய விமானங்கள் 40 எஞ்சின்கள் கொண்டதாகவும் இருந்ததாம். சொல்லப்போனால் தற்போதைய விமானங்களில் சிறந்த எக்ஷ்காஸ்ட் அமைப்பு இன்றும் இல்லை என குறைபட்டுக் கொள்கிறார்.
இதே போல் ராவணன் 24 வகையான விமானங்கள் வைத்திருந்ததகாவும் அதற்கான விமானத் தளங்கள் இருந்த்ததாகவும் ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் 2019 இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார்.
இப்பொழுது சில கேள்விகள்:
1.7000 வருடங்களுக்கு முன்னர் மனித சமூகம் எப்படி இருந்தது?அப்போதைய காலத்திய பயணங்கள் எப்படி இருந்தன? விமானப் பயணம் அப்போது தேவையாக இருந்ததா?
2.7000 வருடங்களுக்கு முன்னர் பூமி, கண்டம், கோள்கள் குறித்த அறிவு எப்படி இருந்தது?
விமானத்திற்குத் தேவையான உலோகங்கள் அப்போது இருந்தனவா?
விவாதிப்போம் வாருங்கள்:
1.7000 வருடங்களுக்கு முன்னர் மனித சமூகம் வேட்டையாடும், கிழங்கு, தாவர உணவுகளைச் சேகரிக்கும் சமூகமாக இருந்தது. இப்படியான உணவு கிடைக்கும் வரை அந்த இடத்திலிருந்த சமூகம் அங்குத் தங்கி இருக்கும். அவைகள் இல்லாத போது அங்கிருந்து வேறிடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கின்றனர். இந்த நாடோடி சமூக வாழ்க்கை தான் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. விமானப் பயணம் இருந்ததாகக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?
- 7000 வருடங்களுக்கு முன்னர் பூமி பற்றிய கருத்தோட்டமே இல்லை. பூமி தட்டையாக இருந்த கருத்தே எங்கும் நிலவி வந்தது. பூமியே சூரிய மண்டலத்தின் மையமாக இருக்கிறது என்றும் சூரியன் உட்பட எல்லாக் கிரகங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற கொள்கையே இருந்து வந்தது. அதே போல் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என நிகோலஸ் கோபர்னிகஸ் 1543ல் அவர் இறந்த பின்னர் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பூமி கோள வடிவம் என்று முதல் முதலில் கிரேக்கர்கள் கண்டறிய அது கிபி 300ல் உறுதிசெய்யப்பட அதை எரடொதெனிஸ் என்பவரால் சோதனை மூலம் கிபி 200ல் நிரூபிக்கப்பட்ட்டது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் கிமு 1150ல் லகதாவால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் வேதாங்க ஜோதிஷாவில் கோள்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. முதலாம் ஆரியபட்டா காலத்தில் தான் (கி.பி. 476) பூமி கோள வடிவம் என்ற கருத்தும் அது அச்சில் தன்னைத் தானே சுற்றி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். கண்டங்கள் பற்றிய அறிவு பண்டைய கிரேக்கக் கடலோடிகளால் கண்டறியப்பட்டு (டாயின் பீ) பின்னர் மேம்படுத்தப்பட்டது
இப்படி பூமியைப் பற்றிய, கண்டங்களைப் பற்றிய கோள்களைப் பற்றிய கருத்துக்கள் வேத காலத்தில் இல்லாத போது எப்படி விமானம் கண்டம் விட்டு கண்டம், கோள்கள் விட்டுக் கோள்கள் பறந்திருக்க முடியும்.
7000 வருடங்களுக்கு முன் விமானம் செய்வதற்கான உலோகக் கலவைகள் இருந்தனவா என்று பார்த்தால் இந்தியாவில் முதல் உலோகப் பயன்பாடு செம்பு என்றும் அது ஹரப்பன் நாகரீக காலத்தில் (கி.மு.4000) என ஆதாரங்கள் உள்ளன. அதன் பின்னர் இரும்பு பயன்பாடு வேத கால நாகரீகத்தில் (கிமு 1500) காணப்படுகிறது.
இப்படி இருக்கையில் விமானம் தயாரிக்கத் தேவையான உலோகக் கலவைகள் எப்படி இருந்திருக்க முடியும்? முதல் உலோகக் கலவையான வெண்கலம் சுமேரியர்கள் தான் கிமு 2500 வாக்கில் கண்டறிந்து உள்ளனர். 1915ல் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட உலோக விமானம் அலுமினிய உலோகக் கலவையால் செய்யப்பட்டது. இப்படி இருக்கும் போது 7000 வருடங்களுக்கு முன்னர் பலவகை உலோகக் கலவையால் எப்படி விமானத்தைத் தயாரித்து இருக்கிறது முடியும் என்ற கேள்வி உங்களுக்கு வரவில்லையா?
வேத காலத்தில் விமானங்கள் பறந்ததாகக் கூறப்படுகின்ற விமானங்களின் கட்டமைப்பு குறித்துப் பேசப்படுகின்ற இரண்டு புத்தகங்கள் குறித்து A critical study of the work “ Vimanika Shastra”: H.S. Mukund,S.M Deshponde,H.R. Nagendra A. Prabhu and S.P. Govindarajulu, indian Instiitute of Science,Bangalore-560012, Karnataka) கட்டுரையின் சுருக்கம்
வேதகாலத்தில் பல்வகை விமானங்கள் இருந்தன என்பதற்கு இரண்டு புத்தகங்களை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். ஒன்று பிரஹித் விமான சாஸ்த்ரா. மற்றொன்று விமானிகா சாஸ்த்ரா. முன்னது பரமமுனி பிரிவ்ராஜகா எழுதியது (1959) இதில் விமான சாஸ்திரா பற்றிய சமஸ்கிருத ஸ்லோகங்களும் அதற்குரிய ஹிந்தி மொழிபெயர்ப்பும் காணப்படுகிறது. பின்னது ஜி.ஆர்.ஜோஸ்யர் (G.R.Josyer).
இதிலும் அதே சமஸ்கிருத ஸ்லோகங்களும் ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பும் காணப்படுகிறது. இவ்விரண்டு நூல்களுமே பரத்வாஜ முனிவர் எழுதிய யந்திர சர்வாஸ்வா என்ற நூலின் ஒரு பகுதியாகும். அது விமான அறிவியல் பற்றி பல முனிவர்கள் எழுதியதின் தொகுப்பு எனக் குறிப்பிடுகிறார்கள்.
பிரஹித் விமானா சாஸ்த்ரா, ரிக் வேதத்தின் அடிப்படையில் இருக்கிறது என்றும் அதன் ஸ்லோகங்களைப் பார்க்கும் போது தற்போதைய காலத்தோடு பொருத்திப் பார்த்ததது ஆகும். இந்த விமானம் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குப் பறந்தது என்று குறிப்பிடுகின்றனர். ஏன் தீவுகளுக்கு இடையே கப்பலில் செலவத்ற்குப் பதிலாக விமானத்தில் சென்றார்கள் என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
இந்த விமானங்களில் 12 தூண்கள்,ஒரு சக்கரம், 1974 மிஷின்கள், 60 கருவிகள் இருந்ததாம்.
மற்றொரு நூலான விமானிகா சாஸ்த்ராவை பண்டிட் சுப்பாராய சாஸ்த்ரி ஓதியதாகவும் வெஙகடாசல ஷர்மா எழுதியதாகவும் கூறப்படுகிறது. ஜோஸ்யெர் (Josyer) இந்நூலை எம்.சி.கிருஷ்ணசமி ஐயங்காரிடம் வாங்கியதாகக் குறிப்பிடுகிறார். இந்த நூலில் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் வேத காலத்தியதல்ல; நவீன காலத்தியது. இந்த விமானங்கள் வேத காலத்தின் பிற்பகுதியில் பறந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. ராமாயணத்திலோ மஹாபாரத்தித்தலோ விமானங்கள் பற்றிய குறிப்பு இல்லை.ராமாயணத்தில் புஷ்பக விமானம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும் அது மந்திரத்தால் மாயத்தால் பறந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் காலத்தைப் பார்க்கும் போது 1900-1922க்குள் பண்டிட் சுப்பராய ஷாஸ்த்திரியால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் த்ன்னை பரத்வாஜா மாணவர் எனக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளார் என்பதே உண்மை.
இந்நூலில் நான்கு விமானங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன:
- சகுன விமானா: 80 அடி உயர, 56 அடி அகலமும் நீளமும் அகலமும் கொண்டது.ஒரு பீடம், மூன்று சக்கரங்கள்,நான்கு வெப்ப உருவாக்கிகள்,காற்று பம்ப்புகள், ஆயில் டேங்க்,சக்னா யந்திரம்,இரண்டு இறக்கைகள்,ஒரு வால் ஆகிய அமைப்புகள் கொண்டது. ராஜ லோகம் என்ற உலோகத்தில் செய்யப்பட்டது. இந்த விமானம் வாலின் உதவியால் மேல் எழும்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- சுந்தர் விமானா: இது காற்றில் பறக்கும்; ஐந்து டயர்கள் அண்ட் பல பாகங்கள் கொண்டதாம். இது அடித்தளம், காற்றை வெளியேற்றும் உலோக பைப், மின் உற்பத்தி ஜெனெரட்டர், நான்கு ஹீட்டர்கள் இவையெல்லாம் மூடிய ஒரு கவர். இந்த உபகரணங்கள் நீராவியை மேல் நோக்கி உருவாக்கி விமானத்தை மேல் நோக்கிச் செலுத்துகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3.ருக்மா விமானா:இது ஐந்து மட்டங்கள் கொண்டது. கூம்பு வடிவம் கொண்டது. 100அடித் தளம், 20 அடி உயரம் அதன் கூம்பு 80 அடி கொண்டது. ஆனால் ஓரிடத்தில் 1000 அடித் தளம் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் படத்தில் 100அடி என குறிப்பிடப்பட்டுள்ளது.இது மணிக்கு 625 மைல் வேகத்தில் பறந்ததாம்.
4. திரிபுரா விமானா:100 ம் அடி நீளம், 24 அடி அகலம் கொண்டதாம். தண்ணீருக்குள் பறக்கும் போது தண்ணீர் புகாமல் இருக்க பால் துணி என்ற ஒருவகை துணி போர்த்தப்பட்டு இருக்குமாம். இது காற்று ,நீர், நிலம் ஆகிய மூன்று பகுதியிலும் பறந்ததாம்.இதற்கான ஆற்றல் சூரிய ஒளியிலிருந்தும் அமிலங்களிலிருந்தும் பெற்றதாம்.
மேலே கூறிய எதற்கும் அறிவியல் பின்னணி என்னவென்று தெரியவில்லை.இப்படி பூமியிலிருந்து சந்திரனுக்கு, ஆழ்கடலுக்கு, பிற கிரகங்கள், சூரியனுக்கு எல்லாம் சென்றபடி அறிவியல் கற்பனை கதைகள் எழுதுபவர்கள் பலர் எழுதியுள்ளனர். அவையெல்லாம் நிஜமல்ல; கதை என்பதே. வேத காலத்திலிருந்ததாக கூறப்படும் விமானங்கள் எதுவும் அறிவியலின் அடிப்படையற்றதாகும். புனைவு, கட்டுக் கதை அடிப்படையில் தற்கால விமான அறிவியலைப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட நூல்களை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம். நவீன விமானம் 1903 ல் கண்டுபிடிக்கப்பட்ட்டதும் இந்த நூல் 1900-1920க்குள் எழுதப்பட்டுள்ளதால் இந்தியாவில் எழுதிய அறிவியலற்ற போலி அறிவியல் கற்பனை நூல்களாகவும் அதனை கணக்கில் கொண்டு அறிவியல் மாநாடுகளில் அறிஞர்களாக கருதப்படுவர்கள் பேசுவது அறிவியலுக்கு முரணானது, உள்நோக்கம் கொண்டது.
பொ.இராஜமாணிக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.