ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வீடெங்கும் வேப்பம்பூ வாசனை – கோவை ஆனந்தன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வீடெங்கும் வேப்பம்பூ வாசனை – கோவை ஆனந்தன்

 

 

 

 

கவிஞர் க அம்சப்ரியா அவர்களின் முதல் ஹைக்கூ தொகுப்பு, அன்னை இராஜேஸ்வரி பதிப்பகத்தின் வெளியீடாக 2021 ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு இந்து தமிழ் திசை நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு. முருகேஷ் அவர்கள், குருவிடம் சீடனின் அணுகு முறையை விளக்கும் சிறு கதையோடு நீண்ட அணிந்துரையை சிறப்பாக வழங்கியுள்ளார், ஆரம்ப காலத்தில் ஜப்பானியர்களால் ஹைக்கூ கவிதைகள் தோன்றிய விதமும், பிறகு நமது நாட்டில் உள்ள வெவ்வேறு மொழிகளில் ஹைக்கூ கவிதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருவதையும், இதுவரை அம்சப்ரியா அவர்களுக்கும் தனக்குமுள்ள நட்பையும் விளக்கமாக கூறியுள்ளார்.

நட்புரை என்னும் பெயரில் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கியுள்ள உரையில் கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் ஆரம்ப காலங்களில் இருந்த நட்பினையும் முதன்முறையாக அம்சப்ரியா எனும் பெயரினை அறிந்தபோது மனதில் ஏற்பட்ட உணர்வினைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வேப்பம்பூ வாசனையென்பதகிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கும், வாழ்பவர்களுக்குமான வரமாகும், இவ்வரத்தை இன்றைய காலகட்டத்தில் எத்தனைபேர் இதை அனுபவிக்கிறார்கள் இல்லை உணர்கிறார்கள் என்பது ஐயத்திற்குரியதாகவே இருக்கிறது, ஓட்டு வீடுகளின் மேற்கூரை தூவாரங்களில் இரவு பகலென எல்லா நேரமும் வீட்டிலுள்ளவர்களையெல்லாம் வசப்படுத்தி விடுகிறது, அருகிலுள்ள வேப்ப மரத்திலிருந்து உதிரும் வேப்பம் பூக்களின் வாசனை, இந்நூலின் முதல் கவிதையிலிருந்து ஒவ்வொரு கவிதையும் வாசிக்க வாசிக்க கடந்த கால அனுபவங்களையும் எனது கிராமத்து நினைவுகளையும் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது, ஆதலால்தான் நான் வாசித்த ஹைக்கூ கவிதை நூல்களில் எனது மனதிற்கு நெருக்கமானதில் இதுவும் ஒன்றாகும்.

“யாருமற்ற பாதை
வழிகாட்டி போகிறது
எறும்பு கூட்டம்”

என்னும் முதல் கவிதையில் தொடங்கி ஒவ்வொரு கவிதையும் வாழ்வின் நெருங்கிய உணர்வுகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது
“எழுதிய கவிதையில் பறவையோ பூக்களோ இல்லை
பிரம்புடன் பசி”

என்னதான் கண் முன்னிருக்கும் அழகியலை எழுதினாலும் ரசிப்பதற்கோ அதை மீண்டும் நினைப்பதற்கோ வழி விடாமல் சில சமயங்களில் படைப்பாளிகளுக்கும் பசி என்னும் வலிதான் அனைத்தையும் மறக்க செய்து விடுகிறது என்பதை இக்கவிதை அற்புதமாக உணர்த்துகிறது.

“குளத்தையே பார்க்காதவரின் கனவில் மலர்கின்றன தாமரை பூக்கள்”

என்ற ஹைக்கூ கவிதை இன்றைய தலைமுறையினர் குளம், ஆறென எதனுடைய வித்தியாசத்தையும் காணாமல் ஆற்றை குளமென்றும், குளத்தை ஆறென்றும், சொல்லும் சமூகத்தில் எதையுமே அறியாமல் வாழ்கின்றனர், அப்படிப்பட்டவர்களின் கனவுகளில்தான் தாமரைப் பூக்கள் தினமும் மலர்கிறதோ.

“வெட்டியெறிந்த கிளையில்
பறவையின் கூடுகள்
பதறும் வேர்கள்”

எனும் வரிகள் சாலை விரிவாக்கத்திற்கென சாலையின் இரு பக்கமும் இருந்த மரங்களை வெட்டிய கொடூர நாட்களில் எத்தனை பறவைகள் அகதிகளாயிருக்கும் என்பதையும் அதன் கூடுகள் அகற்றபட்டதையும் நினைவுபடுத்துகிறது.

நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஹைக்கூ கவிதைகள் ஒவ்வொரு நிகழ்வினை மையப்படுத்தியே பேசுகிறது இதில் பெரும்பாலும் ஆசிரியரின் சூழல் சார்ந்ததாகவும் பள்ளி சார்ந்ததாகவும் சிறுமிகளைப் பற்றியும் எளிமையான குடும்ப நிகழ்வுகளை பேசுபவையாக இருக்கிறது.

இவரது ஹைக்கூ கவிதைகள் இன்றைய சமுதாயத்திலுள்ள பாமரர்களின் வலிகளையும் குறிப்பிடாமல் இல்லை

“இன்னும் நிற்கிறேன் நிவாரண வரிசையில்
நாட்டின் வளரா பிள்ளை”
என்னும் கவிதை படிக்காமல் திரியும் பிள்ளைகளின் நிலையை உணர்த்துகிறது.

“தங்க நிறத்தில் சான்றிதழ் ஆச்சரியங்கள் இல்லை அம்மாவின் நகையில் கல்வி”

என்னும் கவிதை வரிகள் கிராமப்புறங்களிலுள்ள

பின் தங்கிய குடும்பங்கள் ஏழ்மைச் சூழலிலும் தங்களது பிள்ளைகளை கல்வியறிவில் முன்னோக்கிப் போக தாய்மார்கள் தாலியையும் அடகுவைத்து அழகிய சான்றிதழ் பெற்ற துயரங்களைக் காட்டுகிறது.

இன்றைய நகர வாழ்க்கையில் பூச்செடிகளை வாசத்திற்காக வளர்ப்பதை விட அழகுக்காக வளர்ப்பது அடுக்குமாடி அறைகளுக்குள் அதிகமாக நடைபெறுகிறது என்பதை காட்டிலும் சுவரில் வரைந்த பூச்செடிகளால் அவ்வறைகள் வண்ணமயமாய் இருந்தும் வாசனையின்றி கிடப்பதை உணர்த்தும் இக்கவிதை

“பூக்களில் வாசனையே இல்லை
அறைக்குள்ளேயே
வரைந்த பூச்செடி”

இன்று எல்லா வீடுகளும் ஓவியங்களால் நிறைவதையும் இக்கவிதை சொல்கிறது.

“குளிர்ந்த அறைக்குள் வியர்த்து துயருகிறாள் பார்வைகளின் வெப்பம்”

என்கிற வரிகள்

என்னதான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தாலும் சிலரது குரூரப் பார்வைகளால் பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு நேரும் துயரத்தினை பேசுகிறது இக்கவிதை.

“கண்ணாடி அறையில்
பூக்களை வளர்க்கப் பயிற்சி
ஏக்கத்தில் ஐவகை மண்”

இன்றைய வாழ்க்கை முறைகளால் விவசாயம் செய்ய முன் வராத அடுத்த தலைமுறையினருக்கு சிறிய அளவில் விவசாயம் செய்ய கற்றுத்தரும் நவீன வேளாண்மை முறையினை குறிப்பிடுகிறது, மரபணு விதைகளாலும் செடிகளாலும் பரவலாக செய்யப்படும் விவசாய தொழில் சிறு தொட்டிகளிலும், நெகிழி குடுவைகளிலும் நடைபெறுவதால் நிலங்கள் அனைத்தும் பயனற்று கிடப்பதை ஐவகை மண்ணும் ஏக்கத்தோடு இருப்பதாக கவிஞர் குறிப்பிடுகிறார்.

“உதிர்ந்தப் பூக்களை ஆசையாய் அள்ளுகிறாள் பிறந்த வீடு வந்தவள்”

திருமணமாகி புகுந்து வீடு சென்ற பெண்கள் பிறந்த வீடு திரும்பும் சமயங்களில் தான் நட்ட செடிகளை ஆவலோடு பார்ப்பதும் அதில் பூக்கள் மலர்ந்து உதிர்ந்து கிடப்பதையும் மனதினுள் துளிரும் ஆசைகளால் ஓடி எடுத்து நுகர்ந்து பார்ப்பதையும் காட்டுகிறது.

பெரும்பாலும் கிராமத்து நிகழ்வுகளாகவே மையப்படுத்தி ஹைக்கூ கவிதைகளை வழங்கியிருக்கும் கவிஞர் இன்றைய கல்வி முறைகளால் வார விடுமுறை, பண்டிகையென எதற்கும் விடுமுறைகூட விடாமல் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கும் பள்ளிகளால் மாணவர்களின் மனம் படும் துயரினை எளிமையாக சொல்கிறது, இப்படிப்பட்ட சூழலில் வாடும் பிள்ளைகளுக்கு ஓய்வு என்ற ஒன்று இல்லாமலே போய்விடுகிறது, மேலும் இது போன்ற செயல்களால் வீட்டில் நடைபெறும் சின்ன சின்ன நிகழ்வுகள் எதிலும் பங்கெடுக்க இயலாமலும் ரசிக்க மனமின்றியும் இயந்திரமாய் கடக்க வேண்டி உள்ளது என்பதை இக்கவிதை தெளிவாக காட்டுகிறது.

“கோலமிடுகிறாள் அம்மா நின்று ரசிக்க நேரமில்லை துரத்தும் சிறப்பு வகுப்பு”

இதுபோன்ற பல்வேறு ஹைக்கூ கவிதைகளால் வாசித்து முடியும் வரை நமது முந்தைய கால பால்யங்களுக்குள்ளும் சமுதாயத்தில் இன்று நிகழும் நிகழ்வுகளுக்குள்ளும் நெடு நேரம் அழைத்துச்செல்கிறார்

ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு அனுபவங்களை பேசுகிறது, நூலிலுள்ள அனைத்து கவிதைகளும் மிகவும் சிறப்பாக உள்ளது, இக்கவிதைத் தொகுப்பானது வெவ்வேறு மொழிகளிலும் (ஆங்கிலம், மலையாளம்) என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, வாய்ப்புள்ளவர்கள் ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

கோவை ஆனந்தன்

 

ஆசிரியர்: கவிஞர் க.அம்சப்ரியா
வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை -11
பக்கம்: 104
விலை : ₹100
வாசிக்க அழையுங்கள்:919444640986

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *