எளிய தமிழில் பொறியியல்
“வீடும் வாசலும் ரயிலும் மழையும்” என்கிற தலைப்பு, இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்போ என்கிற ஐயத்தை ஏற்படுத்தும். இல்லை. இது ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளரான மு. இராமனாதன், பல அச்சு, இணைய இதழ்களில் எழுதிய பொறியியல் கட்டுரைகளின் தொகுப்பு. அவை வீடு, வாசல், சாலை, கட்டிட விதிகள், மழை, மெட்ரோ ரயில், அணை, கல்வி, தொழில்நுட்பம் எனும் துணைத் தலைப்புகளில் பகுக்கப்பட்டு 30 கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெறுகின்றன.
இன்று அரசியலாக்கபடும் பல சமுகப்பிரச்சனைகளுக்கு தீர்வு பொறியியல் அம்சங்களில் இருக்கிறது என்றும், இந்த அம்சங்களை புரிந்து கொள்வதன் மூலம் தீர்வை நோக்கி செல்ல முடியும் என்று தரவுகளோடும், நியாயமான தருக்கங்களோடும் , முன்மொழிகிறது இந்நூல் . மக்களில் பெரும்பாலனோர் அறிந்தும் அறியாத பொறியியலை , ஒரு பொருட்டாக கருதாத சில பொறியியல் செய்திகளை நுணுக்கமாக எடுத்தாண்டு எளிமையாக்கி இந்நூல் தருகிறது.
முறைசாராமல் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் கட்டுமானத் தொழிலில் உள்ள இடர்ப்பாடுகள் வீடு கட்டுவதை சவாலாகப் பார்க்க வைத்தது. ஆனால் இன்று தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் “வீட்டை கட்டிப்பார்“ என்ற சவால் தொடர்வது ஏன்? என்று வினாவை எழுப்பி, அடுக்குமாடிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை சாதாரண வீடுகளுக்குப் பயன்படுத்தும் போக்கையும் அறியாத்தனத்தையும் சுட்டிக்காட்டி, அதிக செலவில்லாத, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, அதிக வெப்பத்தை கடத்தாத பாரம்பரியக் கட்டுமானத்தை ஓரிரு தளங்கள் உள்ள கட்டிடங்களுக்குப் பயன்படுத்த வேண்டுமென பரிந்துரைக்கிறார் நூலாசிரியர்.
சிமெண்ட் பரவலாக பயன்பாட்டிற்கு வந்து முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்று சிமெண்ட் இல்லாமல் ஒரு கட்டுமானத்தை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் சிமெண்ட், கான்கிரீட் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் ஆக்கப்படாமலும் நடைமுறைப்படுத்தப்படாமலும் இருப்பதில் உள்ள ஆதங்கமும், அதன்பால் அதற்கான பங்களிப்பாக பல கலைச்சொற்களையும் , சொல்லாடல்களையும் ஆசிரியர் இந்நூலில் கொண்டு வந்திருப்பது புலனாகிறது. எடுத்துகாட்டாக, கியுரிங் என்ற வார்த்தைக்கு நீராற்று என்ற சொல்லை முன்மொழிந்து புழக்கத்தில் உள்ள காடாத்து, காடாற்று என்ற சொற்களை மேற்கோள் காட்டி இதை நிலைநாட்டவும் செய்கிறார்.
கட்டுமானப் பணியில் விலை இல்லாத இடுபொருளாக இருந்த மணல் நகரப்பெருக்கத்தின் காரணமாக தேவைகூடி, தட்டுப்பாடு ஏற்பட்டு, சூழலியலுக்குக் கேடு உண்டாக்கி, விளைவாக எம்-சாண்ட் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எம்-சாண்ட் என்பது பன்னாட்டு விதிநூல்களின்படி தாதுப் பொருள்களைக் கலந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது. ஆனால் அந்த அறிவியல் பார்வை இல்லாமல் கருங்கல் தூள் இங்கு எம்-சாண்ட் என்று அழைக்கப்படும் அபத்த நிலையைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், இயற்கையின் மடியை உறிஞ்கிற அறமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர, உடனடியாக ஆற்று மணலுக்குப் பதிலாக எம்-சாண்டைப் பயன்படுத்த வேண்டுமெனவும், தொலை நோக்கில் தாதுக்களின் கலவையில் உருவாகும் உண்மையான எம்-சாண்டை நோக்கி ஆய்வுப் பார்வையோடு அரசு நகர வேண்டுமெனவும் எடுத்துரைக்கிறார்.
ஹாங்காங்கில் பணிபுரிந்த காலங்களில் தனது அனுபவத்தில், அந்த நகரின் தனித்துவமாகக் கட்டிடங்களைச் சுற்றி அமைக்கப்படும் மூங்கில் சாரங்களையும், உயரஉயர சளைக்காமல் கட்டிக்கொண்டே போகும் பணியாளர்களையும் சுட்டிக்காட்டுகிறார். மூங்கில் சாரங்களுக்கு அவை பழமையானவை பாரம்பரியமானவை என்பதனால் உயர்ச்சி வருவதில்லை. மாறாக அது சமகாலத் தொழில்நுட்பக் கூறுகளுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டதுதான் காரணம் என ஆய்ந்துரைக்கிறார். இது மூங்கில் சாரத்துக்கு மட்டுமல்ல ‘முதல் மொழி’ தமிழுக்கும் பொருந்தும். மூங்கில் சாரத்தில் மூக்கை நுழைத்தால் இதில் இவ்வளவு நுணுக்கங்களா என வியக்கவைக்கிறது இந்தக் கட்டுரை.
தக்கவைப்புச் சுவரை (retaining wall) சுற்றுச் சுவரிலிருந்து வேறுபடுத்தி விளக்கியிருப்பது தெளிவை உண்டாக்குகிறது. அண்மைக்காலத்தில் நடந்த விபத்துகளைக் கொண்டு சுவர்களின் வடிவமைப்பு, கட்டுமானம், பாராமரிப்பு ஆகிய மூன்று நிலைகளில் நேரும் பிழைகளை எடுத்துக்காட்டி, அவை நேராவண்ணம் தக்கவைப்புச் சுவர் உள்ளிட்ட எல்லாக் கட்டுமானங்களுக்கும் பொறியியல் கணக்கீடுகளையும் வரைபடங்களையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது இந்நூல்.
பெரியாறு அணை ஒரு பொறியியல் அற்புதம். அது ஏன் விதிவிலக்கான அணை என்பதைத் தரவுகளோடு விளக்கி, 128 வருடங்களாக இந்த அணை தண்ணீரைத் தேக்கி வந்தாலும், தெளிவாக இருந்த நீர் அரசியல் காரணங்களால் கலங்கிப் போனதைச் சுட்டிகாட்டி, அதற்குத் தீர்வாக ஊடகங்களும், அரசியல் சார்புடையோர்களும் தமிழக அரசுடன் ஒன்றுபட்டு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும், அதே நேரத்தில் கேரள மக்களின் நல்லெண்ணத்தைப் பெறும் முயற்சியும் பயனளிக்கும் என்று முன்மொழிகிறது இந்நூல்.
காளான்களாகப் பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளை நோக்கி மோகம் கொண்டு படையெடுத்த பெற்றோர்கள், புரிதல் இல்லாமலேயே பொறியியல் பட்டங்களோடு வெளி வந்து வேலை தேடியே வெம்பிப் போன மாணவப் பிஞ்சுகள், எனும் இன்றைய நிலையில், எண்ணிக்கை உயர்ந்தது, தரம் உயர்ந்ததா? என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான தீர்வுகளாக முன்மொழியப்படும் கருத்துகள் முக்கியமானவை.
மக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அடிப்படையான பொறியியல் கூறுகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருப்பதால் இது சாமானியர்களுக்குப் பயன் தரும் நூல் எனலாம். அதே நேரத்தில், இது கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொறியாளர்களுக்குமான நூலாகவும் அமையும். ஏனெனில் இது அவர்களை சுயபரிசோதனைக்கும் மேம்பாட்டுக்கும் இட்டுச் செல்லும்.
மொத்தத்தில் இந்நூல் மலைப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
நூலின் தகவல்கள்
நூல் : “வீடும் வாசலும் ரயிலும் மழையும்”
ஆசிரியர் : மு.இராமனாதன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 184
விலை : ரூ.190
தொடர்புக்கு : 044-24332424, 24330024
எழுதியவர்
பால பன்னீர்செல்வம்
பொறியாளர், சூழலியலாளர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.