பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய அங்கம் பறவைகளும் பறவைகள் வாழும் இடங்களும் தான். பறவைகள் ஒன்று சேரும் அல்லது ஒன்று கூடும் இடங்களை பறவைகளுக்காக ஒதுக்கி வைப்பது பல்லுயிர் பெருக்கத்திற்கும், மனித குலத்திற்கும் நாம் செய்யும் உதவியாகும்.

பறவைகளுக்கென்று எத்தனை பேர் சரணாலயங்கள் இருந்தாலும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை ‘வேடந்தாங்கல்’.
400 ஆண்டுகால வரலாற்றில் ஆச்சரியமூட்டும் வேடந்தாங்கல் சரணாலயத்தை பற்றி அனைவருமே படித்து இருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்.

பல்லுயிர் பெருக்கத்தின் ‘பொற்காலம்’  வரலாற்றை நினைவுபடுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டனர். அது ஏன்?

வேட்டையாடு.. விளையாடு…

Vedanthangal Bird Sanctuary, Tamil Nadu - Trans India Travels

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் வேட்டையாடும் இடங்களில் ஒன்றுதான் ‘வேட்டைக்காரன்’என்கிற குக்கிராமம். பறவைகள் தங்குவதற்கு ஏற்ப அடர்ந்த மரங்கள் கொண்ட சூழல் இருப்பதால், சுமார் 400 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டுப் பறவைகள் வந்து கொண்டிருந்தன. இதனால் வேடர்கள் இந்தப் பகுதிக்கு வரத்துவங்கினர். அங்குள்ள தாங்கல் என்னும் இடத்தில் தங்கி பறவைகளை வேட்டையாடி வந்தனர். இதனால் இந்த ஊருக்கு ‘வேடந்தாங்கல்’என  பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

வேடர்களின் கிராமம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்திருந்ததால் ஓய்வு எடுப்பதற்கும் தங்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உள்நாடு மட்டுமல்ல பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐரோப்பிய கண்டங்களில் இருந்தும் பறவைகள் வரத் துவங்கின. இந்த கிராமத்தில் ஏரி சிறியதாக இருந்தாலும் பறவைகளுக்கு உணவு இடமாக அமைந்தன. அதன் பல்லுயிரியல் முக்கியத்துவத்தை அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிக்கு மக்கள் உணர்த்தினர். அதை புரிந்துகொண்ட அரசாங்கமும் அந்தக் கிராமத்தை 1798 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயமாக மாற்றியது.

களைக் கட்டும் வேடந்தாங்களில் பறவைகளின் வருகையும் தங்கும் காலமும் இனப்பெருக்கமும் அதிகரிப்பதை அறிந்த கிராம மக்கள் பறவைகள் வேட்டையாடுவதை அறவே தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அத்தகைய முடிவுதான் இன்றைக்கும் உலக வரலாற்றில் ‘வேடந்தாங்கல்’ என்று தனி முத்திரை பதித்தது.

ஒரு கூட்டு பிள்ளைகள்…

PhOto SyntHesiS: Vedanthangal Bird Sanctuary

வேடந்தாங்கல் சரணாலயத்தை சுற்றி இருக்கும் கிராமவாசிகள் பறவையின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். சரணாலயத்திற்கு வரும் பறவைகளுக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர். பறவைகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுக்கவில்லை.

நம் நாட்டுக்கு விருந்தாளியாக வரும் வெளிநாட்டு பறவைகள் வேட்டையாடப் படுவதை முற்றிலும் தடுப்பதோடு தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட பட்டாசு வெடி சத்தம் எங்கும் எழுப்பக் கூடாது என்பதை கட்டாய முடிவாக்கினர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பட்டாசு வெடிப்பது கிடையாது!

இவ்வளவு ஏன்! விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. பறவைகளுக்காக ஏரியிலிருந்து தண்ணீரை பாசனத்திற்காக முற்றிலுமாக வெளியேற்றுவதே கிடையாது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பேட்டை லியோனல் அரண்மனையிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 1936ஆம் ஆண்டு வேடந்தாங்கல் ஏரி சரணாலயமாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

நாடு விடுதலை அடைந்த பிறகு சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டத்தத்தின் கீழ் காடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு வன ஜீவராசிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை பின்பற்றி 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி ‘வேடந்தாங்கல் ஏரி பறவைகள் சரணாலயம்’ ஆக அறிவிக்கப்பட்டது.

பறவைகள் பலவிதம்…

Tripadvisor | Visit to Vedanthangal Bird Sanctuary from Chennai ...

கிராமவாசிகளின் பாதுகாப்பில் வாழ்விடமாக உள்ள வேடந்தாங்கல் ஏரியில் நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்பு தாரா, வெட்டி வாயான், கரடி வாயானன், வெள்ளை நிற அரிவாள் மூக்கன், பழுப்பு நிற அரிவாள் மூக்கன், கருப்பு நிற அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை,  கிளுவை, ஊசிவால் வாத்து, நீல சிறகி, தட்டை வாயன், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான், உண்ணிக் கொக்கு, சிறிய வெள்ளை கொக்கு, நீர்க்காகம், முக்குளிப்பான், மடையான், குருட்டுக் கொக்கு,மீன்கொத்தி, புள்ளி ஆந்தை, மண்குத்தி என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர் கடப்பை மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகிறது.

ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் ஏரியில் மட்டும் பறவைகள் கூடுவதற்கு முக்கிய காரணம், நீர்கடம்பு எனும் மரம் நிறைந்திருக்கிறது. அது நீரில் உள்ள மாசுகளை சுத்திகரிக்கும் இயல்புடையது. மரங்கள் குட்டையாக இருக்கும். எளிதில் பறவைகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப படர்ந்த நிலையில் இருக்கும். இதனால் பறவைகள் இங்கு வருகின்றன.

மரத்திற்கு மரம் தாவும் பறவைகள் தங்களின் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் அழகை காண்பதும் மாலைப் பொழுதில் ரீங்காரமிடும் ஓசையும் மனசு கொள்ளை போகிறது.

உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஆஸ்திரேலியா, கனடா, சைபீரியா, ஈரான், ஈராக், பர்மா, வங்கதேசம், இலங்கை  என்று பல்வேறு நாட்டு பறவைகளின் புகலிடமான வேடந்தாங்கல் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் ஏரியைச் சுற்றளவு சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு (ஏரியல் வீவ்) எவ்வித ஆலைகளும் தொடங்கக் கூடாது என்பது அரசு உத்தரவாகும். கிராமவாசிகள் வீடுகள் கட்ட வேண்டும் என்றால் கூட முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

அரசின் உத்தரவை ஆண்டாண்டு காலமாக கிராம மக்கள் கடைபிடித்து வரும் நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நிலத்தை தொழிற்சாலைக்கு ஒதுக்க மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் எடுத்திருக்கும் முடிவு கிராம மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கருங்குழியில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலை சாத்தமை கிராமத்தில் ‘பிரதீப் டிரக்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு,  இந்திய மருத்துவ பொருட்கள் தயாரிப்பில் பிரபலமான நிறுவனமான ‘சன் பார்மா’ சுட்டிக்கல்ஸ்  1998 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி விட்டது.

Vendanthangal Bird Sanctuary Road Trip | LBB, Chennai

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனம் தான் இந்த சன் பார்மா. அம்பானி, அதானி(எண்ணூர் அருகே துறைமுகம் அமைத்து பல்லுயிர் பெருக்கத்தின் புகழ்வாய்ந்த இடமான அத்திப்பட்டு – காட்டுப்பள்ளி முகத்துவாரத்தை அழித்தவர்) வகையறாவை சேர்ந்த குஜராத்தின் திலீப் சங்கி-வியால் 1983 ஆம் ஆண்டு வாபி நகரில் தனது ஆலையை தொடங்கியது.
முதலமைச்சர் மோடியின் ஆசை பெற்றவரான திலீப் சங்கிவி, மற்றொரு மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி வாங்கினார். குஜராத் முதலமைச்சரான மோடி, பிரதமரானதை  போல் அவரது சிஷ்யர்களும் தங்களது நிறுவனங்களை நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனங்களாக மாற்றிவிட்டனர். அதில் ஒன்றுதான் இந்த மருந்து நிறுவனமும்.

கிராமத்தின் சுற்றுச்சூழலை அடியோடு பாதித்துவிடும், நிலத்தடி நீரும் காற்றும் மாசுபடும் என்ற கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி இதயவியல், நரம்பியல், குடயலிவியல், நீரழிவு சர்க்கரை நோய்க்கான மருந்து உற்பத்தியை துவக்கியது.

ஆலையில் தேக்கி வைத்துள்ள கழிவுகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சுற்றுப் பகுதியில் வெளியேற்றுவதே வாடிக்கையாக கொண்டுள்ளது. சன் பார்மா நிறுவனத்தால், உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைகளான காற்று, நீர், நிலம் அனைத்தும் அதிகம் மாசடைந்துள்ளது.

சில ஆண்டுகளில் மேல்மா, புதுப்பட்டு, பிளாஞ்சிமேடு ஏரிகளின் சாயல் கருப்பு நிறமாக மாறிவிட்டது. உத்திரமேரூர் செல்லும் சாலை ஓரம் இருந்த பனை மற்றும் நாவல் மரங்கள் அடியோடு அழிந்து விட்டன.

Vedanthangal – An Ornithologist's Dream & A Nature-Lover's Delight

தனியார் ஆலைக் கழிவு வெளியேற்றத்தால் சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள தற்போதைய சூழலில்,  சுற்றுச்சூழலை கெடுப்பதற்கான திட்டங்களை அறிவித்து வருகின்றன மத்திய பாஜக அரசும் அவர்களின் கூஜா தூக்கி அதிமுக அரசும்.

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் வேடந்தாங்கலில் சுமார் 40 விழுக்காடு சுற்றளவில் தொழில்துறை சார்ந்த உரிமைகளை வழங்க மாநில அரசு முன்வந்து இருப்பதாக வெளியாகும் செய்திகள் அந்தப் பகுதி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிட பகுதியை மீண்டும் வரைவதற்கான திட்டத்தை வன விலங்குகளுக்கான மாநில வாரியம் அனுமதி அளித்து, தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அனுமதி கொடுத்தாள் பல்வகை உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தலைமை வனக்காவலரை கட்டாயப்படுத்தி அறிக்கை பெற்றிருப்பதாகவும் அதை சுற்றுச்சூழல் துறை செயலாளரும் பரிந்துரைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் பின்னணியில் தனியார் நிறுவனமான மருந்து தொழிற்சாலையின் கைவரிசை இருப்பதாக கிராமவாசிகளின் குற்றச்சாட்டை புறம் தள்ள முடியாது.

30 ஹெக்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் பறவைகள் வாழ்விட வழித்தடத்தை சுருங்கி விட்டால் தனியார் தொழிற்சாலைகள் தாராளமாக துவங்க அனுமதி கிடைத்துவிடும் கட்டுமான பணிகளும் வொவ்வொரு ஊராக நடைபெறும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பல வகை உயிரினங்களின் பாதுகாப்பு, இனப்பெருக்கம் கேள்விக்குறியாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நீர்ப்பறவைகள், கொக்கு, நாரை என பறவையி னங்கள் அதிக அளவில் வாழும் இடத்தை குறி வைத்திருப்பது இயற்கை பேரழிவுகள் வழிவகுக்கும்.

நமது வாழ்வாதாரத்திற்கு நீர் எவ்வளவு அவசியமோ அதுபோல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம் என்பதால் வனத்துறையும் முதலமைச்சரும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியத் தேவையாகும்.

பறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும். பல்லுயிர்ப் பெருக்கம் செழிக்கட்டும்.

One thought on “பல்லுயிர் பெருக்கத்துக்கு ‘பாம்’ வைக்க சதி..! – சி.ஸ்ரீராமுலு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *