நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர் 

நூல் அறிமுகம்: நிக்கோலஸ் ஒஸ்திராவஸ்கியின் வீரம் விளைந்தது (சிறார் பதிப்பு) – தேனி சுந்தர் 

 

பாவல் கர்ச்சாக்கின் ஒரு பனிரெண்டு வயதுச் சிறுவன். தன் குடும்பச் சூழல் காரணமாக ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் வேலை செய்கிறான்.. சிறுவன் என்பதால் இருக்கின்ற வேலைகளையெல்லாம் அவன் தலையில் சுமர்த்துகின்றனர் உணவகத்தார். ஏற்கனவே தொடர்ந்து 24 மணி நேரம் வேலை செய்து சோர்ந்து போயிருக்கிறான். அடுத்து ஷிப்ட்டுக்கு வர வேண்டிய பணியாளர் வரவில்லை என்பதால் தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப் படுத்துகிறார்கள்.

கொதிகலனில் தண்ணீர் பிடிக்கச் செல்கிறான். குழாயின் தண்ணீர் வரவில்லை. உடல் அசதி காரணமாக குழாயருகில் உட்கார்ந்தவாறே தூங்கி விடுகிறான். கொஞ்ச நேரத்தில் குழாயில் தண்ணீர் வந்து கொதிகலன் நிரம்பி அந்த அறையிலும் தண்ணீர் சூழ்கிறது. தண்ணீர் உடலில் பட்டபிறகு தான் பாவம் அந்தச் சிறுவன் கண்விழித்து அவசரமாக எழுகிறான். ஆனாலும் அவனது நிலையை உணராமல் அடித்து வேலையை விட்டே துரத்தி விடுகிறார்கள். அதன் பிறகு அவனுடைய அண்ணன் ஆர்தெம், உக்ரைனில் அவர்கள் வாழும் ஷெபதோவ்காவிலேயே உள்ள மின்நிலையத்தில் உதவியாளர் பணிக்குச் சேர்த்து விடுகிறான். அங்கு பணிபுரியத் தொடங்குகிறான்.

ரஷ்யாவில் அப்போது ஜார் மன்னனின் கொடும் ஆட்சி மக்கள் புரட்சியின் காரணமாக தூக்கி எறியப்படுகிறது. அவரது அரண்மனை இந்த ஷெபதோவ்காவில் தான் இருக்கிறது. ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தொழிலாளர்களும் மக்களும் நகரின் முக்கியப்பகுதிகளில் சங்கமித்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து முழக்கமிடுகின்றனர். தங்களுக்குள் ஆவேசமாக பேசிக் கொள்கின்றனர். அலையலையாக மக்கள் சங்கமிக்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இராணுவத்தினரும் வந்து புரட்சியில் இணைகின்றனர். இவற்றால் ஈர்க்கப்படுகிறான் பாவல் கர்ச்சாக்கின்.

வீரம் விளைந்தது (நியூ செஞ்சுரி புக் ...

மன்னராட்சி தூக்கி எறியப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட பரபரப்பான சூழலையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஜெர்மனியப் படை, போலந்துப் படை, பிற முதலாளித்துவ நாடுகளின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் என்றால் உள்ளூர் முதலாளிகள், நிலப்பிரபுக்களும் அந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் ஆட்சியை நிறுவிக் கொள்வதற்காக அதமான் பெட்லியூரான் எனும் தனிப்படை அமைத்து புரட்சியில் முன்னணியில் நிற்கும் போல்ஸ்விக்குகள் மற்றும் தொழிலாளர்களின் முன்னணிப் படையான செஞ்சேனையுடன் போரிடுகின்றனர். பலமுனைத் தாக்குதல்களை முறியடிக்க வேண்டிய சூழலில் அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஸ்விக்) கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றது.

மின் நிலையத்தில் தன்னுடன் பணிபுரியும் போல்ஸ்விக் தோழர்.ஷீக்ராவை பெட்லியூரான் படையினர் கைது செய்து அழைத்துச் செல்கையில் அவரைத் தப்பிக்க வைத்த குற்றத்திற்காக பாவலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. எதிர்பாராமல் அதிலிருந்து தப்பிக்கிறான்.

ஏராளமான மக்களும் இளைஞர்களும் செஞ்சேனையில் இணைந்து இக்கட்டான நிலைமையில் இருந்து ரஷ்யாவை மீட்கின்றனர். அவர்களில் ஒருவனாக பாவல் கர்ச்சாக்கினும் இணைகிறான். கோடாவ்ஸ்கியின் குதிரைப் படையில் சேர்ந்து பல சாகசங்கள் செய்கிறான். நடக்கும் அனைத்துப் போர்களிலும் உத்வேகத்துடன் கலந்து கொள்கிறான். மற்ற தோழர்கள் இடையிடையே விடுப்பு எடுத்துச் சென்றாலும் கூட பாவல் அவர்களது வேலையையும் சேர்த்துச் செய்கிறான்.

உடல் நலக் குறைவு ஏற்படும் போதெல்லாம் ஓய்வு என்பதற்கு பதிலாக மாற்று வேலை ஒன்றையே பாவல் தேர்வு செய்கிறான். படைவீரர்களை உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் அலுவலகத்தில் பணி.. தோழர்களுக்கு வெட்டுமரங்கள், ரொட்டித் துண்டுகள் கொண்டு வருவது, இரயில் பாதை அமைக்கும் பணி, கட்சி அலுவலகத்தில் பணி.. பத்திரிகை அலுவலகத்தில் பணி.. கம்சமோல் எனும் இளைஞர் அமைப்பில் பணி என தன் இதயம் துடிக்கும் கடைசி நொடி வரையிலும் என் மக்களுக்கான போரில் களத்தில் நிற்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான்.

போர்களில் பல முறை துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகிறான். ஒருமுறை முதுகில்.. ஒருமுறை தலையை உரசிச் செல்கிறது. கண்ணில் நரம்பு பாதிக்கப்படுகிறது. அப்போதும் கூட வலது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு விட்டதே.. நான் எப்படி குறிபார்த்துச் சுடுவது என்று தான் வருந்துகிறான். இந்தப் பாதிப்புகள் எல்லாம் பின்னாளில் அவனுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி பக்கவாதம் ஏற்படுகிறது. ஏற்கனவே வலது கண். இப்போது இடது கைகால்கள்.. இயக்கமின்றி முடங்கியே ஆக வேண்டிய கட்டாயம். அப்போதும் அவன் மனம் தளராது எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள், என் தோழர்கள் அனைவரும் களமாடிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும், பூமிக்குச் சுமையாக இருக்க முடியாது என்று வாதிடுகிறான். இளைஞர்களை வரச்சொல்லி உரையாடுகிறான்.

வீரம் விளைந்தது - Veeram Vilainthathu - Panuval.com ...

அதன் பிறகு தன் வாழ்க்கையை முழுக்க முழுக்க வாசிப்பிற்கே அர்ப்பணிக்கிறான்.. முழுநேரமும் புத்தகங்கள்.. புத்தகங்கள் என்று அனைத்து செவ்விலக்கிய நூல்களையும் வாசித்து முடிக்கிறான். தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள தொடர்ந்து போராடுகிறான். தன் போர்க்கள அனுபவங்களையே நூலாக எழுதுவது என முடிவெடுக்கிறான்.. பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கிறான். அறையெங்கும் தாள்கள் பறக்கின்றன.. அவனது தாய் தன் மகனுக்கு புத்திக்கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்று அஞ்சுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக பார்வை முழுமையாகவே பறிபோகிறது. அப்போதும் விடவில்லை. சொல்வதையெல்லாம் எழுதுவதற்கு ஒரு பணிப்பெண்ணை அமர்த்திக் கொண்டு முன்னைவிட வேகமாகச் சொல்கிறான். அவள் எழுதுகிறாள். சிந்திக்கிறான். சொல்கிறான்.. அவள் எழுதுகிறாள்..

அத்தியாயங்கள் நிறைவுற்றன. எழுதிமுடித்த நூலை கையெழுத்துப் பிரதியாக கட்சியின் பதிப்புக் குழுவிற்கு அனுப்புகிறான். ஒவ்வொரு நாளும் அதற்கான பதிலை எதிர்பார்க்கிறான். எதுவும் வரவில்லை. அதை வைத்து தான் தன்வாழ்வு தொடருமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறான். பல நாட்கள் கழித்து தந்தி வருகிறது. உங்களது நூலை முழுமனதோடு ஏற்று பதிப்பிக்கிறோம் என்று அதில் இருக்கிறது. ஆஹா, தன் வாழ்வு நீடிக்கிறது என்று பாவல் குதூகலமடைந்தான். அந்த நூல் தான் இதுவரை நீங்கள் வாசித்த கதை… பாவல் கர்ச்சாகின் கதை. வீரம் விளைந்தது என்கிற இந்த நாவலாக 1932ல் ரஷ்ய மொழியில் வெளிவந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது. அந்நூலை எழுதியவர் நிக்கோலஸ் ஒஸ்திரோவ்ஸ்கி.

பாவல் கர்ச்சாகின் என்பது நிக்கோலஸ் ஒஸ்திரோவ்ஸ்கியே தான். பெரும் வரவேற்பை பெற்ற அந்நூலின் சிறார் பதிப்பினை தோழர் ஆதிவள்ளியப்பன் தமிழில் மறு ஆக்கம் செய்துள்ளார். பாரதி புத்தகாலயம் குழந்தைகளை ஈர்க்கும் விதமாக வண்ணப்பக்கங்களில் அழகாக வெளியிட்டுள்ளது.

புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்

முதல் நூலின் உற்சாகத்தில் புயலின் குழந்தைகள் என்னும் அடுத்த நாவலை எழுதுகிறார் நிக்கோலஸ் ஒஸ்திரோவ்ஸ்கி. . ஆனால் அந்தப் பணி முடியும் முன்னரே தனது 32வது வயதில், 1932ல் அவர் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றார். அவர் அஞ்சியது போல அல்லாமல் அவரது வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகவே அமைந்து விட்டது என்பதைத் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரது நூலை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் மூலம் உணர முடிகிறது…

உலகம் தோன்றிய காலத்திலிருந்து, எவ்வித முன்னுதாரணுமும் அற்ற நிலையில், ஒரு மக்கள் புரட்சி எப்படி நடைபெற்றது என்பதையும், பாட்டாளி வர்க்கத்தின் அப்புரட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனை துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தது என்பதை வாசித்து அறிந்து கொள்ள, வாழ்ந்து தெரிந்து கொள்ள இதுபோன்ற நூல்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/veeram-vilainthathu-ilaiyorpathippu/

— தேனி சுந்தர் ..

Show 1 Comment

1 Comment

  1. பா.அசோக்குமார்

    நல்லதோர் நூல் அறிமுகம். தங்களது கதைசொல்லல் பாங்கு அருமை. புத்தகத்தை வாசிக்கும் ஈர்ப்பை உண்டாக்கி உள்ளது. வாங்கி வைத்துள்ள புத்தகத்தின் அளவைப் பார்த்தும் காலம் கருதியும் இன்னும் வாசிக்காமலேயே வைத்துள்ளேன். தங்களது நூல் அறிமுகம் அதனை வாசிக்கத் தூண்டியுள்ளது என்பதே உண்மை.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *