நூல் அறிமுகம்: எது இந்தியக் கலாச்சாரம்? – ரா.பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

ஆரியர்களே இந்தியக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் என்றும் அதுவே சிறந்த கலாச்சாரமென, வரலாற்றை திருத்தி எழுதத் தொடர்ந்து ஆதிக்க சக்திகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.  ஆரியர்கள் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  வளர்ச்சியடைந்த  ஒரு மக்கள் பிரிவினர்  இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் என்பதனை ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் தெளிவுபடுத்துகிறது. அந்த நாகரிகம் “சிந்து நாகரீகம்” என அறியப்படுகிறது. ஆரியர்கள் வருகையுடன் தான் இந்தியாவின் கலாச்சாரம் வளர தொடங்கியது என்ற கருத்துக்கு இன்னொரு பலத்த அடியாக, தென்னிந்தியாவில் கிடைக்கப்பெற்ற தொல் எச்சங்கள் உள்ளது. கீழடியில் கிடைக்கப்பெறும் தொல் எச்சங்கள் மேலும் இதற்கு வலுசேர்த்துள்ளது. ஆரியக் கலாச்சாரம் தான் இந்தியக் கலாச்சாரம் என்பது தவறான ஒருவாதம் என்பதை அப்போதே இ,எம்.எஸ் தனது “வேதங்களின் நாடு“ எனும் நூலில் விளக்குகிறார்.

வர்ணமுறை தோற்றம்;

ஆரியர்கள் பண்டைய சிந்துவெளி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தினர், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஆரிய மக்கள் அவர்களின் பணிகளைத் திறமையாகச் செய்யக்கூடிய முறையில் சிறிய அளவில் “ஒருவேளை பிரிவினை ” ஆரம்பத்திலேயே செய்ய வேண்டியிருந்தது. ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர் புரிந்தவர்கள், போருக்குப் பலமுறைகளில் உதவி செய்கின்ற வழிபாடுகளும் சடங்குகளும் செய்யக்கூடியவர்கள் என்பதுதான் இந்த பிரிவினை. இதில் முதல் பிரிவினர் சத்திரியர்களாகவும் , இரண்டாவது பிரிவினர் பிராமணர்களாகவும் மாறினர். இவை இரண்டும் அல்லாத ஒரு பிரிவினர் விச் என்ற பெயரில் அறியப்பட்டனர். இவர்கள்தான் பின்னர் வைசியர்கள் ஆனார்கள். இந்த மூன்று பிரிவிலும் சேராத ஆக்கிரமிப்பாளர்களின் ஆக்கிரமிப்புக்கு இரையாகி அடக்கப் பட்டவர்கள்  (பண்டைய இந்திய பூர்வ குடி) தாசர்கள் – சூத்திரர்களாக ஆக்கப்பட்டனர். இதில் முதல் மூன்று பிரிவைச்  சார்ந்தவர்கள் ஆளும் வர்க்கத்தினர், நான்காவது பிரிவினர் ஆளப்படுவோர். இதுதான் இந்தியாவின் வர்க்க (வர்ண) வேற்றுமையின் முதல் வடிவம் என இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.

வேதங்களின் நாடு vedangalin naadu

தத்துவ தளத்தில்

தத்துவ ரீதியாகவும் மத ரீதியாகவும் நடைபெற்ற  மோதல்களில், மேல்தட்டுப் பிரிவினரின் அதிகாரத்திற்கு ஒரு சிறு பாதிப்புகூட ஏற்படவில்லை. லோகாயத வாதிகள் உட்பட, புராதன இந்தியாவின் பொருள்முதல் வாதிகளையெல்லாம் அதிகார பலம் மற்றும் மோசடிகள் மூலம் தோற்கடித்தனர். அதோடு மட்டுமின்றி பொருள்முதல் வாதிகளின் முக்கிய நூல்களை எல்லாம் அழிக்கவும் செய்தனர். லோகாயதர்கள் (பொருள் முதல்வாதக் கருத்துடையோர்)  இருந்தனர் என்று பிற்கால தலைமுறை தெரிந்து கொள்வதற்கே,  கருத்து முதல்வாதிகள் பொருள் முதல்வாதிகளின் வாதங்களை விமர்சிப்பதற்கும் ஆளுமைசெலுத்துவதற்கும்  அவர்கள் கொடுத்துள்ள மேற்கோள்கள் மட்டுமே ஆதாரமாகவுள்ளது. மூல நூல்கள் அனைத்தையும் அழித்து விட்டனர். பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதிய நூல்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

முடிவாக

இப்புத்தகம் இந்தியச் சமூக மாறுதல்கள் குறித்து பலவற்றைத் தெளிவாக விவரிக்கிறது. இந்திய நாட்டின் வரலாற்றையும் அதேசமயம் இந்தியாவின் தத்துவப் பார்வையையும் நமக்கு வழங்குகிறது.  புனிதத் தன்மையின் போர்வையில்  இந்தியாவின் வரலாற்றையும் சமூகத்தையும் பார்க்கக்கூடிய எந்த முயற்சியும் நாட்டை  நெருக்கடியிலிருந்து காக்காது என்பதை நூல் சுட்டுகிறது. இந்திய வரலாற்றையும் இந்தியத் தத்துவத்தையும் சமூக வளர்ச்சியோடு மார்க்சிய கண்ணோட்டத்தோடு (இயக்கவியல் பார்வை) பகுப்பாய்கிற நூலாக இது அமைந்துள்ளது. ஆரியர்களின் வருகைக்குப் பின் இந்தியச் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றம், வருண முறை எவ்வாறு உருவாகியது அது இன்றுவரை எப்படி  நிலைத்து நிற்கிறது என்பதை ஆராய்கிறது.

ஐரோப்பாவில். குறிப்பாக கிரீஸ்ஸையும்  இந்தியாவையும் ஒப்பிட்டு. அங்கும் இங்கும் எப்படி சமுதாய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அடிமை சமூகத்திலிருந்து நிலப்பிரபுத்துவ சமூகத்தை நோக்கி கிரீஸ் எப்படிப் பயணப்பட்டது இந்தியா எப்படிப் பயணித்தது என்பதையும் மார்க்சிய அடிப்படையில் இ.எம்.எஸ். பகுப்பாய்ந்துள்ளார். ரிக்வேத காலத்தில் ஆரம்பித்து இந்தியச் சுதந்திரம் வரை எப்படி இந்தியா வளர்ந்து வந்தது என்பதை , சமூக பொருளாதார அரசியல் காரணிகள் கொண்டு சரியான முறையில் இந்தியச் சமுதாயம் குறித்து இந்நூல் விளக்குகிறது.

Buy -- Book Online at Low Prices in India | -- Reviews, Ratings

நூல் – வேதங்களின் நாடு
ஆசிரியர் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
தமிழில் – பி.ஆர்.பரமேஸ்வரன்
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் – 64
விலை – ரூ 40/-