தோழர் பாவெல் கர்ச்சாகின், இயக்கத்தில் ஈடுபடும் பெண் தோழர்களிடம் மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பழகக்கூடிய தோழன். எனவே, பெண் தோழர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பும்போது தனியே வர வேண்டியிருப்பின், துணைக்கு பாவெலை அழைத்துச் செல்வதை விரும்பினார்கள். ஏனெனில் பாவெல் வந்தால் எவ்வித இடர்வந்தாலும் எதிர்த்துச் சமாளித்திட முடியும் என்ற நம்பிக்கை. இதுபோல், தோழர் ஆன்னா அவர்கள் ஒரு கூட்டத்திற்கு பாவெல்லை அழைத்துச்சென்று திரும்பியபோது, கொள்ளையர்கள் மேற்கொண்ட ஒரு சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியாக தோழர் ஆன்னாவைக் காதலித்ததாகக் கூறிவந்த ஸ்ஸெவெத்தாயெவ்வாவின் குணச்சித்திரத்தையும் கீழே காண்போம்.
..
ஒருநாள் ஒக்குனேவின் அறையில் பாவெல் மட்டும் இருந்த பொழுது, ஆன்னா அங்கு வந்தாள்.
“பாவெல், உனக்கு வேலை அதிகமாயிருக்கிறதா? நான் நகர சோவியத் கூட்டத்துக்குப் போகிறேன். எனக்குத் துணையாக வருகிறாயா? திரும்பி வருவதற்கு ரொம்ப நேரமாகும். தனியாகப் போவதற்குப் பிடிக்கவில்லை.”
உடனே கிளம்புவதற்கு பாவெல் சித்தமாயிருந்தான். அவனது படுக்கைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ‘மௌஸர்’ துப்பாக்கியை எடுப்பதற்கு எழுந்தான். ஆனால், மிகவும் கனமாக இருந்ததால், அது வேண்டாம் என்று முடிவு செய்தான். அதற்குப் பதிலாக, அவன் மேஜையின் டிராயரிலிருந்து ஓக்குனேவின் ‘பிரௌனிங்’ கைத்துப்பாக்கியை எடுத்துத் தன் காற்சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். ஓக்குனேவுக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்தான். அவனது அறை தோழனுக்குத் தெரிந்த இடத்தில் திறவுகோலை வைத்தான்.
சோவியத்தின் பேரவைக் கூட்டம் தியேட்டரில் நடைபெற்றது. ஆன்னா எதிர்பார்த்தபடியே கூட்டம் நெடுநேரம் கழித்தே முடிவுற்றது.
கூட்டத்திற்கு வந்திருந்த ஆன்னாவின் தோழி, ஓல்கா, “ஆன்னா, இன்று இரவு என் வீட்டில் தங்கிவிடு. ரொம்ப நேரமாகிவிட்டது. நீ நீண்ட தூரம் போக வேண்டும்,” என்று யோசனை கூறினாள்.
ஆனால், ஆன்னா அதற்கு இணங்கவில்லை. “என் வீடு வரை என்னுடன் வருவதாகப் பாவெல் ஒத்துக்கொண்டிருக்கிறான்,” என்று அவள் சொன்னாள்.
பின்னர் பாவெலும், ஆன்னாவும் ஸாலோமென்காவுக்குக் குன்றுமேல் செல்லும் சாலை வழியே நடந்தனர்.
இருளடர்ந்த இரவு. காற்றோட்டமே இல்லை. நகரம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. சோவியத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு வழிகளில் தத்தம் இல்லம் தேடிச் சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது நடை ஒலியும், பேச்சு ஒலியும் அடங்கின. நகரத்தின் மையத்திலிருந்து வெளிப்பேட்டையை நோக்கிப் பாவெலும் ஆன்னாவும் வேகமாக நடந்தனர். வெறிச்சென்று இருந்த சந்தையில், காவற்காரர்கள் அவர்களது அடையாளச் சீட்டுகளைப் பரிசோதித்துவிட்டு, அவர்கள் தொடர்ந்து செல்வதற்கு அனுமதி கொடுத்தனர். அவர்கள் உலாச் சாலையைக் குறுக்கே கடந்து, ஒரு வெட்டவெளியை வெட்டிச் செல்லும் அமைதியான இருண்ட தெருவை அடைந்தனர். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, ரயில்வே பண்டகசாலைகளின் வரிசைக்குச் சென்ற சாலையில் சென்றனர். அந்த இருளில் பண்டகசாலைகளின் கான்கிரீட் கட்டிடங்கள் பயத்தையும் திகிலையும் உண்டாக்கக் கூடியனவாகத் தோன்றின. ஆன்னாவுக்கு ஒரு இனந்தெரியாத அச்சம் உண்டாயிற்று. அவள் கவலையுடன் இருளை ஊடுருவிப் பார்த்தாள். அவளுடைய தோழனின், கேள்விகளுக்குத் தடுமாற்றத்துடன் பதில் அளித்தாள். ஒரு டெலிபோன் கம்பமே பயங்கரமான நிழலாகக் காட்சியளித்தது என்பதைக் கண்டபொழுது, அவள் உரக்கச் சிரித்தாள். தனக்கு ஏற்பட்ட திகிலைப் பாவெலிடம் எடுத்துரைத்தாள். அவள் அவனது கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். அவனது தோள் அவளுடைய தோளை உராய்ந்தபோது அவளுக்குப் புது நம்பிக்கை உண்டாயிற்று.
“எனக்கு 23 வயதுதான் ஆகிறது. ஆனால் கிழவியைப் போல நரம்புத் தளர்ச்சியும் பயமும் ஏற்படுகின்றன. நான் கோழை என்று நீ நினைத்தால், அது தவறாகும். ஏதோ ஒரு காரணத்தால், என்னை ஒரு கவலை கவ்விக்கொண்டிருக்கிறது. பந்தோபஸ்து உணர்ச்சி உண்டாகிறது. உண்மையில் நானே என் அச்சத்தைக் கண்டு வெட்கப்படுகிறேன்” என்று ஆன்னா கூறினாள்.
பாவெல் நிம்மதியாக நடந்தான். அவனது சிகரெட்டின் பிரகாசம் ஒரு கணம் அவனது முகத்தின் ஒரு மூலையைப் பார்வைக்குப் புலப்படுத்தி, அவனது புருவங்களின் வீரத்தை எடுத்துக்காட்டியது. இவையெல்லாம் அவளது பயத்தைப் போக்கியதென்பது மெய். அந்த இரவின் கும்மிருட்டும் அந்த இடத்தின் தனிமையும் முந்தைய இரவில் நகரின் வெளிப்பேட்டையில் நிகழ்ந்த பயங்கர கொலைபாதகத்தைப்பற்றி அவள் கூட்டத்தில் கேட்ட கதையும் உண்டாக்கிய அச்சம் பாவெலின் துணையால் மறைந்தது.
பண்டகசாலைகள் பின்னுக்குப் போய்விட்டன. அவர்கள் ஒரு சிற்றாறு மீது இருந்த பாலத்தைக் கடந்து பிரதான சாலை வழியே தரைக்குக் கீழ்ப் பாதையை நோக்கி நடந்தனர். அந்தப் பாதை ரயில்வே பாதைக்குக் கீழ்க் குடையப்பட்டிருந்தது. அது டவுனின் இந்தப் பாகத்தை ரயில்வே வட்டாரத்துடன் இணைத்தது.
இப்பொழுது ஸ்டேஷன் கட்டிடம், அவர்களுக்கு வலதுபுறத்தில் ரொம்ப தூரம் பின்னால் இருந்தது. ஒரு ரயில் டெப்போவுக்கு அப்பால் இருந்த முட்டச்சந்தை நோக்கிச் சென்றது. டெப்போவுக்கு அருகில் ஒரு எஞ்சின் சிரமப்பட்டுப் புகை கக்கிக் கொண்டு வந்தது. அது தன் இருப்பிடத்தை நோக்கிச் சென்றது.
துரப்பின் நுழைவாயிலுக்குப் பத்து காலடிகள் தூரத்தில், சாலையின் பக்கத்தில் ஒரு குடிசை தன்னந்தனியாக நின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அது ஒரு கனம் மிகுந்த குண்டுக்கு இலக்காயிற்று. அதனால், அந்தக் குடிசையின் உட்புறம் அழிந்தது. அத்துடன், அதன் முகப்பும் பாழடைந்தது. எனவே, அது இப்பொழுது வாயைப் பிளந்து கொண்டு நின்ற பொந்தாகக் காட்சி அளித்தது. அது தன் வறுமையை விளம்பரப்படுத்திக்கொண்டு நிற்கும் பிச்சைக்காரனைப் போலத் தோற்றம் அளித்தது. மேலே, இருப்புப் பாதையில், ஒரு ரயில் கர்ஜனை செய்துகொண்டு சென்றது.
“வீட்டை நெருங்கி விட்டோம்” என்று ஆன்னா ஆறுதல் அடைந்தவளாய் நெடுமூச்சு விட்டுக் கூறினாள்.
பாவெல் தன் கையை விடுவிப்பதற்குத் திருட்டுத்தனமாக முயன்றான். ஆனால், அவள் தன் பிடியை உறுதிப்படுத்திக் கொண்டாள். இருவரும் அழிந்துகிடந்த குடிசையைத் தாண்டிச் சென்றனர்.
திடீரென்று அவர்களுக்குப் பின்னால் சடசடவென்று முறிந்த பேரொலி கேட்டது.
யாரோ ஓடிவந்த ஒலியும், இரைக்க இரைக்க மூச்சுவிட்ட ஒலியும் கேட்டன. பாவெலும் ஆன்னாவும் சூழப்பட்டுவிட்டனர்.
பாவெல் தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றான். ஆனால் பயத்தால் கல்லாகச் சமைந்துவிட்ட ஆன்னா அந்தக் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவன் தன் கையைத் திமிறி எடுப்பதற்குள், கால தாமதமாகிவிட்டது. அவனுடைய கழுத்து ஒரு இரும்புப்பிடியில் சிக்கி விட்டது. அடுத்த வினாடி, பாவெல்மீது பாய்ந்த ஒரு உருவம் அவனைச் சுழற்றித் திருப்பியது. பாவெல் அந்த உருவத்தை நேருக்குநேர் நோக்கிக்கொண்டு நின்றான். கழுத்தைப் பிடித்திருந்த கைவிரல்கள் மெதுவாகத் தொண்டையை நோக்கி ஊர்ந்தன. காலரைத் திருகி, மூச்சடைத்துப் போகும் நிலையைப் பாவெலுக்கு உண்டாக்கினான். அதே சமயம், அவ்வுருவத்தின் கைத்துப்பாக்கியின் வாய், பாவெலின் கண்களுக்கு முன்னால் ஒரு வில்வடிவத்தில் மெதுவாகச் சுழன்றது.
பாவெலின் கண்கள் அமானுஷ்யமான சிரமத்துடன் வடிவம் வரைந்த அத்துப்பாக்கியை நோக்கின. அந்த ரிவால்வரின் வாயிலிருந்து சாவு பாவெலை எதிர்நோக்கியது. ஆனால் ஒரு நொடி நேரத்துக்குக் கூட, தன் கண்களை அந்த வாயிலிருந்து திருப்புவதற்கான துணிவு பாவெலிடம் பிறக்கவில்லை. அவனுக்குப் பலமும் இல்லை. அவன் தன் முடிவுக்குக் காத்திருந்தான். ஆனால் எதிரி அவனைச் சுடவில்லை. பாவெலின் அகன்ற கண்கள், அந்த விரோதியின் முகத்தையும் பெரிய கபாலத்தையும் கனமான தாடையையும் வளர்ந்திருந்த மீசை தாடியின் கருநிழலையும் நோக்கின. ஆனால் குல்லாய் அவனது கண்களை மறைத்திருந்தது.
பாவெல் தனது ஓரக்கண்ணால், ஆன்னாவின் வெளிறிய முகத்தை நோக்கினான். மூன்று கொள்ளைக்காரர்களில் ஒருவன் அவளை அப்பொழுது அந்த இடிந்த குடிசைக்கு இழுத்துக்கொண்டு போனான். அவளது கைகளை நன்றாக வளைத்து கீழே தள்ளினான். இன்னொரு நிழல் பாவெலை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவன் அதன் பிம்பத்தை மட்டும் குடைவழியின் சுவரில் பார்த்தான். அவன் தனக்குப் பின்னால் இருந்த இடிந்த குடிசையில் நடந்த சண்டையின் சத்தத்தைக் கேட்டான். ஆன்னா எதற்கும் துணிந்தவளாய்ப் போராடிக்கொண்டிருந்தாள். அவள் உரக்கக் கூவி எழுப்பிய சத்தம் திடீரென்று முறிந்தது. அவளது வாயில் அந்தப் பாவி குல்லாயை வைத்து அடைத்துவிட்டான். பாவெலைப் பிடித்துக் கொண்டிருந்த இரட்டை மண்டைப் போக்கிரி, மிருகம் தன் இரையால் கவர்ச்சிக்கப்படுவது மாதிரி, பாலியல் வன்முறைக் களத்தை நோக்கிக் கவர்ச்சிக்கப்பட்டான். அவன்தான் அந்தக் கோஷ்டிக்குத் தலைவன். அந்தச் சூழ்நிலையில், சும்மா பார்த்துக்கொண்டிருக்கும் பாத்திரம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இப்பொழுது பிடிபட்டுள்ள பையன் அனுபவமில்லாத சிறுவன், டெப்போவிலுள்ள வெறுக்கத்தக்க இளைஞர்களில் ஒருவன். இத்தகைய சளிமூக்குக்காரனைப்பற்றி அவன் அஞ்ச வேண்டியதில்லை. இவ்வாறு அந்தப் பெருமண்டைத் தலைவன் சிந்தித்தான்.
“அவன் தலையில் இரண்டு அடி பலமாகக் கொடுத்து வயல் வழியே ஓடச் சொல்லுவோம். திரும்பிப் பார்க்காமல் டவுனுக்கு ஓடட்டும்” என்று எண்ணிக்கொண்டே அவன் தன் பிடியைத் தளர்த்தினான்.
“ஓடு, வந்தவழியே ஓடு. வாய் திறக்காமல் ஓடு, இல்லாவிட்டால் உன் தொண்டையில் குண்டு பாயும்” என்று கூறிக்கொண்டே அவன் துப்பாக்கியின் குழலால் பாவெலின் நெற்றியை அழுத்தினான். “ஓடு” என்று கம்மிய குரலில் மீண்டும் கூறிவிட்டு, பாவெல் தன் முதுகில் குண்டு பாயும் என்று அஞ்சக் கூடாது என்பதற்காக அந்தத் தலைவன் தன் துப்பாக்கியைத் தாழ்த்தினான்.
பாவெல் தள்ளாடிப் பின்வாங்கினான். அந்த இரட்டைத் தலையன் மீது கண் வைத்துக்கொண்டே சாலையோரத்தில் ஓடிக்கொண்டிருந்தான். இளைஞன் இன்னமும் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஆளாகலாமென்று அஞ்சுவதைக் கண்ட போக்கிரிக் கூட்டத் தலைவன் திரும்பி, இடிந்த குடிசையை நோக்கி நடந்தான்.
பாவெலின் கை அவனது காற்சட்டைப் பைக்குள் பறந்துசென்றது. அவன் மட்டும் துரிதமாகச் செயல்பட முடிந்தால், சுழன்றான். இடது கரத்தை முன்னுக்கு நீட்டினான். விரைவாகக் குறிபார்த்தான். சுட்டான்.
கொள்ளைக்காரன் தன் தவறை உணர்ந்தபோது, கால தாமதமாகிவிட்டது. அவன் தன் கையை உயர்த்திச் சுடுவதற்கு முன்னால், பாவெல் அனுப்பிய குண்டு அவனது விலாப்புறத்தைக் கிழித்துவிட்டது.
அந்தக் காலாடி, தாழ்ந்த சுருதியில் ஊளையிட்டுக்கொண்டே தள்ளாடித் தள்ளாடித் துரப்பின் சுவரை அடைந்தான். நகங்களால் சுவரைக் கீறிக்கொண்டே கீழே விழுந்தான். ஒரு நிழல் குடிசையிலிருந்து வெளியேறி இருளில் மறைந்தது. அதைத் தொடர்ந்து செல்வதற்குப் பாவெல் இன்னொரு குண்டை ஏவினான். இன்னொரு நிழல், குடைபாதையின் இருண்ட வழியை நோக்கிக் குனிந்து ஓடியது. இன்னொரு குண்டு பறந்தது. குண்டு அடியால் சிதறிய கான்கிரீட் புழுதியால் மூடப் பெற்ற அந்தக் கரிய வடிவம் ஒரு பக்கத்தில் பாய்ந்து இருளில் மறைந்தது. மீண்டும் பாவெலிடமிருந்து பிரௌனின் துப்பாக்கி இரவின் அமைதியைக் குலைத்தது. சுவருக்கு அருகில் பெருமண்டைக் காலாடி மரண வேதனையில் துடித்துக்கொண்டிருந்தான்.
ஆன்னா எழுந்து நிற்பதற்குப் பாவெல் உதவினான். அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினால் பயந்து பிரமித்துப் போயிருந்தாள். கொள்ளைக்காரனின் வலிப்பை வெறித்துப் பார்த்தாள். இனி ஆபத்து இல்லை என்று அவளால் நம்பமுடியவில்லை.
பாவெல் அவளை மீண்டும் வெளிச்சத்தின் வட்டத்திலிருந்து இருளுக்கு, இழுத்துக்கொண்டு சென்றான். அவன் அவளுடன் வந்தவழியே, டவுனுக்கு ஓடினான். அவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ஓடியபோது, துரப்புக்கு அருகில் இருப்புப்பாதை மீது விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இருப்புப் பாதையில் பயங்கரமான துப்பாக்கி வேட்டு ஒன்று கேட்டது.
அவர்கள் ஆன்னாவின் இருப்பிடத்தை அடைந்தபோது கோழிகள் கூவிக்கொண்டிருந்தன. ஆன்னா படுத்துக்கொண்டாள். பாவெல் மேஜைக்குப் பக்கத்தில் அமர்ந்து சிகரெட்டைக் குடித்தான். அந்தச் சிகரெட்டின் சாம்பல் நிறப் புகை சுருள்சுருளாக மேல்நோக்கி மிதந்து செல்வதைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். .. அவன் தன் வாழ்வில் நான்காவது தடவையாகக் கொலை செய்துள்ளான்.
பின்னர் சம்பவம் குறித்து பாவெல் ரயில்வே காவற் படையினருக்கு ரிப்போர்ட் செய்தபோது, அவர்களுக்கு நள்ளிரவு நடந்த கொலையின் மர்மம் விளக்கமாயிற்று. இறந்தவன் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. பிம்கா என்ற நாடறிந்த ரவுடி அவன். அன் கொலை, கொள்ளை முதலியவற்றைப் புரிந்து சிறைவாசம் அனுபவித்தவன்.
மறுநாள் சம்பவம் குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பாவெலுக்கும் த்ஸெவெத்தாயெவுக்கும் இடையே எதிர்பாராத விதத்தில் மோதல் ஏற்படுவதற்கும் இச்சம்பவம் காரணமாக அமைந்தது.
த்ஸெவெத்தாயெவ் இந்தச் சம்பவத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டான். அவனுக்கு ஒரு கேள்விக்கு விடை தெரிய வேண்டி இருந்தது. அந்தக் கேள்வி அவனைச் சித்திரவதை செய்தது. அவன் அந்தக் கேள்வியைப் பாவெலிடம் நேரடியாகக் கேட்க முடியாது. எனினும் அதற்கு விடை பெற்றுத்தானாக வேண்டும். அவனது பயமும் கவலையும் சுயநலத்திலிருந்து உண்டாகின்றனவென்றும், அவை இழிவானவை என்றும் அவனது சீரிய மனச்சான்று அவனுக்கு எடுத்துரைத்தது. ஆனால் அவனுக்குள் குமுறிக் கொந்தளித்த உணர்ச்சிகளின் மோதலுக்கிடையே காட்டுத்தனமான, கீழ்த்தரமான உணர்ச்சிகளே வெற்றியடைந்தன.
அவன் கம்மிய குரலில் பேசத் தொடங்கினான்.
“பாவெல், நான் சொல்வதைக் கேள். நாம் இருவரும் ரகசியமாகப் பேசுவோம். மூன்றாம் மனிதனுக்குத் தெரிய வேண்டாம். ஆன்னாவின் நலனை முன்னிட்டு நீ பேசாமல் இருப்பதை நான் அறிவேன். ஆனால், நீ என்னை நம்பலாம். அந்தக் கொள்ளைக்காரன் பிடியில் நீ சீக்கியிருந்தபொழுது, இதர கொள்ளைக்காரர்கள் ஆன்னாவைக் கற்பழித்தார்களா?”
த்ஸெவெத்தாயெவின் மனதில் இருந்ததைப் பாவெல் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டான். “ஆன்னாவிடம் அவனுக்கு அக்கறை இல்லாவிட்டால், இம்மாதிரி நிலைகுலைந்து நிற்க மாட்டான். ஆனால் ஆன்னாவை அவன் உள்ளன்புடன் நேசித்தால், …” பாவெல் ஆத்திரமடைந்தான்.
“நீ ஏன் இம்மாதிரி கேட்கிறாய்?”
த்ஸெவெத்தாயெவ் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற ஏதோ சில வார்த்தைகளைக் கூறினான். தன்னைப் பாவெல் புரிந்துகொண்டுவிட்டான் என்பதை உணர்ந்துகொண்டு கோபமடைந்தான்.
“என்னைக் கேள்வி கேட்டு நெளிந்து நழுவலாமென்று முயற்சிக்காதே. நேராகப் பதில் கொடு.”
“நீ ஆன்னாவைக் காதலிக்கிறாயா?”
நீண்ட நேர அமைதிக்குப் பின் ஆம் என்று த்ஸெவெத்தாயெவ் ரொம்பக் கஷ்டப்பட்டுப் பதிலளித்தான்.
பாவெல் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு திரும்பினான். மீண்டும் த்ஸெவெத்தாயெவை நோக்காமல் நடந்தான்.
..
(வளரும்)
(வளரும்)