வேடிக்கைப் பார்க்கும் இருள் – நூல் அறிமுகம்
இருளுக்கும் வெளிச்சத்திற்குமான ஓர்மைப் பண்பிலிருந்து தொடங்குகிறது வேடிக்கைப் பார்க்கும் இருள்
’வேடிக்கைப் பார்க்கும் இருள்’ கவிதை நூலை பேரா. மு. ரமேஷ் அவர்கள் எழுதியுள்ளார்.இது அவருக்கு நான்காவது கவிதை நூல். இதற்கு முன்பு என் தேசத்து ஜதிகள் (2002), வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் (2005), மழையில் கரையும் இரவின் வாசனை (2007) எனும் கவிதை நூல்களைத் தொடர்ந்து இன்று வேடிக்கைப் பார்க்கும் இருள் (2024) கவிதை வரை படைத்து உள்ளார். ஒவ்வொரு கவிதைக்குமான இடைவெளியை காணும் பொழுது கவிதையைத் தொடர்ந்து எழுதும் எண்ணம் கொண்டவர் இல்லை என்பதை முதலில் அறியமுடிகிறது. கவிதை எழுதத் தொடங்கி இன்று வரை சரியாக 22 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கிடையில் 4 கவிதை நூல்கள் மட்டுமே அவர் வெளிக்கொணந்துள்ளார். அப்படி என்றால் கவிதைக்கும் அவருக்குமான இடைவெளியை நாம் புரிந்து கொள்ளலாம். மட்டுமல்ல கவிதை அவர் வலிந்து எழுதும் ஆற்றல் கொண்டவர் இல்லை என்ற புரிதலையும் தருகிறது. இடைப்பட்ட காலத்தில் அவர் என்னவாக இருந்தார் என்று கேள்வி எழுகிறது. சிறுகதை, விமர்சன நூல்கள், ஆய்வு நூல்கள் என்று தன்னை எழுத்து உலகில் கரைத்துக் கொண்டு ஓர் ஆராய்ச்சியாளராக பரிணமித்து கவிதை நூல்களைத் தவிர 18 நூல்களை படைத்துள்ளார். இதற்கிடையில் தான் ’வேடிக்கைப் பார்க்கும் இருள், என்னும் கவிதை அவரை எழுதத் தூண்டியது. இந்த நூலில் மொத்தம் 60 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஓர் இனிமையான, அழகான அர்த்தத்தைக் கற்பிக்கிறது.
பொதுவாக கவிதை என்றாலே அழகு என்று பொருள். அதன் அடிப்படையில் தான் சமகாலத்தில் குழந்தைகளுக்கு கவி, கவின், கவிச்சரன், கவிதா என்று பெயர் சூட்டி மகிழ்வதையும் காண முடியும். எதன் அடிப்படையில் கவிதை அழகாகிறது என்றால்? சொற் சிக்கனத்தில் என்று வரையறுக்க முடியும். கவிதை நீண்டு இருப்பதைத் தாண்டி சுருங்கி இருப்பதில் இன்னும் அழகு மிர்வதை காண முடியும். புதுக் கவிதைத் தொடங்கி ஹைக்கூ, சென்ரியு, லிமரிக்கூ என்று அதன் பரிணாம வளர்ச்சியை கூற முடியும். ஆனாலும் புதுக்கவிதை இயக்கமாக கட்டமைத்து அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை மறுக்க முடியாது. பரிமாண வளர்ச்சியில் மனிதன் முழுமை அடைந்ததைப் போன்று மரபுக் கவிதை தொடங்கி புதுக் கவிதையில் வளர்ந்து நிற்பதற்கு எழுத்து, மணிக்கொடி, கசடதபற, வானம்பாடி உள்ளிட்ட இயக்கங்களும் இதழ்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சமகாலத்தில் எழுத்துலகில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் தேர்வு செய்வது கவிதையை தான். இதற்கு இரண்டு காரணங்களைக் கூற முடியும் ஒன்று படைப்பு சுதந்திரம். மற்றொன்று சுய பரிசோதனை. சுயபரிசோதனை என்பது தாங்கள் சொல்ல விரும்பும் கருத்தைக் குறித்த நேரத்தில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை அதனால்தான் இன்று படைப்பிலக்கியத்தில் சிறுகதை, நாவல், உரைநடை, நாடகம் போன்றவற்றில் கவிதையே அதிகமான எண்ணிக்கையில் வெளி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500-ல் இருந்து 750 க்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் வெளிவருவதைக் காண முடியும். இது மற்றப் படைப்புகளில் ஒப்பிட்டு அளவில் அதிகம்தான். என்றாலும் எது நிலை பெற்று வாழும் என்பதற்கு காலம்தான் தீர்மானிக்கும். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப் போன்று, எது சிறந்த படைப்போ அது நிலைபெற்று வாழும். அதை மக்கள் கொண்டாடுவர்.
ஒரு படைப்பு அது சமுதாயத்தின் மீது கொண்ட உணர்வாலே அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து செல்கிறது. பேராசிரியர் ரமேஷ் அவர்களின் வேடிக்கைப் பார்க்கும் இருள் கவிதையை ஒரு சமுதாய நோக்கத்தோடுப் படைக்கப்பட்டது என்று கூற முடியும். அது இந்த சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையின் பால் உருவானது. இதில் மொத்தம் 60 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள அனைத்துக் கவிதைகளும் வாசகருக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. இந்த அனுபவம் கவிஞரின் புதிய முயற்சி என்று சொல்ல முடியும். ஒரு கவிஞருக்குள் இன்னொரு கவிஞர் இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக ஒரு கவிதைக்கான பொதுத்தலைப்பைக் கூறிய பின்பு அந்தத் தலைப்பை ஒட்டி ஒரு கவிஞரை உருவாக்குகின்றார். உதாரணத்திற்கு வேடிக்கைப் பார்க்கும் இருள் எனும் பொதுத் தலைப்பை குறிப்பிட்டு அந்த கவிதையை கவிஞர் இருளாண்டி எழுதியதாகக் குறிப்பிடுகிறார். இதுபோன்று தலைப்புகளை பார்க்கும் பொழுது, கவிதைக்குள் இருக்கும் உணர்வை வேறொரு கவிஞர் வாயிலாக சொல்ல வருவதை உணரமுடிகிறது. மற்றொரு முயற்சியாக கவிதைக்குள் பகடி செய்வதைக் கூற முடியும்.
இதற்கு முன்பாக சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் பகடி அல்லது எள்ளல் தொனியில் கவிதைகளைப் படைத்ததைக் காணமுடியும். இதை மறுப்பதற்கு இல்லை. அதைப் படிக்கும் பொழுது மட்டும் அதன் சுவாரசியத்தை உணர முடியும். அப்படி இருந்தால் அதை படைப்பின் வெற்றி என்று சொல்லுவதற்கில்லை. அது ஒரு முயற்சி என்கின்ற வரையறையில் சுருங்கிவிடும்.
’வேடிக்கைப் பார்க்கும் இருள்’ அப்படி அல்ல. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையான புரிதலைத் தருகிறது. அதுவும் வாசகனை கவிதைக்குள் ஒரு பாத்திரமாக மாற்றும் முயற்சி கவனம் பெற்றுள்ளது. என்றாலும், மற்றொன்று வேடிக்கைப் பார்க்கும் இருள் எனும் தலைப்பு. சில உணர்வைத் தருகிறது.
இருள் எப்படி வேடிக்கை பார்க்கும்? அப்படி என்றால் வெளிச்சம் என்னவாக அல்லது எங்கு ஒளிந்து இருக்கும்? அதன் நிறம், குணம், செயல், தன்மை என்னவாக இருக்கும்? இது போன்ற கேள்வி தோன்றுவதையும் மறுக்க முடியாது. இதைக் கவிஞரின் மொழியில் சொல்வதென்றால், ’இதைத்தான் உணர்ச்சி வாயில் உணர்வு வலித்து, என்கிறது தொல்காப்பியம். இப்படியான விளக்கங்களை சொல்வதனால் வேடிக்கைப் பார்க்கும் இருள் என்னும் இக்கவிதை தொகுப்பு இருண்மை கவிதையென்று யாரும் நினைத்து விடக்கூடாது. இது இருள் பற்றியக் கவிதை அவ்வளவுதான். இருள் பற்றிய கவிதையென்ற உடன் ஒளியற்ற கவிதையுமாகவும் இருக்கிறது. ஒளியற்ற நிலையாகவும் இருள் என்பதனால் இப்படியொரு தன்மை இக்கவிதைக்கு கிடைத்து விடுகிறது. ஒளியென்பது இருளைச் சார்ந்தது என்பதால் இத்தன்மை இயல்பாக பெற முடிகிறது (ப. 4) இருளும் ஒளியும் வெவ்வேறானவை அல்ல. அவை இரண்டும் ஓர்மை பண்பில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் தான் வேடிக்கைப் பார்க்கும் இருளையும் புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழலில் இருளுக்கும் வெளிச்சத்திற்குமான இடைவெளியை பின்வரும் கவிதைச் சுட்டுகிறது.
வேடிக்கைப் பார்க்கும் இருள்
கவிஞர் இருளாண்டி
இருள் இயற்கையானது
இருள் நிலையானது
இருள் மெய்யானது
தொழிற்சாலை வைத்து ஒளியை ஆக்குவதுபோல
இதுவரை எவரும் இருளைப் படைத்ததில்லை
அவ்வளவு சுலபமாக இருளைப் படைக்க முடியுமா
என்று எனக்கு தெரியவில்லை
நமது வெளிச்ச விளையாட்டுகளை
மறைவாக நின்று வேடிக்கைப் பார்க்கிறது இருள்
அலையில் மறையும் ஆழ்கடலைப் போல
செயற்கை நிலா செயற்கைச் சூரியன்
ஒற்றை இரவை மறைக்க எதிர்க்க
எவ்வளவு சிறப்பானப் பன்னாட்டு போட்டி
சந்திரமண்டலம் சூரியமண்டலம்
நட்சத்திரக்கூட்டம் யாவும்
ஒருநாள் கருந்துளைக்குள் விழுந்துவிடுமோ
கருந்துளையை ஒளிவிளக்காய் ஆக்கமுடியுமா
கருந்துளையில் துளை இருக்கிறதோ இல்லையோ இருள் இருக்கிறது
இந்த உலகமே கருந்துளைக்குதான் சொந்தம்
கருந்துளைவாசியான நானும்
கருந்துளை வடிவானவன்தான்
ஒளியின் மத்தியில் துளி இருள்இருக்குமே
அதுதான் எனது கண்கள்
அந்தக் கண்களின் வழியாகத்தான்
உங்களை நான் வேடிக்கைப் பார்க்கிறேன்
நீங்கள் என்னை வேடிக்கைப் பார்ப்பது போல
அல்ல இது கொஞ்சம் வித்தியாசமானது
இருட்டைப் பழகியவருக்குதான்
இவ்விருப்பு பிடிபடும்.
என்ற இந்தக் கவிதை, வெளிச்சத்தின் அழகை ஆராதிப்பவர்களின் மத்தியில் இருளின் அழகையும் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறார். கொஞ்சம் நீண்ட இந்த கவிதையில் ஒளிந்திருக்கும் கவித்துவத்தை ”ஒளியின் மத்தியில் துளி இருள் இருக்குமே” என்ற வரி மட்டும் போதும் இருளின் வெளிச்சத்தை வெளிக்காட்டுகிறது. குறளற்றவர்களின் குரலாக வேடிக்கைப் பார்க்கும் மனிதர்கள் கவிதையில் கவிஞர் மு. ரமேஷ் வெளிப்படுத்தியுள்ளார். ”… கண் பார்வை மட்டுமே இல்லாத ஒருவர் காட்சி கவிதை எழுதக் கூடாதா! அல்லது முடியாத! எப்பொழியும் இல்லாத கணிப்பொறிக்கு முன்னால் தங்கள் ஐம்பொறிகளின் நிலை என்ன என்பதை யோசிப்பதற்கு முன்னால் மனித நிலை என்பது ஒரு மனநிலை தானே! மனம் என்பது சொற் குவியல்களால் கட்டப்படுவதைத் தவிர வேறென்ன? கண்பார்வை அற்றோரை சமத்துவமாக நடத்த முடியாத உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன் கடவுள் மயக்கத்திலும் காமத் திளைப்பிலும் இன்ப களிப்பிலும் ஏன்? மரணப்படுக்கையிலும் முதலில் மூடப்படுவது கண்கள் தான்” (பக். 4,5) இந்த வழிதான் மேற் சுட்டிய கவிதை என்று நாம் உணர முடியும்.
அன்பைக் காணவில்லை
அறிவிப்பாளர்
ஒவ்வொரு முகூர்த்த நாள் அன்றும்
எல்லோருக்கும் அன்பு மிகுதியாகி விடுகிறது
தலைக் கவசத்தை கழற்றி வைக்கும்
வாகன ஒட்டிப் போல
கால் வலிக்குதுன்னு
செவத்தோரம் விட்டுவிட்டு
குளித்து முடித்து
கதவைத் திறந்துப் பார்க்கையில்
ஐயையோ அன்பைக் காணவில்லை.
அனேகமாக செருப்பை மாற்றிக் கொண்டு
போனவரின் காலுக்கு அடியில்
மாட்டிக் கொண்டிருக்கலாம்.
எனது அன்பும்.
இந்தக் கவிதை நேரடியாக பகடிச் செய்வதைக் காண முடிகிறது. இதை மீண்டும் மீண்டும் படித்த தோன்றும் கவிதையாகவும் விளங்குகிறது இது ஒரு குறியீட்டுக் கவிதை. அன்பு எப்படி காணாமல் போகும்? செருப்பை மாட்டிக்கொண்டு சென்றவர் ஒருவேளை தெரிந்தும் போட்டிருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம்.
பண்டைக்கால இந்தியா பாகம் 2
கவிஞர் பழங்கதைபாவி
ஒரு காட்டுல ரோடு
ரோட்ட தாண்டி வீடு
அந்த வீட்டுக்கு பின்னாடி
பெரிய ஊரு
ஊர் முழுக்க தெரு
தெரு நிறைய வீடு
வீடுகளுக்கு நடுவே கோவில்
அந்தக் கோவில் நடுவில் சாமி
சாமிய சுத்தி சாதி
நான் சொன்ன கதை பாதி
உங்களுக்குத் தெரியும் மீதி.
வரைபடத்தில் இந்தியாவின் முகம் சாதியாகவும் மதமாகவும் இன்றளவும் காட்சியளிக்கிறது. கடவுள் முன் அனைவரும் சமம் என்று மற்ற சமயங்கள் வலியுறுத்துகிறது. ஆனால் இந்து மதத்தில் தான் நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று மகாவிஷ்ணு கூறுகிறார். அப்படி என்றால் திட்டமிட்டு தீண்டத்தகாத மனிதர்களை உண்டாக்கி மனிதர்களுக்கு மனிதன் பாகுபாட்டை ஏற்படுத்துவது யாருக்கான கடவுளாக இருக்க முடியும் என்ற கேள்வியை இந்த கவிதையில் கவிஞர் எழுப்புவதை காண முடிகிறது.
உப்பு விளையாட்டுக்கு ஒரு கவிதை
கவிஞர் உமணன்
எதையும் எரிக்கவும் செரிக்கவும்
உப்புதான் உதவுகிறது
நதிகளின் கவலைகளை வாங்கும்
கடல் உப்பாக இருக்கிறது
சோத்துல உப்பு தான் போட்டு சாப்பிடுறியா
யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே
எல்லோரும் டாட்டா உப்பையே வாங்கி குவிக்கிறோம்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
கல் உப்பு சாப்பிட்ட இந்த
கற்கால மொழியை யாரும் சொல்லத் தவறுவதில்லை
உப்பேறிய காதல் தித்திக்கிறது
என்று இதுவரை யாரும் சொன்னதில்லை
உறவுகளைப் புதுப்பிக்க
தங்களை மாற்றிக் கொள்கிறார்களோ இல்லையோ உப்பை மாற்றிக்
கொள்கிறார்கள்
கண்ணீர் சிறுநீர் வியர்வை
எல்லாம் உப்பாக இருக்கிறது
உப்பு உறவு
உப்பு சுவை
உப்பு உழைப்பு
உப்பு உயிர்ப்பு
மலைகளுக்கு மத்தியில் பெருக்கெடுக்கும்
வெள்ளருவி போல
மார்புக்கு மத்தியில் பூத்திருக்கும் உப்பு மலரை
விரலால் தீண்டினால் உதிர்ந்து விடக்கூடும்
நாக்கால் ஒட்டி எடுத்து
செய்த கவிதை இது
இந்த வாழ்க்கை உப்பு சப்பு இல்லாதது
என்று தோன்றுகிற போது
ஒருவேளை பயன்படக்கூடும்
இதனை வைத்துக்கொள்
இந்தக் கவிதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க முடியும். இயேசு பிரான் சீடர்களிடம் மற்றவர்களுக்கு ஒப்பாயிருங்கள் என்கிறார். உப்பு அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கவிஞர் எந்த அளவிற்கு சமூக பற்றோடு இருக்கிறார் என்பதற்கு இதுபோன்ற கவிதைகள் ஒரு சாட்சி.
உப்பை குறித்து இன்னும் கவிதைக்கான விளக்கத்தை நீண்டு விவரித்து கருத்து சொல்லலாம். ஆனால் கவிதையில் இருக்கும் அழகு விமர்சனத்தில் கொண்டு வரும் போது விமர்சனத்தின் வெற்றியாக காணப்பட்டாலும் கவிதைக்குண்டான அழகியல் கூறு குறைந்து விடும். கவிஞர் பாப்புலர் நெருடா உப்பைப் பற்றி ஒரு கவிதை எழுதி இருப்பார் அதுவும் இதுபோன்று மிகவும் சுவாரசியமானது அந்த கவிதையை கவிஞர் மு. ரமேஷ் அவர்கள் இவ்விடத்தில் நினைவு கூறுகிறார்.
கவிஞர் மு. ரமேஷ் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு கவிதையில் ஆக்கித்தரும் முயற்சியை முதலில் நாம் பாராட்டியாக வேண்டும். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று அவர் கவிதையை வலிந்து எழுதும் ஆற்றலை அவரிடம் காண முடியவில்லை. மாறாக அவருக்கு கவிதை இயல்பாக வருகிறது. கருப்பொருளும் இயல்பாக கிட்டுகிறது. அதன் அடிப்படையில் தான் அவர் எழுதிய வேடிக்கைப் பார்க்கும் இருள் என்னும் இந்த கவிதை ஒரு பக்கம் அழகியல் தன்மையோடும், இன்னொரு பக்கம் விமர்சன நோக்கத்தோடும் படைக்கப்பட்டதாக பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் வேடிக்கைப் பார்க்கும் இருள் எனும் இந்த கவிதை பேசு பொருளாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
கட்டுரையாளர் :
முனைவர் எ. பாவலன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.