அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே!

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த என்னை, பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் பக்கம் தள்ளியதில் சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த நாவல்கள், கதைகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் குறிப்பாகச் சொல்லப் போனால் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் ‘வீரம் விளைந்தது’, ‘உண்மை மனிதனின் கதை’, ‘சாவுக்கே சவால்‘, ‘வானவில்’, ‘அதிகாலையின் அமைதியில்’, ‘அவன் விதி’ முதலானவை என்றென்றும் என் நெஞ்சில் நிலைத்திருப்பவைகளாகும்.

இதிலும் ‘வீரம் விளைந்தது’ நாவல் என்னை முழுமையாகவே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நான் வாங்கிய சோவியத் யூனியன் வெளியீட்டில் இதன் முதல் பாகத்தை ஒரு நண்பர் வாங்கிச் சென்றவர், திருப்பித் தராததன் காரணமாக அது தற்சமயம் என்வசம் இல்லை. இரண்டாவது பாகத்தை மட்டும் சமீப ஆண்டுகளில் பல தடவை படித்துவிட்டேன். அதில் ஒருசில சம்பவங்களை மட்டும், பொதுவுடைமை இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படும் தோழர்களுக்குப் பயன்படும் என்று நம்புவதால் அதனைக் கீழே பதிவு செய்திருக்கிறேன்.

நான் பெற்ற இன்பம் நீங்கள் பெற வேண்டும் என்பதே என் அவா. முடியுமானால் வீரம் விளைந்தது நாவலை வாங்கி முழுமையாகவும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  1. பாவல் கர்ச்சாகின்னும் ரீத்தாவும்

தோழர் பாவல் கர்ச்சாகின்னுக்கும் தோழர் ரீத்தாவுக்கும் இடையேயான தோழமை மிகவும் அற்புதமான ஒன்றாகும். தோழர் கர்ச்சாகின் மார்க்சியத்தைக் கற்கும் மாணவர் என்ற முறையிலும், ரீத்தா கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் என்ற முறையிலும்தான் பழகத்தொடங்குகிறார்கள். பாவல், ரீத்தா மீது எவ்வளவுதான் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் அவர் ஓர் அழகிய இளம்பெண் என்பதும் அவனது மனதில் அடிக்கடி வந்து அவனை சங்கடத்திற்குள்ளாக்குகிறது. அதனால் ரீத்தாவைச் சந்திப்பதையே கத்தரித்துவிடுவான். இது தொடர்பாக புத்தகத்தில் உள்ள வாசகங்களைப் படியுங்கள்.

தோழர்கள் கர்ச்சாகினும், ரீத்தாவும் மிகவும் கூட்டமாகவுள்ள ஒரு ரயிலில் பயணம் செய்வதன்பின் உள்ள வாசகங்களைக் கீழே அளித்திருக்கிறேன்.

“ரெயில் ஊர்ந்து சென்றது. வண்டிகள் சிதிலமடைந்தவை. கூட்டமோ தாங்க முடியவில்லை. இருப்புப் பாதையின் ஒவ்வொரு இணைப்பைக் கடந்தபொழுதும், அந்த வண்டிகள் நடுநடுங்கின. கிரீச்சென்று ஒலித்தன. வேதனையால் புலம்புவதுபோல் சப்தம் செய்தன. சந்தியா காலத்தின் நீலம் பாய்ந்த மங்கல் ஒளி ஜன்னல் வழியே வண்டிக்குள் பரவியது. அதன்பின் இரவு வந்தது. பெட்டியில் இருள் சூழ்ந்தது.

ரீத்தா களைத்திருந்தாள். அவள் பை மீது தலையை வைத்துக்கொண்டு, கண்களை மூடினாள். அரைத் தூக்கம். பாவெல் அந்தத் தட்டின் ஓரத்தில் உட்கார்ந்து புகை பிடித்தான். அவனும் களைத்திருந்தான். ஆனால் படுப்பதற்கு இடமில்லை. இரவு நேரத்தின் இளங்காற்று திறந்த ஜன்னல் வழியே வண்டிக்குள் வீசியது. திடீரென்று வண்டி குலுங்கியது. ரீத்தா விழித்துக் கொண்டாள். இருளுக்கு இடையே பாவெலின் சிகரெட் ஒளியை நோக்கினாள். அவனது இயல்பு இது. இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருப்பானேயல்லாது, அவளுக்கு வசதிக் குறைவு உண்டாக்க மாட்டான்.

“தோழர் கர்ச்சாகின்! இந்த முதலாளித்துவ சம்பிரதாயங்களை விட்டுவிடு. படுத்துக்கொள்” என்று அவள் வேடிக்கையான குரலில் கூறினாள்.

பாவெல் அவளுக்குக் கீழ்ப்படிந்தான். ரீத்தாவுக்குப் பக்கத்தில் அவன் படுத்துக்கொண்டான். அவன் தன்னுடைய விறைப்பான கால்களை நீட்டிக்கொண்டபொழுது, அவனுக்குப் பெரிய சுகத்தை அனுபவிப்பதாகத் தோன்றியது.

“போக்கிரி! நாளைக்கு வேலை நிறைய இருக்கிறது. எனவே, கொஞ்சம் தூங்குவதற்கு முயற்சி செய்” என்று ரீத்தா கூறினாள். அவள் நம்பிக்கையோடு தனது நண்பனைக் கட்டிக்கொண்டாள். அவளது கேசம் அவனுடைய கன்னத்தைத் தொடுவதை அவன் உணர்ந்தான்.

ரீத்தாவைப் புனிதமானவளாகப் பாவெல் கருதினான். அவள் அவனுக்குச் சிநேகிதி, தோழி, அரசியல் வழிகாட்டி. எனினும், அவள் ஒரு பெண். ஸ்டேஷனில் நடைபாதைக்கு அருகில்தான், அவன் முதன்முதலாக அவளது பெண்மைக் கவர்ச்சியை உணர்ந்தான். எனவே, இப்பொழுது அவளுடைய அணைப்பு அவனைக் கிளர்ந்தெழச் செய்தது. அவள் ஆழமாகச் சுவாசித்துக் கொண்டிருந்தாள். ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரு சீராகச் சுவாசித்துக் கொண்டிருந்தாள். அதை அவன் உணர்ந்தான். எங்கோ, அவனுக்கு வெகு அருகில், அவளுடைய இதழ்கள் இருந்தன. அவை இருக்குமிடத்தைத் தேட வேண்டுமென்ற ஆர்வத்தை அந்த அண்மை நிலை அவனிடம் உண்டாக்கியது. ஆனால் மிகுந்த முயற்சியுடன் அவன் கொந்தளித்தெழுந்த அந்த ஆசையை அடக்கினான்.”

***

பின்னர் இயக்க நடவடிக்கைகளில் ரீத்தாவும் பாவெலும் பிரிந்துவிடுகிறார்கள். பாவெல் இறந்துவிட்டான் என்றே ரீத்தா முடிவு செய்திருந்தார். பின்னர் கட்சியின், வாலிபர் சங்கத்தின் மாநாடு ஒன்றில் ரீத்தா பங்கேற்ற சமயத்தில், மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளில் பாவெல் கர்ச்சாகின் பெயர் வாசிக்கப்பட்டபோது, இனிய அதிர்ச்சிக்குள்ளாகி அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அடுத்த இரு நாட்களும் மாநாட்டுக்கிடையே கிடைத்த ஓய்வு நேரங்களில் அளவளாவிக் கொள்வார்கள். அதனை அடுத்து தருகிறேன்.

(நாவலின் அட்டைப்படம் அந்த மாநாட்டில் இருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்தான்.)

 “இப்பொழுது அகில ருஷ்ய காங்கிரசின் கவுன்சில் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ், இரண்டு மணி நேரத்தில் ஆரம்பமாகிறது. அதற்குமுன் பிரதிநிதிகளது ஜாப்தாவை இன்னொரு முறை படித்துவிடுகிறேன். கேளுங்கள்.”

பேசியது அக்கீம்! அவன் ஜாப்தாவை வேகமாகப் படித்தபொழுது, ரீத்தா உன்னிப்பான கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பிரதிநிதியும் தமது பெயர் படிக்கப்பட்டவுடன், சிவப்பு அல்லது வெள்ளைச் சீட்டுடன் தன் கரத்தை உயர்த்தினார்கள்.

திடீரென்று, ரீத்தா தனக்குப் பழக்கமானதொரு பெயரைக் கேட்டாள். அது பன்கிராத்தவ்.

அவள் சற்றுமுற்றும் பார்தாள். ஒரு கை உயர்ந்ததைக் கண்டாள். ஆனால் இடையிலிருந்த வரிசைகள் அந்தத்துறைமுகத் தொழிலாளியின் முகத்தை மறைத்துவிட்டன. மேலும் பல பெயர்கள் வாசிக்கப்பட்டன. மீண்டும் ஒரு பழகிய பெயர். ஒக்குனேவ். உடனடியாக இன்னொன்று, ஷார்க்கீய்.

ரீத்தா, ஷார்க்கீயைக் கண்டுகொண்டாள்.

அவன் ரொம்ப தூரத்தில் இல்லை. அவனது முகத்தின் ஒரு பாதிதான் புலப்பட்டது. ஆம், அது ஷார்க்கீய்தான்! அவனது பக்கப் பார்வைத் தோற்றத்தை அவள் கிட்டத்தட்ட மறந்துவிட்டாளே! ரீத்தா உக்கிரமான அதிர்ச்சிக்கு உள்ளானாள். அக்கீம் படித்த பெயர்:

“கர்ச்சாகின்.”

தூரத்தில் முன்வரிசை ஒன்றில், ஒரு கை உயர்ந்து தாழ்ந்தது. அவனது காலம் சென்ற தோழனின் பெயரை உடைய இந்த நபரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல், ரீத்தாவைத் துன்புறுத்தியது. அந்தக் கை உயர்ந்த இடத்திலிருந்து தன் கண்களைத் திருப்ப அவளால் முடியவில்லை. ஆனால் முன்வரிசைத் தலைகளெல்லாம் ஒரே மாதிரியாகத் தோன்றின. ரீத்தா எழுந்தாள். சுவருக்கருகிலிருந்த நடைபாதை வழியே, முன்வரிசைகளை நோக்கிச் சென்றாள்.அதே சமயத்தில், அக்கீர் பெயர் வாசிப்பதை முடித்துவிட்டான். பிரதிநிதிகள் நாற்காலிகளைப் பின்னுக்கத் தள்ளிப் பேரொலி உண்டாக்கினார்கள். இளைஞர்களின் குரலோசையும் சிரிப்போசையும் ஹாலில் நிரம்பின. இந்தச் சந்தடியையும் மீறித் தன் குரல் கேட்க வேண்டும் என்பதற்காக அக்கீம் உரக்கக் கூவினான்:

“போல்ஷாய் தியேட்டர். .. ஏழு மணி. தாமதமாக வராதீர்கள்!”

வெளிச்செல்லும் பாதை ஒன்றுதான். அங்குப் பிரதிநிதிகள் திரளாகக் கூடினர். இந்தக் கூட்டத்தில் தன் பழைய நண்பர் எவரையும் கண்டுபிடிக்கத் தன்னால் முடியாதென்பதை ரீத்தா உணர்ந்தாள். அக்கீம் வெளியேறுவதற்குமுன், அவனைப் பிடித்துக்கொள்ள வேண்டும். பிறரைக் கண்டுபிடிப்பதற்கு அவன் உதவி செய்வான். இவ்வாறு அவள் எண்ணியபொழுது, பிரதிநிதிகளின் கோஷ்டி ஒன்று, அவளைக் கடந்து கொண்டிருந்தது.

அவர்களில் ஒருவன், “நல்லது, கர்ச்சாகின் கிழவா, நாம் போகலாமா?” என்று கேட்டது ரீத்தாவின் காதில் விழுந்தது. அந்தப் பழகிய குரல், மறக்க முடியாத குரல் விடை தந்தது.

“சரி, போகலாம்.”

ரீத்தா சட்டென்று திரும்பினாள். அவளுக்கு முன் ஒரு பழுப்பு நிறங் கொண்ட நெட்டையான இளைஞன் நின்றான். அவன் காக்கிச் சட்டையும், மெல்லிய காகேஷியன் பெல்ட்டும் நீல நிறத்தில் சவாரிக் கால் சட்டையும் பெல்ட்டும் உடுத்தியிருந்தான்.

ரீத்தா அகன்று விரிந்த கண்களுடன் அவனை வெறித்துப் பார்த்தாள். அவனது புஜங்கள் அவளை அணைப்பதை உணர்ந்தாள். அவன் தழுதழுத்த குரலில், “ரீத்தா” என்று மென்மையாகச் சொல்வதைக் கேட்டாள். அது பாவெல் கர்ச்சாகின்தான் என்பதை அறிந்துகொண்டாள்.

“ஆக, நீ உயிரோடிருக்கிறாயா?”

இந்தக் கேள்வி அவனுக்குச் சகல விஷயங்களையும் எடுத்துரைத்துவிட்டது. அப்படியானால், அவன் இறந்துவிட்டதாக அவர்களுக்குக் கிடைத்த சேதி தவறானது என்பதை அவள் இதுவரை அறியவில்லை.

அந்த ஹால் காலியாகி ரொம்ப நேரமாகிவிட்டது. நகரத்தின் உயிர் நாடியான த்வெர்ஸ்க்காயா தெருவின் சத்தமும் சந்தடியும், திறந்த ஜன்னல் வழியே கேட்டன. கடிகாரம் ஆறு அடித்தது. ஆனால் கண நேரத்துக்கு முன்தான் சந்தித்ததாக அவர்களுக்குத் தோன்றியது. எனினும், போல்ஷாய் தியேட்டருக்குக் கிளம்பும்படி கடிகாரம் ஆணையிட்டது. அவர்கள் விசாலமான படிக்கட்டு வழியாக இறங்கியபொழுது, அவள் மீண்டும் பாவெலை உற்றுப் பார்த்தாள். இப்பொழுது அவன் அவளைவிட அரைச்சாண் உயரமாக இருந்தான். மற்றபடி அவன் அவள் அறிந்த பழைய பாவெல்தான்.

“நீ எங்கு வேலை செய்கிறாய் என்றுகூட நான் கேட்கவில்லை” என்று அவள் கூறினாள்.

“நான் கம்ஸமோலின் (வாலிபர் சங்கம்) பிரதேசக் கமிட்டிக் காரியதரிசியாக இருக்கிறேன். துபாவாவைக் கேட்டால், ‘பேனா சிப்பாய் வேலை’ (‘pen-pusher’) என்பான்” என்று பாவெல் புன்னகையுடன் பதிலுரைத்தான்.

“அவனைப் பார்த்தாயா?”

“ஆம், அந்தச் சந்திப்பின் நினைவுகள் இன்னும் மனதைக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றன.”

பாவெலும், ரீத்தாவும் கஷ்டப்பட்டு தியேட்டர் வாசலை அடைந்தார்கள். உயர்வகுப்பு இருக்கைகள் இருந்த வரிசைகளின் பின்னால் இரண்டு ஆசனங்களைக் காட்டி, “இங்கு உட்காரலாம்” என்று ரீத்தா கூறினாள்.

இருவரும் உட்கார்ந்தனர்.

“இன்னும் ஒரு கேள்வி உன்னைக் கேட்க வேண்டும். பழங்காலத்தைப் பற்றித்தான். பதில் சொல்வாயென்று நிச்சயமாக நம்புகிறேன். அந்தக் காலத்தில் நமது கூட்டுப் படிப்பையும் நட்பையும் ஏன் முறித்தாய்?” என்று ரீத்தா வினவினாள்.

அவர்கள் சந்தித்ததிலிருந்து, பாவெல் இந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். எனினும், அவள் கேட்டவுடன் அவன் மனம் கலங்கினான். அவர்களது கண்கள் சந்தித்தன. அவளுக்குக் காரணம் தெரிந்திருப்பதைப் பாவெல் புரிந்துகொண்டான்.

“ரீத்தா, இந்தக் கேள்வியின் பதிலை நீயே அறிவாயென்று நினைக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அது. உன்னிடம் அவ்வாறு நடந்துகொண்டதற்காக, நான் அந்தப் பாவெலைக் கண்டிக்கிறேன். உண்மையில், கர்ச்சாகின் பல தவறுகளைச் செய்திருக்கிறான். பெரிய தவறுகளும் செய்திருக்கிறான். சிறிய தவறுகளும் செய்திருக்கிறான். அவற்றில் இதுவும் ஒன்று.”

ரீத்தா புன்னகை புரிந்தாள்.

“அருமையான பீடிகை. கேள்விக்குப் பதில் சொல்.”

பாவெல் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான்.

“இந்தத் தவறுக்குப் பொறுப்பு நான் மட்டும் அல்ல. அது எனக்குப் பிடித்த கதாநாயகனான ஆர்தரின் தவறும்கூட. அவனது புரட்சிகரமான சித்திர, விசித்திர சாகசக் கொள்கையும் என் பிழைக்குக் காரணம். அந்த நாட்களில் நான், லட்சியத்துக்காக வாழ்வை அர்ப்பணித்துப் பாடுபட்ட புரட்சிகரமான வீரதீர வைராக்கிய புருஷர்களின் தத்ரூபமான வர்ணனைகளால் பெரிதும் கவர்ச்சிக்கப்பட்டேன். அந்த மாவீரர்கள் என்னை ஆட்கொண்டார்கள். அவர்களைப் போல வாழ வேண்டுமென்று நான் பெரிதும் விரும்பினேன். எனக்கு உன்பால் ஏற்பட்ட உணர்ச்சி ஆர்தரின் காதலை ஒத்திருந்தது. அதெல்லாம் இப்பொழுது நினைத்தால், நகைக்கத்தக்கதாகத் தோன்றுகிறது. என் நடத்தைக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.”

“அப்படியானால் ஆர்தரைப்பற்றி உன் கருத்தை மாற்றிக்கொண்டு விட்டாயா?”

“இல்லை, ரீத்தா. அடிப்படையான கருத்தோட்டத்தில் மாறுதல் இல்லை. ஆனால் மன உறுதியை சோதிப்பதற்காக வீணாக நடத்திய இன்னல் பொருந்திய சோதனைகளை மட்டுமே நான் நிறுத்திவிட்டேன். ஆர்தரின் முக்கியமான இயல்பை நான் இப்போதும் போற்றுகிறேன். அவனது மனோ தைரியம், அவனது அலாதியான சகிப்புத்தன்மை, தன் வேதனையைக் கண்டோரிடமெல்லாம் விண்டு கூறாமல், துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் அந்த மனுஷத்தன்மை, ஆகியவற்றை நான் நேசிக்கிறேன். முழுச் சமுதாயத்தின் வாழ்வுக்காகச் சொந்த வாழ்வைத் தியாகம் செய்யும் புரட்சிப் பண்பை நான் ஆதரிக்கிறேன்.”

“பாவெல், மூன்றாண்டுகளுக்குமுன், நீ இப்படிப் பேசவில்லையே என்று வருந்துகிறேன்” என்று ரீத்தா கூறியபொழுது, அவளது முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அது அவளது சிந்தனை நெடுந்தூரத்தில் சஞ்சரிப்பதைப் படம் பிடித்துக் காட்டியது.

“வெறும் நண்பன் என்பதைவிட உன் இதயத்தில் எனக்கு ஒரு உயர்ந்த இடம் என்றுமே கிடைத்திருக்காது என்பதற்காக வருந்துகிறாயா, ரீத்தா?”

“கிடைத்திருக்கும். நீ ஒரு தோழனைவிட அதிகமாக என் வாழ்வில் இடம் பெற்றிருப்பாய்.”

“ஆனால் இப்பொழுதும் அந்தக் குறையை அகற்ற முடியும்?”

“தோழர் ஆர்தரே! இனி முடியாது. அதற்கு உரிய காலம் கடந்துவிட்டது.” மேலும் ரீத்தா இளநகை தவழ விளக்கம் தந்தாள். “எனக்கு இப்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவளுடைய தந்தை எனது நெருங்கிய நண்பர். பொதுவாக, நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் நன்கு நேசிக்கிறோம். எவராலும் பிரிக்க முடியாத வகையில் வாழ்ந்து வருகிறோம்.”

வீரம் விளைந்தது (நியூ செஞ்சுரி புக் ...

அவளது விரல்கள் பாவெலின் கரத்தைத் தடவிக் கொடுத்தன. அவன்பால் அவளுக்கு ஏற்பட்ட கவலையே, இந்த அன்பு வெளியீட்டுக்குக் காரணம். ஆனால், அந்தக் கவலை அனாவசியமானதென்பதை உடனே உணர்ந்தாள். ஆம், இந்த மூன்று ஆண்டுகளில் பாவெல், உடல் வளர்ச்சி அடைந்திருப்பதைப் போலவே அவனது மனமும் பண்பட்டிருந்தது. அவளது கூற்று அவன் மனதைப் புண்படுத்திவிட்டதென்பதை, அவனது கண்களே எடுத்துரைத்தன. ஆனால், “என்னதானிருப்பினும், நான் இப்பொழுது இழந்தவற்றுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்தவை என்னிடம் தங்கியிருக்கின்றன” என்றே அவன் கூறினான். இது வெற்றுரையல்ல என்பதையும், மிகையில்லாத உண்மைதான் என்பதையும் ரீத்தா அறிந்திருந்தாள்.

காங்கிரஸ் (மாநாடு) நடந்த நாட்களில் அவன் அதிகாலை முதல் இரவு நெடுநேரம் வரை அதன் வேலைகளிலேயே ஈடுபட்டிருந்தான். எனவே, அதன் இறுதிக்கட்டத்தில்தான், அவன் ரீத்தாவை மீண்டும் சந்தித்தான். அவள் ஒரு உக்ரேனியக் கோஷ்டியுடன் இருந்தாள்.

“நான் நாளைக்குக் காங்கிரஸ் முடிந்தவுடன் கிளம்புகிறேன். நாம் மீண்டும் கூடிப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பது சந்தேகம்தான். எனவே, நான் நாட்குறிப்பு எழுதிய இரண்டு நோட் புத்தகங்களை உனக்காகத் தயாராக வைத்திருக்கிறேன். அவற்றுடன் ஒரு சிறுகுறிப்பும் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றைப் படி. அதன்பின் எனக்குத் தபாலில் அனுப்பிவிடு. நான் உன்னிடம் சொல்லாத விஷயங்களை அவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்று அவள் அவனிடம் கூறினாள்.

அவன் அவளது கரத்தை அமுக்கிப் பிடித்துக்கொண்டான். அவளது முக லட்சணங்களை மனப்பாடம் செய்வதைப் போல, அவளை நீண்ட நேரம் உற்று நோக்கினான்.

முன்னால் திட்டமிட்டபடி அவர்கள் மறுநாள், தியேட்டரின் முன்வாசலில் சந்தித்தனர். ரீத்தா, அவனிடம் காகிதக் கட்டு ஒன்றையும், ஒரு ஒட்டிய கடிதத்தையும் கொடுத்தாள். அவர்களுடன் வேறு சிலரும் இருந்ததால், உணர்ச்சிகளைக் காட்டாமல் விடைபெற்றுக் கொண்டார்கள். அவளது கண்கள் கலங்கின. அதிலிருந்து அவளது துயரம் கலந்த ஆழ்ந்த அன்பைப் பாவெல் புரிந்துகொண்டான்.

அடுத்தநாள் அவர்கள் ஏறிய ரயில் வண்டிகள், வெவ்வேறு திசைகளில் சென்றன. பாவெல் பிரயாணம் செய்த ரயிலின் பல பெட்டிகளில் உக்ரேனியப் பிரதிநிதிகள் ஏறியிருந்தனர். சூரியன் மறைந்தபின் இதர பிரயாணிகள் படுத்துக்கொண்டு விட்டனர். பக்கத்துத் தட்டிலிருந்த ஒக்குனேவ், நிம்மதியாகக் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். பாவெல், விளக்கின் அருகே நகர்த்திக்கொண்டு, கடிதத்தைத் திறந்தான்.

“பாவெல்! என் இதயத்தைக் கவர்ந்தவனே! நாம் சேர்ந்திருந்தபொழுதே இவற்றையெல்லாம் சொல்லியிருப்பேன். ஆனால் இதுவே, சிறந்த முறை. மாநாட்டுக்கு முன்னால் நாம் பேசிக்கொண்டதன் விளைவாக, உன் வாழ்வில் எத்தகைய வடுவும் ஏற்படக் கூடாதென்பதொன்றுதான் என் ஆவல். நீ மனோதிடம் உடையவன் என்பதை அறிவேன். எனவே, நீ கூறியவற்றை மனப்பூர்வமாக நம்புகின்றேன். நான் வாழ்வை வறட்டு ஆசாரக்கண்கொண்டு நோக்கவில்லை. ஒருவன் அல்லது ஒருத்தி, எப்பொழுதோ ஒரு தடவை, தனது சொந்த உறவுகளின் விதிக்கு விலக்காக நடந்துகொள்ளலாமென்று நான் நினைக்கிறேன். ஆனால் அந்த அரிதான விதி விலக்குகள், அந்தரங்க சுத்தியானதும் ஆழமானதுமான பாசத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். உன் விஷயத்தில், நான் விதிக்கு விலக்காக நடந்துகொண்டிருப்பேன். ஆனால், நமது யௌவனத்துக்கு வெகுமதியளிக்க வேண்டுமென்ற என் உணர்ச்சியை நான் நிராகரித்தேன். அதில் உனக்கோ, எனக்கோ உண்மையான ஆனந்தம் இருக்க முடியாதென்று நான் எண்ணுகிறேன். எனினும், நீ உன்னிடம் இவ்வளவு கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்கக் கூடாது. பாவெல், நமது வாழ்வு போராட்ட மயமானது மட்டும் அல்ல. அதில் உண்மையான அன்பால் உண்டாகக் கூடிய ஆனந்தத்துக்கும் இடம் இருக்கிறது.

“மற்றபடி, உன் வாழ்வின் பிரதான உட்பொருளைப் பொறுத்தவரை, எனக்கு எத்தகைய கவலையும் இல்லை. உன் கரத்தை அன்புடன் குலுக்குகிறேன்.

“ரீத்தா.”

(வளரும்)

(வளரும்)

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்) | ரீத்தாவும் பாவெலும்  | ச.வீரமணி

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்)-பாவெல் – ஆன்னா – த்ஸெவெத்தாயெவ் | ச.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *