நூல் அறிமுகம்: நா.முத்துக்குமாரின் *வேடிக்கை பார்ப்பவன்* – விக்னேஷ் குமார்நூலின் பெயர்: வேடிக்கை பார்ப்பவன் 
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 231
விலை: ₹230/-
   வேடிக்கை பார்ப்பவனை நா.மு தன் வாழ்க்கை சரிதமாகவே வடிவமைத்துள்ளார்.
   வாரா வாரம் விகடனில் வேடிக்கை பார்ப்பவன் என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு தான் இப்புத்தகம். ஒரு வியப்பும் உவகையும் கலந்த ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது. கவிஞர் காஞ்சிபுரம் என்பதால் (நானும் காஞ்சிபுரம்) அவரது வாழ்க்கை என் கண் முன் நன்றாகவே விரிந்தது. அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பல இடங்களின் ஊர்களின் வழியாக நான் தினமும் பயணப்படுகிறேன். இது ஒரு நெகிழ்வான நினைவலைகளை வீசிக்கொண்டேயிருக்கிறது தினமும் என் பயணத்தில். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பாடத்தை வாழ்க்கை யை எடுத்துக் காட்டுகிறது.
மிகவும் பிடித்த சில இடங்கள். நா.மு வின் அப்பா நிறைய புத்தகங்கள் வாங்கி அடுக்குவாராம் அதற்கு அதிக கடன் வாங்கியிருப்பாராம், தன் சம்பாத்தியத்தையும் தாண்டி, அந்த கடன்களை பெரும்பாலும் நா.மு அடைக்க வேண்டியதாயிருந்ததாம். இதை தன் மகனிடம் நா.மு சொன்ன போது அவரது மகன் சொன்னாராம் “நல்லது தானப்பா. நீயும் நிறைய புக்ஸ் வாங்குப்பா நான் உன் கடன அடைக்கிறேன்” என்றாராம்.


இன்னொரு அத்தியாயத்தில் லிப்டுக்குள் நடக்கும் ஒரு பேச்சு; அதில் நா.மு, அவரது மகன் மற்றும் கீழ் வீட்டு பழக்கமில்லாத ஆள். அதில் ஒருகட்டத்தில் அந்த நபர் வீடு சொந்தமா வாடகையா என்றிட; வாடகை வீட்டில் வசித்து வருவதாக நா.மு சொல்ல அலட்சிய பார்வை வீசியதாம். “இந்த உடம்பே வாடகை தான சார்” என்று நா.மு தத்துவம் பேச, “அதான் இன்னும் வாடகை வீட்ல இருக்கீங்க” என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லி வெளியேறினாராம். வாடகை வீடுனா என்னப்பா என்று அவர் மகன் கேட்க அந்த லிப்டுக்குள் ஒரு கரைப்பான்
‘நமதில்லை மகனே,
இந்த வீடும் கதவுகளும்’
என தொடங்கி
‘ஒரு நொடி தலைசாய்க்க
வீடு தேடிப்போகிறோம் மகனே நாம்.’
என முடியும் மலையாள கவிஞர் ஶ்ரீவத்சன் எழுதி கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த கவிதை யை சொல்லி சங்கடத்தை போக்கியதுமாக அந்த அத்தியாயம் முடிவுறும். இதுபோன்று இன்னும் பல முக்கியமான நெருக்கமான நெகிழ்வான இடங்கள் கொட்டிக் கிடக்கிறது. படியுங்கள் கவிஞர் நா.முத்துக்குமாரின் வாழ்க்கையை.
நன்றி!